இருமதங்களின் பாதையில்

IMG_20180613_142458

சென்ற ஜூலை,ஆகஸ்ட்,செப்டெம்பரில் சைதன்யாவுக்கு எண்பதுநாட்கள் விடுமுறை. அதில் கம்போடியா பயணம் உட்பட மொத்தம் 11 பயணங்கள். கிளம்பும்போது ‘எங்கியுமே போகலை… வீட்டிலேயே இருந்தது மாதிரி இருக்கு’ என மனவெதும்பல். ஆகவே இம்முறை விடுமுறைக்கு அவள் வரும்போது ஒரு பயணம் திட்டமிட்டோம். கர்நாடகத்தின் தென்கனரா பகுதி. இருபது நாட்களுக்கு முன்புதான் நண்பர்களுடன் அதற்குமேல் வடகனரா பகுதிக்கு அருவிப்பயணம் சென்றிருந்தேன். கடந்த ஆண்டுகளில் எப்படியும் ஆண்டுக்கொருமுறையாவது கர்நாடகத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறேன்.

நானும் அருண்மொழியும் சைதன்யாவும் அக்டோபர் 13 மதியம் கிளம்பி ரயிலில் மங்களூர் சென்றோம். அங்கிருந்து தர்மஸ்தலா. நண்பர் காஞ்சி சிவா அங்கே நேத்ராவதி விடுதியில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். மங்களூரிலிருந்து டாக்ஸியில் சென்றோம். இணையத்தில் டாக்ஸி முன்பதிவுசெய்ய முயன்றேன். 3200 ரூபாய். இணையதளம் அளிக்கும் தள்ளுபடி போக 2700 ரூபாய். அவர்கள் சொன்ன கிலோமீட்டர் கணக்கு கொஞ்சம் உதைத்தது. ஆகவே நேரில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ரயில்நிலையத்தில் சந்தித்த முதல் டாக்ஸிக்காரரிடம் கேட்டேன். 1600 ரூபாய் என்றார். மறுசொல் பேசாமல் ஏறிக்கொண்டோம்

மழைக்குள் பாகுபலி, தர்மஸ்தலா
மழைக்குள் பாகுபலி, தர்மஸ்தலா

தர்மஸ்தலாவுக்குள் நுழைகையில் மழை பெய்துகொண்டிருந்தது. கோயில் நகரம் நனைந்து ஊறிச் சொட்டிக்கொண்டிருக்க நேத்ராவதியில் ஓய்வெடுத்தோம். நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் மழை நின்று பெய்துகொண்டிருந்தது. ஒரு ஆட்டோ பிடித்து கடைவீதிக்குச் சென்று மூன்று குடைகள் வாங்கிக்கொண்டோம். எனக்கு பிரியமான இடம் அங்கு பாகுபலி சிலை இருக்கும் ரத்தினகிரி என்னும் குன்று. நான் காசர்கோட்டில் பணியாற்றும்போது முதன்முதலாக அதை வந்து பார்த்தேன். அன்றுமுதல் இன்றுவரை எனக்கு மிக அணுக்கமானது அச்சிலை.1972 ல் அது நிறுவப்பட்டது. கர்நாடகத்தில் இருக்கும் ஐந்து பெரிய பாகுபலி சிலைகளில் இது நான்காவது. பிற அனைத்துமே தொன்மையானவை.

தர்மஸ்தலா ஒரு சமணத்தலம். ஆனால் அங்குள்ள மஞ்சுநாதர் ஆலயம் பின்னர் வந்தது. மஞ்சுநாதர் ஆலயத்தில் பூசகர்கள் மாத்வ குருமரபைச் சேர்ந்த பிராமணர்கள் – அவர்களின் வழிபாட்டுமுறை வைணவம். ஆலயம் சமணரான வீரேந்திர ஹெக்டே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்ற ஐநூறாண்டுகளுக்கும் மேலாக அவர்களே அந்த ஆலயத்திற்கும் அருகிலுள்ள சமண ஆலயங்களுக்கும் பட்டாதிகாரிகள். இங்குள்ள உணவுச்சாலையில் நாளொன்றுக்கு பத்தாயிரம்பேருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. தர்மஸ்தலா என்ற பெயர் அவ்வாறு அமைந்தது.

je7
மூடுபித்ரே

ரத்னகிரிக்குமேல் அனேகமாக எவருமே இருக்கவில்லை. பாகுபலி மழைத்திரைக்குள் ஓங்கி நின்றிருந்தார். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. 39 அடி உயரமான ஒற்றைக்கல் சிலையை நோக்கியபடி நின்றோம். அந்த நனைந்த அந்தியில் முழுதறிந்து அமைந்த அறிவரின் பேருருவுடன் நின்றிருப்பது ஊழ்கநிலையாக தோன்றியது. மழை நின்றபின்னரும் முகிலால் மூடப்பட்டிருந்தது குன்று.

