‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39

bowகவசப்படையை வெறிக்கூச்சலுடன் முட்டி பிளந்து அவ்வழியினூடாக பாய்ந்து மறுபக்கம் சென்ற சாத்யகி ஒருகணம்தான் நோக்கினான். அசங்கனின் நெஞ்சில் அம்பு பாய்ந்த கணம், பிற ஒன்பதின்மரையும் அது உள்ளடக்கியிருந்தது. தலையை திருப்பிக்கொண்டு சொல்நின்ற உள்ளத்துடன் நடுங்கினான். சூழ்ந்திருந்த படைவெள்ளம் அலையென வளைந்தெழுந்து அவன் தலைக்குமேல் சென்றது. பின்னர் நினைவு எழுந்தபோது படைப்பிரிவுகளுக்கு உள்ளே தேர்தட்டிலிருந்து இறக்கி அவனை கீழே மண்ணில் படுக்க வைத்திருந்தார்கள். முகத்தில் விழுந்த நீரின் சிலிர்ப்பில் அவன் இமைகள் அதிர்ந்தன. வானுடைந்தது என பெருகிக்கொட்டும் அருவியொன்றின் அருகே இலைத்தழைப்புக்குள் படுத்திருப்பதாக அவன் உணர்ந்தான்.

“நீர் அருந்துங்கள், யாதவரே” என மரக்குடுவையை அவன் உதடுகளுக்கு அருகே கொண்டுவந்தான் மருத்துவ ஏவலன். நீர் என்னும் சொல் அவன் உடலெங்கும் நிறைந்திருந்த தவிப்பை அவன் உள்ளம் உணரச்செய்தது. தலையை சற்று தூக்கி வலக்கையால் குடுவையை பற்றிக்கொண்டு குடம் நிறையும் ஒலியுடன் அவன் வெல்லம் கலந்த இன்னீரை அருந்தினான். மேலும் மேலும் அருந்தி உடலை அதன் தண்மையாலும் இனிமையாலும் நிரப்பிக்கொண்டான். இன்சுவையை அதைப்போல ஒவ்வொரு தசையும் நாவாகித் திளைக்கும் இனிமையென அவன் உணர்ந்ததே இல்லை. நாவால் துழாவி உதடுகளிலும் மீசைமயிர்ப்பிசிறுகளிலும் ஒட்டியிருந்த இன்துளிகளை நக்கி உண்டான். ரிஷபவனத்தில் சந்திராவதி ஆற்றின் கரையில் மூதன்னையருக்கு அன்னக்கொடை விழாவில் பலாவிலையை கோட்டிச் செய்த சிறு கரண்டியால் அக்காரச்சோற்றை சூடாக அள்ளி அள்ளி உண்டான். இனிமை அவன் முகத்தை மலரச்செய்தது. உடல் அமிழ்ந்துகொண்டே இருப்பதுபோல் ஓய்வுக்குள் சென்றது. இமைகள் எடைகொண்டு அழுந்த அவன் துயிலுக்குள் சென்றான்.

துயிலின் ஆழ்தட்டில் உடல்முட்டிக்கொள்ள திகைத்து விழித்தான். போர்க்களம் அது என உணர்ந்தான். மண்ணில் படுத்திருக்கிறேன். என்ன ஆயிற்று? ஆழ்ந்து புண்பட்டுவிட்டேனா? தன் கைகளையும் கால்களையும் அறிந்தான். அவை உயிருடன் இயல்பாக இருப்புணர்த்தின. நெஞ்சில் அம்பு பாய்ந்திருக்கலாம். இறப்பின் கணமா இது? அது அச்சத்தையோ பதற்றத்தையோ அளிக்கவில்லை. மிக இயல்பாக அவன் அப்போது தன்னில் எழுந்த எண்ணங்களை நோக்கிக்கொண்டிருந்தான். மைந்தர் எங்கிருக்கிறார்கள்? அக்கணம் மீண்டும் நிகழ்ந்தது. அவன் நிலத்தை கையால் அறைந்தபடி எழுந்தமர்ந்தான். உடல் துள்ளிவிழத் தொடங்கியது. இரு மருத்துவர் அவன் தோள்களைப் பற்றினர். “படுத்துக்கொள்ளுங்கள், யாதவரே” என்றார் முதியவர். “இல்லை! இல்லை!” என்றான். மறுகணமே உடல் தீயென பற்றிக்கொள்ள “இழிமக்களே… என் நாவுக்கு இனிமையை ஊட்டியவன் எவன்? இப்போதே அவன் சங்கறுப்பேன்… எனக்கு இனிமையளித்தவன் எவன்?” என்று கூவியபடி எழுந்து நின்றான்.

