வாழும்சொல்

 a

ஏடுதொடங்கல்
பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்
எழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்
கிறித்தவ விஜயதசமி

நேற்று [19-10-2018] முழுக்க ஒரே பரபரப்பு. விடியலிலேயே எழுந்து வெண்முரசு எழுதிவிட்டேன். உடனே குளியல். ஏழரை மணிக்குள் அருண்மொழி பூசைக்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டாள். வெண்முரசு நூல்களை வைத்து சரஸ்வதி படமும் தாராதேவி சிலையும் நிறுவி பழம் பொரி மலர் கனிகள் படைத்து ஊதுவத்தி ஏற்றி விளக்கு பொருத்தி.

நான் நீராடிவிட்டு வந்தபோது அஜிதனும் சைதன்யாவும் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தார்கள். “நல்ல நாளில் காலை நீராடுவது ஒரு மரபு” என்று ஒரு தயக்கத்துடன் சொல்லிவைத்தேன். ஆனால் இதெல்லாம் மரபுகள் உடைபடும் காலம். பெண்டிர் மரபை மீறுவது நவீன மோஸ்தர். பல்லே தேய்க்கமாட்டேன் என்று சைதன்யா சொல்லிவிட்டால் மேலும் சிக்கல். அதுகூட பரவாயில்லை, அஜிதன் மேலைத்தத்துவம் சார்ந்து ஏதேனும் விளக்கம் அளிக்க ஆரம்பித்தால் காலை கந்தலாக ஆகிவிடும்.

நண்பர் மெலட்டூர் ராகவ் நாலைந்து சட்டைகள் வாங்கித் தந்திருந்தார். காலர் இல்லாதவை. அவற்றில் சந்தனநிறச் சட்டையை அணிந்து சரிகை வேட்டி கட்டி ஒருங்கி நின்றேன். அருண்மொழி எனக்கு சந்தனப்பொட்டு போட்டுவிட்டபோது முழுமையான தோற்ற ஒருமை அமைந்தது. இந்தமாதிரி தோற்றங்களுக்கு வழுக்கை நன்று.

காலையில் செல்வேந்திரன் தன் இளையமகள் இளவெயினிக்கு எழுத்தறிவிப்பதற்காக கோவையிலிருந்து வருவதாகச் சொல்லியிருந்தார். உடன் நரேனும். தீவிர திராவிடர்கழகத்தினரின் மகள் அருண்மொழி மரபுக்குள் உக்கிரமாகப் புகுந்தது அப்படித்தான். மொத்தமாக ஒரு மங்கலமான குழப்பம். அருண்மொழி பரவசமாக இருந்தாள். ஒவ்வொன்றுக்கும் ஆணையிட்டு அதை நாம் செய்வதற்குள் கூச்சலிட்டு தடுத்து அவளே செய்தாள்.

b

செல்வாவும் நரேனும் திருக்குறளரசியும் இளவெயினியும் இளம்பிறையும் வந்து சேர்ந்தனர். காலை எழுந்ததன் புத்துணர்ச்சியுடன் இளவெயினி, காலை எழுந்ததன் சோர்வுடன் இளம்பிறை. செல்வேந்திரன் அசைவத்தை நிறுத்திவிட்ட தெளிவுடன் இருந்தார். திருக்குறளரசி மெலிந்துவிட்டார் என சொல்லி அவரை மகிழ்விக்க எனக்கு ஆசைதான்.காலையிலேயே எதற்கு பொய் சொல்லவேண்டும் என எண்ணி கைவிட்டேன்.

இளமையில் எங்களூரில் அம்மன்கோயிலில் எழுத்தறிவிப்பு நடக்கும். கல்விமானாகிய என் பெரியப்பா பல குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பார். அன்றெல்லாம் பள்ளிக்கூடம் போவதற்கு முந்தைய விஜயதசமிநாளில்தான் எழுத்தறிவிப்பு. ஆகவே பிள்ளைகள் நன்றாக வளர்ந்து ஐயமும் குழப்பமுமாக வாழைப்பழக்கையுடன் நின்றிருக்கும். எழுத்தறிவிப்புக்குப் பின் அரிசிப்பாயாசம் வழங்கப்படும் என்பது ஆர்வமூட்டும் அம்சம்.

