நம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்

Nikolai-Gogol

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ‘UGLY’ என்றொரு படம். மக்கள் நிறைந்த பொதுவிடத்தில் கடத்தப்பட்டிருக்கும் ஒரு குழந்தையை தேடும் பயணமாக விரியும் அப்படம், அதன் விசாரணையில் எதிர்வரும் கதாப்பாதிரங்களின் சுயனலன்களையும் குரூரங்களையும் சொல்லுவதாக அதன் கதையோட்டம் நகரும். ஒருவர் மிச்சமிலாமல் அனைவரும் அதனூடாக தங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார்கள். படத்தின் இறுதியில் ஒரு காட்சி வரும் ஒரு பெட்டியை திறக்க உள்ளே அ ழுகிய நிலையில் அக்குழந்தை இறந்து கிடக்கும். அதன் வழியாக நம்மிடம் ஒரு கேள்வி மறைமுகமாக எழுப்பப்படும். நம்முள்ளிருக்கும் குழந்தை எந்த அளவு அழுக வைத்திருக்கிறோம் என. படத்தில் வரும் அனைவரின் உள்ளிருக்கும் அழுகிய தன்மையைத் தான் அதுவரை கண்டிருக்கிறோம் என உணரும்போது எழும் துணுக்குறலும் அதன் வெளிச்சத்தில் தலைப்பு கொள்ளும் அழுத்தமும் அப்படத்தை எனக்கு முக்கியமானதாக ஆகியது.

நிகோலாய் கோகலின்(Nikolai Gogol) இறந்த ஆன்மாக்கள் என்கிற இந்த தலைப்பும் அதனூடாக பொருள்படும் கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களும் அதே உணர்வைத் தந்தது. ருஷ்யாவின் நவீன இலக்கிய வரலாற்றின் முதல் முக்கிய நாவல் இது. ஹரால்ட் புளூம்‍‍‍மின் ‘மேற்குலத்தின் மூலநூல்கள்’ (Western Cannons) பட்டியலில் ருஷ்யாவின் முதல் நாவலாக இது இடம்பெற்றுள்ளது. கோகல் இதை மூன்று பாகங்களாக எழுதத் திட்டமிட்டார். முதல் பாகம் முழுமையாக கிடைக்கிறது. நினைத்த வகையில் இரண்டாம் பாகம் வராததால் அதன் பெரும்பகுதியை அவர் எரித்துவிட எஞ்சியவை தொகுத்து இரண்டாம் பாகமாக வந்துள்ளது. நாவலை நிறைவு செய்யாமலே இறந்துவிட்டார்.

ஆரம்பித்த போது ருஷ்யா முழுவதையும் நாவலில் காட்டிவிடும் பெருங்கனவுடன் தொடங்கியிருக்கிறார். அதன் கட்டுமானத்தை ஒடிசி பயணம் வகையில் அமைத்து அதன்மூலம் மொத்த ருஷ்யாவையும் உள்ளடக்கும் வகையாக திட்டமிட்டார். நாவல் அதன் முதன்மை பாத்திரம் செசிக்கோவ் ஒரு புனைவு நகரில் நுழைவதில் தொடங்குகிறது. ஒரு கணவானின் தோரணையுடன் இருப்பதில் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ளும் அவன் மிக விரைவில் தனக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

அவ்வூரின் அனைத்து அதிகார வர்க்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவ‌ர்கள் நடத்தும் கூடுகைகளிலும் கேளிக்கைகளிலுமாக பொழுதுகளை கழிக்கிறான். அப்படியான ஒருவரின் அழைப்பின் பேரில் அவரின் இல்ல விருந்துக்குச் செல்கிறான். அங்கு நிகழும் அச‌ட்டு கனவான்தன்மை நிறைந்த செயல்கள் மிகுந்த பகடியுடன் விவரிக்கப்பட்டிருக்கும். அமர்வது முதல் நடப்பது வரை, கைகுலுக்குவது முதல் ஒரு சம்பாஷனை துவங்குவது வரை விடுக்கப்படும் பீடிகைகள் ஒரு அபத்த நாடகத்தின் மென்கேலித் தொனியுடன் காட்டப்படும். முதல் பாகத்தின் மொத்த சம்பவங்களின் மையமென்பது இந்த பகடித்தன்மைதான். இதில் வரும் அத்தனை சந்திப்புகளும் வாசகனுக்கு இதே உணர்வு நிலையில் தான் சொல்லப்படும். பாத்திரங்கள் எந்த உணர்வில் இருப்பினும் கதைசொல்லியின் தொனி இந்த பகடித்தன்மைதான்.