அப்பால் நின்றிருந்த சேகிதானனைக் கண்டு “நீயா? நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று கூவியபடிச் சென்று அவன் தோளைப் பற்றினான். அலையும் விழிகளும் பதறும் குரலுமாக “சொல்க, அவர்களில் எவர் எஞ்சியிருக்கிறார்கள்?” என்று கூவினான். சேகிதானன் ஒன்றும் சொல்லாமல் குனிந்து நிற்க “சொல், இப்போதே சொல்… எங்கே அவர்கள்?” என்றான். சேகிதானன் “எவரும் எஞ்சவில்லை, மூத்தவரே” என்றான். நடுங்கும் உடலை தாளமுடியாமல் கால்கள் தளர அவன் மெல்ல பின்னடைந்து தேர்விளிம்பைப் பற்றிக்கொண்டான். “யார்? யார் பிழைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டான். சேகிதானன் ஒன்றும் சொல்லவில்லை. “சொல் அறிவிலி, இப்போது யார் எஞ்சியிருக்கிறார்கள்?” என்று சாத்யகி கூவினான். சேகிதானன் வெற்று விழிகளுடன் நோக்கினான். கைகள் தளர்ந்து உடல் தாழ்ந்து மண்ணில் அமைய “அனைவருமா?” என்றான் சாத்யகி. சேகிதானன் தலையசைத்தான். சாத்யகி கையூன்றி எழப்போனான்.

மருத்துவ ஏவலன் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம், யாதவரே” என்றான். “அகிபீனா உள்ளது, உண்டு உறங்குக. இப்பொழுதே பின்உச்சிப்பொழுது ஆகிவிட்டது. இரு நாழிகைக்குள் களம் ஒடுங்கிவிடும்” என்றார் முதிய மருத்துவர். அவன் அவர்களை வெறித்த செவ்விழிகளால் நோக்கி இல்லை என்று தலையை அசைத்தான். சேகிதானனிடம் “இளைய யாதவர் எங்கிருக்கிறார்?” என்றான். அதை அவன் கேட்க எண்ணவில்லை. ஆகவே கேட்டதும் அவனே திகைத்தான். “அங்கே களமுகப்பில். துரோணரும் இளைய பாண்டவரும் பொருதிக்கொண்டிருக்கிறார்கள். தங்களைப் பார்த்துவர அவர் என்னை அனுப்பினார்” என்றான் சேகிதானன். “ஆம், களத்தில்… அங்கே களம்…” என்றபடி சாத்யகி எழுந்து நின்றான். தலைசுழன்று மண் அலைகொள்வதுபோல் இருந்தது. சேகிதானன் “இந்நிலையில் தாங்கள் போருக்குச் செல்ல இயலாது. ஓய்வு கொள்ளுங்கள், மூத்தவரே” என்றான்.

“ஓய்வு கொள்வதற்காக நான் களம் வரவில்லை. போர்புரிய வந்திருக்கிறேன். போர்புரிய! புரிகிறதா? போர்புரிவதற்காக!” என்று சாத்யகி கூச்சலிட்டான். சேகிதானனின் கைளைப்பற்றி உலுக்கியபடி பற்களை நெறித்து சிவந்த கண்களுடன் நோக்கி “ஆம், போர்புரிவதற்காக… போருக்காக மட்டும்தான்!” என்றான். “ஆம்” என்றான் சேகிதானன். சாத்யகி திரும்பி ஏவலரிடம் “என் தேர் எங்கே?” என்றான். சேகிதானன் “அப்பால் ஒருங்கி நின்றிருக்கிறது, மூத்தவரே” என்றான். “என் தேர் எங்கே? என்ன ஆயிற்று எனக்கு?” என்றான் சாத்யகி அதைக் கேட்காதவனாக. “தாங்கள் தேர்த்தட்டில் நிலைதளர்ந்து விழுந்துவிட்டீர்கள். படைகளால் பின்னணிக்குக் கொண்டுவரப்பட்டீர்கள். இரு புரவிகள் கொல்லப்பட்டன. வேறு புரவிகள் மாற்றப்பட்டுள்ளன” என்றான் ஏவலன். சாத்யகி தன்னை நோக்கியபின் “நானா? என் மேல் அம்புகள் பட்டனவா?” என்றான். சேகிதானன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை.