அங்கிருந்து திரும்பிவந்து மஞ்சுநாதரை வணங்கினோம். பெரிய கூட்டமில்லை. மழைபெய்துகொண்டே இருக்கும் ஊர் என்பதனால் நனையாமலேயே ஆலயத்தின் வரிசையில் நின்று அத்தனை தெய்வங்களையும் வணங்கி வெளிவர முடிந்தது. தர்மஸ்தலாவின் ஆலயம் கேரளபாணியில் அமைந்தது. சிறிய மர ஆலயம், அதைச்சூழ்ந்து உருவாக்கப்பட்ட கட்டிடங்களால் விரிந்து அகன்றிருக்கிறது. நவராத்திரி என்பதனால் கலைநிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஒரு பெண் கதாகாலட்சேபம் செய்துகொண்டிருந்தாள். கன்னடம்தான், ஆனால் சிசுபால வதம் என தெரிந்தது.

20181015_104558
மூடுபித்ரே

மறுநாள் காலை மழைபெய்துகொண்டிருந்தது. நாலரை மணிக்கே எழுந்து குளித்துவிட்டு நானும் சைதன்யாவும் சந்திரநாத பஸதியை பார்க்கச் சென்றோம் [வசதிதான். வசிப்பிடம் என சம்ஸ்கிருதப்பொருள். பிராகிருதத்தில் பஸதி. பஸ்தி என்றும் சொல்வார்கள்] அது தொன்மையான சமண ஆலயம். முன்பு ஓடுவேயப்பட்டிருந்தது. இப்போது கான்கிரீட்டில், அதே பாணியில், விரிவாக்கி கட்டியிருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது ஆலயம் திறக்கப்படவில்லை. எவருமே இல்லை. சுற்றிவந்து வழிபட்டுவிட்டு அதற்கும் பின்பக்கம் நீண்டுசென்ற கிராமச்சாலையில் மழையில் நான்கு கிலோமீட்டர் நடந்தோம்je7

அப்பகுதியே பழைய கட்டிடங்களால் ஆனது. வீரேந்திர ஹெக்டே குடும்பத்தின் தொன்மையான இல்லம் அங்கேதான். அவர்கள் பயன்படுத்திய பயிற்சிவிமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கிராமச்சாலையில் அவ்வப்போது சிலர் நடமாடினர். முற்றிலும் ஒழிந்து கிடந்தது நிலம். மழையின் ஓசை பசுமைவெளிக்குமேல் நிறைந்து நின்றிருந்தது. மேற்குமலைத்தொடர் பகுதிகளில் இருக்கும் அடர்பசுமையின் அலைகளை இந்தியாவில் வேறெங்கும் பார்க்கமுடியாது. அது ஒரு உயிர்த்திமிறல், ஒரு பெருங்களியாட்டு.

டாக்ஸி சொல்லி வைத்திருந்தேன். கேரளத்தை பூர்விகமாகக் கொண்ட அப்துல்லா தர்மஸ்தலாவிலேயே வாழ்பவர். சமணத்தலங்கள் அவருக்கே தெரியும். எட்டரை மணிக்கு வேணூர் சென்றோம். அங்கே ஒரு சிறு சமணக்கோயிலில் பூசகர் இருந்தார். பார்ஸ்வநாதருக்குரியது இவ்வாலயம். கருவறைக்குள் சுடரொளியில் சிறிய திருமேனி நின்றிருந்தது. இளமழை பெய்துகொண்டிருந்தது. காற்றுவெளியே சற்று நீலநிறம் கொண்டிருந்தது. நீர்ப்பரப்புகள் மெய்ப்புகொண்டு சிலிர்த்தன. இலைப்பரப்புகள் ஒளிந்து அசைந்தன. கூரைவிளிம்புகளில் ஒளி சொட்டியது.

மர்க்கட முஷ்டி என்னும் சமணக் கருத்துரு. நாகத்தைப் பற்றிய பாம்பு அதை விடத்தெரியாமல் முகத்தை மட்டும் திருப்பிக்கொள்கிறது. பாவத்தைக் குறிக்கும் உருவகம் இது.
மர்க்கட முஷ்டி என்னும் சமணக் கருத்துரு. நாகத்தைப் பற்றியகுரங்கு அதை விடத்தெரியாமல் முகத்தை மட்டும் திருப்பிக்கொள்கிறது. பாவத்தைக் குறிக்கும் உருவகம் இது.

