ஏழாம் உலகம்- கடிதம்

ezham-ulagam

 

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

 

அன்புள்ள ஆசானுக்கு ,

 

நலம் தானே ? ஏழாம் உலகம்  நாவல் வாங்கி 6 மாதத்திற்கு மேல் ஆகியும் படிக்காமல்  ஒத்திப் போட்டுக்கொண்டு வந்தேன்   இன்று தான்  படித்து  முடித்தேன். படித்து முடித்தவுடன் மனதில் சொற்களால் சொல்ல முடியாத ஒரு வெறுமை .

 

எல்லா  பாத்திரங்களும் நாவலை ஒரு ஒரு திசை நோக்கி  விரித்தபடியே உள்ளன. ஏழாம் உலகில் வாழும்  இம்மனிதர்கள் , பல வேலைகளில்  நாம் பார்த்தும் பார்க்காமல் சென்ற  நபர்கள். அந்த மனிதர்களின் வாழ்க்கையை  முகத்தில்  உமிழ்ந்து இங்கே பார் இப்படி ஒரு வாழ்வும் இங்கு  இருக்கிறது என்று  காட்டியது நாவல் .

 

நாவலில் வரும் எல்லாரும் அந்த உருபடிகளை மனிதர்களாக நடத்துபவர்களாக இல்லை , எல்லாரும் அவர்களை சுரண்டி  பிழைப்பவர்களாக இருக்கின்றனர்  பண்டாரம் , காவல்துறை , மருத்துவமணை , எங்கும் அவர்களை ஒரு ஆன்மாவகா  மதிப்பதே இல்லை .

 

இதில்  மனிதர்களின்  கீழ்மைகள் அனைத்தும் காட்டப்பட்டு விட்டன,

ஆனால் இதில்  அந்த கீழ்மையை வெளிப்படுத்துபவர்களுக்கு  அவர்கள் செய்வது தவறு என்று தெரிவதே இல்லை . பண்டாரமும் அவர் மனைவியும் ஒரு இடத்தில் சொல்லும் போது ” நான் யாருக்கென்ன பாவம் செய்தேன் ” என்று கூறும் போது அது உள்ளத்தில் இருந்து தான் சொல்லப்படுகிறது. தன் மகள் தன்னை விட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடியதை தாங்கிக்கொள்ள  முடியாத  பண்டாரம் தான் முத்தம்மை இடம் இருந்து ரஜினிகாந்தை பிரித்து விற்கும்போது எந்த ஒரு குற்ற உணர்வும் அற்றவராக  இருக்கிறார். அவரின் பார்வையில் அவர்  செரியாகவே நடந்து கொள்கிறார். அதே பண்டாரம் குழந்தைகளை கடத்தி உருப்புகளை சேதம் பண்ணும் கும்பல் குழந்தைகளை காட்டும் போதும் அவர் மனம்  அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்   மறுக்கவும் செய்கிறது  பதறிப்போகிறார்.அந்த  ஏழாம் உலக மனிதர்களுக்கும்  ஆன்மா இருப்பதை அவர் அறிந்து கொண்டவராக  தெரியவில்லை.

 

இங்கு  போத்தியின் உள் ஆழம் வெளிப்படும் இடம் வருகிறது , முத்தம்மையை நிர்வாணமாக பார்க்க நினைக்கிறார் ஆனால்

பின் அதை அவரே வேண்டாம் என்று மறுக்கிறார்.  அதை செய்ததுக்கு மேல் இனி அவள் முன் சென்று நிர்க்க முடியாது என்று சொல்கிறார்.

 

பின் அந்த ஏழாம் உலக மனிதர்களின் வாழ்க்கை பார்வை அவர்கள் தங்கள் அளவில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். முத்தம்மை குழந்தையை வளர்க்கும் பகுதி , தொரப்பு  தன் குழந்தையை தொட்டு பார்க்க என்னி என்னி கை நீட்டும் தருணம் தந்தைமையின் ஒரு பகுதி. பின்  எருக்கு ,  மருத்துவமணையில் இருந்து அவளை கூட்டி வர பெருமாள் தனக்கு  மஞ்சள் கயிற்றை கட்டியதால் அவனை தன் கணவனாக ஏற்றுக்கொண்டது. குய்யனின் நகைச்சுவைகள் . குய்யன் தன் முதலாலி தனக்கு கல்யாண சோறு  போடவில்லை என்று அறிந்து அவன் அடையும் மனவருத்தம் பின் அவர்கள் எல்லாம் சேர்ந்து அவனுக்கு  சாப்பாடு வாங்கி தருவது   பல இடங்கள் எங்கோ மனதை தொட்டு தொட்டு செல்கிறது.

 

இறுதியில் முத்தம்மை ” ஒத்தவிரலு ” என்று அழும் இடம் முதலில் படித்த போது புரியவில்லை பின்பு தான் புரிந்தது. இதை விட ஒருத்தி மேல்   கீழ்மையை புகட்ட முடியாது. நாவல் அவர்களின்  அந்த வாழ்விலும் அவர்கள் தங்களை இன்பமாக அமைத்துக் கொண்டதை உணர்த்துகிறது.

 

 

நன்றி ,

 

சுகதேவ்

 

மேட்டூர்.

ஏழாம் உலகம் -கடிதம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

ஏழாம் உலகம் -கடிதங்கள்

ஏழாம் உலகம் பற்றி

ஏழாம் உலகம் கடிதங்கள்

ஏழாம் உலகம் – கடிதம்

ஏழாம் உலகம் -கடிதம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

 

ஏழாம் உலகம்- கடிதம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45
அடுத்த கட்டுரை’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?