“கிளம்புவோம். இன்னும் பொழுதிருக்கிறது” என்றபடி சாத்யகி தேரை நோக்கி திரும்பினான். நெஞ்சுக்குள் அடைப்பொன்றை உணர்ந்தான். ஒரு தசைநார் சிக்கிக்கொண்டு இழுபட்டு அதிர்ந்து சொடுக்கியது. பின்னர் இருமல் தொடங்கியது. பேரோசையுடன் இருமியபடி அவன் சற்றே உடல் வளைத்து நின்றான். சேகிதானன் அவன் கைகளைப் பற்றிக்கொள்ள அவன் தோளைப் பிடித்தபடி நின்று நீண்ட இருமல் தொடர்கள் வழியாகச் சென்று மூச்சிரைக்க நின்றான். “நெஞ்சில் கதை ஏதேனும் பட்டிருக்கவேண்டும். நான் களத்தில் நின்றேன்” என்று மருத்துவ ஏவலனிடம் சொன்னான். “ஆம் யாதவரே, சற்று ஓய்வெடுத்தால் திணறல் நீங்கிவிடும்” என்றான். “களத்தில் ஓய்வெடுக்கும்பொருட்டு வரவில்லை. செல்வோம்” என்றபடி சாத்யகி தேரை நோக்கிச் சென்றான்.

தேரில் ஏறுவதற்காக அதன் படி மீது கால்வைத்தபோது மீண்டும் இருமல் எழுந்து அவன் உடல் அதிரத்தொடங்கியது. நீண்ட மூச்சிரைப்புகளுடன் இருமி அமைந்தான். பின்னர் கைகளை வீசி “செல்க” என்றான். “எங்கு?” என்று தேர்ப்பாகன் கேட்டான். “எங்கு என்றறியாதவனா நீ? மூடா! படைமுகப்புக்கு! படைமுகப்புக்குச் செல்க!” என்று சாத்யகி ஆணையிட்டான். தன் வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு தேர்த்தட்டில் நின்று சேகிதானனிடம் “செல்க! இளையவரிடம் சொல்க, நான் தளரவில்லை என. ஆம், அதைமட்டும் சொல்க. நான் தளரவில்லை” என்றான். வில்நாட்டி நாணிழுத்துத் தொடுத்து எதிரே ஒளியுடன் வளைந்திருந்த வானை நோக்கி அம்பை வீசினான். எழுந்து சென்று வளைந்து இறங்கிய அந்த அம்பை நோக்கிக்கொண்டிருந்தான். அது ஒரு நெஞ்சைச் சென்றடையும். அந்நெஞ்சுக்குரியவருக்கு தெரியாது அதை எய்தவனின் வஞ்சம் என்ன என்று. அனைத்து அம்புகளும் கேளாச் சொற்களே.

சாத்யகி மேலும் மேலும் அம்புகளை விடுத்தபடி விலகி வழிவிட்ட பாண்டவப் படையை பிளந்துகொண்டு முன்னால் சென்றான். படைமுகப்பை அடைந்தபோது அங்கே பகதத்தனும் சோமதத்தரும் பாண்டவப் படைகளை எதிர்கொண்டு நிற்பதைக் கண்டான். “இழிமக்களே!” என அடிநெஞ்சிலிருந்து வீறிட்டபடி அவன் அம்புகளை எய்தான். சோமதத்தரின் வில்லும் கவசங்களும் உடைந்தன. அவர் திரும்புவதற்குள் தோளிலும் விலாவிலும் அம்புகள் தைக்க தேர்த்தட்டில் விழுந்தார். பாகன் தேரை பின்னுக்கு இழுத்துச்செல்ல கேடயத்தேர்கள் வந்து அவர்களை மறைத்தன. சாத்யகி பித்தெழுந்தவன்போல் அந்த பெரிய இரும்புக்கேடய நிரை மீதே அம்புகளை எய்தான். அவை உலோக ஓசையுடன் முட்டி உதிர்ந்தன. “இழிமக்களே! இழிமக்களே!” என அவன் கூவிக்கொண்டே இருந்தான்.

