‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41

பகுதி ஆறு : நீரவன்

bowஇளைய யாதவரின் பாடிவீட்டுக்கு முன் சேகிதானன் கவச உடையணிந்து காத்து நின்றிருந்தான். தொலைவில் கொம்பொன்று பிளிறி அமைந்தது. மிக அப்பால் முரசுகள் மெல்லிய எக்களிப்போசையை எழுப்பின. படை முன்புலரியில் துயிலெழுந்துகொண்டிருந்தது. அவன் குளிருக்கு கைகளைக் கட்டியபடி படை மெல்ல எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். காடு விழித்தெழுவதுபோலிருந்தது. பொழுது மாறுவதற்கேற்ப ஒலிகளும் அசைவுகளும் மாறிக்கொண்டிருந்தன. கூர்ந்து நோக்கினால் கணந்தோறும்கூட அம்மாற்றம் நிகழ்வது தெரிந்தது.

ஒவ்வொரு படைப்பிரிவினரையும் எழுப்ப வெவ்வேறு ஓசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கருக்கிருளுக்கு முன்னரே படை ஏவலர்களும், புரவிகளையும் யானைகளையும் ஒருக்குபவர்களும் விழித்தெழவேண்டும். கவசங்களையும் படைக்கலங்களையும் கொண்டு சென்று சேர்ப்பவர்கள் அதன் பின்னர். இறுதியாகவே படைமுகம் நிற்கும் வீரர்கள். ஒவ்வொருவருக்கும் உரிய முழவுகளும் கொம்புகளும் அவர்கள் செவிகளுக்கு மட்டுமே கேட்டன. ஆழ்துயிலில்கூட அவை உளம் புகுந்து அவர்களை தொட்டெழுப்பின.

படைகளுக்குள் விளக்குகள் அங்கும் இங்குமென ஒழுகத்தொடங்குவதை சேகிதானன் பார்த்தான். அவை ஏவல்வீரர்களின் கைகளிலிருப்பவை. அவர்கள் படைப்புறப்பாட்டுக்கு உரிய பொருட்களுடன் படைகளின் நடுவே செல்லத் தொடங்கியிருக்கலாம். எத்தனை நூறு பொருட்கள் ஒரு படைப்புறப்பாட்டுக்கு தேவைப்படுகின்றன என்பதை கௌரவப் படைகளுடன் நின்று முதல்நாள் போருக்குமுன் பார்த்தபோது அவன் வியந்தான். புரவிகளுக்குரிய சேணங்கள், கவசங்களைக் கட்டும் தோல்சரடுகள், கவசங்களுக்கு அடியில் அணியவேண்டிய மயிர்கொண்ட தோலுறைகள், கையுறைகள், அம்பறாத்தூணிகள், உணவு கொண்டு செல்லும் பைகள்…

“இவற்றை முந்தைய இரவே அனைவருக்கும் கொண்டு அளித்தாலென்ன?” என்று அவன் மூத்த யாதவரான பிரீதரிடம் கேட்டான். அவர் “நானும் இதுவரை போரை பார்த்ததில்லை, இளையோனே. போரறிந்த ஷத்ரியனிடம் கேட்போம்” என்றார். ஆனால் அன்று மாலையிலேயே அது ஏன் என்று தெரிந்தது. போர்முகத்திலிருந்து மீண்டதுமே படைவீரர்கள் அணிகலைந்து தங்கள் அணுக்கர்களுடனும் உற்றவர்களுடனும் இணைந்து வெவ்வேறு இடங்களில் அமர்ந்தும் படுத்தும் சொல்லாடினர். சிலர் மருத்துவ நிலைகளுக்குச் சென்று மீண்டனர். எளிய புண்கள் பட்டவர்கள் கூடியமர்ந்து தாங்களே மருந்துகளை போட்டுக்கொண்டனர். மருந்திடுகையிலேயே உணவருந்தி கள்ளும் அகிபீனாவும் உண்டு கூச்சலிட்டனர்.

“அவர்கள் துயிலும்பொருட்டு தங்கள் அணிநிரைகளுக்குள் மீண்ட பின்னர்தான் தலைமைக்காவலன் எண்சொல்லி கணக்கெடுக்கிறான். இறந்தவரின் கணக்குகள் அதற்குப் பின்னர்தான் இடுகாட்டிலிருந்து வந்து சேரும். மருத்துவநிலையின் கணக்குகள் மேலும் சற்று பிந்தி வந்தடையும். அனைத்தையும் தொகுத்தெண்ணி படையின் நிலைமையை தலைமைக்கு அறிவிப்பார்கள். ஒவ்வொரு படைக்கும் தேவையான கூடுதல் படைவீரர்களை அக்ஷௌகிணியின் தலைமை அனுப்பிவைக்கும். அவர்கள் புலரியில்தான் அப்படைநிலைக்கு வந்துசேர்வார்கள். அதன் பின்னர்தான் அவர்களின் தேவைகளை அறிந்துகொண்டு பொருட்களை அளிக்க முடியும்” என்றார் மகதத்தின் காவலர்தலைவரான உத்ராடர்.

