இடஒதுக்கீடு ஒருகேள்வி

P2

அன்பிற்குரிய ஜெயமோகன் சர்,

வணக்கம். நான் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன். கேரளா மாநிலம் கோழிக்கோடு தான் என் சொந்த ஊர். தாயார் கண்ணூர் மாவட்டம் பரசினிக்கடவை சேர்ந்தவர். தந்தையின் வேலை நிமித்தமாக ஈரோட்டில் வளர்ந்ததால் சொந்த ஊரும் அங்கே என் வீட்டை சுற்றி உள்ள உறவின பிராமணர்களுமாயும் எனக்கு பரிச்சயம் குறைவு. அதனாலேயே வலதுவாத சிந்தனையோடு அங்குள்ள என் உறவினர்களுக்கும் என் தந்தைக்கும் இருக்கும் உடன்பாடு எனக்கு இல்லை. என் தாய் கம்யூனிசம் பேசுவார். அதுவும் காரணமாக இருக்கலாம்.

நான் வளர்ந்த சூழலில் பெரியாரை வாசிக்க நேர்ந்தது என்னை சில சமயம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இட ஒதுக்கீட்டை என் தந்தை எதிர்த்து வந்தபோது அவருடன் கடுமையாக வாதிட்டிருக்கிறேன். அண்மையில் சபரிமலையில் பெண்கள் நுழைவதை என் தந்தை ஏற்று கொள்ளாததும் அது போன்ற ஒரு வாதத்திற்கு வழி செய்தது. அந்த வாதம் எப்பொழுத்தும்போல இட ஒதுக்கீட்டில் சென்று நின்றது. ஆனால் இம்முறை அவர் ஏன் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார் என்று எனக்கு புரிய வந்தது :

அப்பா, அவரின் சிறுவயதிலேயே(11) தந்தையை இழந்து விட்டார். தாயும் 3 சகோதரிகளும் முழு பட்டினி. உண்ண அரிசி இருக்காது. இரவில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டு தென்னை  நாளிகேரத்தின் தோலை உரித்து சின்ன கயிறு போன்று ஏதோ செய்து கொண்டு கொடுத்தால் இரண்டு பைசா கிடைக்குமாம். அந்த காசிற்கு டீத்தூள் வாங்கி இனிப்பின்றி அனைவரும் அருந்துவார்கள். அதுவே அவர்களுக்கு அன்றைய நேர உணவு. எங்கிருந்தேனும் கஞ்சி சோறு கிடைத்தால் அக்காக்கள் நீரை குடித்து இவருக்கு அரிசியை வைப்பார்கள். படிக்க வைக்க ஆளில்லை. 10ம் வகுப்புக்கு மேல் கோவில்களில் வேலைக்கு நின்று பட்டினியை போக்கி கொண்டனர். அன்று அவருடன் படித்த ஒருவர் எல்லா சலுகைகளும் பெற்று உணவும் தேவைக்கு செல்வமுமாய் இருந்தது இவர் மனதில் ஆழமாய் பதிந்தது. சிறுவயதில் கயிறு பிரித்து கொடுத்து காசு வாங்கிய இடமும் கீழ்ப்படிநிலைச் ஜாதி என்பது குறிப்பிட தக்கது. இதெல்லாம் அவருக்கு இட ஒதுக்கீட்டின் மேல் ஒரு ஏற்பின்மை வர காரணமாக இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.

ஆனால் என் கேள்வி, இது போன்ற நலிந்த ஒரு சாரார் எல்லா சமூகத்திலும் இருக்க கூடும். இத்தகைய ஒரு சமூக சூழலில் இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் என்ன? இது போன்ற ஜாதியால் மட்டும் உயர்ந்து, அதுவே சாபமாகி போன சாரார்  பற்றிய பதிவு/புனைவு ஏதேனும் தமிழ்/மலையாள இலக்கியத்தில் உண்டா?
இது போன்றவர்களின் மனநிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பி.கு : என் அரசியல் வல/இடது பேதமில்லாது போனதும் என் குடும்ப சூழலுக்கும் சமூகத்தில் என் ஜாதியினரை பொத்தாம் பொதுவாக எதிர்கொள்ளும் முறைக்கும் இடையில் உள்ள முரண் காரணமே.

நன்றி.

ஸ்ரீநிதி.பி

***

அன்புள்ள ஸ்ரீநிதி,

உங்கள் கடிதத்தைப்போன்று பல கடிதங்களுக்கு நான் விரிவான பதில்களை அளித்திருக்கிறேன். இருந்தும் மீண்டும் எழுதவேண்டியிருக்கிறது.

உங்கள் தந்தை தன் சொந்த அனுபவத்தைக்கொண்டு ஓர் அதீதநிலைபாட்டுக்கு உணர்ச்சிகரமாகச் சென்றடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவே சாதாரண மக்களின் இயல்பு. ஆனால் சிந்திப்பவர்கள் பிறர்மேல்கொள்ளும் பரிவினூடாகவே உலகை, வாழ்க்கையைப் புரிந்துகொள்லவேண்டும். இலக்கியம் அதற்காகவே.

உங்கள் தந்தையின் இளமைக்காலம் என்றால் ஐம்பது அறுபதுகளாக இருக்கும். அது இந்தியாவில் அனைத்துச் சாதியினரிடமும் மிகமிகக் கடுமையான வறுமை இருந்த காலகட்டம். உலகப்போருக்குப்பின் உலகப்பொருளியல் வீழ்ச்சி அடைந்தது. பலவகையான கைத்தொழில்கள் நவீனமயத்தால் இல்லாமலாயின. கிராமியப்பொருளியல் அமைப்பு சிதறுண்டது. ஆகவே வறுமை பரவியது. பிகாரில் அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்புவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் பட்டினியில் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் கஞ்சித்தொட்டிகள் திறந்தும், கடுமையான ரேஷன் முறைகள் வழியாகவும் பட்டினிச்சாவு தவிர்க்கப்பட்டது. ஆனால் எங்கும் பட்டினி ஓங்கியிருந்தது

என் இளமையிலேயே கடுமையான வறுமையைக் கண்டிருக்கிறேன். நாட்கணக்கில் காட்டுக்கிழங்குகளையும் வாழைத்தண்டையும் முருங்கைக்கீரையையும் உண்பார்கள். பலாக்காய், பலாக்கொட்டை முதன்மை உணவாகவே இருக்கும். மாங்கொட்டையை நாட்கணக்கில் நீரில் ஊறப்போட்டு துவர்ப்பை அகற்றி களிகிண்டி சாப்பிடுவார்கள்.

நான் நிலவுடைமைச் சாதியைச் சேர்ந்தவன். கேரளத்தின் ஆதிக்கசாதி. ஆனால் நாயர்களிலேயே  மிகக்கடுமையான பட்டினியில் உழன்ற பல குடும்பங்களை நான் அறிவேன். அவர்களில் பலர் என் நண்பர்கள். நாட்கணக்கில் உணவில்லாமலிருக்கும் குழந்தைகளைக் கண்டிருக்கிறேன். இரவில் காட்டுக்குள் புகுந்து காட்டுபூசணிகளை திருடிவந்து வேகவைத்துச் சாப்பிடுபவர்களை கண்டிருக்கிறேன். ஆனால் ஊரில் கெத்தையும் விட்டுவிடமாட்டார்கள். அச்சுழலில் உங்கள் தந்தை கடும் வறுமையில் இருந்தது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல.

எளிமையான கேள்விகள் சிலவற்றை எழுப்பிக்கொள்ளுங்கள். உங்கள் சாதியில் பட்டினிகிடந்தவர்கள் எத்தனை சதவீதம்? அவர்களுக்கு உதவுவதற்கான அமைப்புகள் இருந்தனவா? எவ்வகையிலேனும் அதிலிருந்து வெளியேறும் வழிகள் திறந்திருந்தனவா?

அப்போது உங்களுக்கு கிடைக்கும் பதில் இதுவே. அந்தணர்களிலோ என் சாதியினரிலோ பட்டினி கிடந்தவர்களின் விகிதம் மிகக்குறைவு. பலவகையான சமூகப்பாதுகாப்பு அமைப்புகள் பல இருந்தன. ஆலயங்கள், சாதியமைப்புகள், பலவகையான அரசு அமைப்புகள். அந்தக் கொடிய வறுமையிலிருந்து வெளியேற கல்வியை துணைகொள்ள வாய்ப்பிருந்தது. உணவகங்கள் வைக்கவோ, உணவகங்களில் வேலைபார்க்கவோ சமூக ஒப்புதல் இருந்தது

இந்நிலையுடன் அன்றிருந்த தலித்துக்கள், அவர்களுக்கு இணையான சாதியினரை ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்களில் அனேகமாக அனைவருமே பட்டினியில் இருந்தனர். அவர்களுக்கு உதவ எந்தச் சமூக அமைப்பும் இல்லை. குமரிமாவட்டத்தில் கிறித்தவத் திருச்சபைகள் மட்டுமே உதவின. அவர்கள் வேறு தொழில்கள் செய்ய அனுமதி இருக்கவில்லை. பொது இடங்களில் நடமாடவோ கல்விகற்கவோ வாய்ப்பே இல்லை.

அவர்களும் நீங்களும் இருந்த நிலைமையின் வேறுபாடு இது. இதுவே அவர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் எத்தனை இன்றியமையாதவை என்பதைக் காட்டும். அது ஒரு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. அரசின் கடமை. அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு, அம்மக்களை ஒடுக்கி மானுடவிலங்குகளாக ஆக்கியதில் அவர்களுக்குமேலே இருந்து அவர்களைச் சுரண்டிய எல்லா சாதிக்கும் பொறுப்பு உண்டு. சாதி மேலே செல்லச்செல்ல அப்பொறுப்பு மேலும் கூடும். அதற்கு பிழைமாற்று செய்தாகவேண்டும். அதுவே அறம்.

அக்கால அந்தணர்களின் வாழ்க்கைக்கதைகளை வாசிக்கையில் அவர்களில் பலர் கடுமையான வறுமையில் உழன்றதை காணமுடிகிறது. ஆனால் அவர்களுக்கு பலவகையான சமூக உதவிகள் அன்று கிடைத்தன. சமூக அமைப்புகளும் செல்வந்தரும் பொதுவாகவே ஏழைமாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்கள். உங்கள் தந்தை நினைத்திருந்தால் கண்டிப்பாக படிப்புக்கு உதவிதேடி படித்து முன்னேறியிருக்கலாம். ஈரோட்டிலேயே கடும் வறுமையில் ஊர்ச்சோறு என நாளுக்கு ஒரு வீட்டில் சாப்பிட்டு படித்து பெரிய நிலைக்குச் சென்ற எத்தனைபேர் உள்ளனர் என்று ஆராய்ந்து பாருங்கள்.

உங்கள் தந்தையைப்போல சமையற்வேலைக்குச் சென்ற பல்லாயிரம்பேர் இங்கே உண்டு. அவர்களில் தேர்ந்த சமையற்காரர்களாக ஆனவர்கள், உணவகம் நடத்தி செல்வந்தர்களானவர்கள் பலநூறுபேர். அவர்களைப்போல் உங்கள் தந்தை ஏன் ஆகவில்லை? அப்படியென்றால் அவருடைய தோல்விக்கு அவருடைய தகுதியின்மையும் காரணம் அல்லவா?

ஏறத்தாழ உங்கள் தந்தையின் அதேகாலகட்டத்தைச் சேர்ந்தவர் தேனி சீருடையான். அவருடைய சுயசரிதை ‘நிறங்களின் உலகம்’ஐ வாசியுங்கள். அந்த உச்சகட்ட வறுமை, விழிபறிபோதல், அனைத்திலிருந்தும் மீண்டு அவர் பழக்கடைவைத்தல், எழுத்தாளராக எழுந்து வருதல் ஆகியவற்றை வாசியுங்கள்.[அகமறியும் ஒளி]

வறுமைகொடிதுதான். ஆனால் தன் தோல்விக்கு அது மட்டுமே காரணம் என்றும், அதற்குச் சமூகம் பொறுப்பேற்கவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பது ஓர் உளச்சிக்கலே ஒழிய வாழ்க்கைநோக்கு அல்ல.

இட ஒதுக்கீடு என்பது வறுமைவாய்ப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை அல்ல. அதற்கு வேறுவகை உதவித்தொகைகள் பல உண்டு. உங்கள் தந்தை தன் வறுமையை உணர்ந்து தீவிரமாகப் படித்திருந்தால் அவரால் அந்தச் சலுகைகளை பெற்று மேலெழுந்திருக்கமுடியும். பேராசிரியர் ஜேசுதாசன் முழுக்கமுழுக்க தன் படிப்புக்காக அரசு அளித்த உதவித்தொகையால் படித்தவர். இட ஒதுக்கீடு என்பது சமூக அமைப்பால் ஒடுக்கப்பட்டு, படிக்கவும் மேலெழவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய சலுகை. அவ்வாய்ப்பு தலித்துக்களுக்கு மறுக்கப்பட்டது. பிராமணர்களுக்கு மறுக்கப்படவில்லை.

இட ஒதுக்கீடு எவருக்கு அளிக்கப்படுகிறது? தங்கள் வாழ்க்கைச்சூழலால், தங்கள் குடும்பப்பின்னணியால் கல்விக்குரிய உளநிலையே அமையாதவர்கள் கல்விக்கு உகந்த வாழ்க்கைச் சூழலும் குடும்பச்சூழலும் அமைந்தவர்களுடன் போட்டியிட்டால் அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற நடைமுறை யதார்த்தத்தில் இருந்தே இட ஒதுக்கீடு உருவானது. அவ்வாய்ப்பினூடாகவே அவர்கள் மேலெழவும் முடிந்தது.

இடஒதுக்கீடு என்பது இன்று ஒருபக்கம் அபத்தமாக ஆகிவிட்டது என்பது என் எண்ணம். தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அனைத்துவகைகளிலும் முன்னேறிவிட்ட பிற்பட்ட, மிகவும்பிற்பட்ட சாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி தங்களுக்கு இட ஒதுக்கீடுகள் அளித்துக்கொள்வது இடஒதுக்கீடு பற்றிய காந்தி, அம்பேத்கரின் எண்ணங்களையே தலைகீழாக்குவது. குறைந்தது இட ஒதுக்கீட்டில் பொருளியல் உச்சவரம்பாவது உருவாக்காவிட்டால் அது இன்னொருவகை சுரண்டலாகவே திகழும்

இவ்விஷயங்களை மிகக்குறுகலாக, எனக்கு என் மக்களுக்கு என்று பார்த்து முடிவெடுப்பதே சாதாரணமாக நிகழ்வது. ஆனால் இலக்கியவாசகன் அறவுணர்வால் மட்டுமே தன் சமூகப்புரிதல்களை அடையவேண்டும்.

பிராமணர்களின் துயரை எவரேனும் எழுதியிருக்கிறார்களா என்று கேட்டீர்கள் அல்லவா? கலைஞனுக்குரிய அறவுணர்வுடன் மானுடம்மீதான பரிவுடன் பூமணி எழுதியிருக்கிறார். நைவேத்யம் என்னும் அவருடையந் நாவலை வாசியுங்கள். தமிழின் தலித் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளி என்று கருதப்படுபவர் அவர்

ஜெ

பிராமணர்- பழியும் பொறுப்பும்
பிராமணர்களின் சாதிவெறி
இட ஒதுக்கீடு பற்றி
முந்தைய கட்டுரை’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள்.
அடுத்த கட்டுரைஅஞ்சலி :யுகமாயினி சித்தன்