பகதத்தன் மறுபக்கத்திலிருந்து “நில் யாதவனே, இங்கு நோக்குக!” என்று அவனை அழைத்தார். “போரென்றால் கன்றோட்டுவதல்ல, கீழ்மகனே. இது சாவின் களம்…” அவன் “ஆம், சாவு! சாவுதான்” என்று கூவியபடி அம்புகளை தொடுத்துக்கொண்டு அவரை நோக்கிச் சென்றான். பகதத்தனின் பெரிய உடலுக்கு இயைய அவருடைய வில் தடித்ததாகவும் பருத்த நாண் கொண்டதாகவும் இருந்தது. அவர் அம்புகள் ஒவ்வொன்றும் ஆள் நீளமும் கைநீள இரும்புக்கூரும் கொண்டிருந்தன. அவை பெரும்பாலும் இலக்குகளை தவறவிட்டன. ஆனால் சென்று தைத்த இடங்களில் உடல்களை ஊடுருவி மறுபுறம் சென்று வீரர்களை நிலத்துடன் சேர்த்து அறைந்தன. தேர்த்தூண்களையும் மகுடங்களையும் தெறிக்க வைத்தன. யானை மத்தகங்களிலேயே தைத்திறங்கி நின்றன.

பகதத்தனின் மூன்று அம்புகளால் தன் தேர்முகடு உடைந்து தெறித்து ஒரு புரவியின் கழுத்தறுத்து விழுந்ததும் சாத்யகி தன் அனைத்து அலைக்கழிப்புகளும் இழந்து விழிகளும் கைகளும் மட்டுமாக ஆனான். பகதத்தனின் ஒவ்வொரு அம்பையும் தனித்தனியாக நோக்கி சற்று நேரத்திலேயே அவர் அம்புவிடும் ஒழுங்கை அறிந்தான். இலக்கு நோக்கியதுமே நாவால் உதடுகளை வருடியபடி அம்பை இழுத்து முழுத்தோள் விசையும் நாணிலேற்றி மூச்சை இழுத்து எய்தார். கதை வீச்சுக்கும் அம்புக்கும் அவரிடம் வேறுபாடு தெரியவில்லை. அம்பு எப்போதுமே நேராகவே சென்றது. வளைந்தெழுந்தமையவோ சுழன்று அணுகவோ அதனால் இயலவில்லை. அவரால் தேர்த்தட்டில் விரைந்து உடல்திருப்பவும் முடியவில்லை.

சாத்யகி கைகளை வீசி பகதத்தனுக்கு வலப்பக்கமாக தன் தேரைச் செலுத்தினான். பகதத்தனின் அம்புபட்டு தன்னைச் சூழ்ந்திருந்த தேர்வீரர்கள் விழுந்தபடியே இருப்பதை பார்த்தான். அவன் தன் வலக்கை பக்கம் செல்வதை உணர்ந்து தேரை அவனை நோக்கி திருப்ப பகதத்தன் ஆணையிட்டார். ஆனால் மேலும் மேலும் வளைந்து சென்றுகொண்டிருந்த சாத்யகியின் தேரை நோக்கி முற்றிலும் திரும்ப அவரால் இயலவில்லை. அவரைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த பிரக்ஜ்யோதிஷத்தின் அணுக்க வில்லவர்களின் தேர்கள் அங்கிருந்தன. அவற்றில் முட்டி பகதத்தனின் தேர் நிலையழிந்தது. ஒரு நிலையில் தன் தேர்த்துணைவனால் சாத்யகியின் தேரின் பெரும்பகுதி மறைக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். ஓரவிழியால் நோக்கவோ பக்கம் திரும்பி அம்பு தொடுக்கவோ அவரால் இயலவில்லை.

சாத்யகியின் அம்புகள் அவர் வலப்பக்க தேர்த்துணைவர்கள் இருவரை வீழ்த்தின. பிறிதொரு அம்பு வந்து அவர் தோள்கவசத்தை உடைக்க அவர் முற்றாக தேரில் திரும்பி நின்று சாத்யகியை எதிர்கொள்வதற்குள் அவர் தோளில் பாய்ந்தது பிறிதொரு அம்பு. அவர் தலைக்கவசத்தை உடைத்தது மீண்டுமொரு அம்பு. அவர் விலாவிலும் பிறிதொன்று நெஞ்சிலும் பாய அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த தேரிலிருந்து வில்லவர் கொக்கிக்கயிற்றை வீசி அவரை கோத்தெடுத்து இழுத்து தங்கள் தேருக்குள் ஏற்றிக்கொண்டனர். தேரிலிருந்து தேர் வழியாகவே அவர் நீரில் மூழ்குவதுபோல் கௌரவப் படைகளுக்குள் மறைந்தார்.

