ராஜாஜி ஒரு கடிதம்

 

மபொசி,காமராஜ், ராஜாஜி..

ராஜாஜியின் பொருளியல்கொள்கைகள்

ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?

 

வணக்கம். இன்று தான் ராஜாஜியின் குலக்கல்வி பற்றிய உங்கள் 27.12.2010 பதிலைப் பார்த்தேன். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். காமராஜரின் மதிய உணவுத்திட்டம் அமலுக்கு வருவதற்கு முன் ஆசிரியப் பணியில் சேர்ந்தவன் என்ற முறையில் என் கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் வேலை பார்த்தது அரசு மானியம் பெறும் ஒரு தனியார் நடுநிலைப் பள்ளி. மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் – அதாவது, ஆண்டு இறுதியில் சராசரி மாணவர் வருகையை 20 ஆல் வகுத்து வரும் எண்ணிக்கையில் தான் அங்கு ஆசிரியர்களுக்கு சம்பளமும் அதன் அடிப்படையில் தான் மேனேஜ்மெண்ட் கிராண்ட் எனப்படும் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

எங்கள் பள்ளி நிர்வாகியின் உத்தரவுப்படி தினமும் காலையில் பள்ளி துவங்க ஒரு மணி நேரம் முன்பே மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் வேண்டிக் கொள்வோம். பள்ளிக்கு வந்தால் மிட்டாய் கொடுப்பதாக அறிவித்துக் குழந்தைகளுக்கு ஆசை காட்டுவோம். எங்களைக் கண்டாலே பிள்ளை பிடிக்க வருகிறார் என்று சொல்லிக் குழந்தைகள் பதுங்கியதும் உண்டு.

இப்பொழுது இருப்பது போலப் பெற்றோர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு இருக்கவில்லை. ஆமாம் என் பிள்ளை படிச்சு என்னத்தைக் கிழிக்கப் போகிறான்? மாட்டைக் கீட்டை மேய்ச்சாலாவது கால் வயித்துக் கஞ்சியாவது கிடைக்கும் என்று பெற்றோர்கள் சொல்வார்கள். கடலை பிடுங்கும சீசனாக இருந்தால் 4 வயதுப் பையன் கூட வேலை செய்து அரைப்படிக் கடலை சம்பாதித்து விடுவான். குடும்பக் கட்டுப் பாடு அறியாத காலம். பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போனால் தம்பி தங்கைகளை 5 வயது அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுப் போவார்கள். இந்த சூழ்நிலையில் கல்வியின் அவசியம் பற்றி ஆசிரியர்கள் சொல்லும் எந்த வாதத்தையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

இத்தகைய நிலையில் சிறிது நேரம் தான் கல்வி என்பது பெற்றோர்களைச் சிறிது இளக வைத்தது. மதிய உணவுத் திட்டமும் அவர்களுக்கு மேலும் ஊக்கம் அளித்தது.

அப்பொழுது எங்கள் நிர்வாகி ஒரு வகையான மதிய உணவுத் திட்டத்தை அமல் படுத்தினார். உணவில்லாமல் பள்ளியில் சோர்வாக இருக்கும் மாணவர்களை அழைத்து அவர்கள் கையில் ஒரு ஒரு அணா கொடுத்து காராபூந்தி வாங்கிச் சாப்பிடு என்பார். அல்லது தன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார்.

என்னுடைய 61 ரூ சம்பளத்தில் மாதம் 10 ரூபாய் பிடித்தம் செய்து கொள்வார். இது பற்றி எனக்கு அவரிடம் வருத்தம் தான். அரசாங்கம் எனக்காகக் கொடுக்கும் சம்பளத்தை இவர் எப்படிச் சட்ட விரோதமாகப் பறித்துக் கொள்ளலாம் என்று நாங்கள் ஆசிரியர் கூட்டங்களில் காரசாரமாகப் பேசுவோம்.

பிற்காலத்தில் நினைத்துப் பார்க்கும் போது என் தவறை உணர்ந்தேன். எங்களிடம் பிடுங்கி, இல்லாத மாணவர்களுக்கு உணவளித்து கல்வி பரவ அவர் செய்த சேவையை நினைத்து இப்பொழுது அவரை மிக உயர்வாக மதிக்கிறேன்.

S.Kothandaraman

அன்புள்ள கோதண்டராமன் அவர்களுக்கு

உங்கள் கடிதம் கண்டேன். கிட்டத்தட்ட உங்கள் குரலையே பலர் சொல்லியிருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் சிக்கல்களில் ஒன்று. ஒரு நல்ல தலைவன் மக்களுக்கு பிடிக்காத பலவற்றைச் செய்தாகவேண்டும். அப்படிச் செய்ய ஆரம்பித்தால் அவன் பிரபலத்தை இழந்து அம்மக்களால் வெறுக்கப்படுவான். மக்கள் விரும்புவனவற்றை செய்பவன் கொண்டாடப்படுவான். இன்றுகூட இலவசங்கள் போன்றவற்றை நிறுத்தி உண்மையான கட்டுமானச்செயல்களை செய்யும் அரசு நமக்கு தேவை. ஆனால் அப்படிச் செய்யும் அரசு மக்களால் கவிழ்க்கப்படும்.

ராஜாஜி சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலத்தில் இருந்தவர். மக்களின் இச்சையை ஒட்டி அரசியல் செய்ய அவர் அறிந்திருக்கவில்லை

ஜெ

 

ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்

குலக்கல்வி,கலைகள்-கடிதம்

ராஜாஜி,மபொசி_ கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைமாவோயிசம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிரம்மானந்தன் கடிதம்