தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு

yuvalஅன்புள்ள ஜெ

””இரண்டு அழிவுசக்திகளின் நடுவே அகப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதம். வெவ்வேறு அயல்மத உதவிகளுடன் அதை அழிக்கத்துடிக்கும் ஒரு தரப்பு. அதை ஓர் வெறிகொண்ட அரசியல்தரப்பாக்கி, அதைக் கருவியாக்கி அதிகாரத்தை அடைந்து, அப்பட்டமான ஊழலாட்சியை நிகழ்த்தும் ஒரு தரப்பு”” என குறிப்பிட்டு இருக்கிறீர்கள்

இன்னொரு தரப்பு ஒன்று உண்டு என நினைக்கிறேன்…  அப்பாவித்தனம் அல்லது அறியாமை தரப்பு ஒன்று உண்டு..

முதல் இரண்டு தரப்புகளுடன் நீங்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.. ஆனால் மூன்றாவது தரப்புடன் உங்களைப் போன்றவர்கள் உரையாட வேண்டிய தேவை இருக்கிறது

உதாரணமாக , செப்பியன்ஸ் – மனித இனத்தின் சுருக்கமான வரலாறு என்ற புத்தகம்.. எழுதியவர் யுவல் நோவா ஹராரி..

எந்த உள் நோக்கமோ பிரச்சார விழைவோ முன் முடிவுகளோ இன்றி ஆராய்ச்சி நோக்கில் எழுதி இருக்கிறார்

அதில் ஒரு பகுதியில் இந்தியாவைப் பற்றியும் சாதிகள் குறித்தும் குறிப்ப்பிடுகிறார்.. ஆரியர் படையெடுப்பு மூலம் அவர்களால் சாதிகள் உருவாக்கப்பட்டதாக அவர் நினைக்கிறார்… அவர் எப்படி எந்த முடிவுக்கு வந்தார் என அவரே குறிப்பிட்டுள்ளார்.. இந்தியா குறித்து ஆய்வுகள் செய்த மேலை நாட்டினர் புத்தகங்களையே அவர் ஆதாரமாக கொள்கிறார்..  அவர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள் என்று கேட்டால் இது போன்ற சார்பு நிலை “ ஆராய்ச்சிகளை “ ஆதாரமாக காட்டுவார்கள்.

ஆரிய படையெடுப்பு போன்றவை குறித்து நாளை நூல் எழுதும் ஒருவர் , ஹாராரி நூலை ஆதாரமாக காட்டுவார்

உண்மையில் ஹராரி இந்திய தத்துவங்கள் மீதும் தியான முறைகள் மீதும் ஆர்வம் கொண்டவர்… ஆக அவருக்கு உள் நோக்கம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை… ஆனால் ஆரிய ஊடுறுவல் என்பதும் சாதிகள் உருவாக்கத்தில் ஆரியர்கள் பங்களிப்பு என்பதும் சர்ச்சைக்குரிய ஒரு கருதுகோளே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல என்பது அவரை எட்டவில்லை.. மாற்றுக்கருத்துகள் அவருக்கு தெரியவில்லை

ஆயிரம் பூக்கள் மலரட்டும்… எல்லா கருத்துகளும் முட்டி மோதட்டும் என்பது இல்லாமல் ஒரு சார்பான கருத்துகளே வெளி நாடுகளை

அடைவது ஆபத்தான நிலை என கருதுகிறேன்

உதாரணமாக ஜெயலலிதா ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் என்பதை அமைச்சர் ஒருவர் பேசியதை ஆதாரமாக காட்டுவதும் அவரிடம் ஆதாரம் கேட்டால் , ஜெயா டிவியை ஆதாரமாக காட்டுவதும் எப்படி கேலிக்கூத்தாக இருக்கும் அது போன்ற சூழல்தான் , இந்தியாவை பொருத்தவரையிலான கருத்தாக்கங்களில் உள்ளது

அன்புடன்

பிச்சைக்காரன்

Kosambi-dd

அன்புள்ள பிச்சைக்காரன்,

இன்று இந்தியாவின் மெய்யான அறிவுத்தரப்பு சோர்ந்து, எவராலும் கவனிக்கப்படாமல், எந்த அரங்கிலும் குரலெழுப்ப இயலாமல் உள்ளது என்பதே உண்மை.இந்தியாவில் இன்றுள்ளவை இரு அரசியல்தரப்புக்கள்.மெய்யான அறிவுத்தரப்பு அவ்விரண்டாலும் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு ஒடுங்கியிருக்கிறது

