கதையோ, கவிதையோ தன்னைதானே எழுதிக்கொள்வது என்றால் என்ன? அப்படி எப்பொழுதாவது அல்லது எப்பொழுதும் உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி எழுதிக்கொள்ளும் எனில் அதில் ‘உங்கள்’ என்று குறிப்பிடப்படும் ஜெயமோகனின் பங்கு என்ன?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
படைப்பு தன்னைத்தானே எழுதிக்கொள்வது என்பதற்கு இரு தளங்களில் பொருள்கொள்ளப்படுகிறது.
ஒன்று தானியக்க எழுத்து [Automatic Writing] என்ற வகை. இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கீட்ஸ், டென்னிசன் முதலிய ஆங்கிலேயப் புத்தெழுச்சிவாதக் கவிஞர்களால் [Romantic Poets] முதலில் உருவாக்கப்பட்ட எண்ணமாகும். கற்பனையின் மயக்கம் அல்லது உணர்ச்சிகளின் வேகம் நிகழும் கணங்களில் அதனுடன் இணைந்து மொழியைத் தன்னிச்சையாக இயங்கவிட்டு, படைப்பை உருவாக்குவது இது. ‘வலிமையான உணர்ச்சிகளின் பொங்கிவழிதல்’ என்று கவிதையை வெர்ட்ஸ்வெர்த் வகுத்ததே புத்தெழுச்சிவாத அழகியலின் இலக்கணம் என நாம் அறிவோம். அப்பொங்குதலின்போது மொழி அதன் ஊடகமாக அமைகிறது அவ்வளவுதான். மொழி கட்டுப்படுத்தப் படுவதோ அல்லது செதுக்கப்படுவதோ இல்லை.
ஆனால் தானியக்க எழுத்து என்ற வகை உருவானது ஜேம்ஸ் ஜாய்ஸ், வெர்ஜீனியா உல்ப் போன்ற படைப்பாளிகள் ஆங்கில இலக்கியத்தில் உரைநடையில் எழுதவந்தபோதுதான். இவர்கள் நவீன அழகியல் மற்றும் உளவியல் கோட்பாடுகளுடன் புத்தெழுச்சிவாதத்தின் கட்டற்ற எழுத்து என்ற முறையையும் இணைத்துக் கொண்டார்கள். இவர்கள் உருவாக்கிய இலக்கிய வழிமுறை நனவோடை முறை [Stream of conscious] எனப்படுகிறது. [கவனிக்க: நனவோடை. பலர் எழுதுவதுபோல நினைவோடை அல்ல. ஓடுவது நனவுநிலையே ஒழிய நினைவுகள் அல்ல] மனம் எப்படி அர்த்தம் உள்ளதும் இல்லாததும், தொடர்பு உள்ளதும் இல்லாததுமான சொற்களின் ஓட்டமாக உள்ளதோ அதை அப்படியே காட்டக்கூடியவகையில் மொழிநடையை அமைத்துக் கொள்ளும் எழுத்துமுறை இது. இம்முறைக்கு ஏற்கனவே சொன்ன ஆங்கிலேய கட்டற்ற கவிவெளிப்பாட்டுமுறை மிகவும் உதவிகரமாக அமைந்தது. இவர்களே தங்கள் எழுத்துமுறையை தானியக்க எழுத்து என அடையாளப்படுத்தியவர்கள்.
பிற்பாடு தானியக்க எழுத்துமுறையை மீயதார்த்தவாத [surrealism] எழுத்தாளர்கள் மிகவும் முக்கியமாக வலியுறுத்தினார்கள். படைப்பு ஆழ்மனதிலிருந்து நேரடியாக மொழியாக வரவேண்டும் என்றார்கள். அதை எவ்வகையிலும் தர்க்கபுத்தியும், பொதுப்புத்தியும் [Logic and commonsense] தீண்டக்கூடாது என்ற அதீத நிலைபாடு இவர்களால் எடுக்கப்பட்டது. ‘எழுத்து எழுத்தை எழுதிச்செல்கிறது’ என்பது இவர்களின் கூவல்.
ஜேம்ஸ் ஜாய்சின் ‘உலிஸஸ்’ இவ்வகைமைக்கு முக்கிய உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் என் போன்ற இந்தியப் பின்னணி கொண்ட ஒருவனால் அதைப் படித்தறிய இயலவில்லை. காரணம் இவ்வகை எழுத்துக்கு மொழியின் இலக்கண நியதிகள், ஒழுங்குமுறைகள் எதுவுமே பொருட்டல்ல. இவை உருவாக்கும் குறிப்புணர்த்தல்கள் அது உருவான கலாசாரத்துக்கே உரியவை. சிலசமயம் அப்படைப்பாளிக்கே உரியவை. மொழியில் இது உருவாக்கும் முற்றிலும் புதிய இயல்தகவுகள் மற்றும் ஆழ்மனப்படிமங்கள் ஆகியவையே இவ்வகை எழுத்தை முக்கியமாக ஆக்குகின்றன. உதாரணமாக இப்படி ஒரு சொற்றொடர் அதில் வரலாம் ”கவனம்! பழம் புளித்த பின்பு கிடைக்கு இரண்டு கேட்டு வாலறுந்து ஓடுபவன்… ஆம் அது நான்தான்…”, இதை தமிழின் மூன்று பழமொழிகளை அறியாதவரால் புரிந்துகொள்ள இயலாது. ஜேம்ஸ்ஜாய்ஸின் ‘உலிஸஸ்’ இப்படித்தான் அமைந்துள்ளது. அது அயர்லாந்துப் பண்பாட்டில் வேரூன்றியது.
