பயணங்கள் கடிதம்

அன்புள்ள ஜெ.மோ
கட்டுரை வாசித்தபின் என்னால் உங்களுடன் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் . திரு. நாஞ்சில் அய்யாவுக்கு என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரை என் இளமை நாட்களின் ஞாபக வாசனையாய் மயக்கமுற செய்தது. திருவண்ணாமலை ரமணாஸ்ரமம், கோவில், என பல இடங்கள் மீண்டும் எனது நட்புகளுடன் உறவாடிய தருணங்கள். வேலை நிமித்தம் எனது நேரத்தை அடகு வைத்துவிட்ட ஒரு ஏக்கம். திரு பவா வுடனான உங்களது நட்பு எனக்கு மிகுந்த சந்தோஷம் அளித்தது. இதுபோலவேதான் நானும், பட்டாவும், குமரனும், தேவாவும், சுந்தரும், நடேஷும், பண்ணையும், இருந்துவந்தோம், பின்னர் அவரரவர் பாதை, அமைகின்ற வாழ்க்கை ஒரு மிகப்பெரிய மனவெளியை ஏன் ஏற்படுத்துகிறது? என் நட்புகளில் பலர் படிப்பதை கூட நிறுத்திவிட்டனர்.

உங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த வியப்பு. இதுபோன்ற ஒரு வாழ்வியல் முறைக்குத்தான் எனது ஏக்கம், மற்றும் அவா. ஏக்கத்தை மனதில் ஏற்றிவிடாமல் படிகின்றதாலே ஓரளவு திருப்தி கொள்கின்றேன். உங்களை போன்ற இனியவர்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்திகின்றேன்.

அன்புடன்
சுந்தர்.

அன்புள்ள சுந்தர்

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை என்பதை நாமே தீர்மானிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் நமக்கு வருவதில்லை. இளமையில் எல்லா வாய்ப்புகளும் இருப்பது போல படுகிறது. ஆனால் பலசமயம் நாம் அடித்துத்தான் செல்லப்படுகிறோம், பயணிப்பதில்லை என்று தெரிகிறது

இந்த போக்கில் பிடிவாதமாக பற்றிக்கொண்டால் மட்டுமே கலையிலக்கியம் கூட வரும். ஆன்மீகத் தேடல் நீடிக்கும். அவை இரண்டையும் இழந்து விட்டோம் என்றால் ஒருகட்டத்தில் ’நாடுநர் உண்டு நலம் உண்ணப் பட்டோர் சூடுநர் இட்ட பூவோரன்னர்’ என்பது போல நாம் பிறரால் பயன் படுத்தப் பட்டு உதிர்க்கப் பட்டிருப்பதைக் காண நேரும்

ஜெ

முந்தைய கட்டுரைநான்காவது கொலை !!! [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]
அடுத்த கட்டுரைசுகாதார அறம்-கடிதங்கள்