‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37

bowதெய்வமெழுந்த பூசகன் என வில் நின்று துள்ள அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அசங்கன் போர்முழவில் ஒலித்தது தன் தந்தையின் பெயரென்பதை எண்ணியிராக் கணமொன்றில் ஓர் அறை விழுந்ததுபோல் உணர்ந்தான். இயல்பாக அவன் வில்லும் அம்பும் அசைவிழந்தன. உள்ளம் சொல் மீண்டபோது “தந்தை!” என்று அவன் கூவினான். அவனைச் சூழ்ந்திருந்த இளையோர் எவரும் முழவிலெழுந்த அச்சொல்லை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அவர்களை நோக்கி கைவீசி “தந்தை!” என்று அவன் மீண்டும் சொன்னதும் இளையவன் “ஆம் மூத்தவரே, தந்தையின் பெயர்!” என்றான்.

அவனில் எழுந்த முதல் எண்ணம் தந்தை களம்பட்டிருப்பாரோ என்பதுதான். அவன் கைகள் பதற கால்கள் குழைய தேர்த்தட்டில் தூண்பற்றி நின்றான். சித்ரன் தொழும்பனுக்கு கை காட்ட அவன் மேலெழுந்து இறங்கி “பாஞ்சாலர் சிகண்டி சூழப்பட்டிருக்கிறார். அவருக்கு துணை செல்க என்று யாதவ அரசருக்கு ஆணை சென்றுள்ளது” என்றான். அசங்கன் நெஞ்சின் எடை குறைய வியர்வையை உணர்ந்து புன்னகை செய்தான். “தந்தையை துணை கொள்க!” என்று ஆணையிட்டான். அவன் ஆணையை முழவு ஒலியாக்கியது. உத்ஃபுதனும் சந்திரபானுவும் சபரனும் சாந்தனும் முக்தனும் தேர்களுடன் அவனை சூழ்ந்துவந்தனர். சாலனும் சினியும் சித்ரனும் சித்ராங்கதனும் அடுத்த நிரையாக உடன் தொடர்ந்தனர்.

போர் எவ்வகையிலும் அவன் எண்ணியதுபோல் இருக்கவில்லை. அது தான் எண்ணியதுபோல் இருக்காதென்று அசங்கன் முன்னரே அறிந்திருந்தான். ஆனால் அக்கணிப்பையும் மீறி பிறிதொன்றாக இருந்தது. ஈவிரக்கமற்றதாக, பொருளற்றதாக, வெறும் கொலையும் இறப்புமாக. தனித்தன்மையும் வீரமும் முட்டித் ததும்பும் படைக்கலங்களின் அலைப்பெருக்கில் முற்றிலும் பொருளிழந்து போக கற்றவையும் கேட்டறிந்தவையும் கேலிக்குரியதாக மாறும் மெய்வெளியாக அது இருக்குமென்று அவன் எண்ணியிருந்தான். மூத்த போர்வீரர்கள் மீள மீள அதையே கூறினர்.

“நமக்கு காட்டப்படும் திசை நோக்கி அம்புகளை செலுத்தவேண்டும். பெரும்பாலும் நம் எதிரி முகம் அறியும் தொலைவிலிருப்பதில்லை. நாம் இலக்கு நோக்கி அம்பெய்வதும் பெரும்பாலும் கூடுவதில்லை. அம்புகளின் எண்ணிக்கையை பெருக்குவதொன்றே எளிய படைவீரர் செய்யக்கூடுவது. படைவீரனென்பவன் ஒரு செங்கல். அவனை அடுக்கி படையெனும் சுவர் கட்டப்படுகிறது. அதற்கப்பால் அவன் எதுவுமல்ல” என்றார் உக்ரர். “நாம் நம் சாவு வழியாக அனைத்தையும் சீர்செய்கிறோம். பிற அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிகழ்வுகள். எவராலும் வகுத்துக்கொள்ள முடியாத கனவுப்பெருக்கு” என்றார் சக்தர்.

துயின்றுகொண்டிருந்த இளைய வீரனை நோக்கி சுதார்யர் சொன்னார் “இளம்வீரன் முதல்நாள் போரில் அக இறப்பு ஒன்றை அடைகிறான். பின்னர் புற இறப்பு நோக்கி செல்கிறான். சிலர் சிரித்துக்கொண்டு, சிலர் அழுதுகொண்டு. அவ்வளவே வேறுபாடு.” அசங்கன் தன் இளையோருடன் படைநிரைக்கு அப்போதுதான் வந்திருந்தான். அவர்களுக்கான தேர்கள் வந்துகொண்டிருக்க கவசங்களுடன் காத்திருந்தனர். “மிக இளையோர்” என்றார் சுதார்யர். “அவர்களில் இளையவர் முறையாக படைபயின்றுள்ளாரா?” அசங்கன் “அவன் படைக்கலப்பயிற்சி பெற்றவன்” என்றான். “அது படைப்பயிற்சி அல்ல. படைப்பயிற்சி என்பது தனக்கு எவ்வகையிலும் அப்பாற்பட்ட பொதுவான வஞ்சத்தை தானும் கொண்டு கனலென உளம் மூட்டிக்கொள்வதற்கான பயிற்சி.” அவருடைய ஏளனம் அவனை சொல்லடங்கச்செய்தது.

முதல் மூன்றுநாள் போரில் பாண்டவப் படையில் பெரும்பகுதியினர் பீஷ்மரால் கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். ஏவலர்களில் படைப்பயிற்சி கொண்டவர்களை தேர்ந்தெடுத்து கவசம் அணியவும் அணிநிற்கவும் பயிற்சி அளித்து படைகளுக்குள் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். மருத்துவநிலைகளில் புண்பட்டுக்கிடந்தவர்களில் சற்றேனும் எழும் நிலையில் இருந்தவர்களை கொண்டுசென்று காவல்நிலைகளின் மேல் அமரச்செய்துவிட்டு அங்கிருந்த காவலர்களை படைகளுக்கு அனுப்பினர்.  “அடுமனையோர் போரிடும் நாள் அணுகிக்கொண்டிருக்கிறது” என்றார் உக்ரர். “இறந்த உடல்களை வீணாக எரித்துவிட்டோம். அவற்றை தேரில் அமைத்து களத்திற்கு அனுப்பியிருக்கலாம். அம்புதைத்து சரிந்துவிழுவதற்கே என்றால் இறந்த உடலுக்கும் இருந்த உடலுக்கும் என்ன வேறுபாடு?”

ஒவ்வொருநாளும் மேலும் படைக்காக படைப்பிரிவுகளிலிருந்து கோரிக்கை வந்தது. படைப்பிரிவுகளை கலைத்து மீண்டும் பத்தென்றும் நூறென்றும் தொகுத்தனர். “நேரடியாக பிலங்களுக்கும் சிதைகளுக்கும் சென்றவர் பாதி. மருத்துவநிலையினூடாகச் சென்றவர் மீதி. முதல் வழி எளிது, வலியற்றது, சிறுமைகொண்டு நம்பிக்கையிழந்து உளம்தளர்ந்து தெய்வங்களையும் மூதாதையரையும் குலத்தையும் கொடியையும் வசைபாடி பழிகளை ஈட்டிக்கொண்டு சென்றடையும் இவ்வழி மிகச் சுற்றுகொண்டது” என்றார் மருத்துவரான பிரபர். “விழுந்த கணமே செல்பவர்களுக்கு முற்பிறப்பின் நல்லூழ்ப்பயன் சேர்க்கப்பட்டுள்ளது என்று அறிக!” என்றார் அவருடைய துணைவரான சத்வர்.

அவனைச் சூழ்ந்து நின்றிருந்த இளையவர்கள் ஒருவருக்கொருவர் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். சினியின் கையிலிருந்து சாந்தன் எவருமறியாது எதையோ பிடுங்கிக்கொண்டான். அவன் சீற்றத்துடன் ஒரு சொல் உரைக்க உத்ஃபுதன் அவனை அதைவிடத் தாழ்ந்த குரலில் அடக்கினான். இன்னமும் அவர்கள் போரெனில் என்னவென்று உணரவில்லை என்பதை அசங்கன் அறிந்தான். அவர்கள் பதின்மரில் அவன் மட்டுமே போரை நேரில் காணும் வாய்ப்பையேனும் பெற்றிருந்தான். பிறர் முந்தையநாள் புலரி வரை மிகவும் பின்னணியில், குறுங்காட்டில் எல்லைகளில் அமைந்த வெவ்வேறு காவல்மாடங்களில் பணியாற்றினர். புறக்காவல்நிலைகளிலும் காவலர்கள் எவரும் போரையன்றி எதையும் பேச வாய்ப்பில்லை. போருக்கப்பால் எண்ணமென எதுவும் கொண்டிருக்கவில்லை எவரும்.

ஆனால் இளையோரின் உள்ளம் இயங்கும் வழி வேறு என அவன் அறிந்திருந்தான். அவர்கள் தாங்கள் அறியாத அனைத்தையும் பிறருடைய உலகமென ஆக்கிக்கொள்ளக்கூடியவர்கள். எப்போதும் அனைத்துக்கும் வெளியே நின்றிருப்பவர்களாக தங்களை கருதிக்கொள்ள அவர்களால் இயலும். தங்களை உலுக்கும், ஆட்கொள்ளும் அனைத்தின்மீதும் மெல்லிய கேலியை கலந்துகொண்டு ஒருவரோடொருவர் நகையாடி அதை முதிர்ந்தவர்களின் உலகென்று மாற்றி தங்களுக்கென சிறு உலகொன்றை சமைத்துக்கொள்வார்கள். அலைகொந்தளித்து பெருகிச்செல்லும் நதிப்பரப்பில் சிறு குமிழியொன்றை உருவாக்கி அதில் ஒட்டிக்கொண்டு மிதந்து செல்லும் எறும்புகள்போல.

முந்தையநாள் அந்தியில்தான் அவனுக்கு திருஷ்டத்யும்னனின் ஓலை வந்தது, படைமுகப்பில் சிகண்டியின் படைப்பிரிவுகளில் ஒன்றாக அவன் பணியாற்ற வேண்டும் என்று. முதலில் அந்த ஓலையை படித்தபோது அது காவல் பணிக்கான ஆணை என்றே அவன் உளம் இயல்பாக எண்ணியது. சிகண்டியின் படைப்பிரிவு பதினெட்டாவது துணைப்பிரிவு என்று ஓலையில் படித்து அதை மீண்டும் மூங்கில் குழாயில் இட்டபோதுதான் போர்முனைக்கான ஆணை என்று அறிந்து அவன் உளம் திடுக்கிட்டது. அருகே நின்றிருந்த உத்ஃபுதன் “அரசாணையா, மூத்தவரே?” என்றான். “ஆம்” என்றபோது அவன் குரல் நடுங்கியது.

உத்ஃபுதன் அவன் கையிலிருந்து ஓலையை வாங்கி படித்தான். “நம்மை போர்முனைக்கா அனுப்பியிருக்கிறார்கள்?” என்றான். அப்பால் வளைதடியை வானில் எறிந்து பிடித்துக்கொண்டிருந்த சினி அவனை நோக்கி வந்து “நம் பதின்மரையுமா, மூத்தவரே?” என்றான். “ஆம், நாம் ஒரு சிறுதிரள் என செல்லவேண்டும் என்று ஆணை” என்றான் அசங்கன். உத்ஃபுதன் புன்னகைத்து “நன்று. தனியாக படைமுகப்பில் சென்று நின்றுகொண்டிருக்க வேண்டுமா என்று அஞ்சிக்கொண்டிருந்தேன். மிக நன்று. நாம் எங்கும் ஒரு திரளென்றே இருக்கப்போகிறோம்” என்றான்.

அச்சொல்லிலிருந்த மங்கலமின்மையால் எரிச்சலுற்ற அசங்கன் “நாளை காலை படைப்புறப்பாடு என்றால் இன்று நமக்கு காவல் பணியிருக்காது. நமது காவல்நிலைகளில் சென்று இச்செய்தியை சொல்லிவிட்டு துயிலுங்கள். ஆழ்ந்த துயிலே மறுநாள் காலையில் போருக்கெழுகையில் உடலையும் உள்ளத்தையும் ஆற்றல்கொள்ளச் செய்கிறது” என்றான். “ஆனால் என்னால் துயில இயலாது” என்று சினி சொன்னான். “பகல் முழுக்க குறுங்காட்டுக்குள் நிழலில் துயின்று சற்று முன்னர்தான் நான் விழித்துக்கொண்டேன். மேலும் நாளை போருக்குப் போவதைப்பற்றி எண்ணினால் என்னால் துயில முடியாதாகும்.”

உத்ஃபுதன் “அகிபீனா உண்டு துயில்க, அறிவிலி!” என்றான். “ஒவ்வொரு நாளும் ஏற்கெனவே நான் அகிபீனா உண்டுதான் துயில்கிறேன்” என்றான் சினி. “அந்த இனிப்பு இப்போது எனக்கு குமட்டுவதில்லை.” உஃத்புதன் “மறுமுறையும் உண்” என்றான். “இனிமேல் உணவென்றுதான் அதை அருந்தவேண்டும்” என்றான் சினி. அவர்கள் வழக்கமான களியாட்டு மனநிலைக்குச் செல்வதை உணர்ந்த அசங்கன் “செல்க, துயின்று மீள்க!” என்றான். அவர்களை அனுப்பிவிட்டு தன் காவல்நிலைக்குச் சென்று தன்னை போருக்கு விடுவித்திருப்பதை அறிவித்து மீண்டான். யானைத்தோல் கூடாரத்தை சுற்றி இளையோர் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதை தொலைவிலேயே கண்டான். அவன் அணுகியதும் அவர்கள் சொல்லாடலை நிறுத்தி எழுந்து நின்றனர். சினியின் கண்களில் புன்னகை எஞ்சியிருந்தது.

அசங்கன் “நான் உங்களிடம் துயிலும்படி சொன்னேன்” என்றான். “ஆம், துயில்வதைப்பற்றிதான் எண்ணிக்கொண்டிருக்கிறோம்” என்றான் சாந்தன். சினி “மது அருந்தி துயில்வதா, அகிபீனாவா, அல்லது இரண்டுமா என்று பேசிக்கொண்டிருந்தோம், மூத்தவரே” என்றான். அதிலிருந்த கேலியை உணர்ந்து அசங்கன் முகத்தை இறுக்கிக்கொண்டு “துயில்க! இன்னும் சிறுபொழுதில் நான் வந்து பார்ப்பேன். துயிலாதவர்களை தண்டிப்பேன்” என்றான். “அவ்வாறெனில் தாங்கள் துயிலப்போவதில்லையா, மூத்தவரே?” என்றான் சினி. அசங்கன் சீற்றத்துடன் திரும்பிப் பார்க்க “ஏனெனில் நற்துயிலே போரில் ஆற்றலை அளிக்கும் என்றார்கள்” என்று அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். அசங்கன் சினத்தைக் கடந்து “செல்… துயில் கொள்க!” என்று தாழ்ந்த குரலில் சொல்லி தன் குடிலுக்குள் நுழைந்தான்.

அன்றிரவு முழுக்க அவன் துயிலவில்லை. அவனிடம் இரு அகிபீனா உருண்டைகள் இருந்தன. அவற்றை விழுங்கலாம் என்று எண்ணினான். ஆனால் கையிலெடுத்து விரலால் நெருடியபடி வெறுமனே எண்ணங்களை ஓடவிட்டு அமர்ந்திருந்தான். பிறகு மீண்டும் அவற்றை சிறு மூங்கில் சிமிழுக்குள் வைத்தான். இன்றிரவு அரிதானதாக இருக்கக்கூடும். விழித்திருந்து இதில் வாழ்வதே உகந்தது. நாளை இரவு மீள்வேனெனில் துயில் கொள்வேன். ஏன் அவ்வாறு எண்ணிக்கொள்கிறோம்? ஒவ்வொரு நாளும் பல்லாயிரவர் போரிலிருந்து மீள்கிறார்கள்.

ஆனால் போரிலிருந்து மீள்பவர்களை அவன் முன்னரே பார்த்திருந்தான். பெரும்பாலானவர்கள் நடு அகவை கடந்தவர்கள். முதிரா இளைஞர் போர்முனையிலிருந்து மீள்வது அரிதினும் அரிது. “உடல் கொண்டிருக்கும் எச்சரிக்கைகள் அனைத்தையும் உள்ளத்தின் பதற்றத்தால், போர்க்களத்திலெழும் களிவெறியால் இழந்துவிட்டிருக்கிறார்கள் இளையோர். அவர்கள் போர்க்களத்தில் நின்றிருப்பதை பாருங்கள், சில கணங்களுக்குள் படைசூழ்கையின் நெறிகளை மறந்துவிட்டிருப்பார்கள். தங்களை அறியாமலேயே தங்களைப்போன்ற இளையோரை நெருங்குவார்கள். நீர்க்குமிழிகள் ஒன்றோடொன்று இணைந்துகொள்வதுபோல் ஒட்டிக்கொண்டு களத்தில் நின்று ததும்புவார்கள். பெரும்பாலும் எப்பயனும் இன்றி களத்தில் தலைநிறைப்பதொன்றையே அவர்கள் ஆற்றுகிறார்கள். இரக்கமின்றி வெட்டி சரிக்கப்படுகிறார்கள்” உக்ரர் காவல்நிலையில் அவனிடம் சொன்னார்.

போருக்கெழுந்த காலையில் இளையோர் உள்ளம் துள்ளிக்கொண்டிருந்தார்கள். “சாந்தனும் முக்தனும் எங்கே?” என்றான் அசங்கன். “அவர்கள் தங்கள் காவல்மாடங்களில் இருந்து இன்னும் ஆணைபெற்று மீளவில்லை. வந்துவிடுவார்கள்” என்றான் உத்ஃபுதன். அசங்கன் அமைதியிழந்தவனாக “கவசங்கள் வந்துவிட்டனவா?” என்றான். சந்திரபானு “ஆம், உணவுண்ட பின்னர் அவற்றை அணியலாம் என்றனர் ஏவலர்” என்றான். தான் தந்தையைப்போல் ஆகிவிட்டிருப்பதாக அசங்கன் எண்ணினான். ஆனால் அமைதியின்மையை மறைக்க அவனால் இயலவில்லை. “அனைவரும் துயின்றீர்களா?” என்றான். சினி “ஆம், நான் துயின்றேன். ஆனால் முன்னரே விழித்துக்கொண்டேன்” என்றான்.

சித்ரன் “ஒவ்வொருநாளுமென இதற்காக காத்திருந்தேன், மூத்தவரே. காவல்பணிபோல் ஆத்மாவை அழிப்பது பிறிதொன்றில்லை. விழித்திருப்பதும் ஒன்றும் செய்யாதிருப்பதும் ஒருங்கே அமையவேண்டிய பணி…” என்றான். உத்ஃபுதன் “கீழ்மை சேராமல் காவலனென்று அமர்வது எளிதல்ல” என்றான். சந்திரபானு “இன்று நம்மை அனுப்பிவிடுவார்கள் என்று நேற்றே சொன்னார்கள். நானும் சபரனும் அதைப்பற்றி நேற்றே பேசிக்கொண்டோம்” என்றான். சினி எண்ணியிராக் கணம் உவகைகொண்டு “போர்! நான் எண்ணிக்கொண்டே இருந்தேன்!” என்று கூவி கைகளை விரித்து துள்ளி “போர்க்களத்தில் மூத்தவர் கடோத்கஜர் பறக்கிறார் என்றார்கள். பறக்கும் கலையை அவரிடம் கற்பேன்!” என்றான்.

சாந்தனும் முக்தனும் வந்துசேர்ந்ததும் அசங்கன் “ஏன் பிந்தினீர்கள்? பொழுதில்லை” என்று அவர்களிடம் சினம் காட்டிவிட்டு தன் குடிலுக்கு சென்றான். அங்கே கவசங்களுடன் ஏவலர் காத்திருந்தனர். அவன் பெட்டிமேல் அமர்ந்ததும் குறடுகளையும் கவசங்களையும் அணிவித்தனர். கூத்தில் ஆட்டனை ஆடையும் உருமாற்றும் அணிவித்து தெய்வமென்றாக்குவதுபோல. அவன் அந்தக் கூட்டுக்குள் தன் உடல் மென்தசை நத்தை என சுருண்டுகொண்டதை உணர்ந்தான். சூழ்ந்து கவசங்கள் அணிந்துகொண்டிருந்த இளையோரும் பிறராக மாறிவிட்டிருந்தனர். கவசங்களில் இருளில் எரிந்த பந்தங்கள் செவ்வொளியாக அலைபாய்ந்தன. அந்தக் காலையின் ஒவ்வா தவிப்பு ஏன் என்று அவனுக்கு புரியவில்லை.

கவசங்கள் அணிந்ததும் இளையவர் வந்து அவனருகே நின்றனர். அவன் அவர்களை ஒரு நோக்கு பார்த்தபின் தலைதிருப்பிக்கொண்டு தாழ்ந்த குரலில் “செல்வோம்” என்றான். அவர்கள் பாடிவீட்டில் சாத்யகியை சென்று கண்டனர். தொலைவில் கவசங்களுடன் வந்த அவர்களை பார்த்ததுமே உயரமற்ற மரப்பெட்டிமேல் அமர்ந்து கவசங்கள் அணிவித்துக்கொண்டிருந்த ஏவலர்களுக்கு உடலை அளித்திருந்த சாத்யகி கண் சுருங்க நிமிர்ந்து பார்த்தான். அசங்கன் அவனை அணுகி “வணங்குகிறேன், தந்தையே!” என்றான். திரும்பி தன் இளையோரை அவன் பார்க்க அவர்கள் ஒவ்வொருவராக சாத்யகியின் கால் தொட்டு வணங்கினர். இடக்கையை அவர்கள் தலையில் வைத்து “நலம் சூழ்க!” என்று சாத்யகி சொன்னான்.

அசங்கன் குனிந்து வணங்கி எழுந்தபோதுதான் தந்தை உரைத்த அச்சொல்லில் இருந்த பொருளின்மையை உணர்ந்தான். நீடுவாழ்க என்றோ வென்று மீள்க என்றோ அவர் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வதில் பொருளில்லை என உணர்ந்திருக்கலாம். அச்சொல்லை கூறுவதேகூட ஒரு நம்பிக்கை இழப்பென அவருக்கு தோன்றியிருக்கக்கூடும். அவர் ஏதேனும் சொல்வாரென்று அசங்கன் எதிர்பார்த்தான். சாத்யகி பக்கவாட்டில் திரும்பி ஏவலனிடம் தன் படைக்கலங்களை கொண்டுவரும்படி கைகாட்டினான். அசங்கன் மீண்டும் ஒரு முறை வணங்கி செல்வோம் என்று இளையோரிடம் கைகாட்டியபின் நடக்க அவர்கள் கவசங்கள் ஒலிக்க அவனை தொடர்ந்தனர்.

உத்ஃபுதன் அவனிடம் “தந்தை நாம் போர்புரிவதை விரும்பவில்லை என்று தோன்றியது” என்றான். அசங்கன் திரும்பி நோக்காமல் “விரும்பவில்லை என்றால் நம்மை அழைத்துவந்திருக்க வேண்டியதில்லை” என்றான். சித்ரன் “ஆம், எனக்கும் அவ்வாறே தோன்றியது” என்றான். “அவர் விழிகளில் வெறுப்பு இருந்ததோ என்றுகூட ஐயுற்றேன்.” “நாம் போருக்கெழுவது அவர் ஆணையால்” என அசங்கன் எரிச்சலுடன் சொன்னான். “ஆனால் அம்முடிவை எடுக்கையில் அவர் பிறிதொரு உளநிலையில் இருந்திருக்கலாம். இந்நான்கு நாள் போருக்குப் பின் ஒவ்வொருவரும் முற்றிலும் மாறானவர்களாக ஆகியிருக்கிறார்கள். பொருளையோ பொருளின்மையையோ சென்றடைந்திருக்கிறார்கள்” என்றான் சந்திரபானு.

அசங்கன் திரும்பி ஏளனத்தால் உதடுகள் சுழிக்க “பொருளை சென்றடைந்த எவரேனும் இருக்க இயலுமா இங்கே?” என்றான். சந்திரபானு “நான் அறியேன். இச்சொற்களை நேற்று படைகளில் பேசும்போது எவரோ சொன்னார்கள். நன்றாக உள்ளதே என்று எடுத்து வைத்துக்கொண்டேன்” என்று சிரித்தான். அச்சிரிப்பு உள்ளத்தை நடுங்கச்செய்ய அசங்கன் திரும்பிக்கொண்டான். ஒருகணம் அவனுள் பெருஞ்சீற்றமொன்று எழுந்து கைவிரல்கள் நடுங்கச் செய்தது. விரல்களை முறுக்கி கைகளை சுருட்டியபடி பற்களைக் கடித்து தலைகுனிந்து நடந்தான். எதன் பொருட்டு தந்தை இவர்களை இக்கொலைக்களத்துக்கு அழைத்து வந்தார்? வெறும் ஆணவம். அதை பணிவென்றும் முற்றளிப்பென்றும் எண்ணிக்கொள்கிறார். வெற்று ஆணவமன்றி வேறொன்றுமில்லை. தான் படிந்தோன், முற்றளித்தோன் என்று காட்டவிழையும் தன்முனைப்பு. பிறருக்கு மேல் தன்னை எழுப்பி நிறுத்திக்கொள்ள விழையும் சிறுமை.

பின்பு அவன் உளம் மெல்ல அவிந்தது. அல்ல, தன் முற்றளிப்புக்கும் முழுப் பணிவுக்கும் எதிராக தன்னுள் எழுந்த மீறல்களைக் கண்ட அச்சம் அது. தன்னை தான் வெல்லும் பொருட்டு எடுக்கும் மிகைமுடிவு. தன் உயிருக்கு உகந்த ஒன்றை கொண்டுசென்று தெய்வத்திற்கு பலிகொடுப்பது யாதவர் வழக்கம். இனிய பசுவை, இளங்கன்றை. எது இவ்வுலகுடன் தன்னை இணைக்கிறதோ அதை. உடலறுத்துக் கொடுப்பது உண்டு. தலையறுத்து இடுவதும் உண்டு. இழப்பதனூடாக பற்றுகள் அனைத்தையும் கடந்துசெல்வது. முற்றிலும் விடுதலைகொண்டவனால் மட்டுமே முழுதடிமை ஆகவியலும். அத்தனை இழந்துதான் தன்னை மீட்கவேண்டுமென்றால் அவர் கொண்டிருக்கும் ஆணவத்தின் எடைதான் என்ன?

எவ்வாறு அப்படி அறுதியாக எண்ணிக்கொள்கிறேன்? ஏனெனில் பிற எவரையும்விட அவன் தந்தையை அறிவான். தந்தையென்று நடிப்பதையே சொல்லறிந்து தான் திரளத் தொடங்கிய கணம் முதல் செய்துகொண்டிருக்கிறான். தந்தையிலிருந்து தனக்குகந்த ஒன்றை அள்ளிக்கொள்வதும், உகக்காத ஒன்று உடன் வருவதைக்கண்டு சினப்பதும், அவ்விரண்டையும் கலந்து பிறிதொன்றை அடைவதும், அது சலித்ததும் உதறி புதிய ஒன்றுக்காக தேடுவதுமே அவன் வாழ்க்கையென்று அமைந்திருந்தது அதுவரை.

போர்முனை நோக்கி செல்கையில் சினி அவனிடம் “மூத்தவரே, நாம் இந்தக் களத்தில் உயிர்துறக்கக்கூடுமா?” என்றான். “ஏன்?” என்று அசங்கன் கேட்டான். “என்னிடம் என் காவல்நிலை தலைவர் குத்சிதர் சொன்னார். நம்மை களப்பலியாக்கி இளைய யாதவர் முன் தன் முழுதளிப்பை நிலைநாட்டவே தந்தை அழைத்துவந்துள்ளார் என” என்றான் சினி. சில கணங்களுக்குப் பின் அசங்கன் “அவ்வண்ணமே என்றால் நீ வருந்துவாயா?” என்றான். சினி “இல்லை, தந்தை அவ்வாறு எண்ணினால் அது நம் கடமை” என்றான். அசங்கன் முகம் திருப்பிக்கொள்ள சினி “நான் களப்பலியாகவே விரும்புகிறேன்” என்றான். “பேசாமல் வா” என்றான் அசங்கன்.

bowசிறிய அரைவட்டமாக சூழ்கை அமைந்தது. யாதவ வீரர்களுடன் படைமுகப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அசங்கன் வளைவில் விழி திரும்பியபோது தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த தம்பியரைக் கண்டு உளம் அதிர்ந்தான். கால்கள் நடுங்க தேரில் நின்றிருக்க முடியாதவனாக ஒரு கையால் தேர்த்தட்டை பற்றிக்கொண்டான். அவர்கள் முகங்கள் அனைத்திலும் அச்சமோ ஆவலோ இருக்கவில்லை. தயக்கம் கொண்டவர்களாகவோ போருக்கு எழுவதன் உணர்வுகளால் கிளர்ந்தவர்களாகவோ தோன்றவில்லை. அறியா நிலமொன்றுக்குள் நுழையும்போது எழும் விந்தை உணர்ச்சியே துலங்கியது. சினி கையிலிருந்த வில்லை தவறாகப்பற்றித் தாழ்த்தி இருபுறமும் பதற்றத்துடன் நோக்கியபடி வந்தான். பிறர் முகங்கள் உறைந்த நோக்கு கொண்டிருந்தன.

அவன் நோக்கை விலக்கிக்கொண்டான். தேரின் அச்சு ஒலிக்க சினி அவனருகே வந்தான். அவன் திரும்பி நோக்க சினி அவனருகே எழுந்து “நாம் போர்முகப்புக்கு செல்லவிருக்கிறோமா, மூத்தவரே?” என்றான். “ஆம்” என்றான் அசங்கன். “போர்முகப்புக்குச் சென்றவர்கள் மீள்வது அரிது என்கிறார்கள்” என்றான். அசங்கன் “உன் நிரைநோக்கி செல்…” என்றான். “நான் இறக்க விழையவில்லை, மூத்தவரே. எனக்கு அச்சமாக உள்ளது” என்றான் சினி. “என் கவசம் அவிழ்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஏவலன் சரிவர கட்டவில்லை.” அசங்கன் “நிரைகொள்க… செல்க!” என்றான். சினி தேரைத் திருப்பி தன் நிரைநோக்கி சென்றான்.

இக்கணமே இவர்களுக்கு திரும்பிச் செல்லும்படி ஆணையிடுவது ஒன்றே நான் செய்யக்கூடுவது. ‘நம் நிலத்துக்கே திரும்புக இளையோரே, இது நமது போர் அல்ல!’ நான் சொல்லவேண்டியது இதை மட்டுமே. அவன் மீண்டும் திரும்பி அவர்களை நோக்கினான். விழிவிலக்கிக்கொண்டு நீள்முச்செறிந்தான். “பதினெட்டாம் படைப்பிரிவு முன்செல்க! சாத்யகியை சூழ்ந்துகொள்க!” என்று ஆணை வந்துகொண்டே இருந்தது. போர்முகப்பின் கொம்போசையை கேட்டான். அங்கே கடும் போர் நிகழ்வதை அதை சூழ்ந்திருக்கும் படை முன்னும்பின்னும் அலைக்கழிவதிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. “யானைச்சூழ்கை உடைக்கப்பட்டுவிட்டது… பால்ஹிகப் பிதாமகர் தடையற்று உள்ளே புகுகிறார்!” என எவரோ கூவினர். “சிகண்டியை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!” என அப்பால் ஒரு குரல் ஒலித்தது.

அசங்கன் கைகாட்ட தொழும்பன் கழைமேலேறி இறங்கி “யாதவ யுயுதானருக்கும் பால்ஹிகர் பூரிசிரவஸுக்கும் நடுவே உச்சநிலைப் போர் நிகழ்ந்தது. தங்கள் தந்தையாரால் சற்று முன் பூரிசிரவஸ் தோள்கவசம் உடைக்கப்பட்டார். அம்பு பாய்ந்த உடலுடன் தேர்த்தட்டில் விழ அவரை தேர்வலன் இழுத்து பின்கொண்டு சென்றான். இப்போது அவரை கௌரவர்கள் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிகண்டியை அஸ்வத்தாமர் எதிர்கொள்கிறார். யுயுதானரை நோக்கி கௌரவர் முழுமையாகவே திரள்கிறார்கள். ஜயத்ரதரும் அவரை நோக்கி செல்கிறார். அவர் கௌரவப் படைக்குள் தொலைவுவரை ஊடுருவிச் சென்றுவிட்டிருக்கிறார்” என்றான்.

போர்க்களத்தில் வில்லுடன் நின்றிருக்கும் தந்தையை அசங்கன் உள்ளத்தில் கண்டான். சுருங்கிக்கூர்ந்த விழிகளுடன், ஒவ்வொரு அணுவிலும் எச்சரிக்கை நிறைந்த உடலுடன். எதன்பொருட்டு அவர் தன்னை தன் தலைவருக்கு முற்றளித்தார்? ஒருவேளை அவரே அதை அறிந்திருக்க மாட்டார். அத்தனை ஆற்றலையும், உளக்கூரையும் எதன்பொருட்டேனும் அளிக்காவிட்டால் பயனென்ன? அவை வெற்றாணவமாக பொருளழிந்துவிடும் போலும். அளித்து அளித்து அவர் பெருக்கிக்கொண்டவை அவருள் எழுந்து திகழ்கின்றன. அவன் மெய்ப்பு கொண்டான். தந்தைக்கு மிக அண்மையில் வில்லேந்தி அவருக்கு துணைநின்றிருக்கையில் என் முழுதளிப்பு நிறைவுகொள்கிறது. நான் செய்வதற்கு பிறிதொன்றுமில்லை.

முந்தைய கட்டுரைமணவுறவு,தனிமனிதன்
அடுத்த கட்டுரைகுடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்