மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தாய்மொழியாம் தமிழ் தங்களை நலமுடன் இருக்கச் செய்யும். தங்களின் படைப்பான முன்சுவடுகள் தற்செயலாக படிக்க நேர்ந்தது. ஏன் இந்த வரலாறுகள் இத்தனை நாள் என் கண் முன்னே பட வில்லை என்று வருந்தினேன். புதைந்து கிடந்த சில அறிய வரலாறுகளை தங்களின் எழுத்து வாயிலாக படித்ததில் மிக்க மகிழ்ச்சி…….!
பயனுள்ள தங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும்………!
-நவீன்
சேலம்.
அன்புள்ள நவீன்,
அந்த சுயசரிதைகள் பலவும் அதிகமாக கிடைப்பவை அல்ல. ஆகவே அவற்றை பற்றிய சுருக்கத்தை அளித்தேன். மேலும் அவை என்னுடைய கருத்துக்களும்கூட. வரலாறுகளை திரும்ப சுருக்கி எழுதி கதைபோல ஆக்கியிருக்கிறேன்
நன்றி
ஜெ
+++++++++++++
அன்புள்ள ஜே.மோ சார்,
நேற்று தங்களை புத்தக விழாவில் கண்டதும் பேசியதும் மிகவும் மகிழ்ச்சி தந்தது . பந்தா இல்லாமல் நீங்கள் நாஞ்சில் மொழியில் என்னிடம் கதைத்தது , திருவண்ணாமலை பயணம் நன்றாக இருந்தது என்று கூறியது அனைத்தும் கணப் பொழுதில் முடிந்ததே என்ற வருத்தமும் ஏற்பட்டது .
அன்புடன் ,
நன்றி.
நா. சாத்தப்பன்.
அன்புள்ள சாத்தப்பன்
பொதுவாக நாம் அனைவரிடமும் கொஞ்சம் பந்தாவை எதிர்பார்க்கிறோமோ))
புத்தக விழா என்பது ஒரு குட்டிக்கொந்தளிப்பு. அதில் ஒரு ஹலோ மட்டுமே சொல்ல முடியும். பிறிதொரு முறை சந்திப்பதற்கான தயக்கத்தை அது அகற்றும். அவ்வளவுதான்
ஜெ
வாழ்த்துக்கள் பல ,
கடந்த ஆண்டில் எனக்கு கிடைத்த நல் ஆசான் நீங்கள் என்று சொன்னால் அது மிகை அல்ல .
நான் வளர்ந்தது ஒரு மார்க்சிய சூழலில் , அதை ஒட்டிய பல்வேறு நம்பிக்கைகள் தான் என்னுடைய முகவரி உங்களை படிக்கும் வரையில் . உலகத்தை மாற்றும் கனவுகளில் திரிந்த நாட்களை நினைக்கையில் சிரிப்பு தான் வருகிறது . எல்லா நம்பிக்கைகளும் இப்படி தானோ என்று என்ன தோனுகிறது. வைணவ குடும்பத்தில் ஸ்ரீரங்கத்தில் பிறந்ததோ என்னவோ நான் ஒரு பிராமண வேருப்பளியாகவே செயல்பட்டேன் . இன்று கொஞ்சம் பக்குவப் பட்டு இருக்கேன் .
உங்களின் விஷ்ணுபுரம் , இன்றைய காந்தி , ஹிந்து ஞான மரபில் ஆறு தரிசனம் புத்தகங்களை கடந்த ஆண்டு படிக்க வாய்ப்புக் கிடைத்தது . நான் முறையான தமிழ், பள்ளிகளில் படித்தது இல்லை , அதுவே என் தமிழ் ஆர்வத்துக்கு காரணமோ என என்ன தொன்றுகிறது நம் கல்வி சூழல் . அதனால் ஒரு reading graph எனக்கு கிடையாது , சாண்டில்யன் -> சுஜாதா -> ஜெயமோகன் பலர் சொல்வது போல் . ஒரு பெருத்து பயணத்தின் முதல் பாதியில் தூங்கின பிரயாணிப் போல் நான் படிக்க தொடங்கியதே காலம் கடந்து தான் . விஷ்ணுபுரம் நகரம் எனக்கு ஸ்ரீரங்கத்தை நினைவு படுத்தியது .