கர்நாடகத்திலோ கேரளத்திலோ சிற்றூர்களுக்குச் செல்லும்போது நம் எண்ணத்தை வந்து அறையும் ஒன்றுண்டு. அவ்வூர்களின் ஆழ்ந்த அமைதி. ஆந்திரத்திலோ தமிழகத்திலோ அந்த அமைதியை எங்கும் நாம் உணரமுடியாது. ஒருமுறை புலரியில் புதுக்கோட்டை விஜயாலய சோளீச்வரம் சென்றிருந்தோம்.ஊர்களிலிருந்து மிகத்தொலைவில் தனித்திருப்பது அந்த இடம். ஆனால் நான்குபக்கமிருந்தும் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் வந்து அறைந்து முயங்கி அர்த்தமில்லாத ஒலிக்குப்பையாகி செவியை நிறைத்தன. வேணூரின் அமைதியில் நாம் பேசுவதும் தாழ்ந்த குரலாகிவிடுகிறது. சிந்தனையிலும் அமைதி உருவாகிறது. ஆனால் பொதுவாக தமிழ் இளைஞர்களை அத்தகைய அமைதி தொந்தரவு செய்வதைக் கவனித்திருக்கிறேன். கூச்சலிட்டு ஆர்ப்பரிப்பது அவர்களின் வழக்கம். நல்லவேளையாக நம்மூர் தமிழ்ராக்கர்ஸ் இன்னும் தென்கர்நாடகப் பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை.

je6
வேணூர்

வேணூரில் உள்ள பாகுபலி சிலை 38 அடி உயரமானது. அமரசிற்பி ஜகனாச்சாரி என்பவரால் உருவாக்கப்பட்டது. கர்நாடகத்தின் பேருருவ பாகுபலிகளில் சிரவணபெளகொளாவின் சிலையே பேரழகு கொண்டது. அது ஒரு சிறுவன். கள்ளமற்ற நோக்குடன் உலகு முன் திறந்து நின்றிருப்பவன். கர்க்களாவின் சிலை புன்னகைகொண்ட அழகிய வட்டமுகம். தர்மஸ்தலாவின் சிலை ஊழ்கநிலை. வேணூரின் சிலையில் ஒரு துயர் உண்டு. எப்படி அது அங்கே குடியேறியதென்று உணரமுடியவில்லை. வாயின் அமைப்பாலா, விழியாலா என்று தெரியவில்லை. ஆனால் ஆழ்ந்த துயர் ஒன்று உள்ளாழத்தில் நின்றிருக்கும் ஊழ்கம் அது

நாங்கள் சென்றபோது பாகுபலிக்கு பூசை நிகழ்ந்துகொண்டிருந்தது. கால்களை கழுவி அரிமலரிட்டு வணங்கினார் பூசகர். கர்நாடகத்தில் வேணூர் போன்று சமணர்கள் நிறைந்த ஊர்களில் சமணப்பூசகர்கள் வழிபாடுகளைச் செய்கிறார்கள். அவர்கள் இல்லாத ஊர்களில் மாத்வபிராமணர்களே சமணத் தீர்த்தங்காரர்களுக்கும் பூசைகளை சமணமுறைப்படிச் செய்கிறார்கள். சமணப்பூசனை என்பது இந்துப் பூசனையேதான். அன்னம் படைக்கப்படுவதில்லை, அரிசி மட்டும்தான் என்பதே வேறுபாடு.

je4
மூடுபிதிரே தெருவில்

வேணூரிலிருந்து மூடுபித்ரி சென்றோம். மூடுபித்ரி சமணர்களின் தென்னகக் காசி என்பார்கள். நூற்றுக்கும்மேலான சமண ஆலயங்கள் உள்ளன. பெரியவை இரண்டு, குருபசதி, ஆயிரம்தூண் பசதி. பல கோயில்கள் வீடுகள் போன்ற அமைப்பு கொண்டவை. நாங்கள் சென்றபோது எந்த ஆலயத்திலும் எவருமில்லை. குருபஸதியில் அடுக்கடுக்காகச் சென்ற அறைவாயில்களுக்கு அப்பால் கருவறைக்குள் பொன்னிறத் திருவுருவாக பார்ஸ்வநாதர் நின்றிருக்கிறார். மூடுபிதிரியின் ஆலயங்களில் இதுவே தொன்மையானது. ஆனால் பின்னர் பலமுறை திருப்பிக் கட்டப்பட்டது. கேரள மரக்கட்டுமான ஆலயங்களின் பாணியில் அமைந்தது