தமிழில் லா.ச.ராமாமிர்தம் தானியக்க எழுத்தைக் கையாண்ட படைப்பாளி. அவரது நடையில் நனவோடைச் சாயல் உண்டு. நகுலனின் மழைமரம் காற்று, கோட்ஸ்டாண்ட் கவிதைகள் மற்றும் நினைவுப்பாதை போன்ற நாவல்கள், பிரம்மராஜனின் கவிதைகள் ஆகியவை தானியக்க எழுத்துமுறையைக் கையாண்டவை. கோணங்கி முற்றிலுமே தானியக்க எழுத்துமுறையைக் கையாள்பவர்.
இவ்வெழுத்துமுறைக்கு உள்ள முக்கியமான சிக்கல் மிகச்சிறந்த படைப்பூக்க மனநிலையில் மட்டுமே இது குப்பைக்கூளங்களுடன் மாணிக்கங்களையும் வெளியே கொட்டும் என்பதும் அந்த வேகம் மட்டுபட்டால்கூட அர்த்தமற்ற சொற்குப்பையாக ஆகிவிடும் என்பதும்தான். இவ்வெழுத்துமுறைக்குப் பழகியவர்கள் மிக எளிதில் இதை ஒரு மனப்பழக்கமாக மாற்றிக் கொண்டு ஒரேபோல சொற்களைப் பொழிய ஆரம்பித்துவிடுவார்கள். லா.ச.ராமாமிர்தத்தின் ஆரம்பகாலச் சிறுகதைகள், நகுலனின் ஆரம்பகாலக் கவிதைகளும் நினைவுப்பாதை நாவலும், கோணங்கியின் முதல் இரு தொகுதியின் கதைகளும் இவ்வகைமையில் நல்ல ஆக்கங்கள். இவர்கள் அனைவருமே சீக்கிரத்திலேயே வெற்றுசொற்பெருக்குகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற இருவரும் நிறுத்திவிட்டனர், கோணங்கி இன்றும் கொட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மராஜன் மிக மிக அபூர்வமாக சில கவிதைகளில் தவிர படைப்பூக்க நிலைக்குச் சென்றதே இல்லை. இவ்வெழுத்துமுறையை ஒரு எளிய தொழில்நுட்பமாகவே அவர் கையாள்கிறார்.
இவ்வகை எழுத்துக்கு நேர் எதிரான எழுத்து நவீனத்துவ [Modernism] அழகியலால் உருவாக்கப்பட்டது. மிகுந்த கவனத்துடன், ஒரு சொல்கூட கவனமின்றி வராதபடி படைப்பைச் செதுக்கி அமைப்பது இதன் வழிமுறை. இதற்குச் சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமி. தானாக நிகழும் படைப்பியக்கம் கூட அவரது ஆக்கங்களில் தன்னுணர்வின் சல்லடையால் ஏழுமுறை சலிக்கப்பட்டுத்தான் வெளிவரும்.
இவ்விரு எல்லைகளுக்கும் நடுவே உள்ளது என் பாணி. என் படைப்புகள் திட்டமிட்டு செதுக்கி உருவாக்கப்படுவனவல்ல. அவை நிகழ்பவை. ஆனால் அந்நிகழ்வை என் வடிவ உணர்வும், தர்க்கமும் கண்காணித்தபடியேதான் இருக்கும். வடிவம் என்ற பாத்திரத்தால் உணர்வெழுச்சியை அள்ளுகிறேன். பெரும்பாலான படைப்பாளிகளின் வழிமுறை இதுவே என எண்ணுகிறேன்.
ஒரு தொடக்கத்துக்காக எப்போதுமே கவனமாக இருப்பேன். சமயங்களில் எழுதிஎழுதிப் பார்ப்பதுமுண்டு. வந்ததென்றால் அப்படியே எழுதியபடியே இருக்கவேண்டியதுதான். காடு ஒரேமாதத்தில் எழுதப்பட்டது. ஏழாம் உலகம் ஓரேவாரத்தில். எப்படி கதை போகும், அதில் யார்வருவார்கள் எதுவுமே முன்கூட்டித் தெரியாது. எழுத்தின் வேகமே இட்டுச்செல்லும். சிறந்த கதாபாத்திரங்கள் வரும்போது ஏற்படும் பரவசம் எழுத்தின் சிறப்பனுபவம். ஏழாம் உலகத்தில் மாங்காண்டிசாமி வந்தபோது உடனே என் பதிப்பாளர் வசந்தகுமாரை தொலைபேசியில் கூப்பிட்டு கூவிக் கொண்டாடினேன். சிலசமயம் நாவல் அப்படியே சுவரில் முட்டி நின்றுவிடும். அப்படி நின்றுபோன நான்கு நாவல்கள் கைவசம் உள்ளன. ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் விஷ்ணுபுரம் மூன்று முறை அறுபட்டு மீண்டும் உயிர்க்கொண்டது. ஆறு வருடமாயிற்று முடிக்க. இது ஆழ்மனதின் முடிவற்ற ஆட்டம். கனவு போல. நம்முடையதுதான், ஆனால் நாமறியாதது. இதுவும் கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளுதல்தான்.