சேகிதானன் இளைய யாதவரின் பாடிவீட்டின் கதவுகளை நோக்கினான். அவை மூடியிருந்தாலும் உள்ளே அவர் விழித்திருப்பதை உணரமுடிந்தது. மூடிய உதடுகளும் உள்ளே சொற்களிருப்பதை காட்டுவதுபோல. அவன் முந்தையநாள் புலரியிலேயே கௌரவ எல்லையைக் கடந்து பாண்டவ எல்லையை அடைந்து நிலத்தில் நெற்றிதொட வணங்கி எழுந்து கைவிரித்து உரக்கக் கூவி “நான் என் தலைவர் இளைய யாதவரிடம் செல்ல விழைகிறேன்!” என்றான். அவன்மேல் குறிநோக்கி நின்ற ஏழு அம்புமுனைகள் தழைந்தன. “தனியாக நடந்து வருக… ஒவ்வொரு அடிக்கும் நின்று நின்று வருக!” என்று காவலர்தலைவன் சொன்னான்.

இருளுக்குள் பல்லாயிரம் பந்தங்களில் தழல் உதறிக்கொள்ளும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அவன் அணுகியபோது நெஞ்சு துடித்துக்கொண்டிருந்தது. எக்கணமும் மெல்லிய ஐயத்திலும் எவரேனும் ஒருவர் அவன் தலையை சீவி எறிந்துவிடமுடியும். ஆனால் கண்கள் சூழத் துழாவி வந்தபோது ஒருகணத்தில் அங்கிருந்த விழிகளில் ஒன்று இளைய யாதவருடையது என உணர்ந்து அவன் திகைத்தான். மீண்டும் நோக்கியபோது அது உளமயக்கு என தெளிந்தது. ஆனால் அந்த நோக்குணர்வு இருந்துகொண்டே இருந்தது. அவன் உள்ளத்துடிப்பு மெல்ல அமைதியடைந்தது.

அவனை நேராக சாத்யகியிடம் கொண்டுசென்றார்கள். சாத்யகி அவனை உடனே அடையாளம் கண்டுகொண்டு “உம்?” என்றான். அவன் “நான் கிளம்பிவந்துவிட்டேன்” என்றான். “ஏன்?” என்று சாத்யகி கேட்டான். “என் குடிக்கு கட்டுப்பட்டவன் என என்னை எண்ணிக்கொண்டிருந்தேன். எல்லா கன்றுகளும் தங்களை மந்தை என்றே எண்ணுகின்றன. ஆனால் இந்தப் போரில் நான் குலமோ குடியோ அல்ல. முற்றிலும் தனித்தவன் என உணர்ந்தேன். என் சாவு அணுகிக்கொண்டிருக்கிறது. என் பிறவிக் கடமையென ஆற்றவேண்டியதைத் தவிர்த்து வாழ்ந்தால் மீளா இருளுலகுக்கே செல்வேன்.” சாத்யகியின் முகத்தில் நம்பிக்கை வரவில்லை. ஆனால் எழுந்துகொண்டு “வருக!” என அவனை அழைத்துச்சென்றான்.

இளைய யாதவர் தன் பாடிவீட்டுக்குள் இருந்தார். கதவுகள் அப்போதும் இதேபோல மூடித்தான் இருந்தன. அவை உச்சரிக்கும் சொல் என்ன என அவன் எண்ணம் அலைகொண்டது. கதவு திறந்து இளைய யாதவரின் அணுக்கனான நேமிதரன் எட்டிப்பார்த்து சாத்யகியை உள்ளே அழைத்தான். சாத்யகி உள்ளே சென்ற சற்றுநேரத்திலேயே இளைய யாதவர் கதவைத் திறந்து வெளியே வந்தார். சேகிதானன் அவரை நோக்கி ஓட சாத்யகி “அசையாதே…” என தடுத்தான். அவன் நிலைத்து நின்றான். இளைய யாதவர் அணுகி அவனை கைகளால் சுற்றி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டார். “வருக, யாதவனே… நீ மீண்டதனால் மகிழ்கிறேன்” என்றார்.