பெரியப்பா ஒரு மரப்பெட்டியில் தங்க கைப்பிடி கொண்ட எழுத்தாணி வைத்திருப்பார். அது மங்கலச்சடங்குகளுக்கு மட்டும். எழுத்தறிவித்தல், திருமணக்குறி எழுதுதல் போல. எனக்கு அவர் எழுத்தறிவிக்க அந்தப்பெட்டியைத் திறந்து அதை வெளியே எடுத்த நினைவு உள்ளது. நான் மயிர்க்கூச்செறிந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதை எப்படி ‘அடித்துமாற்றுவது’ என்பதைப்பற்றிய திட்டங்கள். பனை ஓலையில் எழுத்தாணி ஓடும் மென்மையான கிருகிரு ஓசை எனக்கு எப்போதுமே உச்சகட்டக் கிளர்ச்சியை உருவாக்குவதாக இருந்தது.

இளம்பிறைக்கு எழுத்தறிவித்தேன். செல்லக்கொட்டாவியுடன்  ’சமர்த்தாக’ இருந்தது. எதிரில் சுவாமிக்கு ஏகப்பட்ட தின்பண்டங்கள் படைக்கப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம். நான் பொதுவாக தீங்கற்றவன் என அவர்கள் வீட்டுக்குச் செல்வதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அதைவிட அவள் கருவிலிருந்தபோதுதான் திருக்குளறரசி வெண்முரசு முழுமையாக வாசித்தார். ஆகவே  ‘எதுக்கு வம்பு?” என நினைத்திருக்கலாம்

அக்காலத்தில் இம்மாதிரிச் சடங்குகளில் ஏழெட்டு பெரிசுகள் கூடிச்சூழ்ந்து நின்று ‘ஆ, அப்டித்தான்’ ‘கைய எடுங்க’ ‘வாழைப்பழம் எங்கே?’ ‘தேன் தேன் கொண்டா” என்று கூச்சலிட குழந்தைகள் மிரண்டு ‘அம்மாகிட்ட போறேன்’ என ஆரம்பிக்கும். ‘கைய வச்சுட்டு சும்மா இருக்கணும். வாய மூடிட்டிருக்கலேன்னா நச்சுப்புடுவேன் நச்சு” என்று அதட்டி அழைத்துவரப்படும் பிள்ளைகள் கடைசிநிமிடத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டி ‘எனக்கு வேணாம்… எனக்கு வேணாம்’ என கதறி சரஸ்வதியை புன்னகைக்கச் செய்யும்.

c

அரிசியில் தமிழ் அ சம்ஸ்கிருத ஸ்ரீ எழுதி நாவில் தேன் தொட்டு வைத்து காதில் அ சொல்லி எழுத்தறிவிப்பு நடத்தவேண்டும். செய்து முடித்து எழுந்தால் ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் தகுதி வேண்டுமோ? அஜியும் சைதன்யாவும் என் புதியவேடத்தை வேடிக்கை பார்ப்பதுதான் காரணமோ?

உடனே அவர்கள் கிளம்பினர். நானும் அருண்மொழியும் அப்படியே காரில் கிளம்பி தெங்கம்புதூர் சென்றோம். நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன் ஒரு புதிய கடை திறக்கிறார். நீர்த்தூய்மை செய்யும் இயந்திரங்கள், மின்விசிகள் போன்ற வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடை. ‘வெயிலாள்’என கடையின் பெயர். நானும் அருண்மொழியும் வரவேண்டும் என அழைத்திருந்தார்

அய்யர் முறைப்படி வேதம் முதல் வள்ளலாரின் அருட்பா வரையிலான மந்திரங்களைச் சொல்லி பூசையை நிகழ்த்திவைத்தார். எந்தெந்த தெய்வங்களை நினைக்கவேண்டும் என்று அவர் மணிவண்ணனிடம் சொன்ன வரிசையை கவனித்தேன். முதலில் பெற்றோர், அடுத்து மறைந்துபோன மூதாதையர், அதன்பின் குடும்பதெய்வம், அதன்பின் குலதெய்வம், அதன்பின் கிராமதெய்வம், அதன்பின் காவல்தெய்வங்கள், அதன்பின் சிவன் விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்கள். குலதெய்வம் என்ன என்று அய்யர் அதட்ட மணிவண்ணன்  ‘பொன்னாரமடை இசக்கி’ என முணுமுணுத்தார். அய்யர் ‘முத்தாலம்மன் மாயாண்டிச்சாமி, பூதத்தான் என சாமிகளை வணங்கிக்கிடுங்க” என்றார்.

