போர்க்களத்தில் தன் கையசைவுகள், உதடசைவுகள் வழியாக இடைவிடாது ஆணைகளைப் பிறப்பித்து சூழ்ந்திருந்த படைகளை முற்றாகவே ஆட்டுவித்துக்கொண்டு தேரில் நின்றிருக்கையில் சகுனி முதல்முறையாக நாற்களப் பகடைகளைத் தொட்டு எடுத்த நாளை எண்ணிக்கொண்டார். குழந்தையாக இருந்தபோது நிகழ்ந்தவற்றில் ஓர் அணுவிடைகூட ஒளி குன்றாது நின்றிருக்கும் நினைவு அதுதான். அவருக்கு இரண்டு அகவை. தந்தையின் மடியில் அமர்ந்திருந்தார். தந்தையின் முன் நாற்களப் பலகை விரிந்திருந்தது. எதிரே அவருடைய இளையவராகிய மகாபலர் அமர்ந்திருந்தார். அவர் தலையில் கைவைத்து கருக்களை நோக்கியபடி அமர்ந்திருக்க அவரை புன்னகையுடன் கூர்ந்து நோக்கியபடி சுபலர் பகடைகளை கையிலெடுத்தார்.
அவர்களின் முகங்களிலிருந்த உணர்ச்சிகளை சகுனி மாறிமாறி பார்த்தார். அந்த ஒருமையும் கொந்தளிப்பும் பதற்றமும் எக்களிப்பும் அவரை ஆட்கொண்டன. சுபலர் பகடைகளை உருட்டியதும் மகாபலர் தலையில் ஓங்கி அறைந்தபடி “தெய்வங்களே!” என்றார். சுபலர் “மீண்டும் என் கணக்கு” என்றார். “என்ன, தந்தையே?” என்றார் சகுனி. “ஒன்றுமில்லை, பேசாமலிரு” என்றார் சுபலர். “தந்தையே” என்று சகுனி அவர் கையை பிடிக்க அவர் மைந்தனை இறக்கி அப்பால் நிறுத்தி பகடையை உருட்டினார். மகாபலர் குனிந்து நோக்கிவிட்டு வெறிக்கூச்சலிட்டு கைகளைத் தட்டியபடி எழுந்தார். உரக்க நகைத்தபடி நடனமிட்டார். சுபலர் தலையில் கைவைத்துக்கொண்டு குனிந்தார்.
அதற்கு முன்னரும் அந்த ஆட்டத்தை சகுனி பார்த்திருந்தார். ஆனால் ஒரே கணத்தில் துயரை பெருங்களிப்பாக, பெருங்களிப்பை இருண்ட வீழ்ச்சியாக மாற்றும் ஒன்று அப்பகடைகளில் இருப்பது அப்போதுதான் அவர் நெஞ்சில் பதிந்தது. அவர் அந்தப் பகடைகளையே நோக்கிக்கொண்டிருந்தார். அவை எலும்புகளால் ஆனவை. காந்தாரத்தின் பகடைகளில் எல்லாம் ஒருபுறம் காந்தாரத்தின் ஈச்சஇலை பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் ஆறன்னையரைக் குறிக்கும் ஆறு என்னும் எழுத்து. பகடைகள் புரண்டு விரிந்து மீண்டும் சேர்ந்து சிதறிப்பரவுவதை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவை சுபலரையும் மகாபலரையும் அறியாமல் தங்களுக்குள் தாங்களே விளையாடிக்கொண்டிருந்தன. புறாக்கள்போல எழுந்து சிறகடித்து மீண்டும் அமர்ந்து. அவற்றுக்கு அப்பால் சுபலரும் மகாபலரும் கொந்தளித்தனர், கூச்சலிட்டனர், கண்ணீர்விட்டனர், மகிழ்ச்சிகொண்டாடினர்.
