கவிதையில் தற்குறிப்பேற்ற அணிக்கு எத்தனை ஆண்டுக்கால தொன்மை இருக்கும்? பெரும்பாலும் கவிதையளவுக்கே. உலகிலேயே புதுமையே அடையாததும் எப்போதும் புதுமையாகத் தோன்றுவதும் கவிதைதான் போலும்.இன்றும் கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணிகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும் உள்ளம் ஒருகணம் மலர்ந்து ஒளிகொள்கிறது
கலாப்ரியாவின் இரு கவிதைகளை வாசித்தேன்.
[ 1 ]
பொடீத் தூற்றல் தூறுகிறது
கோலம் கூட அழியலை
அம்புட்டு மழைதான் பெஞ்சுது
என்று சொல்லுவது மாதிரி
இரண்டு வண்ணத்துப் பூச்சிகள்
குலவிக் கொண்டே பறக்கின்றன
நனைதல் மறந்து
மாற்றிச் சொல் என்பது மாதிரி
[ 2 ]
அந்தத் தண்டவாளத்தில் கொஞ்ச நேரம்
இந்தத் தண்டவாளத்தில்
கொஞ்ச நேரம்
அமர்ந்தமர்ந்து சமாதானப்படுத்துகிறது
ரயில் கடந்து போன தண்டவாளங்களை
ஒரு சிட்டுக் குருவி
தற்குறிப்பேற்றம் ஏன் அந்தப் பரவசத்தை அளிக்கிறது? பொருளின்மையின் மகாமௌனத்தில் உறைந்திருக்கும் இப்பொருள்வயப் பிரபஞ்சத்தை பொருள்கொள்ளச் செய்கிறது என்பதனாலா? அது குழந்தை தன் கைப்பொம்மையிடம் பேசுவதுபோல் அல்லவா? அப்பேச்சும் மறுபேச்சும் குழந்தையே உருவாக்கிக்கொள்வனதானே?
கவிதை மிகமிக கள்ளமற்றதாக நின்றிருப்பது தற்குறிப்பேற்ற அணியின்போதுதான். குழந்தையாகக் கவிஞன் ஆகும் தருணம். தமிழ்க்கவிதை மரபு மகத்தான தற்குறிப்பேற்றங்களால் ஆனது. சங்கப்பாடலின் அழகியலே உண்மையில் அதுதான்
கலாப்ரியாவில் எப்போதுமுள்ள சங்கத்தொடர்ச்சியை நான் முன்னரும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அவை பெரும்பாலும் கண்களால் கண்டடையப்பட்ட கவிதைத் தருணங்களால் ஆனவை