இந்த வரிசை நானறிந்து எப்போதுமே பூசைகளில் கைக்கொள்ளப்படுகிறது. காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி ஓர் உரையில் குடும்பதெய்வமும் கிராமதெய்வமும் வணங்கப்படாமல் பூசைகள் எதையும் தொடங்கலாகாது என்கிறார். திடிரென்று ஒருசிலர் ஒருசில நிதியுதவிகளுடன் கிராமதேவதைகள் இந்து தெய்வங்கள் அல்ல, அவை இந்துக்களால் ஒடுக்கப்படும் தெய்வங்கள் என்று இந்துக்களிடமே சொல்ல ஆரம்பித்த வேடிக்கையை நினைத்தபோது இந்துமதம்போல இத்தனை சூழ்ச்சித்திறனுடன் தாக்கப்படும் வேறேதும் மதம் உலகில் உண்டா என்ற ஐயத்தை அடைந்தேன்.

நான் நாடா வெட்டி கடையைத் திறந்துவைத்தேன். நித்யாவை நினைத்துக்கொண்டு இச்செயல்களைச் செய்வது என் வழக்கம். இதற்கான தகுதிகள் எனக்கில்லை என்றாலும் நான் அவரை நினைத்துக்கொண்டால் அக்குறைபாட்டைக் கடக்கலாம். லக்ஷ்மி மணிவண்ணன் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம். அது சிறப்புறவேண்டும் என வாழ்த்தினேன்.விழா இனிதாக முடிந்தது. கடை புதிய இடம். பொருட்களும் புதியவை. மொத்தமாக ஒரு அழகு இருந்தது அங்கே

d
செல்வா,திரு 

வீட்டுக்கு வந்தால் இன்னொரு குடும்பம் எழுத்தறிவிக்க வந்திருந்தது. என் வாசகரான ராஜீவ், தக்கலை அருகே கேரளபுரத்தைச் சேர்ந்தவர். நான்குநாட்களுக்கு முன் அவருடைய இரண்டாவது குழந்தைக்கு எழுத்தறிவிக்க முடியுமா என நான் வங்கிக்குப் போய்விட்டு வெயிலில் நடந்து வரும்போது ஓடிவந்து வழிமறித்து கேட்டார். வரச்சொன்னேன். இவர்களுக்கும் இரண்டுமே பெண்குழந்தைகள். ஹர்ஷிதா த்ரேயா மூத்தவள். எழுத்து கொள்ளவந்தவள் இளையவளாகிய  லக்ஷ்மிதா த்ரேயா . ராஜீவ் கூடங்குளத்தில் பணியாற்றுகிறார். அங்கிருந்து வந்திருந்தார். மீண்டுமொரு எழுத்தறிவிப்புச் சடங்கு.

கண்ணைச்சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. மேலே செல்லப்போனபோது சைதன்யா கேட்டாள், ‘அப்பா, இந்தச் சடங்கு தேவைன்னு நினைக்கிறியா?’ நான் சடங்குகளைப் பற்றிய நித்யாவின் கருத்தைச் சொன்னேன். நாராயணகுருகுலம் ஓர் தூய அத்வைத குருகுலம். அங்கே அன்றாடச் சடங்குகள் என ஏதுமில்லை. வகுப்புகள் மட்டும்தான். ஆனால் அத்வைதமரபு சடங்குகளுக்கு எதிரானது அல்ல. அனுஷ்டானங்களின் உளவியல், கருத்தியல் பங்களிப்பை அது ஏற்கிறது.

