என்.ராமதுரை -கடிதங்கள்

NR-profile

 

அஞ்சலி என்.ராமதுரை

அன்புள்ள ஜெ

 

என் ராமதுரை பற்றிய உங்கள் அஞ்சலிக்குறிப்பை வாசித்தேன். விரிவாகவே நீங்கள் எழுதியிருக்கலாம். நான் ஓர் ஆசிரியன். என் மாணவர்களுக்கு அவருடைய கட்டுரைகளை நகல் எடுத்து வாசிக்கக் கொடுப்பேன். அறிவியலை விந்தை குறையாமல் எளிமையாக அறிமுகம் செய்தவர். அறிவியலுணர்வை ஊட்டுவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டே இருந்தவர். அவருடைய மறைவுக்கு அஞ்சலி

 

எஸ்.தங்கராஜ்

 

அன்புள்ள ஜெ

 

என்.ராமதுரை அவர்களின் அறிவியல்கட்டுரைகளின் வாசகன் நான். அவர் தன் வாழ்க்கை முழுக்கவே இங்குள்ள அறிவியலுக்கு எதிரான மனநிலைகளுடன் போராடிய ஓர் போராளி. அவருடைய கட்டுரைகளைப் பாருங்கள். தமிழர்களுக்கு ‘அற்புதங்கள்’ மீது நம்பிக்கை மிகுதி. பெருமுடா முக்கோணம் பிரமிடுகள் என எவ்வளவோ மூடநம்பிக்கைகள். இங்கே மாற்று மருத்துவம் சித்தமருத்துவம் எல்லாமே மூடநம்பிக்கைகளாகவே உள்ளன. அவர் இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். ஒவ்வொன்றிலும் உள்ள அறிவியல் உண்மையைச் சொல்லி இவர்கள் கொண்டிருந்த அற்புதபரவசாங்களை இல்லாமலாக்கியவர்.

 

யோசித்துப்பார்த்தால் ஆச்சரியம். அறிவியலை மதிக்காமல் வாய்க்கு வந்தபடிப் பேசும் பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றவர்களுக்கு இங்கே கோடிக்கணக்கில் ரசிகர்கள். அறிவியலை அற்புதமாக, எளிமையாகச் சொன்ன ராமதுரையை சில ஆயிரம்பேர்கூட வாசிக்கவில்லை. அவர் இந்த அற்புதங்களைப்பற்றிய புல்லரிப்புகளை இல்லாமலாக்கி அறிவியல்மனநிலையை உருவாக்கியவர் என்பதுதான் காரணம்.

 

ஆர்.நாராயணன்

 

 

இனிய ஜெயம்

 

ஹைட்ரஜன் அணு மிக மிக எடை குறைந்தது ஆகவே மிக மிக ”உணர்ச்சி ”கரமானது . ஆகவேதான் எளிதில் அது தீப் பிடிக்கிறது .ஆக்சிஜன் அணு எது ஒன்று எரிந்தாலும் அதற்க்கான கிரியா ஊக்கி .ஆக்சிஜனின் இறுதி துளி தீரும் போதே எரியும் பொருள் அடங்கும் .

 

இந்த ஹைட்ரஜன் அணு இரண்டு ,இந்த ஆக்சிஜன் அணு ஒன்று , இரண்டும் இணைந்தால் கிடைப்பது தண்ணீர் . நெருப்புக்கு நேரெதிரான வஸ்து . [ஆமாம் இதை எங்கே படித்தேன் ???]  அறிவியலின் எந்த ஒரு அலகிலும்,அதன் இயல்பிலேயே இந்த வசீகர மர்மமும் இணைந்தே செயல்படுகிறது . இந்தப் புள்ளியியை மையம் கொண்டு இயங்குவது என் ராமதுரை அவர்களின் அறிவியல் எழுத்துக்கள் . நான் அவ்வப்போது சென்று வாசிக்கும் தளம் .