உச்சிப்பொழுதில் உணவுண்பதற்காக அவர்கள் எழுவதுவரை ஆட்டம் நீடித்தது. ஏவலன் வந்து அறிவித்ததும் எழுந்துகொண்ட மகாபலர் “நான் வென்ற நிலங்களை தனியாக குறித்துள்ளேன், மூத்தவரே. அவை முறைப்படி நீரூற்றி எனக்கு அளிக்கப்படவேண்டும்” என்றார். சுபலர் “ஆம், அவை உனக்குரியவை. ஆனால் இன்னும் ஆட்டம் முடியவில்லை. இறுதியில் எவர் ஈட்டுகிறார்கள் என்று பார்ப்போம்” என்றார். மகாபலர் “நான் ஆடவில்லை என்றால்?” என்றார். “ஆட்டத்தை நிறுத்திவிட்டுச் செல்ல எவருக்கும் உரிமையில்லை” என்றார் சுபலர். “எங்கேனும் நிறுத்தியாகவேண்டுமே?” என்றார் மகாபலர். “ஆம், ஆனால் என் நிலத்தை நீ கொண்டுசெல்லும் இடத்தில் அல்ல” என்றார் சுபலர்.
இருவரும் நின்று நோக்கோடு நோக்கு பொருந்தினர். இரு முகங்களிலும் இருந்த வெறுப்பையும் சினத்தையும் சகுனி நோக்கிக்கொண்டிருந்தார். சுபலர் திரும்பிச்செல்ல மகாபலர் மெல்ல துப்பியபடி திரும்பி இன்னொரு பக்கமாக சென்றார். அவர்கள் இருவரும் ஒருபோதும் பேசிக்கொள்வதில்லை என்பதை சகுனி உணர்ந்தார். இணைந்து நிற்பதுகூட அரிது. ஆனால் அமர்ந்து ஆடமுடிகிறது. அங்கே நகைப்பும் கூச்சலும் எழுகிறது. பகைக்கும் நட்புக்கும் அப்பால் நிகழும் ஓர் ஆடல் அது என்று அவர் உணர்ந்த தருணம்.
அத்தருணத்தை அவர் எண்ணி எண்ணி வளர்த்துக்கொண்டார். மானுடர் பேசிக்கொள்ளும் அனைத்துமே வெறும் முறைமைச்சொற்கள். அவையில், அறையில், தனிமையில், எங்கும். மானுடர் ஒருவரோடொருவர் உண்மையாக பேசிக்கொள்ளவே இயலாது என்ற நிலையில் எழுந்த மாற்று உரையாடலே நாற்களம். அங்கே உரையாடல்களம் வகுக்கப்பட்டுள்ளது. நான்கு களங்கள், நான்கு பகடைகள், பன்னிரு எண்கள், எழுபத்திரண்டு கருக்கள். வெளியே விரிந்துள்ள பொருட்களின், உட்பொருட்களின், பொருள்மயக்கங்களின், உள்முயக்கங்களின் வெளி அனைத்துப் பேச்சுகளையும் முடிவிலிவரை கொண்டுசென்று பொருளற்றதாக்கிவிடுகிறது. பகடை திட்டவட்டமானது, மயக்கங்களற்றது. பின்பு அவர் அறிந்தார், ஒவ்வொரு உரையாடலும் பகடையாட்டமே என. பகடையாட்டம் சாரம் மட்டுமேயான ஓர் உரையாடல் என.
அன்று அவர்கள் சென்றபின் ஏவலன் தந்தப் பேழைக்குள் எடுத்து வைத்த பகடைகளை தன்னிடம் தரும்படி கேட்டார். “இளவரசே” என தயங்கிய பின் முதிய ஏவலன் “ஒருமுறை மட்டும் தொட்டுக்கொள்க!” என்றான். அவர் அந்தப் பகடைகளில் ஒன்றை எடுத்து கையில் உருட்டினார். “இது எதனாலானது?” என்றார். “இது புரவியின் எலும்பாலானது. எல்லா போட்டிவிரைவுகளிலும் வென்று உங்கள் தந்தையை மகிழவைத்த சுபார்ஸ்வம் என்னும் புரவி அது.” அவர் அதை கையிலிருந்து உருட்டினார். “இது என்ன? இது என்ன?” என்று அவன் கையைப் பிடித்து உலுக்கினார். “இளவரசே, இது பன்னிரண்டு. நீங்கள் வென்றீர்கள்” என அவன் அதை எடுத்து பேழைக்குள் வைத்தான்.