எந்த ஒரு கருத்தையும், உளநிலையையும் ஒரு குறியீடாகவும், குறியீட்டுச்செயல்பாடாகவும் ஆக்கிக்கொண்டுதான் அன்றாடப்படுத்த முடியும். ஆகவே நாம் ஏற்கனவே இருக்கும் சடங்குகளுடன் புதிய சடங்குகளைக் கண்டுபிடிக்கிறோம். மாலையிட்டுவணங்குதல், பொன்னாடை போர்த்துதல், நூல்வெளியிடுதல், நாடா வெட்டுதல், கேக் வெட்டுதல் போல சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாகி வந்த புதிய சடங்குகளே ஏராளமாக உள்ளன. குறியீட்டுச் செயல்பாடுகள் சமூகப்பழக்கமாக ஆகும்போது அவை சடங்குகளாகின்றன

வாழ்க்கையின் சில தருணங்களைச் சடங்காக ஆக்கித்தான் நம்மால் நிகழ்த்தமுடியும். திருமணம் ஓர் உதாரணம். அதைப்போன்ற ஒன்றுதான் எழுத்தறிவித்தல். குழந்தைக்கு சொல்லரசியின் முதல் அறிமுகம். அது சொல்லில் ஈடுபடும் ஒருவரிடமிருந்து அமையவேண்டும் என்பது ஒரு தொல்வழக்கம். தமிழகத்தில் சொல்லறிவித்தல், ஏடுதொடங்கல் என்ற பேரில் கொண்டாடப்பட்டது. பொற்கொல்லர்கள் போன்றவர்கள் தங்களுக்குரிய வகையில் அதைக் கொண்டாடினர். இன்று அது அனைவருக்கும் பொதுவான சடங்காக ஆகிவிட்டது

நவீன எழுத்தாளர்கள் குழந்தைக்குச் சொல்லறிவித்தல் கேரளத்தில் துஞ்சன்பறம்பில் தொடங்கியது. கேரள முதற்கவிஞர் துஞ்சத்து எழுத்தச்சனின் நினைவிடம் அது. ஓ.என்.வி குறுப்பு, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றவர்களிடம் ஆயிரம் குழந்தைகளுக்குமேல் அன்று .  ஏடுதொடங்குவது வழக்கம். அவர்கள் இடதுசாரி எழுத்தாளர்களும் கூட. அது அங்கே ஒரு மதவிழாவாக அல்ல, பண்பாட்டுவிழாவாகவே கருதப்படுகிறது. முதல்வர் பிணரயி விஜயனே எழுத்தறிவிக்கிறார்

lak
லக்ஷ்மி மணிவண்ணனின் கடை,தெங்கம்புதூர் 

சென்ற 2012ல் திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்திய ஏடுதொடங்கல் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். ஆயிரம்பேருக்குமேல் திரண்டு வந்திருந்தனர். தொடர்ந்து ஆண்டுதோறும் அங்கே எழுத்தாளர்கள்  குழந்தைகளுக்குச் சொல்லறிவிக்கிறார்கள். நாஞ்சில்நாடன், ஜோ டி குரூஸ், மா வெங்கடேசன், கவிஞர் இசை என பலர் அதைசெய்திருகிறார்கள். உண்மையில் ஒரு எளிய சடங்கு இது. ஆனால் குழந்தைகளை மடியிலமர்த்துவதும் சொல்லளிப்பதும் எங்கோ ஒரு புள்ளியில் எழுத்தாளனை நெகிழவைத்துவிடும். தன் உலகியல் தோற்றத்துக்கு அப்பால் தான் சொல்லுக்குரியவன் என்னும் தன்னுணர்வை அவன் அடையும் தருணம் அது.

இத்தகைய சடங்குகளில் உள்ள காலத் தொடர்ச்சியே அவற்றை ஆழமானவையாக ஆக்குகிறது.  வேள்வி என்பது அனலுக்கு அவியூட்டும் ஒரு சடங்குதான். உலகியலில் ஊறிய ஒருவன் தீயில் நெய் ஊற்றினால் அது சாமிக்குச் செல்லுமா என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு தன்னை ஒரு சிந்தனையாளனாக எண்ணிக்கொள்வான். ஆனால் கொஞ்சம் சிந்திப்பவன், கொஞ்சம் வரலாறு அறிந்தவன், குறியீடுகளின் பரிணாமத்தையும் உளவியலையும் அறிந்தவன் அச்சடங்கின் தொன்மையால் ஆட்கொள்ளப்படுவான். ஏறத்தாழ நான்காயிரமாண்டுகளாக பெரிய மாற்றமில்லாமல் நடந்துவரும் ஒருசெயல். ஏறத்தாழ அதே சொற்கள். அந்த அறுபடாத தன்மை எத்தனை பெரிய செல்வம் என வியப்பான்.