20181015_114819
ஆயிரத்தூண் பசதி மூடுபித்ரெ

ஆயிரம்தூண் பஸதி திருபுவன சூடாமணி என புகழ்பெற்றது. இந்தியாவின் மாபெரும் சமண ஆலயங்களில் ஒன்று. ஆலயத்தின் முதல்நிலை கற்களால் ஆனது, மேலே மரக்கட்டுமானம். கற்பலகைகளை ஓடு போல அடுக்கி உருவாக்கப்பட்டது இதன் கூரை. சந்திரநாதருக்குரிய ஆலயம் இது. ஹொய்ச்சாள பாணியில் அமைந்த வட்டக்கூரைகொண்ட பெரிய முகமண்டபம். சுற்றுமண்டபம் பருத்த கற்தூண்களால் ஆனது.

20181015_113423
ஆயிரந்தூன் பசதி

மூடுபிதிரி முழுக்க இளமழை தொடர்ந்து வந்தது. அங்கிருந்து கார்க்களா சென்றபோது மழைவிட்டு சாரல்கலந்த குளிர்க்காற்று மட்டும் எஞ்சியது. கார்க்களாவின் பாகுபலிப் பெருஞ்சிலை 41 அடி உயரமானது. ஆண்மை நிறைந்த அழகுகொண்டது. மரத்தாலானதுபோல் தோன்றவைக்கும் கல்வரிகள் பரவிய உடல். தீர்த்தங்காரர்களின் சிலைகள் மானுடனின் உச்சநிலை என உருவகிக்கப்பட்டவை. பெருந்தோள்கள், தாள்தோய்தடக்கைகள், பழுதற்ற விரிநெஞ்சு, நீள்விழிகள், குமிழுதடுகள். நோக்க நோக்க மானுடத்தின் எழுந்தருளும் தெய்வம் என்றும் மானுடம் கொள்ளும் முழுமை என்றும் எண்ணச்செய்வன.

கார்க்களாவின் இன்னொரு குன்றில் உள்ளது சதுர்முக பஸதி. நான்கு திசைகளிலும் வாயில்கள் கொண்டது. நான்கு பக்கமும் நான்கு கருவறைகள் திறக்கின்றன. ஒவ்வொரு கருவறையிலும் கன்னங்கரிய திருவுடல்களுடன் நான்கு தீர்த்தங்காரர்கள் நின்றிருக்கிறார்கள். பெரும்பாலும் பக்தர்கள் வருவதில்லை. ஆகவே ஒரு வாயில் மட்டுமே திறந்திருக்கிறது.  அரையிருளில் இருளே குவிந்து ஒளிசூடியதுபோல் நின்றிருக்கும் படிவர்கள். ஆழ்ந்த அமைதியில் காற்றின் ஓசை.

20181017_095211
செயிண்ட் மேரீஸ் ஐலண்ட்

மாலை மூன்றுமணிக்கு சிருங்கேரி சென்று சேர்ந்தோம். காஞ்சி சிவா அங்கும் தங்குமிடம் ஏற்பாடுசெய்திருந்தார். சிருங்கேரி மடத்துக்குச் சொந்தமான தங்கும்விடுதியில். ஓய்வெடுத்துவிட்டு நேர் எதிரிலிருந்த வளாகத்திற்குச் சென்றோம். 2014ல் கட்டப்பட்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் துங்கா நதிக்கரையில் அமைந்த ஆலயத் தொகைக்குச் செல்லலாம். மையமாக உள்ள ஆலயங்கள் இரண்டு. சாரதாம்பா ஆலயம், வித்யாசங்கர ஆலயம். சூழ்ந்து பல சிறு கோயில்கள். முன்னர் துங்கபத்ரா கரையில் தர்மபுரி என்னும் ஊரில் இதேபோல ஆலயத்தொகை ஒன்றை பார்த்த நினைவு. அந்த ஆலயங்களும் கிருஷ்ணதேவராயர் கட்டியவை

சாரதாம்பா ஆலயம் மரத்தாலனதாக இருந்தது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு தீவிபத்து ஏற்பட்டு அவ்வாலயம் அழிந்தது. அதன்பின் கல்லில் இன்றைய ஆலயம் கட்டப்பட்டது. சிலைகள் புதியவை என்றாலும் பழைய சிலைகளுக்குரிய நுணுக்கமான அழகுகொண்டவை. சிருங்கேரி சாரதாபீடத்தின் தெய்வம் இது.

