ஸ்டெல்லா புரூஸின் அப்பா
ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்
ஜெ
ஸ்டெல்லா ப்ரூஸ் குறித்த கட்டுரை அருமையாகயிருந்தது. குறை கண்டுபிடிப்பதற்காக சுட்டிக் காட்டவில்லை. ஜெயமோகன் குறிப்பிடுவதை ஆணித்தரமாக நம்பும் பல வாசகர்களில் நானும் ஒருவன். எனவே எனக்குத் தெரிந்த தகவலை தெரிவிக்கவே எழுதுகிறேன்.
சுஜாதா ஸ்டெல்லா ப்ரூஸின் ‘அது நிலாக் காலம்’ பாதிப்பில்தான் ‘பிரிவோம் சந்திப்போம்’ எழுதினார் என்ற தகவல் பிழையானது. ‘பிரிவோம் சந்திப்போம்’ ஆனந்த விகடனில் வெளியான பிறகுதான் ‘அது ஒரு நிலாக் காலம்’ வெளியானது.
நன்றி
ரெங்கநாதன்
அன்புள்ள ரெங்கநாதன்,
ஆம், அந்த வரி குழப்பமாகவே அமைந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பின்னர் சுஜாதாவே ஸ்டெல்லாபுரூஸ் பாணியில் ஒருசில நாவல்களை எழுதினார். அது ஒரு நிலாக்காலம்போன்ற ஸ்டெல்லா புரூஸ் நாவல்களின் பாணியை சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம்போன்ற நாவல்களில் காணலாம். என்ற வரியில் அது ஒரு நிலாக்காலம் நாவலை ஒட்டி பிரிவோம் சந்திப்போம் நாவல் அமைந்துள்ளது என்னும் தொனி வருகிறது. நான் உத்தேசித்தது அந்நாவல்களில் பொதுவாக வெளிப்படும் ஸ்டெல்லா புரூஸின் பாணி சுஜாதாவில் வெளிப்பட்டது என்பதே. திருத்திக்கொள்கிறேன்
நன்றி
ஜெ
அன்புள்ள ஜெ
ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கைபற்றிய கட்டுரைகளும் கடிதங்களும் கலங்கச்செய்தன. உண்மையில் ஒருவர் மறைந்தபின்னர் இப்படி நாம் கணக்கெடுக்கலாமே ஒழிய நம்மால் எதையாவது முன்னாடியே சொல்லிவிடமுடியுமா என்ன? ஒருவரின் ஆன்மிகமான பயணத்தையோ, அதில் அவர் செல்லவேண்டிய பாதையையோ வழிகாட்டிவிடமுடியுமா? ஆன்மிகமான பயணங்களை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் சிறிய பிழைகளால் தோல்வியுறுவதைத்தானே காணமுடிகிறது? அதேபோல இலக்கியம் போன்றவற்றில் வெற்றியும் தோல்வியும் காலத்தின் கையில் அல்லவா உள்ளது?
ஆர் .ராஜாங்கம்
அன்புள்ள ராஜாங்கம்
உண்மை. ஆகவே எதையும் அறுதியிட்டு உரைப்பது அசட்டுத்தனம்தான். நம் வாழ்க்கையைப் பற்றியேகூட எதையும் சொல்லிவிடமுடியாதுதான். ஆனால் இரண்டு விஷயங்கள் மிகத்தெளிவானவை. ஒன்று வழிகாட்டியாக குரு ஒருவர் இல்லாத ஆன்மிகப்பயணம். இரண்டு, இலக்கியத்தின் ஆன்மிகத்திற்குப் பதிலாக பணம் புகழ் என சிலவற்றை வைப்பது
ஜெ
அன்புள்ள ஜெ
ஸ்டெல்லா புரூஸ் பற்றிய உங்கள் கட்டுரைகளும் குறிப்புகளும் ஆழமானவை. அவற்றை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒன்று தோன்றியது. ஸ்டெல்லா புரூஸின் இறப்பு துயரமானதுதான். ஆனால் அதைவைத்து அவருடைய வாழ்க்கை துயரமானது என்று சொல்லிவிடமுடியுமா? அவர் பிடிக்காத வேலையைச் செய்யவில்லை. பிடிக்காதவற்றில் ஈடுபடவில்லை. வாசித்தும் எழுதியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். வாழமுடியாதபோது இறந்தார். இதுதானே நல்ல வாழ்க்கை? எப்படியாவது இழுத்துப்பிடித்து நூறாண்டு வாழ்வதில் என்ன அர்த்தம்?
சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்
உண்மைதான். அவர் மகிழ்ச்சியாக இருந்தார் என்றே அழகியசிங்கரின் குறிப்புகள் காட்டுகின்றன.
ஜெ