இவ்வாறு படைப்பு தன்னைத்தானே எழுதிக் கொள்ளும்போது நான் என பிற்பாடு எஞ்சும் எனது பங்கு அதில் என்ன? எனது கல்வி மூலமும் கற்பனைத்திறன் மூலமும் உருவான மொழியிலேயே அப்படைப்பு நிகழ்கிறது. என் வடிவ உணர்வே அதில் அனைத்தையும் அள்ளும் கலமாக உள்ளது. என் நம்பிக்கைகளையும் அச்சங்களையும் அது பிரதிபலிக்கத்தான் செய்யும். அதன் தரைத்தளம் என் சொந்த போதத்தால் ஆனது. அதன் உச்ச தளம் எனக்கு அப்பாற்பட்ட என் ஆழத்தால் ஆனது. இவ்விரு தளங்களும் ஒரே ஆக்கத்தில் இடம்பெறுகின்றன. அவை ஒன்றையொன்று மறுக்கலாம், மோதிக்கொள்ளலாம், முரண்பட்டு முயங்கிப் புதிதாக ஒன்றை உருவாக்கலாம்.
ஆகவேதான் ருஷ்ய உருவவாதத் [Russian Formalism] திறனாய்வாளரான மிகயீல் பக்தின் ஓர் இலக்கியம் ஆக்கம் பலகுரல்களில் பேசுவது என்றார். அது தனக்குள் உரையாடிக் கொள்வது. இலக்கியப்படைப்பை பலவிதமான கருத்துத்தரப்புகளும் பல்வேறுபட்ட குறியீடுகளும் மோதிமுயங்கி இயங்கும் ஒரு களமாகக் காணும் அவரது ஆய்வுமுறைக்கு உரைமாற்றாடல் திறனாய்வு [Dialogic Criticism] என்று பெயர். படைப்புக்குள் உள்ள இந்த முரண்படும் தளங்கள் மூலம் உருவாகும் இடைவெளிகளை[Gaps] அடிப்படையாகக் கொண்டு படைப்பை ஆராயும் நவீன ஆய்வுமுறைகள் பல உள்ளன.
என் படைப்புலகு வழியாக நீங்கள் இதை எழுதும் என்னை வந்தடைய இயலாது. என் எழுத்துகள் வழியாக என்னை அறிந்த ஒருவர் கூட நேரில் என்னைக் கண்டு பழகும்போது அதிர்ச்சியடையாமலிருந்தது இல்லை. என்னைப் பெருங்குடிகாரனாகக்கண்டு மதுப்புட்டிகள் வாங்கிவரும் நண்பர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். பெரும் பெண்பித்தனாக என்னை உணர்ந்த பல வாசகிகள் உண்டு. படைப்புகளைப் படித்துவிட்டுச் சற்று நெகிழ்வுடன் இருக்கலாகாதா என்கிறார்கள் பலர். நேரிலறிந்தவர்கள் நான் இன்னும் சற்று ‘சீரியஸாக’ இருந்தேயாகவேண்டும் என ஓயாது உபதேசம் செய்கிறார்கள். ஒரு நாவலில் உள்ள என் சமூக அக்கறை இன்னொன்றில் ஏன் இல்லை என்று குழம்புகிறார்கள்.
என் படைப்பில் ஏராளமான ஜெயமோகன்கள். ஒருவரோடொருவர் மோதுபவர்கள். குறிப்பாக ஓயாதுபேசும், விவாதிக்கும் ஒருவர். அவரை வேடிக்கைபார்க்கும் மௌனமே உருவான இன்னொருவர். தெளிவான ஒருவர், அவரால் தூக்கிச்சுமக்கப்படும் குழம்பிப்போன ஒருவர். அறிவார்ந்த ஒருவர் அவரது உடலோடு இணைந்த உணர்ச்சிகரமான ஒரு பித்தர். ஆழமான நம்பிக்கைகள் கொண்ட ஒருவர், அவரை மாற்றவிரும்பும் ஆழமான அவநம்பிக்கைவாதி ஒருவர். ஒரு ஆண், ஒரு பெண். ஒருவர் விசாலாட்சியம்மாவின் மகன், இன்னொருவர் பாகுலேயன்பிள்ளையின் மகன்…. அவர்களுக்கு முடிவேயில்லை. அவர்களை வேடிக்கைபார்க்கவே நான் மீண்டும் மீண்டும் படைப்புலகுக்குள் செல்ல விழைகிறேன்.