அரசியல்தரப்புகளில் முதன்மையானது, இங்கே முற்போக்கு என்றும் தாராளவாதம் என்றும் முகமூடி சூடிக்கொண்டு வந்து அனைத்து அரங்குகளையும் நிறைத்திருக்கும் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துநிலைகள். இவற்றுக்கு மிகப்பெரிய அளவில் நிதியாதரவு உள்ளது. கல்விநிலையங்கள் இவர்களின் பிடியில் உள்ளன. ஆய்வு அமைப்புகள் இவர்களால் ஆளப்படுகின்றன. உலகமெங்குமுள்ள கல்வியமைப்புகள், ஊடகங்களுடன் தொடர்புள்ளவர்கள் இவர்களே. இந்தியமரபை, இந்தியாவின் பண்பாட்டை, மக்களை சிறுமைப்படுத்தி எழுதப்படும் எதற்கும் இவர்களால் சர்வதேசிய அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றுத்தர முடியும். ஆகவே அவ்வகை எழுத்துக்களும் சினிமாக்களும் பெருகுகின்றன. அவை மரபு எதிர்ப்பு என்றும் கலகம் என்றும் புரட்சி என்றும் முன்வைக்கப்படுகின்றன.

இந்த கலக,புரட்சி,மரபு எதிர்ப்பாளர்கள் எவரும் உலகைச்சூறையாடும் மேலைநாட்டுப் பொருளியல் ஆதிக்கம் பற்றிப் பேசமாட்டார்கள். அந்தப்பொருளியல் ஆதிக்கங்களால் மேலைநாட்டுக் கல்வித்துறையும் ஊடகங்களும் முழுமையாகவே கட்டுப்படுத்தப்படுவதை இல்லையென்றே சாதிப்பார்கள். மதமாற்ற சக்திகளுடன் கைகோத்துக்கொள்வதற்கு, அவர்களின் சதித்திட்டங்களுக்கு அடியாட்களாக நின்றிருப்பதற்கு இவர்களுக்கு நாணமில்லை.

இரண்டாவது தரப்பு, இவர்களின் திரிபுகள் மற்றும் கசப்புகளை தங்களுக்குரிய உரமாகக்கொண்டு வளரும் அடிப்படைவாத, பழைமைவாதக்குரல். இது   இன்னொரு அரசியல் விசை.  மேலைநாட்டு அறிவுஜீவிகள் இந்திய அடிப்படைவாதிகளைச் சுட்டிக்காட்டி அதைக்கொண்டு இங்குள்ள நேர்மையற்ற இந்திய, இந்து எதிர்ப்புசக்திகளை முற்போக்கு, ஜனநாயக சக்திகளாகக் கட்டமைக்கிறார்கள்.

இந்தியாவின் உண்மையான மெய்யியலை, பண்பாட்டை முன்வைக்கும் குரல்கள் பல உள்ளன, அவற்றுக்கு இவ்விரு தரப்புகளுமே எதிரானவை. இவர்களின் அரசியலுக்கு அவை உதவாது. இதுவே இன்றைய நிலைமை. இச்சூழலில் இந்தியக் கல்வித்துறை ஆய்வுகள், அவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் மேலைநாட்டுக் கல்வித்துறை ஆய்வுகளைக்கொண்டே இந்தியாவைப் புரிந்துகொள்கிறார்கள் மேலைநாட்டு ஆய்வாளர்கள். சென்றகாலங்களில் இவ்வாறு மேலைநாட்டுக் கல்வியாளர்களின் நூல்களில் இந்தியா குறித்து சொல்லப்பட்டிருக்கும் பிழைகள், திரிபுகள், உள்நோக்கம்கொண்ட இருட்டடிப்புகளை சுட்டிவந்திருக்கிறேன்.

அனேகமாக இந்தியப் பண்பாட்டின் எந்த ஒரு விஷயம் குறித்தும் அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வை வாசித்தால் அதிலுள்ள அறியாமையும், திரிபும் ,பொய்யுமே வந்து அறைகின்றன. எனக்கு நன்றாகத்தெரிந்த தளங்களில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்தப் பிழையான ஆய்வுகளுக்கு கல்வித்துறைசார்ந்த முறைமை கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். ஆகவே பலநூறு அடிக்குறிப்புகள், நூல்சுட்டுகள் இருக்கும். அவை பெருமைமிக்க கல்வியமைப்புகளால் புகழ்மிக்க அறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே அவற்றின் நம்பகத்தன்மையை எளிமையாக எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

இது சென்ற நூறாண்டுகளாக மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு பூதாகரமாக எழுந்து நின்றிருக்கும் ஒரு அறிவாதிக்கம். ஆப்ரிக்க, சீன வரலாறும் பண்பாடும் இவ்வாறு திரிக்கப்பட்டுத்தான் நமக்குக் கிடைக்கின்றன. இன்று சீனா அதிலிருந்து வெளியேற நிகரான அறிவியக்கம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆற்றல் இந்தியாவின் அறிவியக்கத்திற்கு இல்லை. அறிவியக்கம் நடைமுறை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக, நிலையான கருத்துவளர்ச்சி கொண்டதாக இருக்கவேண்டும். அதற்கு அரசுநிறுவனங்கள், கல்விநிறுவனங்களின் உதவி தேவை. அதற்கான வாய்ப்பே இந்தியாவில் இன்றில்லை. என்றாவது உருவாகலாம். அன்று அந்த இந்திய அறிவியக்கம் மெல்லமெல்ல வளர்ந்து அதன்மேல் ஏற்றப்பட்டுள்ள திரிபுகளையும் பொய்களையும் கடந்துசெல்லலாம்.

