கட்டண உரை –ஓர் எண்ணம்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு
‘கட்டண உரை – ஓர் எண்ணம்’ வாசித்தேன். பெரும்பாலும் இன்று வணிக ரீதியாக புகழ்பெற்ற பேச்சாளர்களின் நிகழ்வே அதிகம். இத்தகைய பேச்சுக்கூட்டங்களில், நான் பார்த்த வரை, பேச்சாளருக்கும் கேட்பவருக்கும் எந்நேரமும் அறுந்து விடக்கூடிய ஒரு மெல்லிய இழைதான் இருக்கிறது. அதை சிலந்திவலையாக்கி கேட்போரை சிக்கவைப்பது பேச்சாளரின் திறமை. சிக்காதவர் கடலையைக் கொறித்துக்கொண்டு எப்போதும் வெளிநடப்பு செய்யலாம். இரு தரப்பிலும் மேலதிகமான கட்டமைப்பு ஏதுமில்லை.
என்னைப் பொறுத்தவரை, அறிவியக்கம் சார்ந்த பேச்சுகளைத் தொடர ஆழ்ந்த , கவனம் சிதறாத அவதானிப்பு தேவை. பேச்சு முடிந்தபின்னர், எண்ணத்தில் மீட்டெடுத்து தொகுத்துக்கொள்ளும் விழைவும் அதைச் சார்ந்த சிந்தனைகளுமே வளமான செறிந்த பேச்சின் விளைவாக இருக்கவேண்டும். அதை வழங்கும் பேச்சாளருக்கும் அதன் தரம் சார்ந்த மேலதிகமான பொறுப்புடைமை இருக்கிறது. பேச்சாளனின் உழைப்பும் அது சென்றடையும் இடமும் முழுமையடையும்போதுதான் அந்த நிகழ்வு பூர்த்தியாகிறது.
உண்மையில் ஒரு ஒரு மணிநேர அறிவார்ந்த பேச்சை தொடர்ந்தபடியே உள்ளுக்குள் தொகுத்துக்கொண்டு, ஆனால் அந்த நேரத்தில் சிந்தனையைச் செயல்படுத்தாமல், மனதிலேயே குறித்துக்கொண்டு, பேச்சாளனைத் தொடர்ந்து அவதானித்து, பின்னர் மீள்நிகழ்வு செய்து மேற்செல்வதென்பது “நல்லா பேசினாரில்ல?” எனும் சாமானியர்களுக்கு உரியதன்று. ஆகவே, தீவிர நோக்குடன் பங்கேற்க விழைவோரல்லாது, மற்றையோர் கிட்டத்தட்ட தடுக்கப்படவே வேண்டும். அதை மனதளவில்கட்டணம் செய்யுமென்றே நினைக்கிறேன். இல்லையேல் ஒவ்வாமை காரணமாக கடலை கொறித்து வெளிநடப்பு செய்து அந்நிகழ்வில் கவனச்சிதறலை உருவாக்கும் மனிதர்களைத் தவிர்க்க இயலாதுபோகும்.
அதே நேரம் ,’இலவசம்’ உள்ளில் இழையோடும் ஒரு பெரும்பான்மைக் கூட்டத்தினரிடையே இது ஒரு புதிய பரீட்சார்த்தமான முயற்சிதான். அதில் நீங்கள் முதல் பேச்சாளராக அமைந்தது மிகப்பொருத்தமேயென்று எண்ணுகிறேன். கட்டணத்தின் விளைவைப் பற்றி இப்போது ஏதும் சொல்ல இயலாதென்றாலும் மிக சுவாரஸ்யமான ஒரு தலைப்பில் பேசவிருக்கிறீர்கள் என்ற எதிர்பார்ப்பு என்னுள் அமைந்துவிட்டது.
நிகழ்ச்சி சிறக்க இறை அருளட்டும்!
அன்புடன்
நா. சந்திரசேகரன்
சென்னை
அன்புள்ள ஜெயமோகன்
கட்டண உரை குறித்த அறிவிப்பையும் கடிதங்களையும் வாசித்தேன். ஒரு புதிய முயற்சி. இதில் வெற்றிதோல்வி என ஏதுமில்லை என நினைக்கிறேன். வாசகர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக நிகழ்த்தவேண்டும்
இதன் அர்த்தம் என்னளவில் ஒன்றே ஒன்றுதான். மேடைப்பேச்சு என்பதன் மதிப்பை மீட்டு எடுப்பது. ஏனென்றால் இன்றைக்கு மேடைப்பேச்சு என்பது இரண்டே வகைதான். பெருந்திரளான மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வேடிக்கைப்பேச்சு ஒருபக்கம். எந்த பொறுப்புமில்லாத வெட்டி அரட்டை இன்னொரு பக்கம். பேசுபவர் கேட்பவர் இரு சாராருக்குமே மேடைப்பேச்சுமேல் ஆர்வம் கிடையாது. மதிப்பு கிடையாது
அந்த மதிப்பை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நான் கட்டண உரையை பார்க்கிறேன். தமிழகமெங்கும் ஓரிரு கட்டணக்கூட்டங்கள் நடந்தால்கூட மனநிலை மாறிவிடும். கட்டணம் கட்டி கேட்கிறாங்க என்பதே மேடைப்பேச்சின் மதிப்பைக் கூட்டிவிடும் என நினைக்கிறேன்
ஆர்.எஸ்.சந்தானம்