‘நானும்’ இயக்கம்- கடிதங்கள்

me

#me too-இயக்கம்

’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

 

மீ டூ இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருவதில் சில புரிதல்களை பகிர நினைத்து எழுதுகிறேன்.

 

1.

ஒன்று, மீ டூ இயக்கம் பெண்களால் பெண்களுக்கு நடத்தப்படும் ஓர் உரிமைசார் அரசியல் இயக்கம். பெண்கள் வீட்டிலும் பொதுஇடத்திலும் வேலையிடத்திலும் இடையூறுகள், பயம் இல்லாமல், இயல்பாக, உற்சாகமாக, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி தங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும்விதமாக இயங்குவது என்பது அவர்களது அடிப்படை உரிமை. யாரும் குனிந்து கொடுக்கவேண்டிய சலுகை அல்ல. “பாதுகாப்புணர்வு” இந்த அடிப்படை உரிமையின் மிகஅடிப்படையான ஓர் அலகு ஒன்று மட்டுமே.

 

வேலையிடத்தில் பாலியல் துன்புறுத்தல் அந்த உரிமையை வெகுவாக மட்டுப்படுத்துவது. அப்பட்டமான அதிகார ஆணவத்தால் இங்கு அந்த உரிமை தொடர்ந்து பறிக்கப்படுகிறது. மீ டூ வின் குரல்கள் இந்த அதிகார ஆணவ புத்திக்கு எதிராக எழுபவை. இந்த இயக்கத்தை கிண்டல்கள், அவதூறுகள் மூலம் முடக்கிப்பேசும் குரல்கள் எல்லாமே அதே அதிகார ஆணவச் சகதியிலிருந்து எழுபவை.

 

தவிர இங்கு பல இடங்களில் நிகழும் பாலியல் மீறல்கள் நாசூக்கானவை. வாய்வார்த்தையில் மட்டும் நிகழ்பவை, எனவே ஆதாரம் கிடையாது. அதிகாரத்தை காட்ட பயன்படுத்தப்படுபவை. ஆனால் அதுவும் இங்கு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புணர்வை, இயல்புத்தன்மையை குலைத்துவிடுகிறது. அதிகாரத்தில் இருக்கும் ஆணின் வெற்று ஆணவத்தை “சமாளிக்க” இங்கு பெண் தன்னுடைய ஆற்றலை, நேரத்தை, மனவெளியை செலவழிக்க வேண்டியுள்ளது. என் இளங்கலை கல்லூரி பேராசிரியர் ஒருவர் இவ்வகை பேச்சுக்களை விடுப்பவர். செயலில் அத்துமீறுபவர். நிராகரிப்பவர்களுடைய மேற்படிப்புக்கான சிபாரிசு கடிதங்கள்,  இறுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் போன்றவற்றை முடக்க தனக்கு அதிகாரம் உண்டென்று தன்னுடைய அறைக்கு அழைத்து பட்டும்படாமல் எச்சரிக்கையிடுபவர். புகார் கொடுக்க அமைப்புகள் இல்லை. இவ்விவகாரங்களை பற்றி வெளிபப்டையாக பேசுவதே ஒழுக்கமீறலாக கருதப்பட்டது. இது சாதுரியமாக சமாளிக்க வேண்டிய சிக்கல் என்ற புரிதல் தான் அப்போது இருந்தது. படிக்குமிடத்தில், வேலையிடத்தில் பெண் தன் ஆற்றல்களை வளர்த்தெடுத்து பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனக்குவிப்புடன் இயங்கவேண்டிய நேரத்தில், அடிப்படை பாதுகாப்பு கருதி “இவனை எப்படி சமாளிப்பது” என்று சிந்திக்கும்படி நிலைமை இருக்கலாகாது. அது உரிமை மீறல்.

 

இந்த நிகழ்வுகளை பற்றி திறந்து பேசவும், அதிகாரத்தில் உள்ளவர்கள் திட்டம்போட்டு செய்யும் இச்செயல்களை வெளிக்கு கொண்டுவரவும், பெண்கள் தங்கள் அனுபவங்களை, தங்களுக்கு இழைக்கப்பட்ட வலிகளை, நீதியுணர்வை பகிர்ந்து பொது மனசாட்சியுடன் உரையாடவும், இதை எதிர்கொள்ள திட்டங்கள், அமைப்புகள் தேவை என்று வலுவாக கோரிக்கை வைக்கவும் மீ டூ வழிவகுக்குகிறது. இதை முதலாம் அலை பெண்ணியவாதிகள் ஓட்டுரிமைக்காக போராடிய போராட்டங்களுடன் சேர்த்துவைத்து பார்க்கலாம். ஆண்கள் இதை ஒரு முக்கியமான உரிமைப்போராட்டமாக மனம்திறந்து கவனிக்க வேண்டும்.

 

2.

மீ டூ இயக்கத்துக்கு இரண்டாவது தளம் உள்ளது. அது உளவியல் சார்ந்தது. இது ஆண்களும் பெண்களும் சேர்த்து பரஸ்பரம் புரிந்துகொண்ட ஒத்துழைத்து வாழ்ந்தாகவேண்டிய சமூகம். இருவரும் மனிதர்கள்; பொதுச்சமூகத்தில் சில அடிப்படை பாதுகாப்புகள், உரிமைகள் இருவருக்கும் பொதுவானது, என்ற நம்பிக்கையின், நல்லியல்பின் அடிப்படையில் மட்டுமே உறவில்லாதவர்கள் பொதுவெளியில் நட்புடன் இயைந்து பழக முடியும். சமூக கட்டமைப்புகளும் நம்பிக்கைகளும் அதற்காகத்தான். பாலியல்ரீதியான அவமதிப்புகள் நிகழும் போது பெண் மனச்சோர்வு கொள்வது அந்த அவமதிப்பு பாலியல் ரீதியிலானது என்பதனால் மட்டும் அல்ல. அது தன்னை சுரண்ட நடக்கும் முயற்சி என்று அவளுக்குத் தெரிகிறது. தன்னுடைய நம்பிக்கையும் நல்லியல்பும் அப்பட்டமாக சூறையாடப்படுகிறது.

 

மீ டூ இயக்கத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் வேலையிடத்தில் நிகழும் பாலியல் மீறல்களை பற்றியவை மட்டும் அல்ல. தனி உறவுகளில் நடக்கும் மீறல்கள், வேலையிடத்தை தாண்டி நிகழ்பவை என்றும் பதிவுகள் வருகின்றன. ஆனால் அவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சம் male entitlement (ஆங்கில ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் சொற்றோடர்). ஆண்களின் தடித்தனமான உலகின்மீதே உரிமைகொள்ளும் நோக்கு. சுரண்டல் மனோபாவம். பாலியல் சுரண்டல் மட்டும் அல்ல. அடுத்தவரின் நேரத்தை, உழைப்பை, நம்பிக்கையை, நல்லியல்பை சுரண்டுவதும் சுரண்டல் தான். “நான் சுரண்டுவேன், ஏனென்றால் நான் ஆண், எனக்கு உரிமையுள்ளது” என்ற எண்ணம் இதற்கு பின்னால் உள்ளது. பாலியல் மீறல்களை சூறையாடும் (ப்ரிடோடர்) மனோபாவத்தோடு நிகழ்த்துபவனில் இயங்கும் அடிப்படை இயல்பு இது. இந்த மனநிலை கொண்டவர்களுக்கு அவர்கள் செய்யும் செயல் ஒரு சீண்டல். அல்லது ஒரு விளையாட்டு. புழுவை நசுக்கி பார்ப்பதுபோல. எதிரே இருப்பவர் யார் என்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (பெண்களாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை) வாழ்வியலை, உளவியலை, நல்லியல்பை பாதிக்கக்கூடிய நிகழ்வு. தன்னுடைய இருத்தல் பற்றிய அலைக்கழிப்பை உருவாக்குவது. வெகுசிலரால் மட்டுமே அந்தச்சுமையை இறக்கிவைக்க முடிகிறது.

 

இது எங்கிருந்து தொடங்குகிறது? நம் வீடுகளிலிருந்து என்று ஒரு வாதம் உள்ளது. தான் ஒரு குறுநிலமன்னன் என்ற நம்பிக்கை சிறுவயதுமுதல் நம் ஆண் குழந்தைகளுக்கு ஊட்டிவிடப்படுகிறது. “என் மகனுக்கு சுடுதண்ணிக்கூட போடத்தெரியாது” போன்ற வசனங்களை வளர்ந்த மகன்களின் அம்மாக்கள் பெருமையாக சொல்வதை கேட்டிருப்போம். மனைவியை திட்டலாம், அவள் மீது வன்மத்தை கொட்டலாம், ஏனென்றால் எனக்கு அவள் மீது உரிமை உண்டு என்ற மனோபாவம் இன்றும் நம்முடைய பொதுச்சமூக நம்பிக்கை. ஒரு தலைமுறைக்கு முன்னால் மனைவி, குழந்தைகளை அடிப்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்தது, அதுவும் ‘உரிமை’ மனநிலை. குடும்பச்சூழலில் எளியவர்களை, பால்பேதமில்லாமல், பாதிக்கிறது. குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு வழிவகுக்குகிறது.  இதே ‘உரிமை’ மனநிலை ஊதிப்பெருகி வெளியிலும் உலகத்தின்மீது, சமூகத்தின் மீது, இயற்கையின் மீது வெளிப்படுகிறது. male entitlement உடன் வளரும் அத்தனை நபர்களும் தங்கள் அதிகாரத்தைக்கொண்டு பாலியல் மீறலில் ஈடுபடுவதில்லை, ஆனால் அந்த நடத்தை தொடங்குவது இந்த மனநிலையின் ஊற்றில் தான் என்கிறது இந்த வாதம்.

 

மீ டூ வில் பெண்கள் இந்த மனநிலையை சரியாக சுட்டிக்காட்டுகிறார்கள். அவர்களுடைய சீற்றம் முக்கியமாக இந்தச் சுரண்டல் மனநிலைக்கு எதிரானதாக உள்ளது. ஒரு வகையில் இருநூறு வருடங்களாக மனிதனின் நவீனத்துவ பொருள்முதல்வாத ஆதிக்கப்போக்குக்கு எதிரான குரலும் கூட. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை எதிர்த்து, அதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் புரிதலை, நட்பை, அன்பை, கருணையை அளித்துக்கொள்ளும் கட்டமைப்புக்குள் நகர்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் அல்ல – விளிம்புநிலை மனிதர்களுக்கு, குடும்பவன்முறையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்று ‘உரிமை’க்கு எதிராக ‘கருணை’யை முன்வைக்கிறார்கள். “நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று சொல்லும்போது அந்த வட்டத்துக்குள் அணைத்துக்கொள்ளப்படுகிறார்கள். அந்த பகிர்தல் மூலம் தாங்கள் தேக்கிவைத்த வலியை கடந்து வர ஒரு கூட்டுவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள எண்ணுகிறது இந்த கட்டமைப்பு.

 

3.

மீ டூ இயக்கம் பின்நவீனத்துவ அம்சங்கள் கொண்ட நான்காம் அலை பெண்ணியத்தில் முளைத்தது. இது ஒற்றைப்படையான கருத்தியல் இயக்கமாக அல்லாமல் இணையத்தில் பொதுச்சமூகத்தில் வெவ்வேறு குரல்களை இணைத்துக்கொள்வது. இதன் அடிப்படை அறவுணர்வில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. கருத்தியலின் இறுக்கம் தளர்ந்தால் வாழ்க்கைமரத்தைப் போல விரிந்து உலகை அணைக்கும் வல்லமை கொண்டது.

 

மீ டூ இயக்கத்தின் இயங்கல் முறை மீது, நான்காம் அலை பெண்ணியத்தின் மீது எனக்கு விமர்சனங்களும் உண்டு. அதன் நகர்சார், உயர்குடி தன்மையை பற்றி. சித்தாந்த வறுமை பற்றி. கருப்புவெள்ளை சிந்தனை பற்றி. மையம் இல்லாதிருத்தலை பற்றி. இந்தியாவில் அது இயங்கும் ஒற்றைப்போக்கு விதத்தை பற்றி.  நான்காம் அலை பெண்ணியத்தின் ஒரு போக்கு ஆண்களின் ஆணாதிக்கப்பேச்சுகளை, நடத்தைகளை, பால்நிலை பகடிகளை பொதுவிடங்களில் சுட்டிக்காட்டி அது வெட்கத்துக்குரிய செயல் என்று அடிக்கோடிடுவது. நான் பார்த்தவரை இந்த போக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. “சுரண்டும்” மனநிலை கொண்டவர்களை இது எதுவும் செய்வதில்லை. நானும் முற்போக்கு என்ற போர்வையை போற்றிக்கொண்டு மேலும் சுரண்ட வருபவர்களே அதிகம்.  நல்லெண்ணம் கொண்ட பொதுமனிதர்களை அந்நியப்படுத்துகிறது. நேர்மையான உரையாடலுக்கான சாத்தியத்தை மட்டுப்படுத்துகிறது.

 

பொதுவெளியில் அப்பட்டமான ஆணாதிக்க பேச்சுக்கள், செயல்கள், பகடிகள் பொதுச்சூழலின் நல்லியல்பை குலைக்கிறது; அது பாலியல் மீறல்கள் போன்ற ‘பிரிடேட்டர்’ மனநிலைகளுக்கு செம்மையான நிலம் அமைத்து ஊக்குவிக்கிறது என்ற எண்ணத்தில் எனக்கும் உடன்பாடு தான். ஆண்களின் உரிமை கொண்டாடும் entitlement நடத்தைகள் இந்த மனநிலையின் ஊற்று. ஆனால் இந்தப்புரிதலை பொதுவெளி உரையாடல் மூலம், சுயபரிசோதனை மூலம் மட்டுமே நிகழ்த்தமுடியும் என்று நினைக்கிறேன். மாற்றம் நிகழ்ந்தால் மனதளவில் நடக்க வேண்டும். தன்னை அவமானபப்டுத்துவார்கள், அல்லது தண்டனை உண்டு  என்று பயந்து நிகழும் மாற்றம் மாற்றமே அல்ல.

 

பெண்ணியவாதிகள் ஒரு சாரார் சொல்வதுபோல் பால் பாகுபாடு முழுக்க முழுக்க சமூகத்தால் வடிவமைக்கப்படுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நம்முடைய உயிரியல் அடிப்படைகள் எளிதாக கடந்துசெல்லக்கூடியவை கிடையாது. இதை கணக்கில் கொள்ளாமல் இச்சிக்கல்களுக்கு விடைகளை பற்றி யோசிப்பது பிழை. அதே நேரத்தில் அடிப்படை உயிரியல் விசைகளுக்கு நாம் முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்னும் deterministic வாதத்தையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. மனிதன் என்ற மகத்தான மிருகம் மட்டும் தான் போரை விளையாட்டாகவும் காமத்தை கலையாகவும் அச்சத்தை ஞானமாகவும் உன்னதமாக்கி வசப்படுத்திய வரலாறு கொண்டது. வேறு எந்த மிருகமும் தன் மனஓட்டங்களை தானே கவனித்துக்கொள்ளும் வல்லமை கொண்டதல்ல. ஆகவே, அவன் ஆண், அவன் ஆல்பா, அப்படித்தான் இருப்பான் என்று சொல்வது ஒரு வகையில் அவனுக்கு மீட்பே இல்லை என்று சொல்வது தான். sociopath-கள் சிலர் இருக்கலாம். ஆனால் ‘வட்டத்துக்கு வெளியே காலை வைத்தால் இன்னும் இரண்டு அடி கிடைக்கும் என்ற பயம் இருந்தால் ஒழுங்காக இருப்பான்’ என்ற அளவுக்குக்குறைத்துவிடக்கூடிய எளிய மிருகமா சராசரி மனிதன்? இப்படி சொல்வதால் ஆண் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்த வாதத்தை  ஏற்றுக்கொண்டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது தொடர்பான மேலும் உரையாடல் சாத்தியமே இல்லை. இத்தனை வருடங்கள் பெண்ணை அவள் பாதுகாப்புக்காக வீட்டுக்குள் பூட்டிவைத்தது போல் இனி ஆணை பூட்டிவைக்கவேண்டும் என்ற முடிவுக்குத்தான் வருவோம். ஆனால் அதில் என்ன மானுடம் உள்ளது? அரசியல்சார் சட்ட, நிர்வாக மாற்றல்கள் முக்கியம் தான். ஆனால் நீண்டகால மாற்றத்தைக்கொண்டுவரப்போவது நேர்மையான நல்லியல்புகொண்ட உரையாடலும் சுயபரிசோதனையும் மட்டுமே என்ற புரிதலில் இருக்கிறேன். மீ டூ அதற்கு வழிவகுக்குமென்றால் நல்லது.

 

மீ டூ இயக்கத்தின் செயல்பாடை ஒட்டி ஏ.வி.மணிகண்டன் அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மிகவும் பொருள்படுகிறது. குறிப்பாக இவர் லூயிஸ் பூர்ஷுவா என்ற சிற்பக்கலைஞர், டட்லின் கோபுரம் என்ற நிறைவேறாத சோவியத் ருஷ்ய கட்டிடத்தை நிறுத்தற்கலையாக மறுஉருவாக்கம் செய்ததை பற்றி எழுதியிருக்கிறார். டட்லின் கோபுரம் “சுழன்று மேலெழுந்து வானை நோக்கி உயர்த்திய முஷ்டியைப் போன்ற ஆண் மையத் தன்மை கொண்ட கட்டட வடிவம்”. ஆனால் பூர்ஷுவாவின் சிற்பத்தில் “சுழன்று சுழன்று செல்லும் படிகளின் உச்சத்தில் இருப்பது கீழ் நோக்கிய ஆடிகளே, அந்த ஆடிகளும் distortion mirrors என்பதால் அவ்வளவு உயரத்தில் ஏறி ஒருவர் அடைவது வெவ்வேறாக சிதைக்கப்பட்ட தன் சித்திரத்தையே.” இந்த விவரணை மீ டூ இயக்கத்தின் மிகச்சிறந்த படிமமாக எனக்குத் தோன்றியது. மீ டூ சொல்பவர்கள் பதிவுகளாக சமூகத்தை நோக்கி வைப்பது ஆளுக்கொரு கண்ணாடியை.

 

நன்றி,

சுசித்ரா

ஜெ வணக்கம்

 

அக்பர் மீதான #MeToo குற்றசாட்டுக்களினால், பதவியிலிருந்து விடுவிக்கபடுவார் என்று பார்த்தால். பதவியில் இருந்துக் கொண்டு, ஒரு தனி பெண்மணி மீது பெரிய சட்ட நிறுவனத்தின் வாயிலாக மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறார். வக்காலத்தில் 100 வழக்கறிஞர்களின் பெயர்கள். என்ன ஒரு அருவருக்கதக்க “optics”.

 

ஒன்றல்ல, 14 பெண்கள், ஒரு பெண்மணி வெளிநாட்டவர். தன் கீழே வேலை பார்ப்பவர்களிடம் கேவலமாக நடந்துவிட்டு இப்பொழுது அவர்கள் தங்கள் அநுபவங்களை பகிர்ந்துக் கொண்டால், மான நஷ்ட வழக்கு. 14 பெண்மணிகளும் பொய் சொல்ல கூடிய ” probability ” என்ன.

 

குறியீட்டு ரீதியாக என்ன ஒரு தாக்குதல், எப்பேர்பட்ட “message” வேலைக்கு செல்லும் பெண்களுக்கு. ஒரு ” மயிறும்” புடுங்க முடியாது என்ற “message”

 

நண்பர்களிடம் WhatsAppல் இதை பேசும் பொழுது, கிட்டதட்ட 50 சதவீதம் பேர் தங்களுக்கும் பாலியில் மீறல் நடந்ததாகவும், சம்பவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள். இது ஆண்களினால் குழுமம். ஒவ்வொரு நிகழ்வை படிக்கையிலும் என்னுள் ஏதோ சிறிது மடிந்து விட்டது போன்று உணர்வு.

 

சின்மயி போன்றவர்கள் அனானியாக தாங்கள் சற்றுமே அறியாத வேறு ஒரு நபரின் அநுபங்களை பகிர்வது எப்பேர்பட்ட உணர்ச்சி ரீதியான வலி. எனது ஆண் நண்பர்களினாலேயே, இவ்வளவு நாட்களாக பகிர்ந்து கொள்ள முடியாததை தயக்கத்துடனே சொல்ல முடிகிறது. அதவும் மேலோட்டமாக தான். அப்படியானால் இந்திய சூழலிலிருந்து வரும் பெண்களுக்கு ஒரு வட்டத்திற்கு வெளியே, ஒரு பொது உலகத்திற்கு சொல்வது என்பது எப்படியான அவஸ்த்தை.

 

என்னதான் சித்தாந்த ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு பெண்மணி தான் பாலியில் கொடுமைக்கு ஆளானவள் என்று போகிற போக்கில் சொல்லக் கூடியவள் (அதுவும் 14 பெண்கள்) என்று நம்ப கூடிய அரசியல் தலைமைதான் கடைசியில்தான் நம்முடைய விதியா? காங்கிரஸமும்தான் அடக்கம். சம்பவம் நடந்த கால நேரத்தில் அக்பர் காங்கிரஸ் ஆதரவாளர்.

 

நீதி மன்றமும் இம்மாதிரி வழக்குகளில், வேறு மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்ன மாதிரியான ஆதாரங்களை காட்ட முடியும். இவை அனைத்து “he says, she says”  வகையாராக்கள். “In camera” மூலம் பெண்மணிகளின் வாக்குமூலங்களை எடுத்துக்கொண்டு, “balance of probability” மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல் முறையீடு சென்றால் முதல் கொடுத்த வாக்குமூலத்தைக் கொண்டே விசாரிக்க வேண்டும். திரும்பவும் வாக்குமூலம் என்று அலைகளிக்க கூடாது.

 

“பேட்டி பச்சாவ்”.  (பெண் குழந்தைகள் காப்பாற்றுங்கள்) என்று கோஷம், ஆனால் பதவி விலகுங்கள் என்று சிறு அமைச்சரிடம் கூற முடியவில்லை.

 

பெண் குழந்தைகளை யாரிடம் இருந்து காப்பாற்றுவது என்று புரியவில்லை. இராமர் கோயில் கட்டுவதற்கு பதிலாக அக்னி்குண்டம் கட்டலாம். பெண்கள் தீக்குளித்து நிருபிக்கட்டும்.

 

கடைசி நம்பிக்கை உடைந்த வருத்ததுடன்

 

சதீஷ்குமார் கணேசன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-40
அடுத்த கட்டுரைகெடிலமும் சுந்தர சண்முகனாரும்