கட்டணக் கேட்டல் நன்று !

j

கட்டண உரை –ஓர் எண்ணம்

அண்ணன் ஜெயமோகனுக்கு,

நெல்லையில்  நவம்பர் 10ம் தேதியன்று நடைபெற இருக்கும் கட்டண இலக்கியக்  கூட்டம் வெற்றிபெற முதலில் வாழ்த்துகள்…

தேர்ந்த  வாசக ரசனைகளாலும் , அது சார்ந்து கட்டமைக்கப்படும் நண்பர் வட்டங்களாலும் , தெளிந்த தீர்க்கமாய் அலசலும் ஆராய்தலும் நீண்ட தொடர்தேடலின் கனமான பயணமாய் விவாதிக்கப்படக்கூடிய – அதன் வழி செழுமையான இலக்கியப் பிறத்தலுக்கும் தொடக்கத்திற்கும்  அடித்தளம் அமைக்கக்கூடிய , உரைகளின் வாசஸ்தலமாகிய விஷ்ணுபுரம் மற்றும் அது போன்ற   வேறு சில நல் இலக்கிய அமைப்புகளாலும் , தம் வாழ்நாட்களின் இறுதிவரை தமக்கென எதுவுமற்று படைப்பெனும் ஆனந்த அறிதலுடனும் , அதற்கெனவே பல்வேறு முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் காத்திரமான இலக்கியத் தெரிதலும் ஆர்வமும் மிகுந்த அமைப்புகளின் மூலமாகவும்  நடத்தப்பட்டுவரும் ஒவ்வொரு இலக்கிய உரை நிகழ்வும் , அது சார்ந்த அரங்க விவாத நிகழ்வுகளும் கட்டண இலக்கியக் கூட்டமாக நடைபெற வேண்டிய ஒன்றே.

ஒரு சிறந்த படைப்பாளியின் உரையின் மூலம் , இலக்கிய நேசிப்பும் ஆர்வமும் மிகுந்த நபர் ஒருவர் எவ்வளவோ… விஷய ஞானங்களை அறிதல் முடியும் என்பதே உண்மை. உதாரணமாய் தங்களது  உரைகளையோ, விஷ்ணுபுரம் விருது விழாவின் அரங்க உரைகளையோ, நிகழ்வின் முதல் நாள் காலை முதல் இரவு வரை நீடிக்கும் ஆரோக்கியமான இலக்கிய விவாதக் கலந்துரையாடல்களையோ  , எஸ்ரா , பவா  போன்றோரின் பேச்சுக்களையோ நேரிலோ அல்லது காணொளியிலேயோ  காணும் – கேட்கும் ஒருவர் அன்று ஏதாவதொரு புதிய அறிதலை அதன் வழி இன்னொரு முதல் தொடக்கத்தை அடையமுடியும் என்பதே உண்மை. தொடர்ந்து… சிங்கப்பூரிலிருந்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்களை தொலைபேசியில் அழைத்து நான் பேசிக்கொள்ளும் அந்தக் குறுகிய பொழுதுகளிலெல்லாம் ஜெயமோகன் எனும் வானம் விரிக்கும் நீள்… பெரிது… ஒரு தொலைபேசி உரைக்குள் , பல்வேறு  விஷயங்களை நான் நகரவேண்டிய பல்வேறு புதுத்தளங்களை அது சார்ந்த விசாலப் பார்வையினை எனக்குள் உணர்த்திவிடும்… இது போன்ற ஆழ்ந்த ஞானம் மிகுந்த எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் உரை நிகழ்வு மனதார , கட்டணத்துடன் கண்டு கேட்டு பயன்பெற வேண்டிய ஒன்று. ஒரு நேர்மையான படைப்பாளி , தன் உரையின் மூலம் தான் இதுகாறும்  தேடித் தேடித் தெரிந்த அனுபவக்கூறுகளின் ஆழ்ந்த ரசனையை நம் முன் விரிக்கிறான். அவனது பாரபட்சமற்ற இலக்கிய உழைப்பின் அவதானிப்புகளை நமக்காய் பரிமாறுகிறான். கற்றலின் கேட்டல் நன்றெனும் நீதிமொழியின் இரட்சகனாய் நமக்கு முன்னே நின்றுரைக்கிறான். அவ்வளவு எளிதில் கடந்துவிடமுடியாத அவனது ஞான விதைகளை கேட்பவரின் நிலமெங்கும் வீசி மகிழ்கிறான். நல் நிலமெங்கும் விளைச்சலின் குறுகுறுப்பு முளைவிட்டெழுவதற்கான சாத்திய உரத்தையும் சேர்த்தே பதிக்கிறான்.

nep

கட்டண உரையெனும் இப்புதிய திறவு, பல்வேறு இலக்கியக் களங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. களைகளற்று பொத்தாம்பொது கடந்து, ஒரு தேர்ந்த இலக்கின் வாசக அலை உருவாகலாம். ஹவுஸ்புல்களற்ற திடமான தெரிவுகளின் விருப்ப இருக்கைகளால் அரங்கம் அர்த்தமாகலாம். எந்தச் சூழலிலும் தேடலின் முனைப்புடன் ஆர்வமாய் அங்கு வந்து சேரும் இலக்கிய ருசும்பிகளின் வருகையால் கட்டண உரை மேலும் கவனம் பெறலாம்.

கவனித்து கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்களின்,  படைப்பாளிகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் உரைகளும் என்றும் இலவசமல்ல எனும் தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கான முதல் நகர்வே இந்த கட்டண உரை. கட்டணக் கேட்டல் நன்று !

அன்புடன்

நெப்போலியன்

சிங்கப்பூர்.

***

அன்புள்ள ஜெ

நம்முடைய மேடைப்பேச்சை இன்னொருவகையான வரையறைக்குள் கொண்டுசெல்லும் முயற்சியாகவே இதைப்பார்க்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பெருவாரியான மக்கள் கட்டணக்கூட்டத்துக்கு வரமாட்டார்கள். செலவு செய்வது தேவையில்லை என்றே நினைப்பார்கள். ஆரம்பத்தில் பெரிய தயக்கமும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இது நிலைபெற்றால் மக்கள் வருவார்கள். மக்கள் கட்டணம் கட்டி பேச்சைக்கேட்கிறார்கள் என்ற செய்தியே பெரிய விஷயம்தான்

ஏனென்றால் இங்கே கேட்பவர்களுக்கு எந்த ஒழுக்கமும் இல்லை. பேச்சு ஆரம்பித்தபிறகுதான் வந்துகொண்டிருப்பார்கள். பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே எழுந்து செல்வார்கள். பேச்சுக்கு நடுவே நாலுபேர் அமர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பேச்சில் ஆர்வம்கொண்டவர்களை மட்டுமே வரவழைப்பதர்கான ஃபில்டர் இந்த வழி என தோன்றுகிறது

தீவிரமாக பல துறைகலில் இதேபோன்ற பேச்சுக்கள் நடக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். இலக்கியம், கலைவரலாறு போன்ற துறைகளில் முக்கியமானவர்கள் பேசுவது ஒரு அவசியமான பண்பாட்டு நடவடிக்கையாகும்

ராஜசேகர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-34
அடுத்த கட்டுரை‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்