தகர முரசு-கடிதங்கள்

ஜெ,

கல்கத்தா பற்றி நீங்கள் [தகர முரசு ] சொல்வது உண்மை. மற்ற இடங்களில் மட்டும் என்ன வாழ்கிறது? இத்தனை வருடங்கள் கழித்து கிராஸின் அதே கருத்தை வேறு மொழியில் வேறு வகையில் சொல்லும் ஸ்லம்டாக் படத்தை இந்தியா முழுவதும் கொண்டாடியது. அதன் இசையமைப்பாளருக்கு ’உலக அங்கீகாரம்’ கிடைத்ததில் நாடே புளகாங்கிதம் அடைந்தது.

மலத்தை காமிராவில் பதிவு செய்து உலகெங்கும் முரசறைபவர்களுக்கு இங்கே புகழ்மாலை. ஆனால் பொதுக் கழிப்பிடங்களை ஒரு மக்கள் இயக்கமாக வைத்து நடத்தும் பிடேஷ்வர் பாடக்குக்கோ (”சுலப்” அமைப்பு நிறுவனர்) மற்ற கிராமசேவை அமைப்புகளுக்கோ ஊக்கமும் பாராட்டும் எதுவும் கிடையாது.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

நன்றி

இந்தியாவின் வறுமையும் மிடிமையும் என்றும் நம் பேசுபொருட்களே. ஆனால் அதன் காரணங்களை நோக்கி எவரது கண்கள் செல்கின்றனவோ, வரலாற்று நோக்குடன் ஆராய்கின்றனவோ, அந்த இழிவிலிருந்து மீளும் நோக்கம் கொண்டுள்ளனவோ அவர்களே முக்கியமானவர்கள்.

ஆனால் இங்கே இந்திய வெறுப்பு பிரச்சாரத்தின் கருவியாகவே அத்தகைய பேச்சுகள் பெரும்பாலும் உள்ளன

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

தகர முரசு மிகவும் சிறப்பான சந்திப்பின் பகிர்தல், முற்றிலும் இந்திய நோக்கு கொண்ட உங்கள் பார்வை உங்கள் மேல் கொண்ட மரியாதையை அதிகரிக்கிறது, சமுகத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கள் அன்றாட எளிய தேவைகளுக்கு வாழ்க்கையோடு போராடும்போது அதே சமுகத்தின் வேறுநிலையில் உள்ளவர்கள் உயர்கலையும் இலக்கியங்களையும்
படைப்பது சரியெனில், இதே சிந்தனையை நம் நடுத்தர குடும்ப அமைப்பிற்கும் பொருத்தி தனது குடும்பத்தின் வறுமையிலும் படிப்பறிவு பெற்று குடும்பத்தின் முக்கியமான பொருளீட்ட வண்டிய கட்டாயத்தில் உள்ளவர் தனது அறிவையும் நேரத்தையும் கலைகளில் செலவழிப்பது சரியா?

நம் இந்திய குடும்பங்களின் சிறப்பே தன்னை ஆளாக்கிய குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல முயலும் பொருளியல் நோக்கம் கொண்டஉழைப்பு என்று ப்ளுமிங்க்டன் தமிழ் சங்கத்தில் நீங்கள் ஆற்றிய சிறப்பான உரையில் படித்திருக்கிறேன். அதனால் தான் இந்த ஐயம்?

நன்றி

அன்புடன்
கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

உங்கள் நோக்கில் ஒரு குடும்பத்தின் மூத்தமகன், பொறுப்பான மகன், கதைகளை எழுதக்கூடாது, இசையில் ஈடுபடக்கூடாது, புத்தகம் வாசிக்கக்கூடாது, இரவுபகலாக தன் குடும்பத்துக்காக மட்டும் உழைக்க வேண்டும் – இல்லையா? அப்படியானால் லா.ச.ராவும், அசோகமித்திரனும் நாஞ்சில்நாடனும் எழுதியது தவறு அப்படித்தானே. ஒரு கடிதம் எழுதும் முன் அதை விரிவாக யோசிக்கலாமில்லையா?