“நான் வென்றேன்! பன்னிரண்டு! பன்னிரண்டு! நான் வென்றேன்!” என்று சகுனி சொல்லிக்கொண்டார். துள்ளியபடி ஓடிச்சென்று தன் மூத்தவரான அசலரிடம் சொன்னார். “மூத்தவரே, நான் வென்றேன்! பன்னிரண்டு! வென்றேன்!” அன்றுமுதல் அந்த எண் அவரை ஆட்டிப்படைக்கலாயிற்று. பன்னிரண்டு. துயிலிலும் விழிப்பிலும் ஆட்கொண்டிருந்த எண். ஓர் எண் நாவிலெழுமென்றால் இயல்பாகவே அது பன்னிரண்டுதான். வெற்றி இத்தனை எளிதானது. இத்தனை கூரியது. கையருகே நின்றிருப்பது. கொலைவாளின் கூர்போல் மற்றொரு பொருள் அற்றது.
ஆனால் பகடையாடத் தொடங்கியபோது வெற்றிகள் கைகூடவில்லை. பெரும்பாலானவர்கள் அவரை எளிதில் வென்றனர். பன்னிரண்டு ஒரு கனவாக, பின் ஏக்கமாக, பின் எரிச்சலாக ஆகியது. ஆட அமர்கையிலேயே சினமெழுந்தது. பகடையை கையிலெடுக்கும்போதே நெஞ்சு இறுகி முகம் கூர்கொள்ள பற்களைக் கடித்தபடி உருட்டினார். பகடை அவரை ஒவ்வொரு முறையும் வென்றது. கால்கீழிலிட்டு மிதித்தபடி குளம்படிகள் ஒலிக்க கடந்துசென்றது. அவருக்கு பகடை கற்பித்த ஆசிரியர்கள் “பகடையை இறுகப்பற்றுகிறீர்கள், இளவரசே. அதை வாளென பற்றுக! அழுந்தப்பற்றியவர்களும் நழுவவிட்டவர்களும் வெல்வதில்லை” என்றனர்.
“வென்றாலும் தோற்றாலும் நிகரே என உளம் நிலைத்தோரே பகடையில் இறுதிவெற்றியை அடையமுடியும்” என்றார் ஆசிரியரான சுஸ்ரவஸ். “ஆனால் அத்தகையோர் பகடையே ஆடுவதில்லை. ஆடுவோரில் வெல்வோர் விழைவை பிறிதிலாது சூடியவர்கள். அதில் அசைவிலாது நின்றவர்கள். கையின் ஐயத்தையும் அச்சத்தையும் பகடை அறியும். பகடை என்பது களத்தில் உருளும் உங்கள் உள்ளம் என்றுணர்க!” பகடைமேல் கொண்ட விழைவே பகடையை அவரிடமிருந்து அயல்படுத்தியது. மெல்ல மெல்ல பகடையை அஞ்சலானார். பகடை கையில் வந்ததுமே மெய் நடுங்கத்தொடங்கியது.
ஆனால் பகடையை ஒழியவும் இயலவில்லை. ஒவ்வொருநாளுமென பகடையாடி இழந்துகொண்டே இருந்தார். ஒருமுறை தன் உடன்பிறந்தானாகிய விருஷகனுடன் ஆடி இளவரசுப் பட்டத்தையும் இழந்து கணையாழியை கழற்றிக்கொடுத்துவிட்டு புரவியில் ஏறி காந்தார நகரியிலிருந்து கிளம்பிச்சென்றார். மீள முடியாத திசை என மேற்கு சொல்லப்பட்டிருந்தது. செல்லச்செல்ல மண் வெளுத்துக்கொண்டே இருக்கும். தூய வெண்ணிற மண் அலைகளென அமைந்த பாலையில் உயிர்த்துளியே இருக்காது. விடாய்மிக்க எழுபத்திரண்டு காற்றுகள் உலவும் வெளி. அவை அங்கு செல்லும் உயிர்களின் குருதியை உறிஞ்சி உண்பவை. எஞ்சாது தோற்றவர்களும் ஏதுமிலாது வென்றவர்களும் சென்றடைந்து நிறைவுகொள்ளவேண்டிய நிலம் அது.