1379c1c3a14f63edc7bcb385fad057fe

கதைசொல்லி யார் என நாவலில் வருவதில்லை. ஆனால் இத்தகைய படைப்பில் கதைசொல்லியை ஒருவிதமாக உருவகித்துக் கொள்ளுதல் நாவலை மேலும் அழ்ந்து புரிந்துகொள்ள செய்யும். நான் இதன் கதைசொல்லியை முழுப்போதையில் தெருவில் அலையும் ஒரு வயதான பித்தனாக கற்பிதம் செய்து கொண்டேன். செழிப்பின் உச்சியிலிருந்து சரிந்தவனாகவும் அச்சரிவை தன் அறிவும், கல்வியும் தடுக்கவியலா அவலத்தை கண்டவனாகவும் நினைத்துக் கொண்டேன். அதன் மூலம் அவன் வந்து சேர்ந்த இடம் இந்த பகடி. வாழ்வின் அனைத்து நிகழ்விலும் அதை மட்டும் பிரித்து எடுக்கும் கண்கொண்டவன் வழியாக காட்டப்படும் படைப்பு எனக் கொண்டால் இதில் வரும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னாலுள்ள அழுத்தத்தை புரிந்து கொள்ள முடியும். மானுடத்தின் சரிவையும் கீழ்மையையும் மட்டுமே இப்பகுதி காட்டுகிறது. ஒரு நிகழ்வில் கூட ‘நல்ல’ பண்புகள் கொண்டவர்கள் இல்லை. ஆனால் ஒரு நல்ல வாசகன் இதிலிருக்கும் ஒரேவிதமான மனிதவுண‌ர்வுகளின் சலிப்பைக் கடந்து மனிதமனம் கொள்ளும் நுட்பமான தேர்வுகளை காண முடியும்.

இதை அபாரமாக உரையாடல்களின் வழி காட்டப்படுகிறது. ஒருவரை வென்று மற்றவர் எழும் நுட்பமான விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. உதாராணமாக ஒரு அழைப்பின் பேரில் நாயகன் செல்லும் முதல் விருந்தினர் வீட்டில் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து தன் நோக்கத்தை மெல்ல வெளியே எடுக்கிறான். அது ருஷ்யாவில் அடிமைமுறை இருந்த காலகட்டம். அவரிடம் இருக்கும் இறந்த மனிதர்களை (இதை இறந்த ஆன்மாக்கள் என்கின்றனர்) தன் பேருக்கும் மாற்றித் தரும்படியும் அதன் மூலம் அவர்கள் கட்டும் வரியின் சுமையினை தான் குறைப்பதாகவும் கூறுகிறான். மேலும் ஒவ்வொரு நபர் கணக்குக்கும் ஒரு குறைந்தபட்ச விலை தருவதாகவும் சொல்கிறான். இந்த இடத்தில் அவர்கள் கொள்ளும் வார்த்தை விளையாட்டுக்களை ஒரு நமுட்டுச் சிரிப்பில்லாமல் படிக்க முடியாது. நாயகனிடம் அவர் நேரடியாக அவனுடைய நோக்கத்தை கேட்க முடியாது. அது கனவான்கள் பண்பு கிடையாது. சுற்றி சுற்றி தன் குழப்பங்களை கூறுகிறார். இரண்டு எளிய நேரடி கூற்றுகள் . ”உங்களுக்கு ஏன் அவர்கள் தேவை?”  ”இறந்த ஆன்மாக்களை விற்பது சரியல்ல.” முதலாவதை கேட்க அவரது ‘நாகரிகம்’ இடம்கொடுக்காது. இரண்டாவது அவர‌து நினைப்புக்கே வரவில்லை. இவர் மட்டுமல்ல. மொத்த நாவலிலும் பல்வேறு நபர்களை சந்தித்து இறந்த அடிமைகளை தனக்கு மாற்றிக்கொள்கிறான். ஆனால் ஒருவர் கூட அது சரியல்ல எனக் கூறுவதில்லை.