கலை இலக்கியங்களை ஒருவகை போகங்கள் என்று மட்டும் பார்க்கும் ஒரு பார்வையை நம் கல்விமுறை அளிக்கிறது. அதை ஒரு பாமரப்பார்வை என்றே சொல்வேன். ஆகவேதான் குடும்பம் கஷ்டப்படும்போது என்ன இலக்கியம் , நாடு பிரச்சினையில் இருக்கையில் எதற்கு இலக்கியம் என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன

கலையிலக்கியங்கள் ஒரு சமூகத்தின் சிந்தனையை, தன்னுணர்ச்சியை வளர்ப்பவை. அச்சமூகம் தன் வறுமையையும் மிடிமையையும் வெல்லவேண்டுமென்றால் அது கலையிலக்கியங்களை நாடியே ஆகவேண்டும். அதைத்தான் அக்கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

தகர முரசு சிறந்த கட்டுரை. பதினெட்டாம்நூற்றாண்டில்கூட ஜெர்மனியில் மக்கள் தங்கள் கழிவுகளை வீட்டுமுற்றத்தில் வீசிக்கொண்டிருந்தார்கள். கழிவகற்றும் அமைப்புகள் இருக்கவில்லை.

சேதுபதி அருணாச்சலம்

அன்புள்ள சேதுபதி,

நன்றி

ஒரு பிரிட்டானிய நண்பர் கூவம் கழிவுமிகுந்து ஓடுவதைப்பற்றி ஏளனமாக ஒருமுறை சொன்னார். நான் தேம்ஸ் நதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என அவருக்குச் சொன்னேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்கூட தேம்ஸில் நேரடியாக லண்டன் மாநகரின் மொத்த மலமும் வந்து கொட்டிக்கொண்டிருந்தது. வீடுகளில் இருந்து மரக்குழாய்கள் மூலம் நேரடியாக வந்து சேரும்.

’நாங்கள் ஐரோப்பாவை ஆதிக்கம் செய்து சுரண்டி அந்தபப்ணத்தில் சிறந்த கழிவகற்றும் வசதிகளைசெய்து கூவத்தை தெளிநீராக்கிய பின் உங்கள் கேள்விக்கு பதில்சொல்கிறேன்’ என்றேன்

ஜெ

அன்பின் ஜெமோ

குந்தர் கிராஸ் பற்றிய பதிவு உண்மையில் பொதுவான ஐரோப்பிய மனநிலை.நான் கடந்த 20 வருடங்களாக குளிர் தேசம் வதிபவன் எனது குழந்தைகள் இங்கே பிறந்தவர்கள்.இரட்டை கலாச்சாரம். இரண்டு மொழி. பிள்ளைகள் தமது தாய்மொழி தமிழ் இல்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.இத்தனைக்கும் வீட்டில் தமிழ் தான் கதைப்பது.எனது பிறந்த ஊர செல்ல குடுத்து வைக்கவில்லை என்பதால் இந்தியாவை காட்ட விரும்பினேன்.சென்ற வருடம் புது டில்லி வழியாக தமிழகம் வந்தோம்.இங்கேதான் உங்களது வலிய வாசகம் என்னை மீண்டும் இந்தியா ஞாபகத்தை நோண்டியது.ஐரோப்பியர்கள் மட்டுமல்ல எனது இரு மகள்களும் மலத்தின் மூலமே எதயும் அறிந்தனர்.எனக்கு கையறு நிலை.எதிர்வாதம் எடுபடுமா?அதை தவிர்த்து இந்தியா பெருமை பற்றி எதை சொனாலும் தோளை குலுக்குவதில் முடிந்தது.