சாத்யகி பதைப்புடன் “அவன் நோக்கமென்ன என்று இன்னமும் நமக்கு புரியவில்லை” என்றான். “எனக்கு புரிகிறது” என்றார் இளைய யாதவர். புன்னகை விரிந்த முகத்துடன் அவன் தோளை வளைத்து “அவன் மீண்டது இன்றைய நாளை இனிதாக்குகிறது” என்றார். சேகிதானனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது. சாத்யகி “சென்றவர்கள் பல்லாயிரவர், இவனொருவன் மீண்டமையால் நாம் அடைவதொன்றுமில்லை” என்றான். இளைய யாதவர் “சென்றவர் அனைவருக்கும் நிகர் மீண்ட ஒருவன்…” என்றார். சேகிதானன் சரிந்து நிலத்திலமர்ந்து அவர் கால்களைத் தொட்டு “உயிர்கொடுப்பேன்… உயிர்கொடுப்பேன், யாதவரே” என்றான். அவன் கைபற்றித் தூக்கி “நன்று! என்னுடன் இரு” என்றார் இளைய யாதவர்.

bowகதவு திறந்து நேமிதரன் அருகே வந்தான். சேகிதானன் வணங்கி “அரசருக்காக காத்திருக்கிறேன்” என்றான். “நீ வந்தது அவருக்கு தெரியும்” என்றான் நேமிதரன். சேகிதானன் “என்ன செய்கிறார்?” என்றான். “நூல் நவில்கிறார். ஒருநாளும் ஓதாமல் அவர் புலரியில் எழுந்ததில்லை.” சேகிதானன் “நூலா? போர்க்களத்திலா?” என்றான். நேமிதரன் “அவருக்கு எந்த வேறுபாடும் இல்லை” என்றான். சேகிதானன் மேலும் என்ன சொல்வதென்று தெரியாமல் தத்தளித்து பின்னர் மெல்ல புன்னகைத்து “போர்சூழ்கை குறித்த நூல்போலும்” என்றான்.

நேமிதரன் நகைத்து “அல்ல, சென்ற நான்கு நாட்களாகவே காவியம்தான் பயில்கிறார். இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான உறவைக் குறித்த நூல். பராசரரின் மாணவரான சார்ங்கதரர் இயற்றியது. அவர்கள் இருவரும் ஒன்றே என்று எழுதப்பட்ட விருத்திர வைஃபவம்” என்றான். சேகிதானன் “அது அசுரர்களுக்குரியது என்பார்கள்” என்றான். “பெரும்பாலான காவியங்கள் அசுரர்களுக்குரியவையே. அசுரர்கள் புகழ் பாட அவர்களின் பாடகர்களால் உருவாக்கப்பட்டவை அவை. நமது கவிஞர்களால் அவை எடுத்து சொல்கூட்டி காவியமாக்கப்படுகின்றன. பிரஹலாத சரித்திரமும் ராமகாவியமும்கூட அவ்வாறே” என்றான் நேமிதரன். பின்னர் “நான் அவருடைய புரவிகளை நோக்கச் செல்கிறேன். அவர் வருவதற்குள் ஒருமுறை நோக்கி வைத்தல் நன்று” என்று கிளம்பிச்சென்றான்.

சேகிதானன் அவன் சொன்னவற்றை உள்ளத்தில் ஓட்டியபடி சற்று நேரம் நின்றிருந்தான். பின்னர் சொல்சலித்து மீண்டும் சூழ்ந்திருந்த படைகளை நோக்கினான். படைகள் முற்றெழுந்து பெருமுழக்கமாக மாறி இருளை நிறைத்து நிழல்கொப்பளித்தன. அவன் முந்தையநாள் இரவு கண்ட மருத்துவநிலையை எண்ணிக்கொண்டான். அன்று கொல்லப்பட்ட யாதவர்களின் பெயர்களை நினைவிலிருந்து மீட்டு தொகுக்க முயன்றான். அவை பெயர்களாகவே இருந்தன, எந்த முகமும் நினைவிலெழவில்லை. பெரும்பாலான யாதவர்களை திருஷ்டத்யும்னனின் அம்புகளே கொன்றன. ஷத்ரியர்களால் கொல்லப்படுவது யாதவர்களுக்கு பெருமைதான் என்னும் எண்ணம் எழுந்ததும் அவன் புன்னகைத்தான்.

மெல்லிய மூங்கில்படல் கதவுக்கு அப்பால் இருந்து “வருக!” என்ற குரல் கேட்டது. சேகிதானன் தன்னையா என்று ஐயுற்று பின் மெல்ல கதவைத் திறந்து உள்ளே பார்த்தான். தரையிலிட்ட மான்தோலில் அமர்ந்து சுவடிகளை சரடால் கட்டிக்கொண்டிருந்த இளைய யாதவர் வருக என்று கைகாட்டினார். காட்டில் தவக்குடில் ஒன்றில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து முடித்தவர் போலிருந்தார். கற்ற நூல் எஞ்சவிடும் நிறைவு அவர் முகத்தில் இருந்தது. எப்போதுமிருக்கும் புன்னகை, இனிய இசையொன்றை உள்ளூர கேட்டுக்கொண்டிருப்பதைப்போல.

சேகிதானன் வணங்கிய பின் அவர் அருகே அமர்ந்தான். “இன்றைய படைசூழ்கை என்ன?” என்று அவர் கேட்டார். “மீன்சூழ்கை. சுறாபோல் விரைந்து தாக்குவதென்று முடிவெடுத்துள்ளனர்” என்றான் சேகிதானன். “அவர்கள் அதை தளைக்கும் பெருஞ்சூழ்கையை அமைப்பார்கள்” என்றார் இளைய யாதவர். “சற்று முன்னர்தான் படைசூழவை முடிந்தது. தங்களை இன்று எதிர்பார்த்தார்கள்” என்று சேகிதானன் சொன்னான். “இன்று சற்று மிகைப்பொழுது நூலாய்ந்துவிட்டேன்” என்றார் இளைய யாதவர். சேகிதானன் “அவர்கள் எவ்வகையிலும் வெற்றிகொள்ள இயலாது என்று திருஷ்டத்யும்னர் சொன்னார். நேற்றுமுன்தினம் அவர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. துரியோதனர் உளம் தளர்ந்திருக்கிறார் என்றும் அவர்களுடைய அவையில் அமைதிப் பேச்சு ஒன்றைப் பற்றிய குறிப்பெழுந்தது என்றும் செய்தி வந்தது” என்றான். “ஆனால் துரியோதனர் சினந்தெழுந்து மறுத்தார் என்றும் சொன்னார்கள்.”

“அவர் ஏற்கமாட்டார்” என்றார் இளைய யாதவர். சேகிதானன் “முதலில் எழும் அந்த எதிர்ப்பே ஒருவகையில் நன்றுதான் என்று துருபதர் சொன்னார். முழு எதிர்ப்பையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்திவிட்டால் மீண்டும் கூறுவதற்கு ஏதுமில்லாதாகிறது. அதன் பின்னரும் அந்த அவையில் இருப்பவர்கள் எவரேனும் அமைதிப் பேச்சை மீள மீள வலியுறுத்துவார்கள் என்றால் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதனாலேயே அவர் அதற்காக செவி கொடுத்தாகவேண்டும். ஒரு கருத்துக்கு நாம் செவிகொடுப்போம் என்றாலே அது நம்மை மாற்றத்தொடங்கிவிடும் என்றார் பாஞ்சாலத்து அரசர்” என்றான்.

இளைய யாதவர் புன்னகைத்து “இனி அவருடைய உள்ளம் மாறுவதை நான் ஒப்பமுடியாது” என்றார். சேகிதானன் திடுக்கிட்டு “ஓர் அமைதிப்பேச்சு என்றால்…” என தொடங்க தாழ்ந்த கூர்குரலில் “இனி அமைதி இல்லை, முற்றழிவு மட்டுமே” என்றார் இளைய யாதவர். சேகிதானன் தன் நெஞ்சின் படபடப்பை உணர்ந்தான். “அவர்கள் இறங்கிவந்தால்… பாதி நாட்டுக்கே ஒப்புக்கொள்வார்கள் என்றால்…” என்றான். இளைய யாதவர் “முழு நாட்டையும் அளிப்பார்கள் என்றாலும் இந்நிலத்திலிருந்து தன் உற்றாருடன் முழுமையாகவே விலகி பிற நிலம் ஒன்றுக்கு செல்வதாக அவர் ஒப்புக்கொண்டாலும்கூட போர் ஒருகணமும் பின்னடைய நான் ஒப்பமாட்டேன். அவர்கள் இங்கே களத்திலிருந்து தப்பி ஓடினால் அவர்கள் செல்லுமிடமெங்கும் துரத்திச்செல்லச் சொல்வேன். பாரதவர்ஷத்தைவிட்டு அயல்நிலங்களில் அவர்கள் குடியேறினால் அங்கும் படைகொண்டு அவர்களை அழிப்பேன். கௌரவக் குடியின் இறுதித்துளி இந்நிலத்திலிருந்து முற்றாக அழிவது வரை இப்போர் முடியாது” என்றார்.

சேகிதானன் மெல்லிய சீற்றம் ஒன்றை அடைந்தான். அதை கடந்து விழிதாழ்த்தி நிலம்நோக்கி தணிந்த குரலில் “ஆனால் பாண்டவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். கௌரவர்கள் களம்பட்டபோதே யுதிஷ்டிரர் ஆழத்தில் அஞ்சிவிட்டாரென்று எனக்குத் தோன்றியது. அவர் தன் உடன்பிறந்தாரோ மைந்தரோ இறக்கக்கூடும் என்று இப்போது அஞ்சிக்கொண்டிருக்கிறார்” என்றான். “அது நிகழக்கூடியதும்கூட. வஞ்சம் இன்றி துரியோதனர் அமையமாட்டார். இப்போது ஒரு அமைதிச்செய்தியுடன் அங்கிருந்து எவரேனும் வருவார்கள் என்றால் பாண்டவர்கள் ஒப்புக்கொள்ளக்கூடும்.”