சிலர் அதிலுள்ள் சட்ட சிக்கலை சொல்கின்றனர். சிலர் அதன் மூலம் தனக்கு கிடைக்குக் கூடிய‌ லாபங்களை அதிகமாக்க முயல்கின்றனர். ஒருவன் மட்டும் மிகத் தனித்துவமானவன். அவனுக்கு அதிலுள்ள விளையாட்டு மிகப் பிடித்துள்ளது. அவனொரு சூதாடி. வாழ்க்கையை சூதிலுள்ள புதிர்த்தன்மைகாகவே தன்னை முழுதும் கொடுத்தவன். தன்னுடைய பெரும் சொத்துக்களை அதில் இழந்து கடன் நெருக்கடியிலிருப்பவன். இருப்பினும் இறந்த ஆன்மாக்களை கேட்டு வரும் நாயகனை சீண்டுகிறான்.அவர்களின் மதிப்பை பெருமளவு பெருக்கி சொல்கிறான். அவர்களின் செயல்திறன் பல்லாயிரம் ரூபிள்கள் மதிப்புகொண்டவை எனக்கூறவே எரிச்சலடைந்த நாயகன் தனக்கு விருப்பமில்லையென மறுக்கிறான். உடனே அவன் தன் அனைத்து அடிமைகளையும் வைத்து விளையாட விருப்பம் தெரிவிக்க பதிலுக்கு செசிகோவ் அவன் கூறிய பணத்தை மட்டும் வைத்து விளையாடினால் போதும் என்கிறான். ஒருகட்டத்தில் சபலம் தட்டி அவன் சம்மதிக்க அவர்கள் சதுரங்கம் விளையாடுகிறார்கள். அவனுக்கு தெரியும் செசிகோவ் அதில் தேர்ச்சி பெற்றவனென. ஆனால் ஆரம்பத்திலிருந்தே  அவன் ஆட்டத்தை தவறாக ஆட கோபத்தில் செசிகோவ் காய்களை கலைத்து தனக்கு தொடர விருப்பமில்லையென தெரிவிக்கிறான். அதற்காக்வே காத்திருந்த சூதாடி தன் அடிமைகளை அழைத்து அவனை தாக்க சொல்கிறான். என்ன செய்வதென்ற்றியாமல் பயத்தில் செசிகோவ் உறைய கடைசி கணத்தில் ஏதேச்சையாக போலீஸ் அதிகாரிகள் வர அங்கிருந்து வெளியேறுகிறான்.

Marc-Chagall-Chichikov-and-Sobakevich

உண்மையில் அந்த சூதாடிக்கு பணத்திலோ அவனிடம் சூதாடுவதிலோ கூட விருப்பமில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒரு உச்ச நிலை. மானுடன் உடைந்து பதறும் தருணத்திற்கான நிலை அல்லது உள்ளிருக்கும் மிருகம் மேலெழும் கணம். ஒன்று அது தனக்கோ அல்லது எதிராளிக்கோ அது நிகழவேண்டும். அதற்காகவே அதை செய்கிறான். பிற அனைத்தும் அவனுக்கு இரண்டாம் பட்சமே. நான் நினைத்துக் கொண்டேன் கதைசொல்லியும் கிட்டத்தட்ட அதே உணர்வுநிலை கொண்டவன் தானென.

ஆண்கள் இப்படியென்றால் பெண்கள் கொள்ளும் பாவனைகளோ வேறொரு வகை. விருந்துகளில் அவர்கள் கொள்ளும் நாசூக்குத்தன்மை, தங்களை ஈர்ப்பு மிக்கவர்களாக அவர்கள் காட்டிக் கொள்ளும் பிரயத்தனம், சக பெண்களிடம் கொள்ளும் பொறாமை என ஆண்களின் உள்ளீடற்ற உலகிற்கு நேரெதிரான இன்னொரு உலகம் பெண்களின் மூலம் காட்டப்ப்படுகிறது.

