பாண்டவர்களின் யானைப்படைக்குப் பின்னால் அணிவகுத்துச்சென்ற தொலைவில்லவர்களின் தேர்ப்படையில் அசங்கனும் இருந்தான். அவனைச் சூழ்ந்து அவன் தம்பியர் ஒற்றைப்புரவி இழுத்த விரைவுத்தேர்களில் வந்தனர். முரசுகளும் முழவுகளும் இணைந்த முழக்கம் காற்றில் நிறைந்திருந்தது. அசங்கன் திரும்பி நோக்கி “செறிந்துவருக… இடைவெளி விழாது அணைக!” என்றான். அவன் ஆணையை தேருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கழையன் முழவோசையாக்கினான். “செறிந்து வருக… ஆணை அமைந்ததும் வில்தொடுத்து முன்னேகுக!” என்று அசங்கன் ஆணையிட்டான்.
தன் உடன்பிறந்தார் தன் குரலை மட்டுமே கேட்கிறார்கள் என்று அசங்கன் அறிந்திருந்தான். போரில் எழும் முரசொலிகளை புரிந்துகொள்வதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தும்கூட செவி பழகியிருக்கவில்லை. அவனுக்கே தந்தையின் பெயரை மட்டுமே பிரித்தறிய இயன்றது. முழவொலியை சொல்லெனக் கேட்க செவி பிற புலன்களிலிருந்து விலகி அதை மட்டும் அறியும் ஒன்றாக மாறிவிட்டிருக்க வேண்டும். அலறும் யானைகளையோ குளம்படிகளையோ போர்க்கூச்சல்களையோ உயிர் துடிக்கும் கூச்சல்களையோ முற்றிலும் அகற்றி அவ்வதிர்வுகளை செவிப்பறையால் முற்றிலும் இணைகோத்து கேட்கவேண்டும்.
போருக்கெழுந்த சற்றுநேரத்திலேயே அவன் அதை உணர்ந்துகொண்டான். போர்முழவின் ஓசை தாளங்களின் எண்ணிக்கையாலும் அணுக்க விலக்கத்தாலும் விசையாலும் கோல் மாறுபாடுகளாலும் சொல்லென்றாகிறது. இரு முட்டலும் இரு நீட்டலும் ஒரு முத்தாய்ப்பும் ஒன்றென ஒலிப்பது சாத்யகி எனும் சொல். எண்ணி கணக்கிட்டு சொல்லென்று மொழியாக்கி அத்தாளத்தை புரிந்துகொள்ள இயலாது. நேரடியாகவே சொல்லென்று சிந்தை புகவேண்டும். அவன் தன் கைவிரல்களால் சாத்யகி சாத்யகி என அச்சொல்லை தாளமாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது வேறெங்கோ இருந்தது. முழவு அச்சொல்லை முழங்கியபின் சற்று கழித்தே அது சிந்தையை அடைந்தது. அதனுடன் இணைந்த ஆணைகள் வெறும் ஓசையென்றே ஒலித்தன. அருகே நின்றிருந்த மூத்த வீரர்கள் எவரேனும் அவ்வாணையை சொல் பெயர்த்தனர்.
“போர்க்களத்தில் வாய்ச்சொற்கள் சித்தம் புகாமலாகும். முழவொலியே குரலென்று சமையும். அத்தருணத்தை பயின்றறிய இயலாது. உள்ளம் சென்றமையவேண்டும்” என்றார் மூத்த வீரரான பரகாலர். “சென்றமைந்த கணமே நாம் படையென்று உருமாறுகிறோம். அதன்பின் நம் இறப்பு நமக்கொரு பொருட்டே அல்ல.” அவனுக்கு போர்க்களம் கணந்தோறும் பெருகும் திகைப்பாக இருந்தது. அலையடிக்கும் திரளில் தம்பியருடன் அவனும் மிதந்தலைந்தான். பாண்டவப் படையின் முன்புறம் தண்டேந்திய யானைகள் சென்றமையால் கரிய சுவரால் என எதிரிப்படை முற்றாக மறைக்கப்பட்டிருந்தது. சூழ்ந்திருந்த ஓசை திரையென்றாகி தனிமையை அளித்தது. அவன் ஒரு பொருளிலாக் கனவிலென விழித்தெழ தவித்துக்கொண்டிருந்தான்.