இளைய யாதவர் “பாண்டவர்களில் இருவர் என்னைவிட்டு அகலமாட்டார்கள். இன்றுள பாண்டவப்படையில் இந்திரப்பிரஸ்தத்தினரும் பாஞ்சாலரும் விராடரும் மட்டுமே என்னைவிட்டுச் செல்வார்கள். எஞ்சியோரை என் ஆணை கட்டுப்படுத்தும். கௌரவர்களை நானே வெல்வேன். என் வஞ்சத்திலிருந்து அவர்கள் எங்கும் ஒளியமுடியாது. வேள்விச்சாலையிலோ மூதாதையர் ஆலயத்திலோ சென்று ஒளிந்துகொண்டாலும்கூட உட்புகுந்து வெளியே இழுத்து இட்டு கொல்வேன்” என்றார். “இந்த முடிவு என்று அவர்களின் வேள்விச்சாலையிலிருந்து என் கால்பொடியைத்தட்டி உதறி அஸ்தினபுரிக்கோட்டை முகப்பை கடந்தேனோ அன்று எடுக்கப்பட்டது. எடுத்த முடிவுகளை நான் எந்நிலையிலும் மாற்றுவதில்லை.”

சேகிதானன் பெருமூச்சுவிட்டான். பின்னர் அவர் கையிலிருந்த சுவடியை பார்த்தான். அவன் விழியசைவை நோக்கிய இளைய யாதவர் “விருத்திர வைஃபவம். இனிய பாடற்சுவை கொண்டது. இந்திரனும் விருத்திரனும் அவர்களுக்கு அப்பாலிருக்கும் தெய்வங்களால் களத்தில் ஆட்டுவிக்கப்படுவதை கூறுவது” என்றார். “போர்விளக்கமா?” என்று சேகிதானன் கேட்டான். “இல்லை. இது போருக்குப் பின் விண்புகுந்த விருத்திரன் அரக்கர்களும் தேவர்களும் மானுடர்களும் மண்ணில் அளிக்கும் அவியால் தேவனாவதை சொல்கிறது. அவன் விண்புகுந்து இந்திரனின் அமராவதியை அடைகிறான். இந்திரனுக்கும் அவனுக்கும் உரையாடல் நிகழ்கிறது. இந்திரனை ஏழு சொல்லாடல்களில் விருத்திரன் வெல்கிறான். இந்திரனைவிட தவஆற்றலும் வேள்விப்பயனும் கொண்டவன் விருத்திரன் என்று தெளிகையில் விருத்திரனே இந்திரனாக அமரத்தக்கவன் என்று நாரதர் முடிவு சொல்கிறார். அதன்பொருட்டு பன்னிரண்டு ஊழிக்காலம் விருத்திரன் இந்திரனாக அமர இந்திரன் கானேகிறான்” என்றார் இளைய யாதவர்.

சேகிதானன் “விந்தையான கதை” என்றான். “வெல்பவர்களும் வீழ்பவர்களும் ஒன்றின் இருபக்கங்களே எனும் மெய்மை இதில் சொல்லப்பட்டுள்ளது” என்றார் இளைய யாதவர். சேகிதானன் அங்கு பேசப்பட்ட அனைத்துச் சொற்களும் ஒன்றுடன் ஒன்று முட்டி அசைவின்மை கொள்வதைப்போல் உணர்ந்து தலையை உலுக்கி அவ்வெண்ணங்களை அகற்றினான். பின்னர் “நான் தங்களை சந்திக்கவந்தது பிறிதொன்றின் பொருட்டும்கூட” என்றான். “மூத்தவர் சாத்யகி இன்று படைமுகம் காணவேண்டியதில்லை. பிறிதெவரும் அவ்வாணையை அவரிடம் விடுக்க இயலாது. நேற்று அந்தியில் அவரை படைமுகப்பிலிருந்து கொண்டுசெல்கையில் மெய்யாகவே எனக்குப் பின் தேர்த்தட்டில் ஒரு தழல் நின்றாடுவதாக உணர்ந்தேன்.”

“ஆம், அவன் துயர்கொண்டிருக்கிறான்” என இளைய யாதவர் எளிதாகச் சொல்லி தன் மேலாடையை எடுத்து தோளிலிட்டார். சேகிதானன் குரல் கரைய “எரிந்துகொண்டிருக்கிறார், மூதாதையே. நேற்று இரவு முழுக்க அணு அணுவென தழல் விட்டிருப்பார். அவர் இரவெல்லாம் தனக்குள் பேசிக்கொண்டு பாடிவீட்டை சுற்றிவருவதை நோக்கிக்கொண்டு அப்பால் நான் காவல் நின்றிருந்தேன். இப்பெருந்துயர்களை மானுடருக்கு அளிக்கும் தெய்வங்களை எண்ணி எண்ணி கசந்துகொண்டு எக்கணமும் வாளெடுத்து தன் சங்கில் பாய்ச்சிக்கொள்வார் என்று எண்ணினேன். அவரைத் தடுக்க விழிப்புடன் இருந்தேன்” என்றான்.

