கட்டண உரை- கடிதம்

je

 

கட்டண உரை-அறிவிப்பு

கட்டண உரை –ஓர் எண்ணம்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

 

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் இருநாள் பெருவிழாவாக நடத்தி வருகிறீர்கள். வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் தங்கி நிகழ்ச்சியில் ஆர்வத்தோடும் அறிவு வேட்கையோடும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 200 பேரைத் தாண்டுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கை கூடி வருவதும் நன்மாறுதலே. எல்லாருக்கும் விருந்துணவு, தங்குமிடங்கள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் செய்து வருகிறீர்கள். ஆனால் அதற்காக யாரிடத்திலிருந்தும் சிறுதொகையைக்கூடப் பெறுவதில்லை. செலவுகள் கூடுவதால் தற்போது பணம்படைத்தவர்களிடமிருந்து மட்டும் நன்கொடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆனால் நிகழ்வில் கலந்துகொள்ள எந்தச் செலவையும் பங்கேற்பாளரிடம் திணிப்பதில்லை. நவீன இலக்கியம் பரவ வேண்டும் என்றும் மூத்த மற்றும் இளைய படைப்பாளிகள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிறமொழிப் படைப்பாளிகளின் உறவுப்பாலம் வலுப்பட வேண்டும் என்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் செவ்விய முறையில் செயல்பட்டு வருகிறது. வேறு எந்த எழுத்தாளரும் இதுபோன்று அமைப்பை நிறுவி இலக்கியம் செழிக்க முயலவில்லை.

இந்நிலையில் இலக்கிய உரை கேட்கக் கட்டணம் விதிக்கும் எண்ணத்துக்கு வந்துள்ளீர்கள்.

தமிழகத்தில் இலக்கிய அமைப்புகள் நடத்துபவர்கள் ஆர்வத்தின் காரணமாகச் சொந்தப் பணத்தைச் செலவழிக்கிறார்கள். ஆனாலும் போதுமான கூட்டம் வராததால் சலிப்படைகிறார்கள். தொடர்ந்து செலவு செய்து இழப்படைவதால் நிகழ்ச்சி நடத்துவதையே நிறுத்தி விடுகிறார்கள்.

அதே நேரத்தில் தமிழகத்தில் இலக்கியவாதிகளாக… தமிழறிஞர்களாக வலம்வரும் பலரும் உரையாற்றப் பல்லாயிரக் கணக்கில் ஊதியம் கேட்கிறார்கள். இந்தத் தொகையை ஊரில் உள்ள பணவேந்தர்களிடம் நன்கொடையாகப் பெற்றுச் சில அமைப்புகள் வழங்குகின்றன.

சில தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எனஉரைத்து, புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர்களின் குழுவை வரவழைத்து, நிகழ்வை நடத்திப் பணவேட்டையாடுபவர்கள் உண்டு. இவர்கள் இலக்கியத்தையோ அறிவையோ வளர்ப்பவர்கள் இல்லை.

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க. சார்பில் கட்டணம் செலுத்தி உரைகேட்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.          க. சுப்பு, துரைமுருகன், ரகுமான்கான் ஆகியோர் உரையாற்றினர்.  .

ஒரு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்த மாநாடுகள் இருநாட்கள் நடக்கும். அதற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநாட்டு நிறைவின் போது நுழைவுக்கட்டணத்தின் மூலம் வசூலான தொகை விவரத்தை அறிவிப்பார்கள். பின்னர் காலப் போக்கில் இரண்டாம் நாளன்று இறுதியில் கலைஞர் பேசுகிற போது மட்டும் நுழைவுவாயிலை அனைவருக்கும் இலவசமாகத் திறந்துவிடுவார்கள். அந்த நேரத்தில்தான் மாநாட்டுப் பந்தலில் அதிகக் கூட்டம் அலைமோதும்.