சாத்யகி வெறிகொண்டவன்போல் பகதத்தனின் ஒழிந்த தேரை நோக்கி அம்புகளை எய்தான். அவரை பின்னுக்கிழுத்துச்சென்ற தேர்வலர்கள் மூவரை வீழ்த்தினான். திகைத்தெழுந்து தேரிலிருந்து இறங்கமுயன்ற பாகனின் தலையை அறுத்தெறிந்தான். காலை தேர்த்தட்டில் ஓங்கி உதைத்தபடி பொருளற்ற வெறிக்கூச்சலை எழுப்பினான். “முன் செல்க! மேலும் முன் செல்க!” என்று தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான். மேலும் முன்செல்வதென்றால் அது கௌரவப் படைகளுக்குள் நுழைந்துகொள்வது என்பதை உணர்ந்த தேர்ப்பாகன் தயங்க அவன் விலாவை உதைத்து “முன் செல்க, மூடா!” என்று கூவினான். தன் முகத்தை தேர்த்தூணின் இரும்புக் கவசத்தில் நோக்கியபோது அங்கே பிறிதொருவனைக் கண்டான். அவனுடைய வெறிநின்ற முகத்தில் உதடுகள் விசையுடன் அசைந்தபடியே இருந்தன.

பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை பிளந்து அவன் தேர் முன்செல்ல இடப்பக்கத்திலிருந்து சங்கொலி எழுந்தது. அவன் திரும்பிப்பார்க்க பூரிசிரவஸ் தன் தேரில் வருவதை கண்டான். நிலைதளர்ந்தவன்போல் இரண்டடி பின் சென்று தேர்த்தூணில் முட்டிக்கொண்டான். அவன் வில் தாழ்ந்தது. பூரிசிரவஸின் முகம் சாய்வெயிலில் செவ்வொளி சூடியிருந்தது. “கீழ்மகனே! கீழ்மகனே!” என்று கூவியபடி தேரிலிருந்து உடைவாளை உருவியபடி பாய்ந்து புரவிகள் மேலும் பிறிதொரு தேர் விளிம்பிலும் கால்வைத்து காற்றில் பாய்ந்து பூரிசிரவஸை நோக்கி அவன் சென்றுகொண்டிருப்பதை அவனே சற்று பிந்திதான் உணர்ந்தான்.

பூரிசிரவஸ் தன் வாளை உருவிக்கொண்டு தேரிலிருந்து பாய்ந்திறங்கினான். சாத்யகி தன் எடைமிக்க வாளால் ஓங்கி பூரிசிரவஸை வெட்டினான். ஒளிக்கதிர் திரும்புவதுபோல் இயல்பாக அகன்று அவ்வீச்சை பூரிசிரவஸ் தவிர்க்க அருகிருந்த புரவியொன்றின் மேல் பாய்ந்து நின்ற சாத்யகியின் வாளின் பின்னதிர்வை ஏற்று மேலும் இறுகியது அவன் உடல். “இழிமகனே! இழிமகனே!” என்று கூவியபடி வாளைப் பிடுங்கி மீண்டும் மீண்டும் பூரிசிரவஸை வெட்டினான் சாத்யகி. தேன்சிட்டு என பின்பறந்தும் எம்பியமைந்தும் எழுந்தும் இருந்தும் பூரிசிரவஸ் அவன் வாள்வீச்சை எதிர்கொண்டான். ஒருமுறை கூட அவன் வாளை தன் வாளாலோ கவசமணிந்த கையாலோ எதிர்கொள்ளவில்லை.