“உண்மையில் சொல்லப்போனால் அவர் இன்று செய்வதற்கு உகந்தது அதுவே. எப்படியும் சாவுதான். இந்தக் களத்திலிருந்து அவர் உயிருடன் மீண்டு சென்று எங்கு மகிழ்ந்தமைய முடியும்? ஒரு கைப்பிடி நறுநீரோ ஒரு கீற்று குளிர்தென்றலோ ஒரு மலரோ ஒரு கனியின் இனிமையோ அவருக்கு துளி மகிழ்வையேனும் ஊட்டுமா? சற்று மகிழ்ந்திருந்தாலும் உள்ளிலிருந்து எழுந்த பிறிதொன்று பிடரியில் ஓங்கி அறைந்து வீழ்த்திவிடும். இனி சாவொன்றே அவருக்கு புகல். பிறிதொன்றும் இங்கே அவருக்கு எஞ்சியிருக்கவில்லை. அச்சாவு வரும்வரை எதன் பொருட்டு இப்புவியில் இப்பெருவலியை ஏற்றுத் துடித்தபடி வாழவேண்டும்?”

“நேற்று அவர் பீஷ்ம பிதாமகரையும் பகதத்தரையும் பூரிசிரவஸையும் ஜயத்ரதரையும் நோக்கி நெஞ்சு திறந்து பாய்ந்தார். கொல்க கொல்க என்று அறைகூவினார். அவர்கள் ஒவ்வொருவரும் அவரை ஒழிந்தனர்” என்றான் சேகிதானன். யாதவர் “ஊழ் எஞ்சியிருக்கிறது போலும்” என்றார். அந்த எளிய கூற்றும் உடனிருந்த மாறாப் புன்னகையும் சேகிதானனை உளமெரியச் செய்தன. “ஊழல்ல, பீஷ்மர் அவரை கொன்றிருப்பார். கவசங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தார். பிறையம்பொன்றை எடுத்து அவர் மேல் தொடுக்க முனைந்த கணம் நான் இதோ அனைத்தும் முடிந்துவிட்டதென்று ஆறுதல்தான் கொண்டேன். ஆனால் தேர்க்கால் தடுக்கியதுபோல் அவர் சற்று பின்னடைந்தார். வில் தாழ்ந்தது. மீண்டும் வில்லைத் தூக்க அவர் முயல்வது போலவும் அவர் கை எழவில்லை என்றும் எனக்குத் தோன்றியது. அக்கணம் மழைபொழியலாயிற்று. அனைவரும் குளிர்ந்தமைய அவர்களுக்குள் எரிந்த அனல் அணைந்தது. போர் நிலைத்து படைவீரர்கள் தாங்களாகவே திரும்பிவிட்டனர். இருளாகிவிட்டதனால் அந்திமுழவுகள் ஒலிக்கலாயின” என்றான்.

இளைய யாதவர் தலையசைத்தார். “என்ன நிகழ்ந்தது என எண்ணிப்பார்த்தேன். என் உளம் சென்று தொடவில்லை. திருஷ்டத்யும்னர் இன்று அவையில் சொன்னார். பகல் முடியும் வேளை. முதியவர் நெடும்பொழுது வெறிகொண்டு போரிட்டிருக்கிறார், நமது படைகளில் பெரும்பகுதியை நேற்றும் கொன்றே அழித்திருக்கிறார், ஆகவே கைசோர்ந்திருப்பார் என்று” என்றான் சேகிதானன். “ஆம், இருக்கலாம்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால் சோர்வும் சலிப்பும் கொள்ளாதவர் அவர் என்கிறார்கள். அவர் எட்டுவசுக்கள் வாழும் உடல்” என்றான் சேகிதானன்.

இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமலிருக்க அவன் தொடர்ந்தான் “பீஷ்மர் மூத்தவர் மேல் கனிவு கொண்டாரா? அது அவர் இயல்பல்ல. அவர் இக்களத்தில் எவருக்கும் எவ்வகையிலும் உளம் கனியவில்லை.” இளைய யாதவர் “அனலின் இயல்பு அது” என்றார். “அது தன் செல்நெறியை தானே வகுத்துக்கொள்கிறது. எண்ணியிராத தருணங்களில் இயலாத இடங்களிலும் பற்றி எழுந்து தன்னை பெருக்குகிறது. மூள்க மூள்க என நாம் வெறிகொள்கையில், நெய்யும் அரக்கும் விறகும் அள்ளி அள்ளிக் குவிக்கையில் பசியழிந்து விலகிச்செல்கிறது. அனல் தன் எண்ணமென்ன என்று தானே அறியும்.”

அவர் சொல்வதென்ன என்று சேகிதானன் புரிந்துகொள்ளவில்லை. சிலகணங்கள் அவரை கூர்ந்து நோக்கியபின் “நேற்றிரவெல்லாம் நான் மூத்தவரை நோக்கிக்கொண்டிருந்தேன். சில தருணங்களில் அவராகவும் ஆகி அத்துயரிலாடினேன். அவர் நெஞ்சில் அறைந்து கதறியிருந்தால், சொல்லிச் சொல்லி புலம்பியிருந்தால், எவ்வகையிலேனும் உளம் ஆறுவார் என்று எண்ணி நிறைவுகொண்டிருப்பேன். ஏனெனில் அவை நாம் அறிந்த உளச்செயல்கள். அவை அறிந்த முடிவை சென்றடையுமென்று எண்ணலாம். அவரோ பித்தர் போலிருந்தார். மருத்துவ ஏவலரிடம் அவருக்கு அகிபீனா கொடுக்கும்படி சொன்னேன். ஏற்கெனவே நான்கு உருளைகள் உண்டுவிட்டார் என்றார் ஏவலர். உள்ளத்தில் அனல் எழுந்துவிட்டால் அகிபீனா புகையாகி மறைந்துவிடுகிறது என்றார். அது நீரில் கரைவது, நெருப்பால் அழிக்கப்படுகிறது என்றார். என்ன செய்வது என்று நான் கேட்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை. அனல் தன் இரை எரிந்து முடிந்ததும் தானும் அணைவது. அவருடைய உளவிசை அழிவது வரை காத்திருப்போம். எவரேனும் உடனிருங்கள் என்றார்” என்றான் சேகிதானன்.

இளைய யாதவர் “நன்று. நீர் கிளம்பும்போது அவன் துயின்றுகொண்டிருந்தானா?” என்றார். “இல்லை, புலரிக்கு முன்னரே கவசங்களும் படைக்கலங்களும் அணிந்து போருக்கெழுந்துவிட்டார். படைசூழ்கையை வகுக்கும் அரங்குக்கும் வந்திருந்தார். அவையில் ஒரு சொல்லும் பேசாமல் நிமிர்ந்த தலையுடன் அமர்ந்திருந்தார்” என்றான் சேகிதானன். “இன்று அவையில் யுதிஷ்டிரர் பிறிதெப்போதையும்விட உளம் தளர்ந்திருந்தார். நேற்று கௌரவர்களின் சொல்லவையில் துரியோதனர் கதறி அழுதார் என்று எவரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். படைசூழ்கையை திருஷ்டத்யும்னர் விளக்கி முடித்ததும் வேறு வினா எழுவதற்குள் அரசர் அதைத்தான் கேட்டார்.”

அவ்வினாவின் பொருத்தமின்மையை உணர்ந்த அவை ஒன்றும் சொல்லாமல் இருந்தது. “மெய்யாகவா? கதறி அழுதானா?” என்று மீண்டும் யுதிஷ்டிரர் கேட்டார். பீமசேனர் உரத்த குரலில் “ஆம், கதறி அழவைக்கவே நான் அவன் உடன்பிறந்தாரை கொன்றேன்” என்றார். “அவர் நம் உடன்பிறந்தார், மந்தா” என்றார் யுதிஷ்டிரர். பீமசேனர் கைவீசி அதை விலக்கி “நாம் நேற்றும் அவர்களை கொன்றோம். இன்றும் அவர்களை கொல்வோம். நாளையும், ஒவ்வொரு நாளும் அவர்களை கொல்வோம். மூத்தவரே, தாங்கள் அறியாததல்ல. நூற்றுவரையும் என் கைகளால் கொல்வேன் என்று நான் சூளுரைத்திருக்கிறேன். எனது சொற்களிலிருந்து எந்நிலையிலும் நான் வழுவப்போவதில்லை” என்றார்.

யுதிஷ்டிரர் துயருடன் குந்திபோஜரையும் துருபதரையும் நோக்கி “என்ன செய்வது, மூத்தவர்களே? இது எங்கு சென்று முடியும்?” என்றார். பீமசேனர் உரக்க நகைத்து “எங்கு சென்று முடியும் என்பது இப்போது தெளிவடைந்துள்ளது. அவர்கள் முற்றழிவார்கள், நாமும் மீளாப் பேரிழப்புகளை அடைவோம்” என்றார். “இளையோனே, இழப்பு என்றால் படையிழப்பும் பொருளிழப்பும் மட்டுமல்ல” என்றார் யுதிஷ்டிரர். “மைந்தர்களும் உடன்பிறப்புகளும் உற்றாரும் கூடத்தான். போரென்பது அதுதான்” என்றார் பீமசேனர். யுதிஷ்டிரர் தளர்ந்து தலையை கையால் தாங்கி அமர்ந்திருந்தார். அவையில் அமைதி நிலவியது.