தெருக்களில் திடல்களில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு என் சிறுவயதில் சென்றிருக்கிறேன். சிறப்புப் பேச்சாளர் பேசுவதற்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிடுவார்கள். “நம் கழகத் தோழர்கள் பாண்டியன், பெருமாள், தங்கராசு ஆகியோர் துண்டேந்தி வருகிறார்கள். தங்களால் இயன்ற பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்பார்கள். அந்தத் தோழர்கள் துண்டை முழங்கைகளில் விரித்தபடி கூட்டத்தில் நுழைந்து வருவார்கள். காசோ ரூபாயோ போடுவார்கள். அந்தத் தொகையும்  அதே கூட்டத்தின் நன்றியுரையின் போது அறிவிக்கப்படும். இந்தத் தொகை எல்லாம் கூட்டச் செலவைச் சரிகட்டுவதற்காகத்தான்.

தற்காலத்தில் அரசியல் கூட்டம் நடத்துபவர்கள் பெருந்தொழிலதிபர்களிடம் நிதிபெற்றுவிடுகிறார்கள். அரசியல்வாதிகளே கோடீஸ்வரர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே கூட்டத்தில் பணம் வசூலிப்பதில்லை. ஆனாலும் அரசியல் உரைகேட்க மக்கள் வருவதில்லை. மாறாக கூட்டத்துக்கு ஆள்சேர்க்கச் செலவழிக்கிறார்கள். ஆள்ஒருவருக்கு ஐநூறு ரூபாயும் மதுப்புட்டியும் தருகிறார்கள். கூலி வாங்கிக் கொண்டாடுவதற்காகவே அத்தகைய அரசியல் கூட்டத்துக்கு ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வருகிறார்கள்.

எழுத்தாளர் வளவ. துரையன் அவர்கள் கடலூரில் இலக்கியச் சோலை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதுவரை 180 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்துக்கு இருபதுபேர் வருவார்கள். நிகழ்ச்சியின் ஊடே வருகையாளர் கையொப்பப் பதிவேட்டைச் சுற்றுக்கு விடுவார். அதில் முதல் கையொப்பம் இடுபவர், இருபது ரூபாய் அல்லது ஐம்பது ரூபாய் நன்கொடை எழுதித் அந்தத் தொகையை அந்தப் பதிவேட்டில் வைத்துவிடுவார். அதன்பின் கையெழுத்து இடுவோர் ஒவ்வொருவரும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் மொய் வைக்க வேண்டிய வழக்கம் உருவானது. அவர் யாரையும் நிதியளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. எனினும் பலர் பார்க்கும் அந்தப் பதிவேட்டில் நிதி வழங்காவிட்டால் மதிப்புக்குறைவாகிவிடுமோ என்று எண்ணினார்கள். அது குறித்து இலக்கிய அன்பர்கள் குறைகூறினர். கூட்ட வருகையும் குறைந்து போனது. தற்போது வருகையாளரிடமிருந்து அவர் நிதி பெறுவதி்ல்லை.

அதேபோல் கவிஞர் கனிமொழி.ஜி மற்றும் கவிஞர் யாழி அவர்கள் இணைந்து ஆம்பல் இலக்கியக் கூடல் அமைப்பை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் ரூபாய் செலவழித்துக் குளிர்கூடத்தில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். வெளியூர் பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு தங்குவதற்கு குளிர்அறைகள் ஏற்பாடுகள் உண்டு. நிகழ்ச்சி நிறைவின்போது அனைவருக்கும் “என்றும் நாவிலும் நினைவிலும் நிற்கும்” அசைவ உணவு பரிமாறுகிறார்கள். ஆனாலும் ஆறுதல்தரும் அளவுக்குக் கூடக் கூட்டம் வருவதில்லை.

ஒவ்வோர் நகரத்திலும் ஏராளமான தமிழாசிரியர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், உள்ளனர். எவ்வளவுதான் சிறப்பான நிகழ்ச்சி என்றாலும் அவர்களில் ஓரிருவரைத் தவிர யாரும் அத்தகைய தமிழ்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. தமிழ்அமைப்புகளும் குழுக்கண்ணோட்டத்துடன் ஆங்காங்கே செயல்படுகின்றன. ஒவ்வோர் ஊரிலும் இலக்கிய ஆர்வலர்கள் எனக் கொஞ்சம்பேர்தான் உள்ளனர். அவர்களுக்குள்ளும் பல குழுக்கள். ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடுத்தவோர் அமைப்பினர் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிக்குச் செல்வதில்லை. கூட்டத்துக்குப் பத்துப்பேராவது சேரட்டும் என எதிர்பார்த்துக் குறித்த நேரத்தைத் தாண்டியும் நிகழ்ச்சியைத் தொடங்காமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அரங்கமும் காத்தாடிக்கொண்டிருக்கிறது.

தற்காலத்தில் கூட்டச் செலவு கூடிவிட்டது. ஒரு பேச்சாளர் தன்பேச்சின் முன்தயாரிப்புப் பணிக்காகப் பலநாட்கள் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கு மதிப்பூதியம் அளிப்பது சமூகத்தின் கடமை. எழுத்தாளர்களின் எழுத்தோவியங்களுக்குச் சன்மானம் கிடைப்பதில்லை. எழுத்தாளர்களின் உரையைக் கட்டணம் செலுத்திக் கேட்க இந்தச் சமூகம் தயாரா என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள் பலகாலம் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய அறிவார்ந்த புத்தகங்களை வெளியிடப் பதிப்பகங்களுக்குப் பணம்தர வேண்டியதாகிறது.  தாங்கள் அறம் சிறுகதையில் சொன்னதுபோல் ராயல்டி என்பது கெட்ட வார்த்தை ஆகிவிட்டது.

கோமாளிச் சேட்டைகள் நிறைந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் கட்டணம் கொடுத்து உரைகேட்க வரலாம்.  அதற்கும்கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்ஐசி முகவர்கள் போல வீட்டுப்படியேறியும் அலுவலகப் படியேறியும் புன்னகையை முகத்தில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டும் பதமாகப் பேசியும் நுழைவுச் சீட்டை விற்க வேண்டும்.

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் காந்தி பற்றிய தங்கள் உரையையும் கடந்த மேமாதம் புதுச்சேரி கம்பன் கழகத்தில் தாங்கள் ஆற்றிய உரையையும் நேரில் கேட்டு நான் வியந்திருக்கிறேன். பொற்காசுகள் கொடுத்துக் கேட்க வேண்டிய உரைதான் உங்களுடையது. எனினும் கரும்பு தின்னவும் கூலி கேட்கும் உலகில் நாம் வாழுகிறோம் என நினைக்கிறேன்.

ஜெயமோகன் அவர்கள் இலக்கிய அளவில் அறிமுகமானதைவிட, சினிமா மூலம்தான் அதிகம் அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பதில் உண்மையுண்டு. ஜெயமோகனுக்காகக் கொஞ்சம் கூட்டம் வரலாம். அதற்காக எல்லாப் பேச்சாளர்களுக்கும் கட்டணம் தந்து உரைகேட்கும் கூட்டம் வந்துவிடாது. இங்குத் தலைப்புக்கோ கருத்துக்கோ முதன்மை தராத நிலைதான் உள்ளது. இன்றைய போக்கில் தத்துவத்துக்கு ஆதரவில்லை. தலைவருக்குத்தான் ஆதரவும் ஆரவாரமும்.

கட்டண உரை என்பதை நான் ஆதரிக்கிறேன். ஆர்வமுள்ள அறிவார்ந்த இலக்கிய அன்பர்கள் சிலர் வேலை இல்லாமல் வறியவர்களாக இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வர அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். அவர்கள் ரூபாய் 150 செலவழிப்பார்களா? அந்தத் தொகை இருந்தால் அவர்கள் கூட்டத்துக்கு வருவார்களா? அல்லது மதுக்கூடத்துக்குச் செல்வார்களா?

தங்களின் கட்டண உரை முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.

அங்கே சர்க்கஸ் நடைபெறுகிறது. கவுண்டர்கள் முன் யாரும் நிற்கவில்லை.

-கோ. மன்றவாணன்

 

கட்டணக் கேட்டல் நன்று !

 

முந்தைய கட்டுரைகுடும்பத்திலிருந்து விடுமுறை-கடிதம்
அடுத்த கட்டுரைஆலயம், காந்தி -இருகேள்விகள்