பூரிசிரவஸ் நுண்வாள் தேர்ச்சி மிக்கவன் என்றும், வாள் சூழ்வதில் அவனுக்கு நிகராக பாரதவர்ஷத்தில் எவருமில்லையென்றும் சாத்யகி அறிந்திருந்தான். பலமுறை தன் வாள் தவிர்க்கப்பட்டபின் மூச்சிரைக்க நின்று புரவிகளில் பட்ட வாளிலிருந்து குருதி சொட்ட அதை நிலம் தாழ்த்தி விழிகூர்ந்து அவனை நோக்கி நின்றபோது அச்சிறிய கண்களில் அவன் எண்ணுவதென்ன என்று உணரமுடியவில்லை. பூரிசிரவஸ் தாழ்ந்த குரலில் “திரும்புக, யாதவரே” என்றான். அச்சொல் ஆழத்து வெறியை கிளப்ப “கொல் என்னை! கீழ்மகனே, கொல் என்னை!” என்று கூவியபடி சாத்யகி மீண்டும் வாளை முழுவிசையுடன் வீசியபடி பூரிசிரவஸை நோக்கிச்சென்றான். அவன் வெட்டுபட்டு அருகிலிருந்த தேரின் சகடம் உடைந்து தெறித்தது. பிறிதொரு வெட்டில் தேர்த்தூணொன்று உடைந்தது.

பூரிசிரவஸ் ஒளியாலோ புகையாலோ ஆனவன் போலிருந்தான். வாள் அவனுடலை ஊடுருவி கடந்து செல்வது போலிருந்தது. மூச்சிரைக்க நின்று கண்ணிலிருந்து நீர் வழிய பற்களை நெறித்து நோக்கியபின் “இன்று நான் மீள்வதில்லை, மலைமகனே” என்று கூவியபடி சாத்யகி பூரிசிரவஸின் வாளை நோக்கியே பாய்ந்தான். கணையாழியின் மணியிலிருந்து எழும் சிறு ஒளிக்கீற்றுபோல் அவன் இடத்தோளை தொட்டு கீறிச்சென்றது பூரிசிரவஸின் வாள். சிறு அதிர்வென சாத்யகி அதை உணர்ந்தான். அவன் உடலில் வலப்பக்கம் இடப்பக்கத்துடன் தொடர்பிழந்து எடை மிகுந்து கீழ் நோக்கி இழுக்க உடல் தள்ளாடியது.

பூரிசிரவஸ் பாய்ந்தெழுந்து தன் குறடணிந்த காலால் அவன் இடையை உதைத்து தள்ளினான். பின்னால் சரிந்து தரையில் விழுந்து கிடந்த படைவீரர்களின் உடல்களின்மீது மல்லாந்து வாளுடன் விழுந்தான் சாத்யகி. “செல்க, யாதவரே. இப்புண் உங்களை துயிலச்செய்யும். சென்று நாளை எழுக” என்றபடி பூரிசிரவஸ் பாய்ந்து சென்று தேர்ச்சகடத்தின் ஆரங்களில் மிதித்தேறி தன் தேரில் ஏறிக்கொண்டான். வாளை நீட்டி “இது போர்! என்றேனும் நிகழக்கூடியவை மட்டுமே இங்கு நிகழ்கின்றன! செல்க!” என்றபடி தன் தேரை திருப்ப ஆணையிட்டான்.

bowகௌரவப் படை விலகி வழிவிட பூரிசிரவஸின் தேர் விரைந்து அகல்வதை நோக்கிக்கொண்டு கிடந்த சாத்யகி உடலைப்புரட்டி எழுந்து தன் தேர்நோக்கிச் சென்றான். அவனை நோக்கி அம்புதொடுக்காமல் சூழ்ந்து நின்றிருந்தனர் பிரக்ஜ்யோதிஷத்தின் வீரர்கள். தேரிலேறிக்கொண்டதும் அவன் தளர்ந்தவனாக அமர்ந்தான். வெயில் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “செல்க!” என்றான். “பின்னணிக்கா, யாதவரே?” என்றான் பாகன். பின்னணி என்னும் சொல் அவனை நடுங்கச்செய்தது. அங்கே மைந்தர்கள் இல்லை. ஒருகணத்தில் பத்து முகங்களும் மின்னிச்சென்றன. அகம் விம்மி கண்களில் நீர் எழுந்தது. திரும்பி இரைவிழுந்த மீன்பரப்பு என படை கொப்பளித்துக்கொண்டிருந்த திசையை நோக்கி கைசுட்டி “அங்கே” என்றான்.