எனக்கு இந்தியா ஆதர்சமானது.அதன்மீதான ஆர்வமும் காதலும் மாறாதது.நான் சொல்ல வந்தது அதுவல்ல.இந்தியா இலங்கை பற்றிய ஐரோப்பிய மனநிலை பற்றி.ஒரு 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் வீட்டுக்கு வெளியே மலசல கூடம் அமைத்து அல்லது சிறிய பாத்திரத்தில் அலுவல் முடித்து வந்தவர்கள் (இது உங்கள் செந்நாய்கதையில் வரும் ) .ஆனால் வேகமான மாற்றங்கள் வந்து பழசு மறந்து போனது.அங்கே மாடு தெருவில் திரிவது புதினம் இங்கே குள்ளநரி லண்டனில் தெருவில் திரிவது சாதாரணமாக படும்.அவர்கள் தங்கள் பொதுப் புத்தியில் இருந்து பார்ப்பது.அது மேலிருந்து கீழே பார்ப்பது.நாங்கள் தலைக்கீழ்.அண்ணாந்து பார்ப்பதும் கன்னத்தில் போடுவதும்.என்ன செய்ய .

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஏன் இலவசமாக மண்வெட்டி குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தரக் கூடாது? கலஞரிடம் பரித்துரைக்க யாருளர்? ஏனெனில் பார்வையில் இருந்தாவது மலம் மறையட்டும்.என்னதான் தீராக்காதலுடன் இருப்பினும் நல்ல தருணங்களை மலம் கொன்றுவிடுவது உண்மை.
ஏதோ தோன்றியதை எழுதிஉளேன்.குறை பொறுக்கவும்.நீங்கள் எழுதி நான் வழி மொழிய என்ன கொடுமை சார் இது?

அன்புடன்
வி. பாலா

அன்புள்ள பாலா

உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன். எனக்கே இருமாதம் அமெரிக்காவில் இருந்து வந்தபோது பல சென்னைத்தெருக்களில் கால் கூசியது.

சுகாதார போதம் என்பது முழுக்க முழுக்க பண்பாடு சார்ந்த பிரச்சினை என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதில் பொருளியல்காரணிகள் இல்லை என்று எண்ணியிருந்தேன். அப்படி அல்ல என்றுதான் சமீபத்திய மாற்றங்கள் காட்டுகின்றன. குமரிமாவட்டத்தின் கிராமங்களில் இன்று எழுபதுகளில் இருந்த வறுமை இல்லை. கொஞ்சம் வறுமை மறையும்போது சுகாதார உணர்ச்சி இயல்பிலேயே வந்துவிடுகிறது. சென்றவருடங்களில் முழுச்சுகாதாரத்துக்கான தேசிய விருதுக்களை பெற்றவை குமரி மாவட்டக் கிராமங்கள்தான்

உலகை முழுக்க காலனியாக்கி சுரண்டி சேர்த்த பணத்தைக்கொண்டு தங்கள் நகரங்களை வசதியாக மறுகட்டுமானம் செய்துகொண்ட ஐரோப்பியநாடுகள்தான் இன்றுநாம் காணும் சிறந்த சுகாதார வசதிகளை அடைந்தன. அப்படி நாம் கல்கத்தாவையும் சென்னையையும் மறுகட்டுமானம் செய்ய எவ்வளவு செல்வம் தேவைப்படும். யாரையும் சுரண்டாமல் நாம் அதை அடைய எவ்வளவுதூரம் செல்லவேண்டும்!

ஆனால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இல்லாமல் இது சாத்தியமில்லை. வெறுமே கக்கூஸ் கட்டுவதில் இது முடிவதில்லை. கக்கூஸை விட மோசமான வீடுகளில் வசிக்கும் மக்களிடம், சாக்கடைக்குள் குடிசை கட்டியிருப்பவர்களிடம், கழிப்பறைச்சுகாதாரத்தை கற்பிக்க முடியுமா என்ன? ஆகவேதான் அரசு குடிசைகளுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுத்தாலும் பயன் ஏற்படுவதில்லை

அத்தனைக்கும் அப்பால் சில மனப்பழக்கங்கள் உண்டு. கன்யாகுமரியை அசுத்தப்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் பிரச்சினை அது. அவர்களுக்கு சமூகதண்டனை மூலமே சுத்தம் சம்பந்தமான ஒழுக்கத்தை கற்பிக்க முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைபொங்கல்காலையில்
அடுத்த கட்டுரைபிரம்மானந்தன்