அதேசமயம் இவையனைத்தும் வெறும் கசப்பாக இல்லாமல் கலைத்தன்மை கொள்வது இரண்டு காரணங்களால். ஒன்று முன்பே கூறியதுபோல பகடி. அது அத்தனை விமர்சனத்தின் கணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கு ஒருவித இலகுத்தன்மையை நிரப்புவது மேலும் அதற்காக கைக்கொள்ளும் படைப்பூக்கம் நிறைந்த மொழி அதன் கசப்புணர்வை கலையாக்குகிறது. இரண்டாவது இத்தனை அலட்சிய நடைக்கும் மத்தியில் புறச்சூழலை விவரிக்கையில் அது கொள்ளும் தீவிரத்தன்மை. நாவலின் நாயகன் ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு செல்கையில் ருஷ்ய புறச்சூழல் சித்தரிக்கப்படுகிறது. மிகுந்த தீவிரத்துடனும் விவரிக்கப்படும் இந்த மொழிநடை இயற்கையின் அற்புதத்தையும் அதன் கருணையையும் உணர்வெழுச்சியுடன் கூறுகிறது. அதன் மூலம் முந்தைய எள்ளல் தொனியை இந்த தீவிர புறச்சித்தரிப்பு மூலம் சமன் செய்கிறது. இல்லையெனில் இதை வெறுமொரு விமர்சனப் படைப்பாக மட்டுமே எஞ்சியிருக்கக்கூடும். இந்த புறச்சூழல் சித்தரிப்பு மூலம் ஒரு மனிப்பதிவை கோகல் உருவாக்குகிறார். இந்த அற்புத வெளியில் வாழ வாய்ப்பு கிடைத்திருக்கும் இவ்வாழ்க்கையை நாம் உண்மையில் எப்படி வாழ்கிறோம் என்ற கேள்வி இதன் மூலம் எழுப்பப்படுகிறது.

செசிகோவ் தொடர்ந்து பல்வேறு முதலாளிகளிடமிருந்து அடிமைகளை வாங்குவதை அறிந்தவுடன் அந்த நகரின் மேல்தட்டு மக்களிடம் அவன் மதிப்பு உயர்கிறது. நடுவயதை நெருங்கிக்கொண்டிருப்பதாலும் தடிமனான உடல்கொண்டிருப்பதாலும் அவனிடம் ஒவ்வாமைகொண்டிருந்த இளம் பெண்களெல்லாம் விருந்துகளில் அவனை கவரயத்தனிக்கும் இடம் மிகுந்த ஹாஸ்யத்துடன் விவரிக்கப்பட்டிரும். அவன் நிற்கும் கதவருகே போடப்பட்டிருக்கும் நாற்காலியிலமர மனதளவில் முட்டிமோதி அதேசமயம் வெளித்தெரியாமல் இயல்பாக அமர்வது போன்ற தோற்றத்தையும் கொள்ள அவர்கள் படும்பாடு ஒரு உதாரணம்.

download

ஒரு கட்டத்தில் அவன் வாங்கிய அடிமைகள் அனைவரும் இறந்த ஆன்மாக்கள் என்கிற செய்தி சூதாடி மூலம் வெளிவர அது நகர்முழுக்க அனைத்து இடங்களிலும் பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இரு திருமணமான தோழிகளுக்கிடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது. ஒரு அபத்த நாடகத்தின் உச்சகட்டத்தை வாசிக்கும் உணர்வளிக்கும் இடமது. அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் புனைப்பெயர் அளிக்கப்பட்டிருக்கும். ஒருவரின் பெயர் ‘எளிய இனிமையான பெண்’ இன்னொருவர் ‘அனைத்து வகையிலும் இனிமையான பெண்’.

இன்னொரு பக்கம் இதே விசயத்தை ஆண்கள் தங்களின் ”அபார” அறிவால் அனைத்து வகையிலும் அலசி ஆராய்வர். அதிலும் ஒருவர் செசிகோவ் அனைவராலும் இறந்துபோனவன் எனக்கருதப்பட்ட ‘கேப்டன் கொபேகின்’ தான் என தன் ஆய்வுமுடிவை தெரிவித்து அவரது கதையை விவரிப்பார். அந்த கதையிலேயே அவருக்கு  ஒரு கை கால் இல்லையென்று கூறியதை ஒருவன் ஞாபகப்படுத்த அதை கவனிக்க மறந்ததையெண்ணி தலையிலடித்துக் கொள்வார். (இது சற்று அதீதமென நமக்கு தோன்றலாம். ஆனால் இதை விட அசட்டுத்தனங்கள் (வேதங்களில் ஒன்று தன் பைபிள், கிருஷ்ணனும் இயேசுவும் ஒருவரே, இன்ன பிற…) இன்றும் நம் மத்தியில் உதிர்க்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன.) இந்த களேபரங்கள் எதுவுமறியாமல் அடுத்த நகருக்கு மேலும் அடிமைகளை வாங்க செசிக்கோவ் சென்றுகொண்டிருப்பான்.

இன்று நின்று பார்க்கையில் இப்படைப்பின் குறையாகத் தோன்றுவது இதன் அடர்த்தியற்ற மொழி. ஒரு நிகழ்வோ சந்தர்பமோ சித்தரிக்கப்படுகையில் காற்றடைத்த பல வெற்று வரிகள் ஊடே வருகின்றன. இவ்வகை வரிகள் எந்த மேலதிக வண்ணத்தையோ நுட்பத்தையோ கோணத்தையோ அளிப்பதில்லை. (இன்றும் இது போன்ற பல வரிகள் மொழியோட்டத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. வாசகனை நிலைப்படுத்தவும் ஆசிரியரின் கனவுக்குள் கொண்டுவரவும் அவை பயன்படுகின்றன.) ஒரு முன்னோடிப் படைப்பென்பதால் இந்த குறைக் கண்டுகொள்ளாமல் இந்த நாவல் தருபவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு படிக்க வேண்டியுள்ளது.

முதல் பகுதியின் இறுதியில் நாவலில் கூறுதொனியில் மாற்றம் நிகழ்கிறது. அதுவரை இருந்த எள்ளல் தன்மை விலகி இங்கிருந்து இறுதி வரை ஒரு தீவிரத்தன்மையை எடுத்துக்கொள்கிறது. (இதுவரை கதைசொல்லி வந்த அந்த கிழட்டுப் பித்தன் தன் லட்சியவாத இளமைக்குத் திரும்பி கதை சொல்ல ஆரம்பிக்கிறான் என எண்ணிக்கொண்டேன்.) நாயகனின் இளமைப் பருவமும் அவனது இந்த பயணத்திற்கான காரணமும் சொல்லப்படுகிறது.

சிறுவயதில் அறிவில் நாட்டம் கொண்டிருந்த செசிகோவ் தன் ஆதர்ச ஆசிரியரின் கீழ் கற்க வேண்டி மனம் முழுக்க கற்பனை நிரம்ப ஒவ்வொரு வகுப்பாக தேறிவருகிறான். அவர் கற்றலின், அறிவின் இன்பத்தை அதன் மேன்மையை மாணவருக்கு கடத்துபவர். அந்த ஆசிரியரின் வகுப்புக்கு அவன் தேறி வருகையில் எதிர்பாராமல் அவர் இறந்து விடவே அவ்விடத்தை வேறொரு ஆசிரியர் நிறப்புகிறார். புதியவரோ ஒழுக்கம் மட்டுமே உயரும் வழி என சொல்லிக் கொடுக்கிறார். கீழ்படிதலும், நெறிப்படி நடப்பதுமே முக்கியமென்றும் அதன்படியே தான் மதிப்பெண் வழங்கப்போவதுமாக கூறுகிறார். அவரின் கீழ் செசிகோவின் ஆளுமை மெல்ல திரிபடைகிறது. செசிகோவ் மெல்லஅவரின் விருப்பப்படி நடந்து கொள்கிறான். அவ‌ருடைய குறிப்பறிந்து அவர் சொல்வதற்கு முந்தையைய கணமே அதை செய்பவனாக இருக்கிறான். அதன்மூலம் தன்னை முதல் மாணவனாக நிறுவிக்கொள்கிறான். போததாத பட்சத்தில் சக மாணவர்களை கோள்சொல்லியும் தன்னை உயர்த்திக்கொள்கிறான்.

image_l

இப்பகுதியை கோகல் அன்றைய ருஷ்யமதிப்பீடுகளின் வீழ்ச்சிக்கு உருவகமாக்கி கட்டுகிறார். கீழ்படிதலின் கூழைக்கும்பிடு போடுதலின் காலகட்டமாக, தன் மேல்மட்டத்தினரின் தட்டிக்கொடுத்தலையே தன் உயர்வெனக் கருதும் காலகட்டமாக ருஷ்யாவின் நிலை வீழ்கிறது. இதேசித்திரம் மேலும் நீட்சிபெற்று நாயகன் பணிக்கு சேரும் இடத்திலும்  காட்டப்படுகிறது. அச்சூழலுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட அவன் ஒவ்வொருவரையாக‌ வீழ்த்தி அதிகாரப்படியில் ஏறுகிறான்.ஒரு கட்டத்தில் சுங்கத் துறையில் உயரதிகாரியாக பெரும் பணம் ஈட்டுகிறான். எப்போதவது அபூர்வமாக ஏற்படும் தலைமை மாற்றத்தின் விளைவாக ஒரு நேர்மையான அதிகாரி பொறுப்புக்கு வர அதில் இவன் தலை மாட்டி அவன் பணி பிடுங்கப்பட்டு தன் ஆரம்ப நிலைக்கு திரும்புகிறான். இதிலிருந்து வெளிவர எத்தனிக்கும்போது எழும் யோசனையாக இந்த இறந்த ஆன்மாக்களை வாங்குவது என முடிவெடுக்கிறான். அந்த காலத்தின் அடிமைகள் அனைவரும் உடைமைகளின் பட்டியலில் தான் வருவார்கள். வீடு, நிலம் போல. பண்ணை முதலாளிகளிடம் நய‌ந்து பேசி குறைந்தபட்ச விலைக்கு இ‍றந்தவர்களை வாங்கி அதை அடகு வைத்து ஒரு தொகையை கடனாக வாங்கி தனது வாழ்கையை மேலெடுக்க நினைத்து தன் பயணத்தை துவக்குகிறான்.

நாவலின் இரண்டாம் பகுதி முதல் பகுதியிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. முதன்மையாக அதன் கூறுமுறை முற்றிலும் செறிவு கொண்டதாகியுள்ளது. எந்த‌ வரியும் முக்கியமானவற்றை நுட்பத்தை தொடாமல் செல்வதில்லை. இரண்டாவது முற்கூறியதுபோல அதன் தொனி தன் எள்ளல் தன்மையை முழுதும் இழந்து தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இப்பகுதியின் பேசுபொருள்  மிக முதிர்ச்சியடைந்த ஒன்றாக மாறிவிடுகிறது. காரணம் கதைபோக்கிலேயே தெளிவாக தெரிகிறது. இதில் ஆசிரியரின் கவனம் மேலான வாழ்வு நோக்கிய தேடல் மேல் விழுகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் உள்ளும் சென்று அதன் போதாமையை அதன் சறுக்கலைக் கண்டு மேலும் மேலும் முன்னகர்கிறது. அது சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் மிக அடிப்படையானவை.

முதல் பகுதியைப் போல இதிலும் பல்வேறு கதாப்பாத்திரங்களை இணைக்கும் பொதுச் சரடாக செசிகோவின் பயணம் உள்ளது. ஆனால் பல பக்கங்கள் அழிந்துவிட்டதால் கதையின் தொடர்ச்சியை அறிய முடியவில்லை. இந்தப் பகுதியில் குறிப்பிடத்தகுந்தவை இதில் இடம்பெறும் மூன்று பாத்திரங்கள்.

இப்பகுதியில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் முந்தைய பகுதியின் நபர்களை விட முதிர்ச்சியானவர்கள். பெரும்பாலானவர்கள் தங்களுக்கென தேடல் கொண்டவர்கள். இப்பகுதியில் வரும் முதல் நபர் உயர்ந்த கல்வி கொண்டவன். தன் அறிவை பற்றிய பிரஞ்ஞை உள்ள ஒரு 33 வயது இளைஞன். புறச்சூழலால் வேறு வழியின்றி தனக்குப் பிடிக்காத சராசரி வேலையை செய்கிறான்.

ஒரு கட்டத்தில் அதை உதறி தன் சொந்த மண்ணுக்கு திரும்புகிறான். அவன் கற்ற க‌ல்வி அவனை ஒரு மேலான வாழ்க்கை வாழச் சொல்கிறது. தன் பண்ணையில் வேலை செய்யும் தன் ஊழியர்களின் வாழ்வை உயர்த்த நினைக்கிறான். அவர்களுடன் இணைந்து வேலை செய்கிறான். அவர்களுக்கான அத்தனை வசதிகளையும் செய்து தருகிறான். அனைவரும் இணைந்து மேலேற வேண்டுமென்பதே அவனது எண்ணமாக இருக்கிறது. ஆனால் எதுவும் அவன் னினைப்பது போல் நடப்பதில்லை. தன் ஊழியர்களுக்கு உட்பட்ட சொந்த நிலம் மட்டும் செழித்தோங்க அவன் நிலம் மட்டும் அதே மக்கள் வேலை செய்தும் வறண்டு போவதை எண்ணி குழம்புகிறான். அங்கு ஆழமாக‌ ஒரு விஷயம் அவனைத் தாக்குகிறது. அவன் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் அவர்களின் மனம் அடிப்படை இச்சைகளால் தான் ஆட்படுகிறது. ஒரு தொலைவைத் தாண்டி பார்க்கும் கண் அவர்களுக்கு வாய்க்கவில்லை. அத்தனை நாள் அவர்கள் இருந்த அந்த வறுமை பீடித்த அடிமைச் சூழல் அவர்கள் உயிர்பிழைக்கும் உணர்வை மட்டுமே அவர்களில் தக்கவைத்துள்ளது. மொத்த பிரஞ்ஞையும் உள்னோக்கி திரும்பிய அவல நிலையில் வாழ்கின்றனர்.

088f1a93d225270c357bfd21a75ea22d

தன்னை தூக்கிவிட்ட கையின் கதக‌தப்பைக் கூட அறியாத தடித்த தோல் கொண்டவர்களாக இதுவரை வாழ்ந்த சூழல் அவர்களை மாற்றி வைத்துள்ளது. தன் நிலம் மட்டும் வறண்டு கிடக்கும் நிலைகுறித்து கேட்கையில் அவர்கள் உதடு பிதுக்கி தெரியாது என்கின்றனர். தங்கள் வேலையை ஒழுங்காக செய்ததாகவும் பயிர் செழிக்காத்திற்கு எண்ணற்ற காரணங்கள் பின்னிருக்கலாமென அவர்கள் கூறும் சமாளிப்புகளைக்கேட்டு ஒரு கட்டத்தில் வெறுப்படைகிறான். அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு தன் கவனத்தை மீண்டும் தன் கல்வி மீது திருப்புகிறான். ருஷ்யாவின் முழு சரித்திரத்தை எழுதும் முயற்சியில் இறங்குகிறான்.

இந்த அத்தியாயத்தில் மிகவும் ஆச்சரியப்படுத்தியத் தருணமென்பது இது இரு தரப்பிலிருக்கும் குறையையும் சொல்கிறது. அடிமைகளின் சுயநலத்தை சொல்லும் அதே வேளையில் ‍‍‍‍அந்த முதலாளியின் சுயமைய பார்வையையும் சுட்டத் தவறவில்லை. அவன் தன் பண்ணைக்கு மீண்டு வரும் பகுதி விளக்கப்படுகையில், அதுவரை அவன் கற்ற கல்வி அவனை ஒரு ‘பயனுள்ள’ வாழ்வை ஒரு சேவை வாழ்வைப் பற்றிய ஒரு கற்பனைக்கு அவனைத் தள்ளுகிறது. அந்த மக்களின் நன்மைக்காக அல்ல அவனுடைய அகங்கார உந்துதலாலேயே அப்படி ஒரு முடிவை எடுக்கிறான். ஆகவேதான் ஒரு சறுக்கலிலேயே அதன் மீதான பிடிப்பை விடுகிறான். உண்மையில் தான் நம்பியதுபோல சூழ இருக்கும் ஊழியர்களின் நன்மைக்காகவென்றால் மேலும் அதில் மூர்க்கமாக உட்சென்றிருப்பான்.

அவன் தவற விட்ட இடத்தை அடுத்து வரும் நடுவயது கதாப்பாத்திரம் மூலம் காட்டப்படுகிறது. அவனும் தன் ஊழியர்கள் மீதான முன்னேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர். அதேசமயம் அதைப் பற்றிய பெரிய ஒளிவட்டம் அற்றவர். அதனாலேயே அவரால் ஒரு சிறந்த பண்ணை முதலாளியாக இருக்க முடிகிறது. அதை ஒரு சேவையாக செய்யவில்லை. அது அவர் இயல்பிலேயே கலந்து இருக்கிறது. அன்றாட அடிப்படை தேவை போலவெ அதையும் அவர் செய்கிறார். அந்த இளைஞன் தோல்வியடைவதற்கான காரணம் இதுவாக சுட்டப்படுகிறது.

மூன்றாவதாக வரும் பாத்திரம் இந்த இரண்டு எல்லைகளுக்கும் வெளியிலிருப்பவர். உண்பதும் உறங்குவதுமாக எந்த இலக்கின் சுமையுமில்லாமல் காற்றடிக்கும் திசை நோக்கி செல்லும் இறகாக தன் வாழ்வை வாழ்பவர்.பெரிய விருப்பத்தன்மையுடன் இப்பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. எதிர்படும் அனைவரையும் வாஞ்சையுடன் வரவேற்கிறார். கையிலிருப்பது கரைவது குறித்த எந்த பிரஞ்கையுமற்றவராக இருக்கிறார். அந்தந்த கணத்தை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர்.

நாவலின் இறுதியாக ‘முடிவு அத்தியாயம்’ ஒன்றில் மிஞ்சியவை அனைத்தையும் தொகுத்து அதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கோர்வையில்லாமல் கதை தத்தளித்து நகர்கிறது. பத்திர மோசடி குற்றத்திற்காக செசிகோவ் கைது செய்யப்படுகிறான். ஒரு பாதிரியாரின் குணநலன்களுடன் வரும் முரசோவ் என்ற அரசு வக்கீலிடம் தன்னை விடுவிக்க மன்றாடுகிறான். அவரது வற்புறுத்தலின் பேரில் கவர்னர் ஜெனரல் அவனை விடுவிக்க அவன் அங்கிருந்து வேறு ஊருக்கு செல்கிறான். அவனுடைய இயல்பு மாறியிருக்கிறதா என சரியாக விவரிக்கப்படவில்லை. கவர்னர் தன் அரசூழியர்கள் அனைவரையும் அழைத்து நாட்டின் அவல நிலை குறித்தும் அவர்கள் தங்கள் நல்வழி திரும்ப வேண்டிய அவசியம் குறித்தும் இதை தவறவிட்டால் அவர்களுக்கும் ருஷ்யாவிற்கும் மீட்பில்லை எனவும் ஒரு பெரிய உபதேச உரை வழங்குவதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.

வடிவ ரீதியாகவும் தரிசன ரீதியாகவும் முற்றுப்பெறாத ஆக்கம் தான். ஆனால் இன்றைய வாசகன் இதை பொருட்படுத்தி வாசிக்கவேண்டியதன் காரணங்களாக நான் கருதுபவை இதன் கூரிய அங்கதத்திற்காகவும், புறச்சூழலை விவரிக்கும் போது இது கொள்ளும் கவித்துவ மொழிநடைக்காகவும், இரண்டாம் பகுதியில் வரும் கதாப்பாத்திரங்களை வடிவமைத்த நுட்பத்திற்காகவும் தான்.

 

 பாலாஜி பிருதிவிராஜ்

முந்தைய கட்டுரை’நானும்’ இயக்கம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபேயை அஞ்சுவது ஏன்?