தந்தை எங்கோ இருந்தார். அவன் போருக்கு எழுகையில் தந்தைக்குப் பின்னால் அவருடைய விழிவட்டத்திற்குள் நின்றிருப்பதையே எண்ணியிருந்தான். அவர் காண போரிடவேண்டும் என கற்பனை செய்தான். அவர் முன் களம்படவேண்டும். அவர் அள்ளி அணைத்து மடியிலிட்டு கூவி அழுகையில் புன்னகையுடன் உயிர்துறக்கவேண்டும். காவல்மாடத்தில் இருந்து அவன் ஒவ்வொருநாளும் எண்ணி கண்ணீருடன் உவந்தது அதைத்தான். அந்த உடற்கொந்தளிப்பில் அவன் நிலம்பட்டால் அவன் உடன்பிறந்தாரே மிதித்து முன்சென்றுவிடக்கூடும். போர் முடிந்தபின் அவன் உடலை குடிமுத்திரை நோக்கி கண்டடைவார்கள். தந்தை அவர்கள் அங்கிருப்பதை அறிந்திருப்பாரா?
அவன் அவர் முகத்தையே எண்ணிக்கொண்டிருந்தான். அவருடைய தோற்றத்திற்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை. ஓங்கிய கரிய உடலும், பெருந்தோள்களும், எச்சரிக்கையுடன் நோக்கும் சிறுவிழிகளும், எண்ணி அடுக்கப்பட்ட சொற்களும் கொண்டவர் அவர். நாணிழுத்து இறுகக் கட்டப்பட்ட வில் என பிறருக்கு தோற்றமளிப்பவர். எண்ணியது இயற்றும் ஆற்றல்கொண்ட சிலர் இப்புவியில் எப்போதும் எழுகிறார்கள். அரியவர்கள், முன்நிற்பவர்கள், வழிநடத்துபவர்கள், பொறுப்பேற்றுக்கொள்பவர்கள், முதலில் வீழ்பவர்கள். அவர் அவர்களில் ஒருவர். அவன் தன் அன்னையைப்போன்ற தோற்றம் கொண்டவன். அவன் உடன்பிறந்தார் ஒன்பதின்மரும் அன்னையைப்போன்றே அமைந்தனர்.
அவர்கள் போஜர்குலத்தின் துணைக்குடியாகிய அஜகடகத்தை சேர்ந்தவர்கள். அக்குடியினர் அனைவருமே சிவந்த சிற்றுடலும் மென்மையான உதடுகள் அமைந்த நீள்முகமும் தணிந்த குரலும் கொண்டவர்கள். ஆண்கள் அனைவரிலும் பெண்டிர் அமைந்திருப்பார்கள். அக்குலப் பெண்டிரிலிருந்து சிறுமியர் மறைவதே இல்லை. அவர்களை யாதவக்குடிகள் விரும்புவதில்லை. ரிஷபவனத்திற்கு பெண்ணளிக்க பல யாதவக்குடிகள் சித்தமாக இருந்தாலும் சாத்யகி அவளை மணந்தான். யாதவர்களின் பெருங்களியாட்டுக்கு வந்திருந்த அவளை நோக்கியதுமே விழைவுகொண்டான். தன்னோரன்ன பெண்களுடன் மலர்களியாடிக்கொண்டிருந்த அவளை தேடிச்சென்று பலர் முன்னிலையில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் புகுந்தான். அங்கேயே அவர்களுக்கு குலமூத்தார் கான்மணம் செய்துவைத்தனர்.
அன்னையிடம் தந்தை பேரன்புடன்தான் எப்போதுமிருந்தார் என்பதை அசங்கன் கண்டிருந்தான். ஆனால் ஒவ்வொரு முறை தன்னை பார்க்கையிலும் தந்தையிடம் உருவாகும் புருவச்சுளிப்பையும் அவன் மிக இளமையிலேயே அறிந்திருந்தான். அது ஒவ்வாமை என அவன் உணர்ந்தான். அதை கடந்து அவருக்கு இனியவனாகும்பொருட்டு தன் அனைத்துச் செயல்களாலும் விழைந்தான். படைக்கலங்கள் ஏந்தி போருக்கெழுந்தான். இரவும் பகலும் களரியில் கழித்தான். ஆனால் வளைதடியோ வில்லோ அவன் கைக்கு பழகவில்லை. அவன் அளித்த தவம் அவற்றை சென்றடையவில்லை.