பின்னர் குந்திபோஜர் “யாதவர் தரப்பிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது, ஒருவேளை அவர்கள் நம்மிடம் ஓர் அமைதிப் பேச்சுக்கு வரக்கூடும்” என்றார். அவை அமைதியாக இருந்தது. அவர் சூழ நோக்கிவிட்டு “அவ்வண்ணம் வருவார்களெனில் நாம் ஒரு பேச்சுக்கு அமர்வதொன்றும் இத்தருணத்தில் பிழையல்ல. அது எவ்வகையிலும் அரசருக்கு பெருமை சேர்ப்பதே. தன் படையழிவையும் எதிரியின் படையழிவையும் எண்ணி அமைதிக்கெழும் அரசன் அறத்தோன் என்றே கருதப்படுவான்” என்றார். யுதிஷ்டிரர் அதை ஏற்கும் முகக்குறி காட்டினார். ஆனால் அவையில் எவரும் எச்சொல்லும் எடுக்கவில்லை.

பீமசேனர் “நீங்கள் அமைதிப் பேச்சை நிகழ்த்துங்கள். அது என்னை கட்டுப்படுத்தாது. இனி என் வஞ்சினமே என்னை ஆளும். நான் காட்டாளன், இக்குடியில் எனக்கிருக்கும் அனைத்து உரிமைகளையும் கைவிடுகிறேன். ஷத்ரியன் அல்லவென்றும் வேதத்துக்கு கட்டுப்பட்டவன் அல்ல என்றும் அறிவிக்கிறேன். சென்று அந்நூற்றுவரையும் தனியாக எதிர்கொண்டு கொல்கிறேன், அன்றி சாகிறேன். உயிர்துறந்தாலும் பிறந்தெழுவேன், என் வஞ்சம் என்றுமிருக்கும்” என்றார். “மந்தா!” என்று யுதிஷ்டிரர் அழைக்க பீமசேனர் அவையிலிருந்து வெளியே சென்றார்.

“நான் ஓர் அமைதிப் பேச்சு நிகழக்கூடும் என்ற எண்ணத்தை அவ்வாறுதான் அடைந்தேன்” என்றான் சேகிதானன். இளைய யாதவர் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றார். சேகிதானன் “தாங்கள் இன்றைய அவைசூழ்கைக்கு வராதது அதனால்தானா?” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார். பின்னர் எழுந்து “செல்வோம்” என்று குடிலிலிருந்து வெளியே சென்றார். பேசவந்தவை அனைத்தும் முறிந்து நிற்பதுபோல் உணர சேகிதானன் பின்னால் வந்து “இன்று மூத்தவர் சாத்யகி போருக்கெழுவார் என்றால் அது நன்றல்ல. அகிபீனா உண்ணப்பட்டால் துயில்கொண்டே ஆகவேண்டும். இல்லையேல் அது உடலை நிலையழியச் செய்யும். அவர் இன்றைய போரில் வெற்றுடலாக சென்று நின்றிருக்கக்கூடும். நாங்கள் எவர் சொன்னாலும் கேட்கமாட்டார். தாங்கள் ஆணையிடவேண்டும்” என்றான்.

“சற்றுமுன்னர் அவனுக்கு இனி எஞ்சியிருப்பது சாவே என்றாய்?” என்றார் இளைய யாதவர். “ஆம், ஆனால்…” என்று சேகிதானன் சொல்ல அவர் மறித்து “அது களத்தில் நிகழுமென்றால் அதுவே அவனுக்கு பெருமை” என்றார். “தன் எஞ்சிய சினத்தை அவன் களத்தில் காட்டட்டும். அறிக, இங்குள எவரையும் களம் செல்லவேண்டாம் என்றோ, வஞ்சமொழிய வேண்டுமென்றோ நான் ஆணையிட மாட்டேன்! இவர்களாக விரிந்து எழுந்து போரிடுபவன் நானே. அனைத்து வஞ்சங்களும் என்னுடையவை.”

குடிலுக்கு வெளியே அவர்கள் சென்றதும் சாத்யகி முழு கவச உடலுடன் புரவியிலிருந்து இறங்கி அவர்களை நோக்கி வந்ததை சேகிதானன் கண்டான். உடல் உருவப்பட்டு கவசங்கள் அணிந்து போருக்கெழும் படைப்புரவியின் மிடுக்கும் விசையும் கொண்டிருந்தான். இளைய யாதவரின் அருகணைந்து தலைவணங்கி “ஆணைகொள்ள வந்துளேன், அரசே” என்றான். “ஆம், உன்னை நேரில் பார்க்கவேண்டுமென்று தோன்றியது” என்றார் இளைய யாதவர். “இன்று களமுகப்பில் நீ துரியோதனனை எதிர்கொள்க!” சாத்யகி “ஆணை” என தலைவணங்கினான்.

முந்தைய கட்டுரைவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018
அடுத்த கட்டுரைஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்