அவை எந்த ஆதிக்கத்தாலும் அளிக்கப்படும் ஆணைகள் அல்ல. கவிஞனின் சொற்கள். நாம் சொல்லின் வழியாக மட்டுமே அறியும் கவிமூதாதையின் உணர்வுகள். அந்தக்கவிதையிலிருந்து இன்றைய கவிதை பெரிய மாற்றமேதையும் அடைந்திருக்கவில்லை என்பது நம்மை திகைக்கச் செய்யும். இயற்கைப்பேருருவின் முன், பெருவெளியின்முன், காலத்தின் முன் மானுடனின் எளிமையை அவை அறிவிக்கின்றன. அம்மாபெரும் இருப்புகளின் துளியென உணரும் பெருமிதத்தையும் வெளிப்படுத்துகின்றன. அனலுடன், காற்றுடன், வெயிலுடன், இடிமின்னலுடன், முகில்களுடன், மண்ணின் ஊற்றுகளுடன் தானும் அவற்றிலொன்றென நின்று உரையாடும் மானுடத்தை நாம் அவற்றில் காண்கிறோம்.

e
நரேனும் 

இன்றைய நவீன மனிதன் இந்தத் தொன்மையை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. அவன் ஒவ்வொருநாளுமென இழந்துகொண்டிருக்கும் காலத்தொடர்ச்சியை, பண்பாட்டு நீட்சியை, இயற்கையுடனான உறவை அவை நிலைநிறுத்துகின்றன என அவன் அறிவான். அவை குறியீட்டுரீதியாக மிக முக்கியமானவை, பேணப்படவேண்டியவை என உணர்ந்திருப்பான். சென்றகால மனிதன் அவற்றை நேரடிப்பொருளில் எடுத்துக்கொண்டிருப்பான். இன்றைய நவீன மனிதன் அவற்றை குறியீட்டுப்பொருளில் எடுத்துக்கொள்வான். சென்றகால மானுடன் சென்றடைந்த அதே உச்சநிலையை தானும் சென்றடைவான்.

மரபிலிருந்து தன்னை பிரித்துக்கொண்டு தன்னை ‘நவீன’மானவனாக எண்ணிக்கொள்வது பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் உளநிலை. இயற்கையை பயன்படுபொருளாகப் பார்ப்பது, மானுடனை இயற்கையின் நாயகனாக எண்ணிக்கொள்வது, அறிவால் முற்றிலுமாகவே ஓர் உலகைப் படைத்துவிட முடியுமென நம்புவது போன்ற கருத்துக்களும் உணர்வுகளும் அதனுடன் இணைந்தவை.  மிகவிரைவிலேயே அந்த கருத்துநிலைகள் காலத்தில் பின்னகர்ந்து பொருந்தாமை கொண்டன.

ஆனால் அந்நூற்றாண்டில் உருவான அரசியல்கொள்கைகளும் அரசியலமைப்புக்களும் அவற்றையே மாற்றமின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. எளிய இளைஞர்கள் அவற்றையே இளமையில் அறிகிறார்கள். அத்துடன் அவர்களின் தேடல்நின்றுவிடுவதனால் மேற்கொண்டு அறிவதுமில்லை. அது ஒரு நவீனச்சிந்தனைநிலைபாடு என கற்பனைசெய்துகொள்கிறார்கள். அவர்கள் அப்படியே காலத்தால் பழைமைகொண்டு துருப்பிடித்து நின்றிருப்பார்கள், அவ்வளவுதான்.

3

இன்றைய மனிதன் சடங்குகளை ‘நம்புவதில்லை’. அவற்றை ‘புரிந்துகொள்கிறான்’. நித்யா குருகுலத்தில் முறைப்படி வேதம்கற்று, துல்லியமான உச்சரிப்புடன் அனைத்துவகையான முறைமைகளுடன் வேள்விகளைச் செய்யும் வைதிகர்கள் இருந்தனர். அவர்களில் அந்தணரும் உண்டு அடித்தளச் சாதியினரும் உண்டு. மிகவிரிவான வேள்விகள் அங்கே நிகழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். இன்றும் நிகழ்வதுண்டு. அவற்றில் ஈடுபடாதவர்களும் அங்கே உண்டு.