இவாலின் இந்தக் கருத்தை மிகமேலோட்டமாக இந்தியப் பண்பாட்டாய்வாளர்களின் எழுத்துக்களை வாசித்தாலே மறுத்துவிடலாம். ஏன், இந்தியவரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வுசெய்த கோஸாம்பி போன்றவர்களே ஆணித்தரமாக மறுத்துவிட்ட விஷயம் இது. இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.

இவால் இந்தக்கருத்தை இந்தியவரலாற்றை சுருக்கமாக எழுதித் தொகுத்திருக்கும் அமெரிக்க நூல்களிலிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம். அவர்கள் எதை வேண்டுமென்றாலும் திரிப்பார்கள், அதற்கு விரிவான கல்வித்துறை முறைமைகளை மட்டும் கடைப்பிடிப்பார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஏசுவின் மாணவர் தாமஸ் இந்தியாவின் தென்கடற்கரைக்கு வந்தார் என்ற அப்பட்டமான பொய்யை மெல்லமெல்ல கல்வித்துறை ஆய்வுகளுக்குள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இத்தகைய நூறு திரிபுகளை நான் சுட்டிக்காட்ட முடியும்.

ஒருமுறை ஒரு அமெரிக்கப்பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்முன் ஒரு ஆய்வுநூல் இருந்தது. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வுநிறுவன உதவியுடன் செய்யப்பட்டது. நூலைத் திறக்காமலேயே நான் சொன்னேன், இது திரிபுகள் நிறைந்த நூல் என. அவர் சீண்டப்பட்டார். நான் அதில் ஏதேனும் ஒரு பக்கத்தை பிரியுங்கள், அங்கே அப்பட்டமான ஒரு திரிபை நான் சுட்டிக்காட்டமுடியும் என்றேன். அவர் பிரித்த பக்கத்தில் ஒருவரி ‘பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, குலதெய்வம் பிற சாதியினருக்கு உரியது’ . அது அப்பட்டமான பிழை என அவருக்கே தெரியும். சோர்வாக நூலை மூடிவைத்துவிட்டார். தமிழகத்தில் அல்ல இந்தியா முழுக்கவே பிராமணர்களுக்கு குலதெய்வங்களும், குடும்பதெய்வங்களும் உண்டு. பலசமயம் பிராமணர்களுக்கும் பிறருக்கும் ஒரே குலதெய்வங்கள் இருப்பதுமுண்டு.

சமீபத்தில் ஒரு நூலை மேலோட்டமாகப் புரட்டினேன்.அதில் ஒரு வரி ‘பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு கோத்திரங்கள் கிடையாது’. என்ன சொல்ல?. சரி, இந்நூல்களை நாம் மறுக்க முடியுமா? மறுப்பதென்றால் நாம் எழுதும் நூலை இந்தியாவின் புகழ்மிக்க கல்விநிலையங்களின் உதவியுடன் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகள் வெளியிடவேண்டும். அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களுக்குச் சாதகமான கருத்துக்களையே வெளியிடுவார்கள். இந்தியாவின் குரல் அவர்களைச் சென்று சேரவே வழியில்லை, ஏற்கனவே காதுகளை மூடி வைத்திருக்கிறார்கள். நான் சொன்ன மறுப்புகள் எங்கும் ஒலிக்காது. ஆனால் அந்நூல்கள் அமெரிக்க,ஐரோப்பிய நூலகங்களில் இருக்கும். மேற்கோள் காட்டப்படும்.

இந்த பல்கலை ஆய்வுகள் முறைமைகளை கடைப்பிடிப்பவை, கல்வித்துறை மொழியில் பேசுபவை, ஆகவே பாமரர்களுக்கு அவை உண்மை எனத் தோன்றும்.அவை முறைமைகளை, கல்விச்சார்பை பாவனை செய்வதனாலேயே மேலும் கீழ்மைநிறைந்த அரசியல் ஆயுதங்கள். இவை அங்கே இருந்து மீண்டும் இங்கே வருகின்றன. இங்குள்ள அறிவுச்சூழலில் மேற்கோள்களும் ஆதாரங்களும் ஆகின்றன. குறைந்தது அதற்கு எதிராகவாவது ஒரு கருத்துரீதியான தற்காப்பை , முன்னெச்சரிக்கையை நாம் மேற்கொள்ளலாம். அவர்களுக்கு வலுவான அவநம்பிக்கையை அளிப்பதுதான் அது. இப்போதைக்கு நாம் செய்யக்கூடுவது இது மட்டுமே

ஜெ

***

குலதெய்வம்-கடிதங்கள்
நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
முந்தைய கட்டுரைஆலயம், காந்தி -இருகேள்விகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49