20181015_095035
வேணூர்

அருகில் உள்ள வித்யாசங்கர ஆலயமும் சிருங்கேரி மடத்திற்குரிய தெய்வமான வித்யாதேவிக்குரியதுதான். மையத்தெய்வம் சிவன். தென்னகத்தில் மிக அழகிய சிலைகள் கொண்ட ஆலயங்களில் ஒன்று இது. அடித்தளம் முதல் கோபுர உச்சிவரை அத்தனை கற்களும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டவை. சுற்றுச்சுவரின் சிற்பங்களை நோக்கி முடிக்க சிலமணிநேரம் ஆகும். கர்நாடகச் சிற்பமரபுக்குரிய தனித்தன்மைகள் கொண்டவை பல சிலைகள்.

20181017_095523
செயிண்ட் மேரீஸ் ஐலண்ட்

இங்கே விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணனுக்கும் பத்தாவது அவதாரமான புரவியூரும் கல்கிதேவனுக்கும் நடுவே அவதாரங்களில் ஒன்றாகத் தீர்த்தங்காரர் சிலையும் உள்ளது. ஏற்கனவே பெலவாடி வீரராகவப்பெருமாள் ஆலயத்தின் மையத்தெய்வத்தின் அருட்சுற்றுவட்டத்தில் பத்தாவது அவதாரமாக புத்தர் செதுக்கப்பட்டிருப்பதை பூசகர் சுட்டிக்காட்டியிருந்ததை நினைவுகூர்ந்தேன்.

சிருங்கேரி மடத்திற்கு தென்னகம் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே பலமுறை அதைச் சொல்லியிருக்கிறேன். மாலிக் காபூரின் படையெடுப்புப்புக்குப் பின் சீரழிந்துகிடந்த தென்னகத்தை அழிவிலிருந்து மீட்டெடுத்த விஜயநகர பேரரசு சிருங்கேரி மடத்தின் 12 ஆவது தலைவர். அவரால் ஊக்கப்படுத்தப்பட்டவர்கள் விஜயநகரத்தை உருவாக்கிய ஹரிஹரரும் புக்கரும். அவர்கள் தென்னகத்திலிருந்த உதிரி சுல்தானிய ஆட்சியாளர்களை வென்று மீண்டும் இந்துப்பேரரசு ஒன்றை உருவாக்கினர். தென்னகத்தில் நாம் இன்றுகாணும் ஆலயங்கள் அனைத்துமே இடிபாடுகளில் இருந்து நாயக்கர்களால் கட்டி எழுப்பப்பட்டவை, அல்லது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டவை. அவர்களால் புதுப்பிக்கப்படாத ஆலயங்களென ஏதுமில்லை.

20181015_123753
கார்க்களா

சிருங்கேரி மடமே ஸ்மார்த்த மரபு என்னும் ஆறுமதப்பூசகர்களின் குருமரபை உருவாக்கி தலைமைதாங்கி நிலைநிறுத்தியது. ஒருகட்டத்தில் இந்துமதத்தின் வழிபாட்டுமரபும் ஞானமரபும் முற்றழிந்துபோகாமல் காத்தது இந்த பூசக மரபினரே. இன்றும் சிருங்கேரி மடமே தென்னகத்திலுள்ள பல்லாயிரம் ஆலயங்களின் பெரும்புரவலராகத் திகழ்கிறது.

நவராத்ரி பூசைகள் தொடங்கிவிட்டிருந்தமையால் சிருங்கேரி கலகலப்பாக இருந்தது. துங்கா நதியோரம் ரங்கராட்டினங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கடைகள் என பெரிய மக்கள்திரள். வளாகத்திற்குள் இசைநிகழ்ச்சிகள்,பஜனைகள். இரவு பத்துமணிவரை அங்கேயே சுற்றிவந்துகொண்டிருந்தோம். துங்காவின் மறுபக்கம் வேதபாடசாலைகளும் அவர்களுக்கான தங்குமிடங்களும் இருக்கின்றன

20181015_182743

சிருங்கேரியில் நானும் சைதன்யாவும் காலையில் ஒரு நீண்ட நடை சென்றோம். துங்கைக்கு மறுபக்கம் அடர்காடு, காபித்தோட்டங்கள், மிளகுத்தோட்டங்கள். ஆளொழிந்த பசுமை வெளி. மிளகின் பச்சை காய் ஒன்றை சைதன்யாவுக்கு சாப்பிடக்கொடுத்தேன். மிளகை அந்த வடிவில் பார்த்ததே இல்லை. நன்றாக மென்று அரைத்துவிட்டு மூக்குசிவக்க கண்ணீர்விட்டாள்.