தேர் படைகளைப் பிளந்துகொண்டு செல்ல அவன் தேர்த்தூணில் எழுந்து சாய்ந்து நின்றபடி அம்புகளுக்காக கைநீட்டினான். அவன் உடலுக்குள் நாண்களில் ஒன்று அறுந்துவிட்டமையால் தசைகள் வலையறுந்துவிட்டிருந்தன. உடல் இடப்பக்கமாக அவனை உந்தியது. ஆவக்காவலன் அளித்த அம்பை அவனால் இலக்கடையச் செய்யமுடியவில்லை. ஆயினும் நிலைக்காது அம்புகளை தொடுத்தபடியே அவன் போர் சுழித்துக்கொண்டிருந்த அந்த மையம் நோக்கிச் சென்றான். தொலைவிலேயே அங்கே பீமன் போர்புரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். அவனை துரியோதனனும் துச்சாதனனும் எதிர்த்து நின்றனர்.

கௌரவர்கள் சித்ரபாணனும் சித்ரவர்மனும் குந்ததாரனும் மகாதரனும் சோமகீர்த்தியும் சுவர்ச்சஸும் அவனை நோக்கித்திரும்ப அவன் அவர்களை அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்தபடி முன்னால் சென்றான். பீமனைச் சூழ்ந்து தாக்கிய கௌரவர்களின் விழிகளை அவன் அப்போதுதான் அணுக்கத்திலென கண்டான். அவை சிவந்து கலங்கியவை போலிருந்தன. துரியோதனனின் வாய் அசைந்துகொண்டே இருப்பதை கண்டான். எதையோ மென்றுகொண்டிருப்பவன்போல. திகைப்புடன் நோக்கியபோது துச்சாதனனின் வாயும் அசைந்துகொண்டிருப்பது தெரிந்தது. கௌரவர்கள் அனைவருமே எதையோ சொல்லிக்கொண்டிருந்தனர். ஓசையின்றி. உள்ளம் உதடுகளில் நிகழ்வதுபோல. என்ன சொல்கிறார்கள்? அச்சொற்களுக்கு பொருளேதேனும் உண்டா?

பீமன் துரியோதனனுடன் போரிட்டபடியே மெல்லப் பின்னடைந்து கொண்டிருந்தான். மறுபுறம் சங்கொலி எழுந்தது. அஸ்வத்தாமன் கௌரவர்களை பிளந்தபடி தேரில் தோன்றினான். பீமன் மேலும் தேரைப் பின்னடையச் செய்ய சாத்யகி பீமனைத் தொடரமுயன்ற கௌரவர்களைத் தடுத்து நிறுத்தினான். “துணைசெல்க! பீமனுக்கு துணைசெல்க!” என திருஷ்டத்யும்னனின் முரசுகள் முழங்கின. அஸ்வத்தாமனின் அம்புகளால் பீமனின் கவசங்கள் உடைந்தன. அவன் பாகன் தேரை மீண்டும் மீண்டும் பின்னெடுக்க அஸ்வத்தாமன் அவன் தலையை அறுத்தெறிந்தான். புரவிகள் இரண்டு கழுத்தில் அம்புதைக்க கால்பின்னி கீழே விழுந்தன. பீமன் சரிந்த தேரிலிருந்து விழுவதைப்போல் நிலையழிந்தான்.

அஸ்வத்தாமன் திரும்பி கைநீட்ட ஆவக்காவலன் எடுத்து அளித்த அம்பைக்கண்டு சாத்யகி திகைத்தான். அது எழுவிசையாலேயே சுழன்று நூறு சிற்றம்புகளை ஏவும் சுழலம்பு. “பின்னடைக! பாண்டவரே, பின்னடைக!” என்று கூவியபடி அவன் மேலும் முன்னால் சென்றான். சுழலம்பு உறுமலோசையுடன் வெடித்து எழுந்து காற்றில் சுழன்று அணைந்தது. அதிலிருந்து சின்னஞ்சிறு அம்புகள் கிளம்பி பீமனை நோக்கி எழ சாத்யகி இரு அம்புகளால் அதை அறைந்தான். அவன் அம்புகள் பட்டு சக்ரபாணம் திசையழிந்து அப்பால் சென்றது. அஸ்வத்தாமன் விழியிமைக்கணத்துக்குள் இன்னொரு அம்பால் சாத்யகியை அறைந்தான். கவசம் உடைய சாத்யகி தேர்த்தட்டில் அமர்ந்த கணம் தேர்முகட்டுக்கும் மேலே எழுந்த நீள்வில்லை தேரின் சகடத்துடன் பொருத்தி ஏழுபுரவிகளின் இழுவிசையால் அதை வளைத்து நாணிழுத்து இரண்டுவாரை நீளமுள்ள சூரியாஸ்திரம் எனும் பேரம்பை பீமன் மேல் தொடுத்தான்.