சென்றகாலத்தின் அத்தனை தொடர்ச்சிகளையும் பேணிக்கொண்டுதான் நாம் இனிமேல் முன்னகர முடியும். இல்லையேல் வெறும் நுகர்வுப்பிண்டமாகவும் உழைக்கும் இயந்திரமாகவும் மட்டுமே வாழ்வோம். கேளிக்கை என புலனின்பங்களில் உழன்று, அவை இறுதியாக அளிக்கும் ஏமாற்றத்திலும் சோர்விலும் அமைவோம்.

ஆனால் சென்றகாலத்தின் அனைத்தையும் அப்படியே பேணமுடியுமா, தேவையா? இல்லை, அவற்றின் குறியீட்டுநிலையே முக்கியமானது. என்னைப்போன்ற போர்ச்சாதியினரின் குடித்தெய்வங்கள் கொடூரமான சடங்குகள் கொண்டவை. அன்றைய போர்ச்சமூகத்தில் உருவானவை, அன்று தேவையானவையாக இருந்தவை. இன்று அவை தேவையில்லை. அவ்வுணர்ச்சிகளுக்கே இன்று இடமில்லை. அவை நூறாண்டுகளுக்குமுன்னரே நாராயணகுருவின் காலகட்டத்தில் உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இன்று உயிர்ப்பலியோ சாதியச்சடங்குகளோ இல்லை. அவை குறியீட்டுவடிவை எடுத்துக்கொண்டுள்ளன. ஊன்பலிக்கு மாறாக குங்குமம் நிறைக்கப்பட்ட கும்பளங்காய் வெட்டப்படுகிறது.

2

வேதவேள்விகளிலும் ஏராளமானவை காலப்போக்கில் தவிர்க்கப்பட்டுள்ளன. மனிதனைப் பலிகொடுக்கும் புருஷமேதம் போன்றவை ஆயிரமாண்டுகளில் ஒருமுறைகூட நிகழ்த்தப்படவில்லை. சென்ற ஐநூறாண்டுகளாக வேள்விகளில் உயிர்ப்பலி இல்லை.சடங்குகள் நவீன வாழ்க்கையுன் இணைந்து மாறவும் வேண்டும். விழுமியங்கள் சார்ந்த மாற்றம். அவற்றின் குறியீட்டுச்சாரம் நீடிக்கவும் வேண்டும்.

“சரி, அப்படியென்றால் எனக்கு ஏன் எழுத்தறிவிக்கவில்லை?” என்று சைதன்யா கேட்டாள். “நான்தான் உனக்கு நீ பிறந்தநாள் முதல் எழுத்தறிவித்துக்கொண்டே இருக்கிறேனே” என்றேன். “சீரியசாகவே கேட்கிறேன், ஏன்?” என்றாள் சைதன்யா. “எனக்கு அச்சடங்குகள் தேவை எனத் தோன்றவில்லை. அவை அன்றாடத்துக்கு அப்பாலிருக்கும் சில பேருணர்வுகளை அன்றாடவாழ்க்கைக்குள் கொண்டுவருவதற்குரிய அருந்தருணங்கள். நான் பெரும்பாலும் அன்றாடத்திற்கு அப்பாலுள்ள அருந்தருணங்களிலேயே வாழ்பவன். தனியாக அதைச் செய்யவேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்” என்றேன்

இரண்டுவயதுச் சைதன்யாவை அழைத்துக்கொண்டு நடக்கச் சென்றபோது காற்றில் உதிர்ந்து கிடந்த ஒரு இறகை எடுத்து இறகு எப்படி எழுதுகோலாகியது என அவளுக்கு விளக்கியதை நினைவுகூர்கிறேன். அவள் கைபற்றி மணலில் எழுதிக் காட்டினேன். ஒருபக்கம் மென்தூவலும் மறுபக்கம் கூரும் கொண்ட இறகைப்போல் எழுத்துக்கருவிக்கு சிறந்த வடிவம் வேறில்லை என அன்று எழுதிவைத்தேன். அவ்வாறு இயல்பாகவே அவளுக்கு எழுத்தறிவித்தல் நடந்தது என்று எண்ணிக்கொள்கிறேன்

முந்தைய கட்டுரைகன்யாகுமரியும் காடும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43