அவன் அம்புகள் பிழைபடுகையில், வளைதடி பிறிதொரு இடம் தேடிச்செல்கையில் தந்தை கடிந்து ஒருசொல்லும் கூறியதில்லை. ஆனால் மிக சிறு ஒளித்துளியென அவரில் எழும் நம்பிக்கை மறைவதை அவர் உடலில் எழும் ஓர் அசைவே காட்டிவிடும். அக்கணம் தன்னுள் உருவாகும் சலிப்பும் துயரமும் அவனை அன்றிரவெலாம் வாட்டி எடுக்கும். மீண்டும் சீற்றம்கொண்டு அம்பையும் வில்லையும் எடுத்தால் அச்சீற்றத்தாலேயே பிழைகள் நிகழும். தன் இரு கைகளையும் பார்த்து அவன் விழிநீர்வார ஏங்குவான். எவ்வண்ணம் இவ்வுடலை நான் கடக்கலாகும்? இதிலிருந்து எழுந்து பிறிதொருவனாக தந்தைமுன் நிற்க எப்போது இயலும்? இதற்கப்பால் சென்று நான் அடைவனவே எனக்குரியவை. நான் என்னை வென்றாலொழிய தந்தையை அணுகமுடியாது.
ஆனால் அவன் உடல் அச்சொற்களுக்கு அப்பால் பிறிதொன்றை நாடிக்கொண்டிருந்தது. அது என்ன என்பதை பன்னிரண்டாம் அகவையில் முதல் முறையாக மகரயாழ் ஒன்றின்மேல் விரல் ஓட்டிப் பார்த்தபோது உணர்ந்தான். களிறுஎழு விழாவிற்காக நூபுரத்வனியிலிருந்து வந்திருந்த இசைச்சூதர் நிகழ்ச்சி முடித்து உணவருந்தச் சென்றபோது உறையிட்டு மூடி வைத்திருந்த யாழ் அது. எழுபத்திரண்டு நரம்புகள் கொண்ட பேரியாழ். அதன் நரம்புகள் ஒளியாலானவை என தோன்றின. விந்தையான சிலந்தி ஒன்றால் கட்டப்பட்ட வலையின் ஒரு பகுதியென. அவன் எழுந்துசென்று மெல்ல அவற்றினூடாக விரலை ஓட்டியபோது அவை முன்னரே அந்த யாழை அறிந்திருப்பதை உணர்ந்தான்.
கனவிலும்கூட தான் யாழ் மீட்டுவதை அவன் பார்த்திருக்கவில்லை. அவ்வுள மயக்கை அகற்ற முயன்றும்கூட விரல்கள் தங்களுக்குரிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டவையென யாழை அறிந்தன. தொட்டுத் தொட்டு அவை எழுப்பிய இசையை செவி அறிந்திருந்தது. மிக மெல்ல சுட்டுவிரலால் அதிரும் யாழ்நரம்பை தொட்டபோது முதுகெலும்பு கூச, உடல் அதிர்ந்து விழிநீர் கோத்தது. யாழை உடலோடு சேர்த்து அமர்ந்து அவன் மெல்ல விம்மினான். காலடியோசை கேட்க விழிகளை மேலாடையால் துடைத்துக்கொண்டான்.
இளையவன் சினி அப்பாலிருந்து ஓடிவந்து “மூத்தவரே, யாழ் மீட்டுவது தாங்களா?” என்றான். அவன் மறுமொழி சொல்வதற்குள் “மூத்தவர் யாழ்மீட்டுகிறார், யாழ்மீட்டுகிறார்” என்று கூவியபடி அவன் வெளியே ஓட பிறர் உள்ளே வந்தனர். “மெய்யாகவா?” என்றான் சித்ரன். நாணத்துடன் அசங்கன் “வெறுமனே தடவிப்பார்த்தேன்” என்றான். உத்ஃபுதன் “இல்லை, சற்று முன் அந்தச் சூதர் மீட்டிச்சென்ற இசையின் நீட்சி இது. அதே பண், ஐயமேயில்லை” என்றான். “நான் பயின்றதேயில்லை” என்றான் அசங்கன். “நீங்கள் விழிகளால் பழகியிருப்பீர்கள். நானே பலமுறை பார்த்திருக்கிறேன், பிறர் யாழ் மீட்டுகையில் நீங்கள் சூழல்மறந்து விழிகளால் அவ்விரல்களை மட்டுமே பார்த்து முற்றிலும் ஆழ்ந்திருக்கிறீர்கள்” என்றான் சாந்தன்.
முக்தன் “மூத்தவரே, அதை மீட்டுக!” என்றான். “ஷத்ரியர் யாழ் மீட்டும் வழக்கமில்லை” என்று அசங்கன் சொன்னான். “நாம் குழலிசைப்பவர். இசையை நம் குருதியிலிருந்து அகற்ற இயலாது” என்றான் உத்ஃபுதன். “யாழ் மீட்டும் கைகளால் அம்பு தொடுக்க இயலாது என்பார்கள்” என்றான் அசங்கன். உத்ஃபுதன் “எவர் சொன்னது? திசையானைகளின் கொம்பை நெஞ்சில் சூடிய இலங்கையின் ராவண மகாபிரபு யாழ்வில் தேர்ந்தவர், இசைவேதம் பயின்றவர் என்று நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா?” என்றான். “ஆம்” என்று அசங்கன் சொன்னான். அச்சொற்கள் அவனுக்கு நிறைவளித்தன. பின்னர் “எவரேனும் வருகிறார்களா என்று பார்” என்று சினியிடம் சொல்ல அவன் அக்கூடத்தின் வாயிலருகே நின்றுகொண்டான். பிறர் ஆங்காங்கே நின்றனர்.
யாழைப்பற்றி மார்பில் சாய்த்து அமர்ந்தான். அதன் ஆணியையும் திருகியையும் தொட்டு சீரமைத்த பின் மெல்ல விரலோட்டலானான். “மூத்தவரே, பலநாள் பயின்று தேர்ந்தவர் போலிருக்கிறீர்கள்” என்று சாந்தன் கூவினான். அவன் முகம் மலர்ந்து “ஆம், இப்படி மீட்ட முடியுமென்றே நான் எண்ணியிருக்கவில்லை” என்றான். மீண்டும் மீண்டும் மீட்டியபோது மெல்ல அவன் எண்ணிய இசைக்கும் விரலில் எழுந்ததற்கும் இடையேயான சிறிய இடைவெளியை கண்டுகொண்டான். அக்குறை அவனை பித்தூட்டி ஆட்கொள்ளும் கொடுந்தெய்வமென பற்றிக்கொண்டது. பின்னர் தனித்திருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவன் உள்ளத்தில் யாழொன்றை மீட்டிக்கொண்டிருந்தான்.
“மூத்தவரே, நீங்கள் தனித்திருக்கையில் உங்கள் கைகளை பார்க்கிறேன். அவை யாழ் மீட்டுவனபோல அசைந்துகொண்டிருக்கின்றன” என்று சினி சொன்னான். “நான் அம்புப் பயிற்சி எடுக்கிறேன்” என்றான் அசங்கன். சினி குழப்பத்துடன் “அம்புகள் இவ்வளவு விரைவாக எடுக்கப்படுவதுண்டா?” என்றான். “இது பிறிதொரு வகை அம்பு” என்று அசங்கன் அவன் தலையை தட்டினான். சினி சிரித்து “இல்லை, என்னை ஏமாற்றுகிறீர்கள். இது யாழேதான்… யாழ்நரம்பில்தான் விரல்கள் ஓடுகின்றன” என்றான். “எவரிடமும் சொல்லாதே” என்றான் அசங்கன். சினி மந்தணம் சொல்லப்படுகையில் சிறுவர் அடையும் உளவிசையை அடைந்து “சாந்தரிடம்கூட சொல்லமாட்டேன்” என்றான். “உத்ஃபுதர் கேட்பார். அவரிடமும் சொல்லமாட்டேன்” என்று சேர்த்துக்கொண்டான்.
சாத்யகி துவாரகைக்கு கிளம்பிச்சென்ற பின்னர் களரித்தலைவர் சிம்ஹர் அவர்களுக்கு வில்லும் வளைதடியும் வாளும் கற்பித்தார். ஆனால் அவரால் அவனை பயிற்றுவிக்கவே இயலவில்லை. “உங்கள் உள்ளம் இதிலில்லை, யாதவரே” என்று சிம்ஹர் சொன்னார். “நாம் கையாளும் படைக்கருவி எதுவாயினும் அதன் வடிவு நம் உள்ளத்திலிருக்க வேண்டும். வெறுங்கையால் வாள்வீசுகையில்கூட எண்ணத்திலிருக்கும் அந்த வாளின் நீளமும் எடையும் விசையும் மெய்யான வாளுக்கு நிகராக இருக்கவேண்டும். அன்றி வாள் ஒருபோதும் வயப்படுவதில்லை. வாள் எனும் பருவடிவை வாள்மை எனும் உளநிகழ்வாக ஆக்கிக்கொள்வதற்கு பெயரே பயிற்சி.” யாழ்மை என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
ஒவ்வொரு நாளும் குறுங்காட்டுக்குள் செல்கையில் அங்கிருக்கும் கொடிமண்டபத்தில் முன்னரே கொண்டுவந்து ஒளித்துவைத்த மகரயாழை அவன் மீட்டினான். இளையோர் அவனைச் சூழ்ந்தமர்ந்து அதை கேட்டனர் அவர்கள் எவரும் தாங்கள் வாள்தேர்ச்சி கொள்ளவில்லை என்பதற்காக வருந்தவில்லை. அவன் மீட்டும் யாழுடன் அவர்களின் விழிகளும் கனிந்து இணைந்துகொள்வதை அறிந்தான். விழித்திருக்கும் கணமெல்லாம் விறலியரின் இசைகேட்டு அரண்மனையில் அமைந்திருக்கும் அன்னையின் விழிகள் அவை. அவர்களில் இருவர் அவன் யாழை தாங்கள் வாங்கி மீட்டத்தொடங்கினர். சினி மிக விரைவிலேயே கற்றுக்கொண்டான். ஒருவரையொருவர் ஊக்கியபடி சூதர் அவைகளில் செவிகளால் அள்ளி வந்த மெட்டுகளை மீட்டி களித்தனர்.
துவாரகையிலிருந்து மீண்டதும் சாத்யகி அவர்களை முதல் பார்வையிலேயே அடையாளம் கண்டுகொண்டான். “எவரும் வில்தேர்ச்சி அடையவில்லை அல்லவா?” என்றான். அவர்கள் பேசாமல் நிற்க சினி “யாழ்” என்று தொடங்க அவன் தோளைப் பற்றி நிறுத்தினான் உத்ஃபுதன். “என்ன?” என்று சாத்யகி கேட்டான். “வாள்பயிற்சியில் மேலும் ஈடுபாடுகொண்டுள்ளோம், தந்தையே” என்றான் அசங்கன். இம்முறை தந்தைக்கு உகக்காத ஒன்றை செய்கிறோம் எனும் உணர்விருக்கவில்லை. அவருக்கு உகந்ததைச் செய்து முன்னிற்கவேண்டும் என்ற விழைவும் அகன்றுவிட்டிருந்தது. தான் அறிந்த ஒன்றை அறியாது பிறிதொன்றில் ஈடுபட்டிருக்கும் ஒருவராகவே தந்தையை பார்த்தான்.
யாழ் ஒலியென்றாகி, விண் நிறைத்து, அறியா மொழியென்றாகி, புவியில் மழையென இறங்கும் உவகையை ஒருமுறையேனும் இவர் அறிந்திருப்பாரா? “மண்ணில் மிகச் சிலருக்கே இசையை அருளியுள்ளன தெய்வங்கள்” என்று அன்னை ஒருமுறை சொன்னார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இசை கேட்போர் பிறிதொன்றுக்கும் ஒவ்வாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். இவ்வுலகு இசைவின்மையின் பெருவெளி. அங்கு தேவர்கள் வந்தமர்ந்து செல்லும் சிறு வட்டங்களென இசைவின் தடங்கள் உள்ளன. அங்கு உறைபவர்கள் மட்டுமே இசைகேட்க இயலும். இசைவின்மையின் பெருவெளியில் அவர்கள் ஒவ்வொன்றுடனும் முட்டிக்கொள்வார்கள். உரசி சிதைந்து குருதி வடிப்பார்கள். அவர்கள் இசைச்சுவைஞர் அன்றி பிறிதெவரும் அல்லாதாவார்கள். இப்புவியில் அவ்வண்ணம் மானுடர் பெருகினால் வயல் விளைவிப்பவர் எவர்? ஆ புரப்போர் எவர்? போர் புரியவும் நாடாளவும் பொன்எண்ணவும் இங்கு எவர் இருப்பார்கள்?”
“இசைகேட்பவரால் ஆற்றப்படுவதென்ன?” என்றான் சாந்தன். “இசைகேட்பதன்றி பிறிதொன்றும் அவர்கள் ஆற்றுவதில்லை. இங்கு அவர்கள் இருப்பது பிறரின் இசைவின்மையை அளப்பதற்கான அளவை எனும் நிலையில் மட்டுமே” என்றார் அன்னை. அவர் சொல்வது என்னவென்று அசங்கனுக்கு புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மிகுந்துகொண்டே இருக்கும் செறிவுகொண்ட மையத்தில் தானிருப்பதாக அவன் எண்ணிக்கொண்டான். அது இளமை முதல் அவனிலிருந்த குறையுணர்வை அகற்றியது. தன் உடலை மீண்டும் தன்னதென்று உணர்ந்தான். தன் விரல்களை இனியவை என்று கண்டான். அவற்றை கண் முன் ஏந்தி நோக்குகையில் மென்பட்டாலான அரிய இசைக்கருவி ஒன்றைப்போல் தோன்றின. அவற்றின் அனைத்து இயல்புகளும் அவை முன்னரே யாழை அறிந்திருந்தன என்பதனால் உருவானவை என்று அவன் கண்டான்.
தந்தை அவனை அம்பு தொடுக்கச்சொல்லி நோக்கி நின்றார். பதினெட்டு அம்புகளில் இரண்டு மட்டுமே இலக்கை அடைந்தன. அவர் சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் ஒரு சொல்கூட உரைக்காமல் திரும்பிக்கொண்டார். முதலில் அது அவனுக்கு ஆறுதலை அளித்தது. பின்னர் அவன் குற்றஉணர்வடைந்தான். அவர் இழித்து ஒரு சொல் உரைத்திருந்தால் அதற்கெதிராக எழுந்து தன்னிலை உறுதி கொண்டிருக்கலாம். அவர் ஒன்றும் உரைக்காததே தன்னை அலைக்கழிக்கிறதென்று உணர்ந்தான். மறுநாள் பதினெட்டு அம்புகளில் எவையுமே இலக்கடையவில்லை. தந்தையின் விழிகளில் சினமெழுவதற்காக அவன் காத்து நின்றான். அவர் அவனை சில கணங்கள் நோக்கி நின்றபின் செல்லுமாறு கைகாட்டி அடுத்தவனை அழைத்தார்.
ஏமாற்றத்துடன் வில்லை வைத்துவிட்டு படைக்கலச்சாலையின் சுவர் சாய்ந்து நின்றான். இளையவன் அம்புகளால் இலக்குகளை அடிக்க அனைத்து அம்புகளும் இலக்கு பிழைப்பதை நோக்கி நின்ற தந்தையின் கண்களை பார்த்தபோது மெல்லிய உளநடுக்குடன் அவன் ஒன்றை உணர்ந்தான். அவர் அவனை நன்கறிவார். அவன் இலக்குகள் குறி தவறும் என்பதை வில்லெடுப்பதற்கு முன்னரே அறிந்திருந்தார். மீண்டும் அவ்விழிகளை பார்த்தான். அவற்றில் சினமில்லை என்று கண்டான். பொறுமையின்மையோ எரிச்சலோகூட வெளிப்படவில்லை. தோளிலும் கைகளிலும் வெளிப்பட்ட சலிப்புகூட அவரால் வலிந்து உருவாக்கப்பட்டதே.
அன்று திரும்பிச்செல்கையில் இளையோரிடம் “தந்தைக்கு நம்மேல் சினமில்லை” என்று அவன் சொன்னான். சினி “அது எனக்கு தெரியும்” என்றான். “எவ்வாறு?” என்றான் அசங்கன். “அவர் நான் வில்லை வைத்துவிட்டு கிளம்பும்போது என் தலையில் கைவைத்து அசைத்தார்.” அசங்கன் “ஆம், நம் அனைவரையுமே அவர் விழிகளால் தொட்டு விடைகொடுத்தார். நம்மீது அவர் சினம் கொண்டிருக்கவில்லை” என்றான்.
சாத்யகி மீண்டும் துவாரகைக்குச் சென்ற பின்னர் எண்ணும்தோறும் அவனுள் ஓர் அமைதியின்மை எழுந்தது. ஆணையிடப்பட்ட ஒன்றை மறுப்பதன் ஆண்மையென்று ஒன்றுள்ளது. செலுத்தப்படுவதிலிருந்து விலகும்போது தனித்தன்மை அமைகிறது. ஆனால் தந்தை என அவர் விழைவது அதுவென்று அறிந்து அதை இயலாமையால் விலக்குவது பிழையென அவன் அகம் உணர்ந்தது. தந்தைக்கு அவன் அளிக்கக் கூடுவதென அது ஒன்றே உள்ளது. இப்புவியில் அவன் எய்துவன அனைத்தையும்விட அதுவே மேலானது.
ஒரு நாள் அவன் கனவில் தந்தை எங்கோ களம்பட்டார் எனும் செய்தியுடன் வீரன் ஒருவன் வந்தான். அன்னை அலறிவிழ இளையோருடன் ஓடிச்சென்று அரண்மனை முகப்பில் காத்து நின்றிருந்த தேரிலேறிக்கொண்டபோது அவன் விழித்துக்கொண்டான். நெடுநேரம் மஞ்சத்தில் அக்கனவை எண்ணியபடி படுத்துக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனால் விளங்கக் கூடவில்லை. முகங்கழுவி களத்திற்குச் சென்றபோது அக்குழப்பம் நெஞ்சில் நிறைந்திருந்தது. தொலைவில் வில்லை பார்த்ததுமே அவன் அறிந்தான், அதன் பொருளென்னவென்று. அவன் அக்கடனை முடிக்கவில்லை என்றால், அவ்வெச்சத்துடன் தந்தை மண்மறைந்தார் என்றால், ஒருபோதும் எஞ்சிய வாழ்நாளில் அவன் நிறைவு கொள்ளப்போவதில்லை.
அன்று வில்லெடுத்தபோது ஆசிரியர் சலிப்புடன் வழக்கம்போல அவனை நோக்காமல் இலக்கை சுட்டிக்காட்டினார். அனைத்து அம்புகளும் இலக்கு தவற அவன் சில கணங்கள் தலைகுனிந்து நின்றான். பிறகு மீண்டும் வில்லை எடுத்தான். இரண்டாம் முறை வில்லெடுக்கும் வழக்கம் அவனுக்கில்லை என்பதனால் துணைஆசிரியர் ஊர்த்துவர் வியப்புடன் அவனை பார்க்க முழு உளத்தையும் விழிகளில் செலுத்தி இலக்கை நோக்கி அடித்தான். பதினெட்டு அம்புகளில் மூன்று இலக்கடைந்தன. அவர் குழப்பத்துடன் “நன்று” என்றார். யாதவர்களின் போர்களெல்லாம் விரிவெளியில் நிகழ்பவை என்பதனால் நிலைவில்லும் தொலையம்புமே அவர்கள் பயில்வன. இலக்கு மிகத்தொலைவில் விழிகூர்ந்தால் மட்டுமே தெரியும்படி இருந்தது. அவன் அதன் மையத்தில் அம்பால் அறைந்ததும் சிம்ஹர் “நன்று” என முகம் மலர்ந்தார்.
அதன் பின் ஒவ்வொரு நாளும் நான்கு மடங்கு பொழுதை அம்புப் பயிற்சிக்கு செலுத்தினான். “நாம் போருக்கு போகவிருக்கிறோமா, மூத்தவரே?” என்றான் சினி. “ஆம்” என்றான். “நம்மீது மகதம் படைகொண்டு வரப்போகிறதா?” என்றான் சினி. “இல்லை, நாம் சென்று மகதத்தை வெல்லவிருக்கிறோம்” என்று அவன் சொன்னான். இளையோர் அவன் வில்தேர்வதை நோக்கி மெல்ல விலக்கம் கொள்ளத் தொடங்கினர். சினியைத் தவிர பிறர் அவனிடம் களியாடுவது அரிதாயிற்று. அவன் தந்தையை நோக்கி சென்றுகொண்டிருந்தான். தந்தையின் நோக்கும் சொல்லும் அவனிடம் கூட அவர்கள் அவனை தந்தையென்றே என்ணத் தலைப்பட்டனர். அவன் சொற்களுக்கு பணிந்த நோக்குடன் ஆட்பட்டனர்.
அஸ்தினபுரியில் ஒவ்வொன்றறும் பிழையாக சென்று கொண்டிருப்பதை அவையில் நிகழ்ந்த உரையாடல்களிலிருந்து அவன் அறிந்தான். தந்தை போருக்குச் செல்லும் முன் தன் அன்னையிடமும் தந்தையிடமும் விடைகொள்ள வருவாரென்றும், அன்னையிடம் விடைகொள்ள வருகையில் அவரிடம் தானும் போருக்கெழுவதாக கூறவேண்டும் என்றும், வில்லெடுத்து இலக்கை அடித்து தான் அவருக்கு உகந்தவனாக மாறிவிட்டிருப்பதை காட்ட வேண்டுமென்றும் எண்ணியிருந்தான். அவன் இலக்குகள் பெரும்பாலும் நிலையடைந்துகொண்டிருந்தன. ஒவ்வொருநாளும் பயின்று பயின்று தன்னைத் தீட்டி கூரமைத்துக்கொண்டிருந்தான்.
உபப்பிலாவ்யத்திலிருந்து தந்தை விரைவுப்பயணமாக வந்து அன்னையிடம் அவர் போருக்குச் செல்வதாக கூறினார். அன்னை அதை அவனிடம் சொன்னபோது அவன் “நான் தந்தையை சந்திக்கவேண்டும், அன்னையே” என்றான். அன்னை அவன் சொல்லவிருப்பதை உணர்ந்திருந்தாள். மறுநாள் அவர்கள் அனைவரையும் அன்னையின் அறைக்கே வரும்படி தந்தை சொன்னார். அவர்கள் சென்று நின்றபோது கடுமையான நோக்குடன் ஒருமுறை அனைவரையும் நோக்கிவிட்டு “நீங்கள் அனைவரும் என்னுடன் போருக்கு எழுகிறீர்கள்” என்றார்.
சினி “அனைவருமா, தந்தையே?” என்றான். “ஆம்” என்றார் தந்தை. “நானுமா?” என்றான் சினி மீண்டும். “ஆம்” என்றார். “போர்! நான் போருக்கெழுகிறேன்!” என்று சினி இரு கைகளையும் தூக்கி கூவி குதித்தான். அன்னை நீர்பரவிய கண்களால் அவனை பார்த்தார். “அன்னையே, நான் போருக்கெழுகிறேன்! நூறு எதிரிகளை கொல்வேன்! ஏழு விழுப்புண்களுடன் திரும்பி வருவேன்!” என்றான். அசங்கன் தந்தையிடம் தணிந்த குரலில் “இம்முறை தாங்கள் என் வில்தேர்ச்சியை பார்க்கலாம், தந்தையே. என் அம்புகள் இலக்கு பிறழ்வதில்லை” என்றான்.
ஆனால் தந்தை அவனை பார்த்தபோது விழிகளில் துயரே தெரிந்தது. ஆமென்பதுபோல் அவர் தலையசைத்தார். பிறிதொரு சொல்லும் உரைக்காது எழுந்து அறைவிட்டு வெளியே சென்றார். அன்னை அவனிடம் “அவரிடம் இனி இதை குறித்து ஒரு சொல்லும் உரையாட வேண்டியதில்லை” என்றார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அவர் இனி இதைப்பற்றி பேச விழையமாட்டார்” என்று அன்னை சொன்னார். அவன் ஏன் என்று கேட்க எண்ணி சொல்லொழிந்தான். சினி “அன்னையே, நான் போருக்குச் சென்றால்…” என தொடங்க அன்னை கடுமையான குரலில் “நானும் பேச விழையவில்லை” என்றார்.
அசங்கன் திரும்பி தம்பியரை நோக்கி “அணுகுக! அணுகிவருக!” என்றான். அவன் உடல் மெல்லிய நடுக்கு கொண்டிருந்தது. முரசு ஆணையிட்டதும் சூழ்ந்திருந்த வில்லவர்கள் “எழுக அம்புகள்!” என்று கூவியபடி விற்களை நிறுத்தி நாணேற்றி அம்புகளை தொடுத்தனர். நீளம்புகள் வானிலெழுந்து வளைந்து யானைநிரையைக் கடந்து அப்பால் விழிக்குத் தெரியாது ததும்பிக்கொண்டிருந்த கௌரவப் படையை சென்று தாக்கின. “தாக்குக! தாக்குக!” என்று தம்பியரை நோக்கி கூவியபடி அசங்கன் அம்புகளை ஏவினான். இந்த அம்புகள் அங்கு சென்று தைப்பது எங்கே? இதோ செல்லும் அம்பால் உயிர்துறப்பவனுக்கும் எனக்கும் என்ன உறவு? விண்ணில் சந்தித்துக்கொண்டால் நாங்கள் ஒருவரை ஒருவர் அறிவோமா?
முகம்நோக்காது அம்பெய்வது எளிதென்று அவன் சற்றுமுன்னர் வரை எண்ணியிருந்தான். அதுவே கடினம் என்று தோன்றியது. இலக்கு விழிமறைந்திருந்தபோது எந்த அம்பும் வீணாகவில்லை. இதோ இது ஏழு மைந்தரின் தந்தைக்கு. இது இனிய மனையாட்டியை விட்டுவந்த இளமைந்தன் நெஞ்சுக்கு. இது ஒரு தேர்ப்பாகனுக்கு. இது யானைமேல் அமர்ந்தவனுக்கு. அவன் கைநடுங்க வில்லை தாழ்த்தினான். அதிர்ந்துகொண்டிருந்த நாணின்மேல் கைவைத்து அதை நிறுத்தினான். அவன் முதுகெலும்பு கூசி, உடல் விதிர்த்து, விழிகள் கூசின.