காலை பத்துமணிக்கு உடுப்பிக்கு டாக்ஸியில் கிளம்பினோம். சிருங்கேரியைச் சூழ்ந்திருக்கும் பகுதி பெரும்பகுதி காடுதான். அங்கிருந்து அருகில்தான் தென்னாட்டின் சிரபுஞ்சி என்று சொல்லப்படும் ஆகும்பே வனம். பசுமைக்காடுகள் வழியாகச் சுற்றிச்செல்லும் பாதை தக்காணப் பீடபூமியின் விளிம்பில் மலையிறங்கி கீழே விரிந்துகிடந்த கடலோரக் கர்நாடகத்தை அடைந்தது

20181016_092501

உடுப்பியில் ஒரு விடுதியில் தங்கினோம். சென்று சேர்ந்தபோதே இருட்டிக்கொண்டிருந்தது. பெரிய கண்ணாடிப்பரப்பு சன்னலாக அமைந்திருந்தது. கடலில் இருந்து முகில்திரள் பெருகி அணுகுவதை அங்கிருந்து பார்க்கமுடிந்தது. கூரிய மின்னல்களால் முகிலிருள் கிழிபட்டது. இடியோசை கண்ணாடியை அதிரச்செய்து மழைத்துளிகள் நடுங்கி வழியவைத்தது. பின்னர் பெருமழை. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம்

மழை ஓய்ந்தபோது என்ன செய்வதென்று தெரியவில்லை. கடற்கரைக்குச் செல்வதாகத் திட்டம். அதை ஒத்திவைத்து உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றோம். உடுப்பி கிருஷ்ண மடம் பிற்காலவேதாந்தங்களில் ஒன்றாகிய துவைத மரபை உருவாக்கிய மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்டது. அங்கே நிறுவப்பட்டிருக்கும் கிருஷ்ணன் சிலை மத்வர் தன் தனிப்பட்ட வழிபாட்டுக்காக வைத்திருந்தது என்றும், அவர் அதை ஒரு கோபிசந்தனக் குடுவைக்குள் கண்டெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. மிகச்சிறிய விக்ரகம். அது அமைந்துள்ள கருவறையை வெளியே இருந்தே பார்க்க ஒரு சாளரம் உள்ளது. உள்ளே சென்று வணங்க நீண்ட சுற்றுப்பாதைகள் வழியாகச் செல்லவேண்டும்.

IMG_20180615_112909

கேரளபாணியில் மரத்தாலான ஆலயம். அந்த ஆலயமே இன்னொரு பெரிய மரக்கட்டிடத்திற்குள் உள்ளது. தொன்மையான தூண்களும் உத்தரங்களும் கொண்டது. உடுப்பியின் கிருஷ்ணமடம் அமைந்துள்ள பகுதியில் நான்குபக்கங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வண்டிகள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. நடந்தே சுற்றிவருபவர்கள் அரியதோர் காலப்பயண அனுபவத்தை அடையமுடியும். இந்தச் சுற்றுப்பாதையில் மத்வ மரபின் எட்டு மடங்களின் மாளிகைகள் உள்ளன. அஷ்டமடங்கள் என இவற்றைச் சொல்வதுண்டு. தொன்மையான கட்டிடங்கள் அவை.

நின்றுவிட்டிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. பின்னர் தூறலாகியது. மடத்தின் குளத்தில் தூய நீர் இருண்டு நலுங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மடமே ஒரு கொண்டாட்டநிலையில் இருந்தது. ஒருபக்கம் பஜனை. ஒரு பெண் அற்புதமாக பரதநாட்டியம் ஆடினாள். அனைத்துப்பாடல்களும் கிருஷ்ண லீலை. ஓரிடத்தில் கிளாரினெட் வாசிக்கும் குழு ஒன்று. பல இடங்களில் சிறிய நூல்பாராயணக் குழுக்கள் அமர்ந்திருந்தன

உண்மையில் அந்தப்பொழுதில் மடமும் ஆலயமும் அப்படி இருக்குமென நினைக்கவில்லை. ஆகவே அந்தியில் என்ன செய்யலாமென திட்டமிட்டபோது பேசாமல் ஒரு சினிமாவுக்குச் செல்லலாம் என எண்ணி இருக்கைப்பதிவு செய்திருந்தோம். ஆகவே கிளம்பி மணிப்பாலில் ஐநாக்ஸில் ஒரு படம் பார்க்கச் சென்றோம். வெனம் என்னும் படம். பார்த்துமுடித்தபோது எனக்குள் ஒரு பாரசைட் புகுந்துகொண்டதைப் போல உணர்ந்தேன்.