அதன் இரைச்சலை சாத்யகி கேட்டான். அம்பு பீமனின் நெஞ்சுக்கவசத்தை அறைந்து உடைக்க அவன் தூக்கி அப்பால் வீசப்பட்டான். கௌரவர்கள் பெருங்குரலெடுத்து ஆர்ப்பரித்தனர். பீமன் நிலத்தில் கையூன்றி புரண்டு எழுந்து நெஞ்சில் தைத்த அம்புடன் நின்று தள்ளாடினான். அஸ்வத்தாமன் நாணிழுத்து நீளம்பு ஒன்றைத் தொடுத்தபடி பீமனை நோக்கிச் செல்ல அக்கணத்தில் மறுபக்கமிருந்து எழுந்த அம்பால் அவன் வில்லின் நாண் அறுந்தது. அஸ்வத்தாமன் நெடுவில்லைக் கைவிட்டு குனிந்து அடுத்த வில்லை எடுத்து அம்பு தொடுத்து படைபிளந்து தன்னை எதிர்கொண்ட அர்ஜுனன் மேல் ஏவினான். அர்ஜுனன் தன் அம்பால் அதை தடுத்து வீழ்த்தி மீண்டுமொரு அம்பால் அஸ்வத்தாமனின் ஆவக்காவலனை அறைந்து வீழ்த்தினான்.

செவ்வெயிலில் பொன் எனச் சுடரும் கவசங்களுடன் காண்டீபம் ஏந்தி நின்று போர்புரிந்த அர்ஜுனனை தன்னை மறந்தவனாக சாத்யகி நோக்கி நின்றான். அவன் தாடியிலும் உடலிலும் ஒருதுளிக் குருதிகூட இல்லை. அக்கணம் எங்கிருந்தோ களத்திலிறங்கியவன் போலிருந்தான். அவன் தேரின் அமரமுகப்பில் கடிவாளங்களைப் பற்றியபடி சம்மட்டியுடன் அமர்ந்திருந்த இளைய யாதவரின் உடலெங்கும் குருதி வழிந்தது. குருதியால் அவர் குழல்கற்றைகள் தோளில் திரிகளாக ஒட்டியிருந்தன. அவர் விழிகள் அங்கிருந்த அனைவரையும் நோக்கி நோக்கிச் சென்றன. அஸ்வத்தாமனின் தேரை அறைந்து உடைத்த அர்ஜுனனின் அம்புகள் கௌரவர்களை உளம்தளரச் செய்ய அந்தப் படை மெல்ல மெல்ல பின்னடையத் தொடங்கியது.

சாத்யகி தன்னை உணர்ந்தபோது தன் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அதை திருப்பி கௌரவப் படையின் வில்லவன் ஒருவனை நோக்கி செலுத்தி மீண்டுமொரு அம்பை எடுத்தபோது விந்தையான ஓர் அமைதியின்மையை அகத்தே உணர்ந்தான். மீண்டும் அதை உணர்ந்தபோது திடுக்கிட்டு வில்தாழ்த்தி தேர்த்தட்டிலிருந்து விழப்போகிறவன்போல் நிலைதடுமாறி வலக்கையால் தேர்த்தூணைப் பற்றிக்கொண்டான். சற்றுமுன் அவன் வில்லில் நாணேறிய அம்பு இளைய யாதவரைக் குறிநோக்கியிருந்தது. அவன் தேரை வந்து அறைந்தது துச்சாதனனின் அம்பு. இன்னொரு அம்பு அவன் நெஞ்சில் அறைந்து ஓசையுடன் உதிர்ந்தது. அவன் வில்வளைத்து அம்பு செலுத்தியபடி “முன்னேறுக! முன்னே செல்க!” என பாகனுக்கு ஆணையிட்டான்.

முந்தைய கட்டுரைஇலக்கியமும் பிறகலைகளும்
அடுத்த கட்டுரைபாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள்