#me too-இயக்கம்
’நானும்’ இயக்கம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ , நலமா ?
இ்ன்று metoo பற்றிய உங்கள் பதில் படித்தேன் , இதில் நிரந்தர தீர்வு வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது , ஆண்களின் பார்வையில் பெண் அணைத்து இடங்களிலும் வெற்று உடலாக மட்டுமே பார்க்கப்படுவது வேதனைதான் …
என்வரையில் இந்த உடல் ஒரு பெரும் சிறை , இதை சுமந்துகொண்டு நான் தாண்டி ஓடிய தூரம் கொஞ்சமில்லை ,பெண் எத்தனை இயல்பாக பேசினாலும் ஆணுக்கு ஒரு தேடல் உள்ளுக்குள் இருந்துகொண்டேதான் இருக்கும் , தன் இரைக்காக காத்திருக்க அவன் வருதப்படுவதே இல்லை , …
நீங்கள் சொன்னதுபோல நேரடியான வன்முறைகள் எவ்வளவோ மேல் அதனை தைரியமாக எதிர்கொள்ள முடியும் ( நான் என்றுமே என்னுடன் சிறு கத்தி வைத்திருப்பேன் )ஆனால் பாசாங்கு கிழங்களின் எச்சில் ஒழுகும் பார்வை ஒரு கொலை செய்யக்கூட நம்மை தயார் செய்துவிடும் உண்மைதான் …
1997 ல் ஒரு கிழவன் எனது போனஸ் காசோலையை கையில் வைத்துக்கொண்டு முத்தத்துக்கு என்னிடம் பேரம் பேசிய கொடுமைகள் போல இன்றும் உண்டுதான் …
பெற்றோர் வளர்ப்பு ஒரு பக்கம் உண்டு என்றாலும் இது ஆணுக்குள் பிறப்பிலேயே வளரும் ஒரு மிகையூக்க குணம் , இங்கு நீங்கள் சொனதுபோல் குடும்ப அமைப்பு இதை மறைக்க மட்டுமே பார்க்கும், சட்டம் காவல் துறை நீதிமன்றம் எல்லாமே பாசாங்குதான் , குற்றம் அங்கு மேலும் தூண்டப்படுகிறது,
சிலநேரம் நான் நினைப்பதுண்டு குழந்தை திருமணம் சரியானதுதானோ என்று , ஆணுக்கு 15 வயதில் பெண்ணை தொட்டுவிட்டால் சரியாகி விடுவானோ ? சிரிப்புதான் வரும்..
இதுபோன்ற பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் பதவியில் இருக்கும் நடுவயது கடந்த ஆண்களால் நடக்கிறது அதுவும் இளம் பெண்கள் மற்றும் ஆளுமை மிக்க பெண்களுக்கு இது பெரிய வதை ..
என்னிடம் ஒரு துப்பாக்கி கொடுத்தால் 1000 ஆண்களை சிறு சலனமில்லாமல் சுட்டு வீழ்த்த முடியும் , இங்கு பெண்களுக்கு நடக்கும் அங்கீகார மீறல்கள் அனைத்தும் உடல் சார்த்தவைகளே …
இங்கு உடல் கொண்டு சாதிக்கும் பெண்களை பற்றி நான் எதுவும் கூறவில்லை ஆனாலும் அதுவும் உண்டு அப்படிப்பட்ட பெண்களால் இன்னமும் அதிகமாக நாங்கள் கீழ் இறக்கப்பட்டு ” நீ மட்டும் என்ன பெரிய ?!” என்பது போன்ற நேரிடை தாக்குதலுக்கு ஆட்படவேண்டி உள்ளது ..
நிறைய பேசியாகிவிட்டது ஆண் தானாக திருந்தினால் இது மாறலாம் அல்லது உச்ச பட்ச தண்டனைகள் ஒரு மாயத் திரையை உருவாக்கலாம் மற்றபடி, என் பட்டி சொல்வதுபோல நழுவும் மீனாக இந்த ஆண்களிடம் இருந்து நழுவி ஓடும் வித்தையை கற்றுக்கொள்ள வேண்டியதுதான் .
முதல்முறையாக ஒரு தெளிவில்லாத பதிலை உங்களிடம் இன்று படித்தேன் , ஒரு ஆணாகவும் ,நல்ல தகப்பனாகவும் உங்களுக்குள் ஓடும் ஒரு விரக்தியை காண முடிந்தது …
மாறும், நாங்களும் வெல்வோம் இதே உடலோடு …
நன்றி ஜெ
அன்புடன்
ஜெ
அன்புள்ள ஜெ
மிடூ இயக்கம் நன்மை செய்திருக்கிறதா என்றால் ஒரு நன்மையை செய்திருக்கிறது. இங்கே ஆண்களின் மனநிலை என்ன என்பதை பெண்களுக்குக் காட்டியிருக்கிறது. ஆண்களைக் காப்பாற்றுவது எது, எதை நம்பி இப்படி துணிந்து பாலியல் வேட்டைக்காரர்களாக ஆகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. நீதிமான்களும் நியாயவான்களும் தெளிவாகவே ஒரு நிலைபாடு எடுக்கிறார்கள். ஆண்கள் எல்லாரும் சாதி, மதம், கட்சி, கருத்து அடையாளம் கொண்டவர்கள். அவர்களை ஆதரிக்கவேண்டுமா நார் நாராகக் கிழிக்கவேண்டுமா என்பதெல்லாம் அவர்கள் எந்த நிலையில் இருப்பவர்கள் என்பதைக்கொண்டுதான் முடிவெடுக்கப்படுகின்றன.
வெட்கமே இல்லாமல் ஆம், அவர் எங்கள் கட்சி, ஆகவே அப்படித்தான் ஆதரிப்போம், குற்றம்சொல்லும் பெண்ணை நடத்தைகெட்டவள் என்போம் என்று சொல்கிறார்கள். இதில் எந்தத்தரப்பும் மாறுபட்டது அல்ல. பாலியல் வன்முறைகளை ஆதரித்து இவர்களால் எவ்வளவு எழுதப்படுகிறது என்று பார்ப்பது பதற்றம் அளிக்கிறது! இதை அஞ்சித்தான் பெண்கள் இத்தனைநாள் அடங்கிக்கிடந்தார்கள். பாலுறவுப்படங்களை பகிரும் ஆண்கள், வேடிக்கையாக ஆபாசம் பேசுபவர்கள் எல்லாரும் உள்ளூர இத்தகைய நகங்களுடன்தான் அலைகிறார்கள் என்பதை தெளிவாகவே காட்டிவிட்டது இந்த பிரச்சினை.
பெண்களுக்குப் பெண்கள் மட்டும்தான் காவலாக இருக்கமுடியும். பெண்கள் ஆண்களுக்கு வெறும் உடல்கள்தான். அவர்களுக்குச் சாதி, மதம், மொழி, கருத்து, கட்சி ஏதும் கிடையாது என்று தெரிந்துவிட்டது. ஏன் மிடூ இயக்கம் வருகிறது என்ற கேள்வியையே எவரும் கேட்டுக்கொள்ளவில்லை. எவருமே இங்கே ஆதரவு கிடையாது. வாழ்க்கையில் எல்லாவகையிலும் வெற்றிபெற்று நிலையாக நின்றுவிட்ட பெண் தான் எதையாவது சொல்லமுடியும். அதாவது பாதுகாப்பான காலம் கழித்து. அப்போது சொன்னால் அவளை அழிப்பார்கள்.
இப்போது சொல்லும்போதுகூட எத்தனை ஆண்கள் சப்பைக்கட்டு கட்ட வருகிறார்கள். ஆதாரத்துடன் நீதிமன்றம் போகலாமே என்பதிலிருந்து நீ யோக்கியமா என்பது வரை எவ்வளவு பேச்சு. ஆதாரத்துடன் கோர்ட்டுக்குப் போகமுடிகிற நிலை இருந்தால் மிடூ இயக்கமே வந்திருக்காதே. இது உலகளாவிய ஒரு நிகழ்வு. பண்பாட்டில் இதில் பங்களிப்பை காலம் சொல்லும். அப்படி காலம் பதிவுசெய்யும்போது இங்குள்ள முற்போக்குகளும் பிற்போக்குகளும் ஒன்று சேர்ந்து என்ன நிலைபாடு எடுத்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கும்
ஆர்.
அன்புள்ள ஜெ
metoo இயக்கமும் அதன் எதிர்வினைகளும் என்னைப்போன்ற பெண்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளன. முக்கியமாக இங்குள்ள புரட்சியாளர்கள் மற்றும் முற்போக்காளர்களின் பாவனைகள் வெளியே தெரிந்தது. பொதுவாக இந்த இயக்கத்தில் அதிகமாக மாட்டிக்கொண்டவர்கள் முற்போக்காளர்கள். ஏனென்றால் அவர்களைப் பெண்கள் கூடுதலாக நம்புகிறார்கள். பெண்களிடம் எப்படி நம்பிக்கையாகப்பேசவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் ஒரு பெண்ணின் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உடனே பயன்படுத்திக்கொள்ளவே முயல்வார்கள்
அந்த முற்போக்காளர்கள் ஒருவர் பிடிபட்டால் மற்ற அனைவரும் வெட்கமே இல்லாமல் அவரை ஆதரிக்கிறார்கள். எங்கே ஆதாரம் என்று குமுறுகிறார்கள். இதெல்லாம் ஊடகத்தில் கவனம்பெறுவதற்காகச் செய்வது என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஒரு பெண் தன்னை இழிவுசெய்யும் இந்தக்கும்பல் முன்னால் வந்து நின்று சொல்வது பெரிய விஷயம். இதில் என்ன விளம்பரம் கிடைக்கும்? அவமானம்தான் மிச்சமாகும். தொழில்வாய்ப்புகளும் இல்லாமலாகும். இருந்தாலும் இதை நம்மூர் முற்போக்குக்கும்பல் சொல்கிறது.
அதேபோல மதவாதிகள். நேற்றுவரை ஒழுக்கம் தர்மம் என்று கூச்சலிட்டவர்கள் அவர்களில் சிலர் சுட்டிக்காட்டப்பட்டபோது அப்படியே அமைதியாக ஆகிவிடுகிறார்கள். எவருக்கும் பெண்களின் நலன் மீது அக்கறை இல்லை. நாளை இவர்கள் வீட்டுப்பெண்ணுக்கும் இந்த நிலைவரலாம் என்பது பற்றி அக்கறை கிடையாது. தங்களைச் சார்ந்தவர்களைக் காப்பாற்றவேண்டும், அதற்கு குற்றம்சாட்டுபவரை அவதூறு செய்யவேண்டும். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் சொல்லவேண்டும். இதுதான் இவர்களிடம் காணக்கிடைக்கிறது
இப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள பெருந்தலைகள் எல்லாருமே செக்சுவல் பிரிடேட்டர்ஸ் என்று தெரியாத எவருமே ஊடகங்களிலோ பொதுவாக அறிவுச்சூழலிலோ இருக்கமுடியாது. ஏனென்றல் இதை மறைக்கவே முடியாது. இது கிசுகிசுவாக இருந்துகொண்டே இருக்கும். இப்போதுதான் இது ஒரு பொதுவான பேச்சாக ஆகிறது. ஆனால் உடனே எவ்வளவு பாசாங்குகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள்
பெண்களுக்கு பெண்கள் மட்டுமே காவல்.
எஸ்.