பச்சைநரம்பு -கடிதங்கள்

anno

ஒருதுளி இனிமையின் மீட்பு

அன்புள்ள ஜெ

 

பச்சைநரம்பு சிறுகதைத் தொகுதி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். அந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்தபோது எனக்குத்தோன்றியதும் அதுதான். அதிலுள்ள காமம் பற்றிய கதைகள் சுவாரசியமானவை. ஆனால் அவை மனசிலே நிற்கவில்லை. உறுப்பு கதை வாசித்தபோது காமம் பற்றிய கதையா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அது மனசிலே ஆழமாக வேரூன்றிவிட்டது

 

ஆண்மை என்றால் கனிவு என்று சொன்ன கதை அது என இப்போது உங்கள் கட்டுரையை வாசித்தபிறகே தெளிவாக உணர்கிறேன். ஆனால் அதற்கு முன்பே அந்த புரிதலை கொஞ்சம் தெளிவில்லாமல் நான் வந்தடைந்திருந்தேன். அருமையான கதை அது

 

இவ்வளவு விரிவாக ஒரு சிறுகதைத்தொகுதியை நீங்கள் அறிமுகம் செய்திருப்பதற்கு நன்றி

 

செல்வன்

 

 

 

அன்புள்ள ஜெ

 

பச்சைநரம்பு தொகுதியை நான் இன்னும் வாசிக்கவில்லை. இனையம் வழியாக அனோஜனின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். உண்மையான அலைக்கழிப்பு கொண்ட கதைகள். இங்கே நாம் வாசித்துச் சலித்துப்போன கதைகளின் சாயலே இல்லாதவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதோடு இன்று எழுதும்பலரைப்போல மூளையை கொண்டு எழுதாமல் உணர்வுகளால் எழுத முயல்கிறார். சந்தேகமில்லாமல் ஈழத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர் இவர்

 

ஆர்.ராஜகோபால்

 

 

 

 

அன்புள்ள ஜெ,

 

‘பச்சை நரம்பு’ சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரை கடுமையான மன மகிழ்வைத் தந்தது. எதிர்பார்க்காத தருணத்தில் இக்கட்டுரையை வாசிக்கக் கிடைத்தமை, உள்ளிருந்த அத்தனை சோர்வுகளையும் ஒருசேரக் கலைத்தது. எப்போதும் பெரும்பான்மையான ஈழத்து மூத்த எழுத்தாளர்களின் Negativity, எழுத்துப்பரப்பில் என்னை அலைக்கழிக்கவைப்பது. அந்த சரிவிலிருந்து ஒரு துண்டாக வெட்டியெடுத்து இன்னுமொரு இடத்தில் என்னை பொறுத்த உதவுவது உங்கள் கட்டுரைகள். இக்கட்டுரையும் அவ்வாறே.

 

‘உறுப்பு’ சிறுகதை பற்றிய குறிப்பு மிகுந்த உவகையைத் தந்தது. இன்னும் இன்னும் எழுதச் சொல்கிறது அகம். மிகுந்த புத்துணர்வாக உணர்கிறேன்.

 

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38
அடுத்த கட்டுரைஇலக்கியமும் பிறகலைகளும்