je2
செயிண்ட் மேரீஸ் ஐலண்ட்

திரும்பி வர ஆட்டோவுக்காகக் காத்துநின்றபோது பதற்றம் ஏற்பட்டது. ஆயுதபூஜை என்பதனால் ஆட்டோக்கள் குறைவு. மழைக்காலம் என்பதனால் மேலும் குறைவு. கூப்பிட்ட எவருமே உடுப்பி வரை வரமாட்டேன் என்றார்கள். அப்போது ஒருவர் “நீங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் தானே? நம்பவே முடியவில்லை. இங்கே எப்படி?” என்றார். விவேக் என்றுபெயர். ஓசூர்க்காரர். மணிப்பால் பல்கலையில் இமானுவேல் கான்ட் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். அவரிடம் நிதானமாகப் பேச பொழுதில்லை. மழைநேரம், ஆட்டோ கிடைக்காத பதற்றம். அவரே ஆட்டோ பிடித்து அனுப்பிவைத்தார்.

மறுநாள் காலை மால்பே கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் செயிண்ட் மேரீஸ் ஐலன்ட் என்னும் சிறிய தீவு உள்ளது. அதற்கு படகில் செல்வது அங்கே முக்கியமான வேடிக்கை. அலைகள்மேல் படகில் செல்வது எனக்குப் பிடிக்கும். ஆனால் அருண்மொழியும் சைதன்யாவும் இருந்தமையால் பெரும்பதற்றம். ஒருகணம் கூட நிம்மதியாக இருக்கவில்லை. நகத்தைக் கடித்து துப்பி ரத்தமே வந்துவிட்டது

je1
செயிண்ட் மேரீஸ் ஐலண்ட்

செயிண்ட் மேரீஸ் ஐலண்டில் வாஸ்கோ ட காமா வந்து இறங்கியதாகவும், அதன்பின்னரே கோழிக்கோடு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆதாரமேதுமில்லை. மேலும் இப்பகுதியில் கப்பல்கள் அணுகமுடியாது. கடல்முழுக்க செங்குத்தான பாறைகள் எழுந்து நிற்கின்றன. இது எரிமலைக்குழம்பால் உருவான தீவு. தென்னைமரங்கள் உள்ளன. ஓணான்களும் அரணைகளும் எப்படி வந்தன என்று தெரியவில்லை.

விந்தையான வடிவங்களில் நின்றிருக்கும் பலவண்ணப் பாறைகளும் தூய்மையான கடற்கரையும் தெளிநீரும்தான் இங்குள்ள கவற்சி. இளநீர் கிடைக்கும் ஒரு கடை உண்டு. மற்றபடி அங்கே இரவு தங்க முடியாது. மிகத்தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. அந்த நிலத்தின் தூய்மையே ஒரு மனமலர்ச்சியை உருவாக்கக்கூடியது

உடுப்பியிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தோம். மாலை நான்கரை மணிக்கு டிக்கெட் என்பது நினைவு. ஆனால் அது காலை நான்கரை. மாலை என்றால் பதினாறரையாக குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது நினைவில் தோன்றவேயில்லை. அருண்மொழிதான் டிக்கெட் போட்டிருந்தாள், நல்லவேளை. நான் போட்டிருந்தால் அதற்கு பதில்சொல்வதற்கு வெண்முரசுக்கு இணையான சொற்கள் தேவைப்பட்டிருக்கும்.

20181015_183311
சிருங்கேரி

என்ன செய்வதென்று அறியாமல் அரைமணிநேரம் குழம்பியபின் பேருந்தோ ரயிலோ கிடைக்குமா என்று பார்த்தோம். திருவனந்தபுரத்துக்கு எந்த பயணவழியும் இல்லை. ரயில், பேருந்து, விமானம் எதுவும்.எர்ணாகுளத்துக்கு ஆறுமணிக்குக் கிளம்பும் பேருந்து கிடைத்தது. எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோயிலுக்கு ரயில் பதிவுசெய்யமுடிந்தது. பேருந்து காலை 6 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். ஏழேமுக்காலுக்கு ரயில் எர்ணாகுளம் வரும்.  ஏறிவிடலாம் என திட்டம்

ஆனால் பேருந்து கிளம்பிச்செல்ல எட்டு மணி ஆகிவிட்டது. மங்களூரில் பயணிகளைச் சேகரித்து அவர்களைக்கொண்டுசென்று கேரள எல்லைக்குள் நின்றிருக்கும் ஆம்னிபஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள். வழியில் கடுமையான சாலைநெருக்கடி. காலை எட்டுமணிக்குத்தான் சென்றுசேரும் என்றார்கள். அடுத்த ரயிலை நான் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் தூங்கிவிழித்தால் முற்காலை ஐந்துமணிக்கு திரிச்சூர் வந்துவிட்டிருந்தனர். ஏழுமணிக்கு எர்ணாகுளம். ஏழரைக்கே ரயில்நிலையம் வந்துவிட்டோம்.

20181015_184016
சிருங்கேரி

பகல்முழுக்க படுத்துக்கொண்டே நாகர்கோயிலுக்குப் பயணம் செய்தோம். மாலை நான்கு மணிக்கு நாகர்கோயில் ஐந்துமணிநேரம் பிந்திவிட்டோம். ஆனாலும் பரவாயில்லை, பிரச்சினைகள் இல்லாமல் வரமுடிந்தது. இணையம் உருவாக்கும் தொடர்புவசதியே கைகொடுத்தது. இல்லையேல் ஒவ்வொரு இடத்திலும் அலைக்கழிந்திருக்கவேண்டும்

வரும்போது ஓர் எண்ணம் எழுந்தது, இரண்டுவகை தொல்மதநிலையங்களை பார்த்துவந்திருக்கிறோம். இரண்டுமே எனக்கு உளப்பூர்வமாக அணுக்கமானவை. இந்துமத நிலையங்கள் அனைத்துமே மக்கள்பெருக்குடன், கலைகளும் வழிபாடுகளுமாக  உயிர்த்துடிப்புடன் இருந்தன. சமணநிலைகள் அனைத்துமே நல்ல நிலையில் இருந்தாலும் மக்கள்வருகை இல்லாமல் வெறும் இடங்களாக, சென்றகாலத்தின் தடையங்கள் மட்டுமாக நின்றிருந்தன. கர்க்களாவின் சதுர்முக பசதியின் உள்ளே கண்ட இருள் மிகவும் தொந்தரவு செய்தது அப்போது.

20181015_103313
குருபசதி மூடுபதிரே

ஒரு மதம் கைவிடப்படுகையில் ஒரு நீண்ட வரலாறு, மாபெரும் பண்பாட்டுப்பரப்பு, விரிந்த சிந்தனைத்தொகை, மகத்தான கலைவெளி வெறும் காலச்சுமையாக மாறிவிடுகிறது. ஜப்பானிலும் கொரியாவிலும் ஏற்கனவே பௌத்தம் அப்படி மாறிக்கொண்டிருக்கிறது. இந்துமதம் இந்தோனேசியாவிலும் கம்போடியாவிலும் அப்படித்தான் உள்ளது. இந்தியாவில் அனைத்துத் தரப்புகளிலிருந்தும் இந்துமதம் மீது நிகழும் பண்பாட்டுத் தாக்குதல்களுக்குப்பிறகும் அது வாழ்கிறது. அதை வாழவைப்பது அதிலுள்ள கொண்டாட்டத் தன்மை, கலைகளையும் இலக்கியங்களையும் ஒருங்கிணைத்துச்செல்லும் தன்மை, அனைத்து வழிபாட்டுமுறைகளையும் இணைத்துக்கொண்டு முன்செல்லும் நெகிழ்வு, புத்தருக்கும் தீர்த்தங்காரருக்கும் இடமளிக்கும் தத்துவ விரிவு. அது என்றுமிருக்கவேண்டும்.

இரண்டு அழிவுசக்திகளின் நடுவே அகப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதம். வெவ்வேறு அயல்மத உதவிகளுடன் அதை அழிக்கத்துடிக்கும் ஒரு தரப்பு. அதை ஓர் வெறிகொண்ட அரசியல்தரப்பாக்கி, அதைக் கருவியாக்கி அதிகாரத்தை அடைந்து, அப்பட்டமான ஊழலாட்சியை நிகழ்த்தும் ஒரு தரப்பு.  முதல்தரப்பு பொய்யானதோர் முற்போக்கு முகம் கொண்டது. மெய்யியலோ தத்துவமோ வரலாறோ எதுவாயினும் அதை விருப்பப்படி திரிக்கும் அறிவாற்றல் கொண்டது, நேர்மையற்றது, இன்னொரு தரப்பு மூர்க்கமான பழமைவாதமன்றி ஏதும் அறியாதது. இருவரும் மறுதரப்பினரால் ஊட்டி வளர்க்கப்படுகின்றனர். ஒருவரின் நேர்மையின்மையும் மூர்க்கமும் அறியாமையும் இன்னொருவருக்கு உணவாகின்றன. நடுவே மூவாயிரமாண்டுக்கால மெய்மரபு திகைத்து நின்றிருக்கிறது இன்று. இந்துமெய்மரபு மானுடத்தின் பெருஞ்செல்வம் என நான் நினைக்கிறேன். மானுடம் அதைப் பேணிக்கொள்ளும் என்றே நம்புகிறேன்.

அருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா

முந்தைய கட்டுரைஅஞ்சலி என்.ராமதுரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42