கட்டண உரை -கடிதங்கள்

je

கட்டண உரை –ஓர் எண்ணம்

கட்டண உரை- கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ..

 

சில ஆண்டுகளுக்கு முன் ஓர் எழுத்தாளருடன் உரையாட சென்றிருந்தேன்.. இன்னும் சிலரும் உடன் இருந்தனர்.. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அது பயனற்ற உரையாடல் என தெரிந்து விட்டது.. காரணம் , அங்கிருந்த பலருக்கு ஓர் எழுத்தாளனுடன் எப்படி பேச வேண்டும் என தெரிந்திருக்கவில்லை.. கேள்வி கேட்க சொன்னால் ஒவ்வொருவரும் ஓர் உரை நிகழ்த்தினார்கள்.. எழுத்தாளரிடம் நான் ஒரு கேள்வி கேட்டால் , அவர் பதில் சொல்வதற்குமுன் மற்றவர்கள் ஆளாளுக்கு பதில் சொன்னார்கள் . . ஏமாற்றத்துடன் கிளம்பி வந்தேன்

 

இலக்கிய  நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் வரவில்லை என்பது சிலர் கவலை… தேவை அற்ற கூட்டம் வரக்கூடாதே என்பதும் நியாயமான கவலைதான்

 

உதாரணமாக , உங்களது டால்ஸ்டாய் குறித்த உரை நிகழ்ச்சி மிகச்சிறந்த அனுபவம் கொடுத்தது.. காரணம் அது பொது நிகழ்ச்சியாக இல்லாமல் , வரையறுக்கப்பட்ட அழைப்பாளர்களுக்கான நிகழ்வு.. எனவே வந்திருந்த அனைவருமே தீவிர கவனத்துடன் உரையை கேட்டனர்.  சக பார்வையாளருக்கு தொந்தரவு தரும் சிறு நிகழ்வுகூட நடக்கவில்லை…   மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது…

 

எல்லா நிகழ்ச்சிகளையுமே இப்படி நடத்தினால் நல்லதுதான்.. உண்மையில் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் இது போன்ற கூட்டங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதே நல்லது,, ஆனால் அது சாத்தியமற்றது.. கட்டண உரை என்பது ,ஆர்வமற்றவர்களை தடுத்து நிறுத்த சிறந்த வழி என்றே நினைக்கிறேன். இதன்மூலம் உண்மையிலேயே தேடலுடன் வருபவனுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்

 

கட்டண உரை என்பது கண்டிப்பாக மேலும் பலரை கூட்டங்களுக்கு ஈர்க்கும் என்றே நினைக்கிறேன்.. கால வரையறை , ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வருவதால் தேவை அற்ற சலசலப்புகள் இராது என்ற நம்பிக்கை என்பது போல பல காரணங்களால் இதுவரை கூட்டங்களுக்கு வராதவர்கள்கூட இனி வருவார்கள்

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஜெ

 

கட்டணக்கூட்டம் என்ற ஐடியா நல்லதுதான். அதை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளவேண்டும். கட்டணமில்லாத கூட்டமே உண்மையில் நல்லது. ஏனென்றால் அதில் ஒரு informal தன்மை உள்ளது. அதேபோல moderation இல்லாத கூட்டமே நல்லது.

 

ஆனால் இங்கே அவை தோல்வியடைகின்றன. என்ன காரணம் என்றால் இங்கே கூட்டத்திற்கு வருபவர்களில் ஒருசாரார் பொழுதுபோகாத வயசாளிகள். எதையாவது கொஞ்சம் வாசித்துவிட்டு அதை எங்காவது சொல்லிவிடவேண்டும் என்று தவிப்பவர்கள். இன்னொரு சாரார் உண்டு. அவர்கள் கொள்கை அடிமைகள். உலகையே மாற்றியமைக்கத்தக்க முடிவுகளை அடைந்துவிட்டதாக நினைப்பவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அதை சொல்லிக்கொண்டிருப்பவர்கள். இந்த இருசாராரும் எங்கேயும் இலக்கியக்கூட்டமே நிகழமுடியாதபடி ஆக்கிவிடுகிறார்கள்.

 

 

சரமாரியாகப்பேசுவது, எவரையும் பேசவிடாமல் செய்வது இவர்களின் வழக்கம். தேவையற்றவர்களை அனுமதிக்காமல் மட்டும்தான் இனிமேல் இங்கே கூட்டமே நடத்தமுடியும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறது. அதற்குக் கட்டனக்கூட்டம் ஒரு வழிமுறை. அதையும் திட்டமிட்டு உடைப்பார்கள். இருந்தாலும் முயன்றுபார்க்கலாம்.

 

கூட்டங்களில் பயனுள்ளவை பேசப்படவேண்டும், கொஞ்சமாவது படித்துவிட்டு வந்து பேசவேண்டும் என்பதை ஒரு நெறியாக வைத்துக்கொள்ளவேண்டும். என்ன பிரச்சினை என்றால் இங்கே நம்மில் பலருக்கும் informal பேச்சு எங்கே நடக்கவேண்டும் formal பேச்சு எங்கே நடக்கவேண்டும் என்று தெரியாது. informal பேச்சு நிகழவேண்டும் என்றால் அங்கே இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாகத்தெரிந்த சின்னக்குழுவாக இருக்கவேண்டும். பொதுவான கேள்விக்காரர்கள் இருந்தால் formal ஆன முறையான உரைதான் தேவை. இது உலகமெங்கும் உள்ள வழக்கம்.

 

அதேபோல எல்லா இடத்திலும் கேள்வி, உரையாடல், மறுப்பு ஆகியவை நிகழக்கூடாது. மறுத்துரை நிகழவேண்டும் என்றால் அங்கே இணையான வாசிப்பும் அறிவுத்தகுதியும் கொண்டவர்கள் இருக்கவேண்டும். கச்சிதமான moderation இருக்கவேண்டும். தேவையான விவாதங்கள் மட்டுமே நிகழும்படி கண்காணிக்கப்படவேண்டும். அதற்கு முன்னரே தெரிந்த குழுவின் சின்ன வட்டம்தான் சரியாக இருக்கும். முப்பதுபேருக்குமேல் ஆடியன்ஸ் இருந்தாலே விவாதம் சீரிய முறையில் நடக்க வாய்ப்பில்லை. அதற்குமேல் கூட்டமிருந்தால் அவர்களை ஒரே அமைப்பாக, ஒரு total entity யாக கண்டு அவர்களிடம் பேசும் உரைகள்தான் வழக்கம்.

 

இதையெல்லாம் நான் படித்த கல்லூரியில்கூட தெரிந்துகொள்ளவில்லை. ஆய்வுமாணவனாக இந்தியாவுக்கு வெளியே வந்து ஒரு நல்ல பல்கலையில் படிக்க ஆரம்பித்தபிறகுதான் புரிந்துகொண்டேன். நம் இலக்கியச்சூழலில் இதையெல்லாம் கொண்டுசென்று சேர்க்க இன்னும் நெடுங்காலமாகலாம்

 

சந்திரசேகர்