மேற்கே சென்றுகொண்டே இருக்கையில் ஒரு நாள் அந்தியில் தொலைவில் ஒற்றைப்பறவை ஒன்று வானில் சுழல்வதை கண்டார். அத்திசை நோக்கி செல்ல மிகச் சிறிய ஸாமிமரச் சோலை ஒன்று கண்ணுக்குப்பட்டது. அங்கே முன்னரே ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை அணுகியபோது சோலைக்குள் ஒருவரை காணமுடிந்தது. பாலைவணிகரெனத் தெரிந்தது. மணற்தரையில் தோல்விரித்து அமர்ந்து பகடையாடிக்கொண்டிருந்தார். அவர் அருகே செல்வதுவரை வணிகர் அவரை நிமிர்ந்து நோக்கவில்லை. அணுகியதும் சகுனி வணங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
சோனகரான அவர் பெயர் சுவாமர் என்று தெரிந்தது. “இந்தச் சுனை மிக மெல்லவே ஊறுகிறது. இதை அகழ்ந்து அதன்மேல் துணியை விரித்துவிட்டு நீர் ஊறுவதற்காக காத்திருக்கிறேன்” என்றார் சுவாமர். சகுனி அவர் அருகே அமர்ந்தார். “தனிமையில் பகடையாடலாமா?” என்றார். “நம்முடன் நாம் ஆடலாம். இவ்வாறு நம் நிழல் நமக்கு முன்னால் விழுந்திருக்கவேண்டும்” என்றார் சுவாமர். “நம்மை நாமே வெல்வது எளிது” என்றார் சகுனி. “அல்ல. அதுவே கடினம்” என்று சுவாமர் சொன்னார். “என்னுடன் ஆடுகிறீர்களா?” என்றார். “என்னிடம் பணயம் என ஏதுமில்லை. அனைத்தையும் இழந்த பின்னர் வந்துள்ளேன்” என்றார் சகுனி. “எஞ்சியிருப்பது உங்கள் உடல். அதை பணயமாக்கலாமே” என்றார் சுவாமர். “எனக்கு அடிமையாக இருப்பதாக சொல்க…”
நீர் அருந்தியபின் அவர்கள் ஆடத் தொடங்கினர். ஏழு சுற்று ஆட்டத்திற்குப் பின் சகுனி அவர் அடிமையாக ஆனார். “நீர் சிறுவன். என்னுடன் வருக! தொலைவிலுள்ள சோனகநிலங்களை காட்டுகிறேன்” என அவர் அழைத்துச்சென்றார். அவருடைய சுமைதூக்கியாகவும் ஏவல்சிறுவனாகவும் நான்காண்டுகாலம் அவருடன் இருந்தார். “என்றேனும் என்னை நாற்களத்தில் வென்று உமது விடுதலையை நீர் ஈட்டிக்கொள்ளலாம்” என்றார் சுவாமர். ஒவ்வொரு நாளும் அவர்கள் பகடையாடினர். மீளமீள அவர் தோற்றுக்கொண்டே இருந்தார். தன் பங்கு நீரை, உணவை பணயம் வைத்தார்.
அவர்கள் பயணம் செய்துகொண்டே இருந்தனர். சுவாமர் பாலையின் அரிய கற்களை பெற்றுக்கொண்டு பொன்னை அளிப்பவர். பாலைவெளியில் நீரிலாது வாடி உடல்வற்றி கண்கள் பழுத்து இறப்பை பலமுறை அருகில் கண்டார். வழிதவறி உயிர்பதைத்து வான்நோக்கி திகைத்து அலைந்து கண்டடையப்பட்டார். சுவாமர் அவரிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. “ஒரு குவளை நீர் மட்டுமே எஞ்சுகிறதென்றால் அதை பகிர்ந்துண்ணலாகாது. இருவரும் இறப்பதற்கே அது வழிகோலும். எனக்கே என எண்ணுபவனே இந்நிலத்தில் உயிர்விஞ்ச இயலும். அறிக, பாலை ஓநாய் தனித்தது! முழுத் தனிமையை அது தனக்கான காப்பாக கொண்டுள்ளது” என்றார் சுவாமர்.
நான்காண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் பாலைவெளியில் தவறி நீரிலாது உடல் வற்றிக்கொண்டிருக்க பாறைநிழலில் படுத்திருக்கையில் சுவாமர் சொன்னார் “நான் இறக்கவிருக்கிறேன். உம்மை அடிமையாகக் கொண்டு நான் இறந்தால் நீரும் என்னுடன் இறக்கவேண்டும் என்பதே நெறி. நான் அளித்து நீர் பெற்றுக்கொண்டால் நீர் ஷத்ரியர் அல்ல. என்னை கொன்று விடுதலைகொள்ள நீர் இப்போது ஷத்ரியர் அல்ல. என்னை வென்றுமட்டுமே நீர் விடுதலையை அடையமுடியும்.” சகுனி திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். “உமக்கு ஓர் அறிவுரையை சொல்கிறேன். நீர் நாற்களத்தை நாற்களமென்றே பார்க்கிறீர். நாற்களம் என்பது போர். இங்குள்ள அரசனும் அரசியும் புரவியும் யானையும் மெய். களம் என்பது நாடே. பகடைக்களத்தில் போரை நிகழ்த்துக!”
அன்று அவர் சுவாமரை வென்றார். இறந்த உடலின் மணம் நாடி வந்த ஓநாய்க்கு அதை விட்டுக்கொடுத்துவிட்டு காந்தார நகரிக்கு திரும்பினார். பிறகு அவர் எந்த நாற்களத்திலும் தோற்கவில்லை. பாலையில் குருதிதேடி அலைந்து பசியால் இறந்த ஓநாய் ஒன்றின் தொடையெலும்பிலிருந்து தன் பகடைகளை உருவாக்கிக் கொண்டார். அறிந்தவை அனைத்தையும் நாற்களத்தின் ஆட்டத்திலிருந்தே கொண்டார். அனைத்தையும் அக்களத்திலேயே நிகழ்த்தினார். விரிந்த வானை துளியெனச் சுருட்டி தன்னுள்கொண்ட ஆடிக்குமிழி என ஊழை உள்கொண்டது நாற்களம் என அவர் கண்டடைந்தார். அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்கு வந்தபின்னர் மதயானை ஒன்றின் எலும்பிலிருந்து தன் பகடைக்காய்களை உருவாக்கிக்கொண்டார்.
ஆனால் குருக்ஷேத்ரத்திற்குள் படைகள் வந்தமைந்த முதல்நாள் அந்தப் பெருவிரிவை கண்களால் அறிந்தபோது அவருடைய அகம் திகைத்து செயலிழந்தது. விழித்த வெறும்கண்களுடன் அவர் அந்த செம்மண்நிலத்தை நோக்கி நின்றார். இதுவல்ல இதுவல்ல என அகம் அரற்றிக்கொண்டே இருந்தது. குருதிப்பெருக்கு. வெள்ளெலும்புகள் புதைந்த மண் செவ்வுதடுகளில் பற்கள் தெரிய புன்னகைப்பதுபோலிருந்தது. தேர்த்தட்டில் வியர்வை வழிய நெஞ்சுத்துடிப்பை நோக்கியபடி நின்றிருந்தார். திரும்பிவிடலாம் என்று தோன்றியது. வாளை எடுத்து நெஞ்சில் பாய்ச்சி அக்களத்திலேயே உயிர்விடலாமென எண்ணம் ஓங்கியது. கையிலிருந்த கடிவாளம் நடுங்கிக்கொண்டிருந்தது.
தொலைவில் ஓநாய் ஒன்று ஊளையிட்டது. அக்கணத்தில் உள்ளே ஒரு திரை நலுங்குவதுபோல் ஓர் எண்ணம் எழுந்தது. அதை சொற்களென பின்னர்தான் மாற்றிக்கொண்டார். அப்பெரும் போர்க்களத்தை அவர் ஒரு சிறுநாற்களமென்று தன்னுள் ஆக்கிக்கொண்டார். அதில் தான் நன்கறிந்த பகடையை உருட்டி ஆடலானார்.
பீஷ்மர் நேர்அம்பென பாண்டவப் படைகளைக் கிழித்து உட்செல்ல அவரை சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் இருபுறமும் துணைக்க அர்ஜுனன் எதிர்த்தான். பிதாமகரின் அம்புகளுக்கு முன் அவர்களால் நிலைகொள்ள இயலவில்லை. பிதாமகர் ஒவ்வொரு அம்புக்கும் ஓர் அணுவென அவர்களை பின்னடக்கிச் சென்றார். பாண்டவப் படைகளுக்குள் அவர் நெடுந்தொலைவு சென்றுவிட்ட பின்னர் “அர்ஜுனன் பின்னடைகிறான்…” என்று முரசு சொன்னது. “ஊசியை நூல் என படைகள் தொடர்க! மீனுக்குள் தூண்டில் நுழையட்டும்” என சகுனி ஆணையிட்டார். பூரிசிரவஸ் திருஷ்டத்யும்னனிடமிருந்து பின்வாங்கிக்கொண்டிருந்தான். “ஜயத்ரதர் பூரிசிரவஸை துணைக்கச் செல்க!” என்றார் சகுனி.
துரோணர் நகுலனையும் சகதேவனையும் எதிர்கொண்டார். கிருபருடன் யுதிஷ்டிரரும் அவர் மைந்தர்களும் போரிட்டனர். போரில் விரிந்த வெளி வெறும் ஓசையென சகுனியின் காதுக்கு வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முழவுக்கும் வேறுபட்ட ஒலிகள் எழுந்தன. தோல்களின் அடர்த்தியும் வட்டத்தின் அகலமும் கோல்களின் தடிமனும் ஒலிகளை அமைத்தன. கன்றுத்தோல்கள், உடும்புத்தோல்கள், எருமைத்தோல்கள், முதலைத்தோல்கள் என ஒவ்வொன்றும் தனிக்குரல் கொண்டிருந்தன. நாய்குரைப்பதுபோல் துள்ளித் துள்ளி ஓசையிட்டுச் செல்லும் உடும்புத்தோல் முழவின் குரல் பீஷ்மரை அறிவித்துக்கொண்டிருந்தது. எருமைத்தோல் முழவு சினைப்பொலி எழுப்பி அஸ்வத்தாமனை. கன்றுத்தோலின் அமறலோசை துரியோதனனை.
முதல்நாள் முதல்நாழிகை அனைத்து ஒலிகளும் ஒன்று திரண்டு ஒற்றை முழக்கமென செவியை வந்தறைய தன் தேர்த்தட்டில் நின்று குழம்பி திகைத்து கண்களை மூடிக்கொண்டார் சகுனி. முன்பு ஒவ்வொரு ஒலியையும் ஆயிரம் முறை கேட்டு செவிக்கு பழக்கி வைத்திருந்த அனைத்தும் உள்ளத்திலிருந்து அழிந்து சென்றன. அப்பயனின்மை ஒருகணம் அச்சுறுத்தியது. வேறுவழியில்லை, இப்போர் அதன் போக்கில் தான் நிகழ ஒப்புக்கொடுப்பதைதான் செய்யக்கூடும். பீஷ்மரின் செய்தியை மட்டும் நோக்குவோம். பிற அனைத்தையும் பின்னர் கேட்டறியலாம். ஆம் ஒன்றில் நிலைகொள்க! ஒன்றில்…
பீஷ்மரின் செய்தியை கூறிக்கொண்டிருந்த தொழும்பனின் முழவொலியை செவி கூர்ந்தபோது மிக அண்மையிலென ஒலித்தது. அதன் ஒவ்வொரு தாளக்கட்டையும் ஒரு சொல்லென மாற்றியபோது தன் காதுக்கெனவே காற்றில் வந்ததுபோல் இருந்தது. “முன்னகர்கிறார் பிதாமகர்!” “எதிரில் பாண்டவ இளையோர் வந்து சூழ்ந்திருக்கிறார்கள்!” “பிதாமகர் தயங்கவில்லை!” “பிதாமகர் கொன்று முன்செல்கிறார்!” “குருதிப்பலி நிகழ்ந்துகொண்டிருக்கிறது!” உள்ளம் விசை கொண்டு முன்னெழ ஒவ்வொரு சொல்லையும் கண்முன் காட்சியென்று மாற்றி அதில் நின்று பரவி துடித்தபோது ஒரு கணத்தில் உணர்ந்தார், அனைத்து ஓசைகளையும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என.
அவை சொல்லென்றாகி நேரடியாகவே காட்சியென்றாகி குருக்ஷேத்ரப் பெருங்களத்தை வானிலிருந்து குனிந்து நோக்கும் தேவன்போல் ஒவ்வொரு தருணத்தையும் இடத்தையும் நோக்கியபடி அவர் தன் தேரில் நின்றிருந்தார். தன் கைகளால், வாயால் ஆணைகளை பிறப்பித்தார். பத்து விரல்களிலும் பட்டுச்சரடுகள் கட்டி பாவைகளை ஆட்டுவிக்கும் கூத்தன் என கௌரவப் படையின் பின்புறத்தில் நின்று அப்படையை அவர் நிகழ்த்தினார். எவர் சூழப்படவேண்டும், எவர் பிரிக்கப்படவேண்டும், எவருக்கு துணை வேண்டும், எவர் பின்னடைய வேண்டும் என.
வெற்றி அனைத்தும் அவருடையதாயிற்று. தோல்விகள் அனைத்தையும் அவரே சூடினார். முதல் நாள் பேரழிவை பாண்டவருக்கு நிகழ்த்தி அந்தியில் படை முடிவை அறிவித்தபோது மெல்ல உடல் தளர்ந்து அமர்ந்தார். ஓடிவந்து அவரது தேரில் ஏறிய துர்மதன் “வெற்றி, மாதுலரே! இன்று வெற்றி! பாண்டவப் படையின் பெரும்பகுதியை அழித்துவிட்டார் பிதாமகர். நாளைக்கு அவர்கள் படைக்கு எழுவார்களா என்பதே ஐயம்தான்!” என்றான். சுபாகு தேரில் பாய்ந்தேறி “வெற்றி! வெற்றி!” என்றான். சகுனி தளர்ந்த குரலில் “அப்படை இந்திரமாயக்காரனின் கையிலிருக்கும் பாவைகள் போன்றது. ஒரு பாவையை ஆயிரமெனக் காட்டவும் ஆயிரத்தை ஒன்றென்றாக்கவும் அவனால் இயலும்” என்றார்.
அவர் சொன்னதை புரிந்துகொள்ளாத துர்மதன் “வெற்றி! வெற்றிமுரசுகள் முழங்குகின்றன!” என்றான். சுபாகு “என்ன சொல்கிறீர்கள், மாதுலரே?” என்றான். “இப்போரை களத்தில் நிற்பவர்களில் நான் ஒருவனே முழுமையாக நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் சகுனி. சுபாகு “தாங்கள் சோர்ந்துள்ளீர்கள்” என்றபடி தேரிலிருந்து பாய்ந்து இறங்கிச் சென்றான். “திரும்புக!” என்று ஆணையிட்டபடி தேரில் அமர்ந்தபோது தன் காலில் முற்றிலும் வலி இல்லாதிருப்பதை அவர் பார்த்தார். அதை அசைக்க முயன்றபோது எடை மிக்க இரும்புக்கவசம் இருப்பதைப்போல் தோன்றியது. வலி எழவில்லை.
தேர் பலகைப் பரப்பினூடாக சென்றது. அனைத்துப் பாதைகளினூடாகவும் புண்பட்டோரை கொண்டுசெல்லும் வண்டிகள் களம் நோக்கி சென்றன. மெல்ல முதல் சொல் என வலி எழுந்தது. “ஆம், நீ எழுவாயென்று தெரியும்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார். “நீ அங்கிருக்கிறாய். நீ உடனிருப்பாய். நானின்றி நீ எங்கிருக்க இயலும்? என் அணுக்கனல்லவா? என்னை ஆட்கொண்ட தெய்வம் அல்லவா? என் பாதை நீ கொண்டுசெல்லும் திசையே அல்லவா?” வலி அவரிடம் “நீ!” என்றது. பித்தன்போல “நீ!” என்றார் அவர். அவர் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். தயங்கி விசை அழிந்து ஆனால் எடைமிகுந்து “நான்!” என்றது. “நான்! நான்! நான்!” என்று எடை மிகுந்து துள்ளி செல்லத்தொடங்கியது.
செய்திகளாக வந்து சூழ்ந்து பின்னிப்பின்னி வலையென்றாகி விரிந்துகொண்டிருந்தது குருக்ஷேத்ரப் போர். அவர் ஆணைகளை இட்டுக்கொண்டே பின்னணியில் நிகராக தேரில் ஓடிக்கொண்டிருந்தார். இரு பேருருக்கள் முட்டிக்கொண்டு சீறிப்போரிட்டன. அவை ஒருங்கிணைந்த வஞ்சங்கள் ஓருருவென எழுந்த சீற்றங்கள். வீழ்ந்த படைகளின் இடைவெளிகளில் பின்னணி வீரர்கள் இயல்பாகவே வந்து நிறைந்தனர். வீழ்ந்தவர்களை கொக்கிகளால் இழுத்துக்கொண்டு சென்று அப்பாலிட்ட பின் மேலும் மேலும் என கொடிகளால் ஆணையிட்டனர் படைத்தலைவர்கள்.
“என்ன நிகழ்கிறது, மாதுலரே?” என்றான் துரியோதனன். “நாம் முன்னகர்ந்து கொண்டிருக்கிறோம்… இன்று மாலைக்குள் அவர்களின் படைசூழ்கையை எட்டு துண்டுகளாக சிதைப்போம்” என்றார் சகுனி. அந்தப் படை ஒரு மாபெரும் உள்ளம் என இயங்கிக்கொண்டிருந்தது. ஓயாத சொல்லொழுக்கு. ஒருபாதி பொய்யும் மறுபாதி கனவும். அவை சென்று சென்று அறைந்தும் கரைக்கமுடியாத பெரும்பாறையென மெய்யும். பித்தெடுத்த உள்ளம் இது. ஆனால் அத்தனை உள்ளங்களும் பித்தெடுத்தவையே. தெளிவென்பது உள்ளம் வெளிக்காட்டும் ஒரு நடிப்பன்றி வேறில்லை.
பித்துவெளி. அதன் ஒவ்வொரு உள்ளமும் பித்துப்பேழை. ஒவ்வொரு சொல்லும் பித்துத் துளி. பித்தை ஆட்டுவிக்கிறேன். பித்தின்மேல் அமர்ந்து நாற்களமாடிக் கொண்டிருக்கிறேன். ஆடல்கள் என்பவை வரையறுக்கப்பட்ட களங்களிலிருந்து மெல்ல மெல்ல பித்துநோக்கி செல்பவை. பித்து நின்றாடும் அரங்குகள். பகடைகளில் குடிகொள்பவை பித்தின் பெருந்தெய்வங்கள்.
அவர் பாலையில் ஓர் ஓநாயைக் கண்டதை நினைவுகூர்ந்தார். அது குருதிச்சுவை கண்டு உண்டு நிறைந்துவிட்டிருந்தது. மணல்மேல் சுழல்காற்றில் சருகு என தன்னைத்தான் சுழற்றிக்கொண்டு துள்ளியது. அவ்விசையில் தூக்கி வீசப்பட்டு எழுந்து தலைதூக்கி ஊளையிட்டது. வெறிகொண்டு மண்ணை கால்களால் அள்ளி அள்ளி வீசியது. பின்னர் மெல்ல அமைந்து வான்நோக்கி கூர்மூக்கைத் தூக்கி ஊளையிடத் தொடங்கியது.
அதனருகே விரிந்திருந்த அந்த மணலோவியத்தை அவர் திகைப்புடன் நோக்கினார். அறியாத் தெய்வமொன்று எழுந்தாடிச்சென்ற களமெழுத்து ஓவியம். அதன் வடிவம் எந்த ஒருமைக்குள்ளும் அமையவில்லை. ஆனால் ஒருமையற்ற வெற்றுவடிவென்றும் தோன்றவில்லை. பின்னர் ஒரு கணத்தில் உடல் மெய்ப்புகொள்ள அவர் கண்டுகொண்டார், அது அந்த ஓநாய் அப்போது எழுப்பிக்கொண்டிருந்த ஊளையின் காட்சிவடிவம் என.