காந்தியம் ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் காந்தி பற்றிய கட்டுரைகளை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. காந்தியத்தின் எல்லைகள் மற்றும் பயன்களைப் பற்றிய உங்களின் கருத்துகள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு இல்லை. காந்திய எதிர்ப்பு அணியில் இருந்து பின்னர் காந்தியத்துடன் உடன்பட்டவராக உங்களை அடையாளப் படுத்துகிறீர்கள். நானோ நேர் எதிர். காந்தியம் மட்டுமே ஒரே வழி என்று ஆரம்பித்து இன்று காந்தியத்தின் எல்லைகளையும் மற்றைய வழிமுறைகளின் தேவைகளையும் உணர்ந்தவனாக இதை எழுதுகிறேன்.

காந்தியம் மற்றும் அகிம்சை வழிமுறைகளுக்கும் திடமான எல்லைகள் இருக்கின்றன. ஹிட்லர் மற்றும் யூதர்கள் தொடர்பான உங்கள் கருத்தில், இடதுசாரிகள் சோவியத் யூனியனை நம்பாமல் தாமே முயன்றிருந்தால் நாசிப் படைகளிடம் இருந்து யூதர்களைக் காத்திருக்கலாம் என்கின்ற வகையில் பதிலளித்திருக்கிறீர்கள். கேள்வி அதுவல்ல. ஐரோப்பிய யூதர்கள் (6 மில்லியனுக்கு அதிகமானவர்கள்) ஆயுதம் ஏந்தியிருந்தால் தமது இழப்பைக் குறைத்திருக்கலாமா என்பதே. ஒருவர் விடாமல் எல்லோரையும் அழிப்பதென்பதையே நோக்காகக் கொண்ட எதிரியிடம் காந்தியம் செல்லாது. வன்முறை பயனளிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை; ஆனால் முயன்று பார்ப்பதைத்தவிர வேறு வழி எதுவுமில்லை. ஹார்மோன்களால் உந்தப்பட்டு ஒரு பெண்ணிடம் வல்லுறவு கொள்ள முனையும் ஒருவனிடம் வன்முறையை கையாளலாம் என்கிற பாங்கில் காந்தி கூறியதும் இதே வகைதான். மதவாத அல்லது இனவாதத்தால் உந்தப்பட்டு ஒரு இனத்தை வேரோடு அழிக்கவென முயலும் ஒரு எதிரியிடம் வன்முறையை முயன்று பார்ப்பதைத் தவிர வேறு மார்க்கம் அந்த இனத்துக்கு இல்லை.

காந்திய அல்லது அகிம்சையை மட்டுமே கையாண்டு 50 வருடங்களுக்குப்பின்பும் எதையுமே (நோபல் பரிசைத்தவிர) வென்றெடுக்காத திபெத்திய தாலாய் லாமா இன்னொரு உதாரணம். திபத்திய இனம் இப்போது முற்றாக அதன் அடையாளத்தையும் நிலத்தையும் இழந்து விட்டுருக்கிறது. மறுபுறத்தில் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் ஆயுதத்தால் தாய்வானை சீனாவிடம் இருந்து பிரித்தெடுத்து இன்றுவரை (அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஆதரவுடன்) தம் நிலத்தை ஆண்டு வரும் இனம் வரலாற்றில் வெற்றிபெற்றவர்களாகக் கணிக்கப் படுகிறார்கள்.

வன்முறை மட்டும் என்றுமே தீர்வு ஆகாது. அதேபோல் பெரும்பாலான சந்தர்ப்பங்களின் வன்முறை இல்லாத காந்தியமும் வெற்றிகாணாது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரித்தாணியாரிற்கெதிரான வன்முறைப் போராட்டம் ஒன்று (ஹிட்லரால் வேறு காரணங்களுக்காக) நிகழ்ந்திருக்கா விடின் காந்தியத்தால் மட்டுமே சுதந்திரத்தை வென்றெடுத்திருக்க இயன்றிருக்காது.

எதிர்காலத்தில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியா மீது படை எடுத்து நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தால் காந்தியத்தை மட்டும் கையாண்டு இந்தியாவை மீட்பது சாத்தியமாகாது. காந்தியத்தின் எல்லைகளை உணர்ந்ததால்த் தான் இந்திய எல்லையில் ஆயுதத்துடன் படையினர் காவல் செய்கிறார்கள், அணு ஆயுத சோதனை தேவையாகிறது.

ஸ்ரீலங்காவில் அண்மைய யுத்த முடிவை (நீங்கள் உட்பட) சிலர் வன்முறையின் தோல்வியாக சித்தரிப்பதோடும் எனக்கு உடன்பாடில்லை. அது வன்முறையின் வெற்றி. யாரிடம் அதீத ஆயுதங்கள் இருந்ததோ, யார் அதீத வன்முறையைக் கையாண்டாரோ அவ்வணி வெற்றி அடைந்தது.

காந்தியம் ஒரு உன்னதமான புதிய வழி. ஆனால் அது எப்போதும் வேலைசெய்யவேண்டுமென்பதில்லை. எந்த சுதந்திரப்போரும் முதலில் காந்திய வழிகளை முயலவேண்டும். ஆனால் தேவையென்றால் வன்முறையையும் கையாளவேண்டும். சரியான முறையில் இரண்டையும் கையாளவேண்டும். அதுவே சிறந்த வழி

ஜார்ஜ் லிங்கன்

அன்புள்ள ஜார்ஜ் லிங்கன் அவர்களுக்கு

உங்கள் கடிதம் குறித்து பலகோணங்களில் சிந்தனை செய்தேன். உண்மை. எல்லாப் போராட்டமும் எல்லா தருணங்களிலும் வெல்ல முடியாது. அது வரலாற்றின் பலநூறு சக்திகளால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் வெற்றிவாய்ப்பு ஆயுதப்போராட்டத்தைவிட வன்முறைப்போராட்டத்திற்கு மிகவும் குறைவு. மேலும் தோல்விக்குப்பிந்தைய பேரழிவு வன்முறைப்போராட்டத்தில் மிக அதிகம். திபெத்தையும் ஈழத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதும் இல்லையா?

வன்முறை அரசியலில் உள்ள இரு அம்சங்களே என்னை அச்சுறுத்துகின்றன. அது ஆயுதமேந்திய சிறுபான்மையினரின் ஏதேச்சாதிகாரம் நோக்கி மக்களை செலுத்தும். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கைகளில் இருந்து முழுமையாக விலகிச்செல்லும். அவர்கள் கையறுநிலை கொள்வார்கள். அழிவார்கள்

வன்முறை அரசியலில் அதிகாரச்சமநிலை வன்முறை மூலமே தக்கவைக்கப்படும். மனித குணம் என்றுமே அதிகார நாட்டம் உடையது. ஆகவே அதில் உள்ளழிவு நிகழ்ந்துகொண்டே இருக்கும். தன்படை வெட்டிச்சாதல் நிகழாத ஆயுதப்போரே இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைபுதிய புத்தகங்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழிசை-இரு பார்வைகள்