காந்தி நான் வழி படும் மனிதர்களில் ஒருவர் , அவரை பற்றி இவ்வளவு அறிவார்ந்த , வரலாற்று ஆசிரியனுக்கு நிகரான உங்கள் புத்தகம் இது வரை செய்ய படாத முயற்சி . பல நேரங்களில் எனக்கு ஒரு ஆன்மிகமான மன நிறைவை கொடுத்தது .
இப்பொழுது கீதையை பற்றி உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் . உங்களின் கீதை சார்ந்த முரண்யிக்க பார்வை அபாரம . சதுர் வர்ணம் மையா ஸ்ரிஷ்டம் என்கிற வார்த்தைய வெய்து கொண்டு நான் கீதை பழி சொல்லிய நாட்களை நினைத்து வெட்கித் தலை குனிந்தேன் .
இன்று இருக்கும் இந்த வளைப்பின் முக்கியமான ஒரு பிரயோஜனம் உங்களை போன்ற மனிதர்களை அடையாளம் காட்டுகிறது .
தொடர்ந்து உரையாட விரும்புகின்றேன் , உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள் .
நன்றி ,
அசோக்
அன்புள்ள அசோக்,
நன்றி
எல்லா விவாதங்களும் நம் ஆசிரியர்களே
பொதுவாக தமிழில் விவாதங்களுக்கான வெளி இல்லை. நம் இதழ்கள் அனைத்துமே ஒற்றைப்படையானவை. தனிநபர் சந்திப்புகள் மூலம் ஒருவர் தான் செல்லும் வழியை உணர்ந்தால்தான் உண்டு. இந்நிலையில் இணையம் ஓர் அபாரமான வாய்ப்பை வழங்குகிறது
எழுதுங்கள்
ஜெ
அன்புள்ள ஜெ,
ஜனவரி 3 அன்று உங்களை சந்திக்கப் போகிறோம் என்ற குஷியில் இருக்கிறேன்.
பிரமிளைப் பற்றி 60 பக்கங்களுக்கு மேல் எழுதி வைத்திருப்பதாகவும் அதைக் கணினியில் ஏற்ற நேரமில்லை என்றும் எழுதி இருந்தீர்கள். நீங்கள் விரும்பினால் அதனைத் தட்டச்சு செய்து தரலாம் என நினைக்கிறேன். சென்னை வரும்போது கையெழுத்துப் பிரதியை எடுத்து வர முடிந்தால் உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வேன்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன்
அந்நூல் ‘உள்ளுணர்வின் தடத்தில்’ தமிழினி வெளியீடு. இப்போது பிரதி இல்லை. அதில் தமிழ்க் கவிதைகளைப் பற்றிய என்னுடைய கட்டுரைகள் உள்ளன
அந்நூலை முடிந்தால் அனுப்புகிறேன்.
ஜெ
கடந்த நான்கு மாதங்களாக மிகக் கடுமையான பணிச்சுமை. வெளியே மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாமல் தினமும் 30 மணி நேர வேலை :). உங்கள் வலைமனையை லேசாக மேவரி மேய்ந்து செல்வதோடு சரி. நீங்கள் இப்படி இண்டர்வல் விடுவது என் போன்றவர்களுக்கு உதவியாகவே இருக்கிறது. இப்படித்தான் இந்த ‘நீங்களும் புதுக்கவிதை எழுதலாம் ‘ என்ற கட்டுரையைப் பிடித்தேன். லேபினுல் இதைப் படித்து வாய் விட்டு உரக்க சிரிப்பதற்குப் பேரிரைச்சல் இடும் சர்வர்கள் வசதியாகவே இருந்தன.
நன்றி — பாஸ்கி