 

//வணிக எழுத்துக்குரிய செயற்கையான விளையாட்டுத்தனமோ, இறங்கிவந்து சொல்லும் பாவனைகளோ இல்லாமல், நேரடியான மொழியில் அறிவியலை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் என்.ராமதுரை. அறிவியல் அதிலுள்ள கருத்துக்களின், பார்வையின் விந்தையாலேயே ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக ஆகமுடியும் என நிரூபித்தவர். தமிழில் அறிவியலை எழுதியவர்களில் அவருக்கே நான் முதலிடம் அளிப்பேன்.//

 

மிக சரியாக அவரது பங்களிப்பை வகுத்து வைத்த வரிகள் இவை. அதற்கு உதாரணம் என  கீழ்க்கண்ட அவரது கடலுக்கு அடியில்  கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்  எனும் கட்டுரையை சொல்லலாம் .

 

http://www.ariviyal.in/2011/11/

 

கிட்ட தட்ட இவர் போலவே ,அறிவியல் எழுத்தை இப்போது கையாளும் மற்றவர் ஹாலாஸ்யன் . கடல் விரிவின் சில பகுதிகள் வழியே , ஒளிச்சேர்க்கை நிகழ்த்தி ,வளி மண்டலத்தில் மிகுந்து நிற்கும் கரியமில அணுக்களை குறைக்கும் முயற்சியை ,ஆராய்ச்சி வழியே இந்தியா உட்பட சில நாடுகள் பரிசோதித்து பார்த்திருக்கிறது .அது குறித்த ஹாலாஸ்யன் அவர்களின்  கட்டுரை இது

 

கடலிற்கான உரம், இரும்பு

 

என் ராமதுரை அவர்களின் வழியிலான அறிவியல் எழுத்து முறை தொடரும் என்ற நம்பிக்கையை ஹாலாஸ்யன் அளிக்கிறார் .

 

ஐயையோ அப்போ சுஜாதா  என்றொரு கோஷ்டி கிளம்பி வரக்கூடும் . காலையிலேயே நண்பர் ஒருவர் தொலைபேசி விட்டார் . சுஜாதா வெறியர் .கணிப் பொறியில் அதன் அனைத்து கூறுகளையும் கட்டுடைத்து குடல் ஆபரேஷன் செய்வதில் ஜில்லா கத்திரி . ஆம் அதிலேயே அவர் ஒரு கல்லூரியில் வாத்தியாராக இருக்கிறார் . அவ்வப்போது தொலைபேசுவார்  இந்த வருட தீபாவளிக்கு உலகின் செயற்கை அறிவு உதித்துவிடும் என்பார் .  இந்த வருட தீபாவளி நெருங்கி விட்டது .

 

புற உலகில் மனநோய் ,மனச்சிக்கல் என்ற ஒன்றே இனி இல்லை .அக உலகில் கணிப்பொறிகள் கனவு காணும் .இந்த இரண்டு நிலைகளும் ஒருமித்து சாத்தியம் ஆகும் போதே செயற்கை அறிவு என்ற ஒன்று சாத்தியம் என்ற எளிய உண்மையை இவருக்கு சொல்லிப் புரிய வைத்து விட முடியாது .காரணம் சுஜாதா இவர்களை ”வளர்த்த ”விதம் அப்படி .

 

அதிலிருந்து விலகி நிற்கும் என் .ராமதுரை போன்றோர் பணி மிக மிக முக்கியமானது . அவரது தளம் தமிழின் சொத்துகளில் ஒன்று .அதை பாதுகாக்கும் விஷயங்கள் எந்த அளவு நடைமுறையில் இருக்கிறது என தெரியவில்லை .அவருக்கு அவரது வாசகர்கள் சார்பாக அஞ்சலிகள் .

 

கடலூர் சீனு

 

ராமதுரையின் இணையப்பக்கம் அறிவியல்புரம்

என்.ராமதுரை

நகரும் கற்கள்

முந்தைய கட்டுரைஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo
அடுத்த கட்டுரை‘நானும்’ இயக்கம், எல்லைகள்