‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35

bowபாண்டவப் படைமுகப்பில் பூரிசிரவஸ் தன் தேரில் அமர்ந்து எதிரே எழுந்த செவிநிறைத்துச் சூழும் முழக்கத்தை கேட்டான். “எதிர் வருகிறது யானை நிரை! நேர்கொள்க! யானை நிரை! எதிரில் யானைப்படை!” என்று முரசுகள் ஒலித்தன. பூரிசிரவஸ் தன் கழையனிடம் கைகாட்ட அவன் கணுக்கழையில் தொற்றி மேலேறி அணிலென அதே திசையில் தலைகீழாக கீழிறங்கி குதித்து “நூற்றெட்டு யானைகள் ஒற்றைத்தண்டு கொண்டு வருகின்றன” என்றான். “பதினெட்டு தண்டுகள் எழுந்துள்ளன.” பூரிசிரவஸ் “ஒற்றைத்தண்டா?” என்று திகைத்த மறுகணமே அதை உளத்தால் கண்டான். “தேர்கள் பின்னடைக! படை பின்னடைக!” என்று அவன் ஆணையிட்டான். அவன் ஆணையை முரசுகள் ஒலித்தன.

ஆனால் அவன் எண்ணியவாறு தேர்கள் பின்னடைய இயலவில்லை. முகப்பில் வில்லவர்கள் ஊர்ந்த தேர்கள் பாண்டவப் படைமுகப்பிலிருந்து பின்னகர வேண்டுமென்றால் முகம் திருப்பி வளைய வேண்டியிருந்தது. அவை ஒன்றுடன் ஒன்று விலாசெறிந்து சென்றுகொண்டிருந்தமையால் அதற்கான இடம் இருக்கவில்லை. திரும்பிய ஓரிரு தேர்கள் பிற தேர்களுக்கு இடையூறாயின. புரவிகள் ஒன்றுடன் ஒன்று கால்தட்டி கனைத்தன. சவுக்குகளை அறைந்தபடி வசைச்சொற்களைக் கூவி தேர்களை பின்னிழுத்து கொள்ள முயன்றனர் பாகர்கள். அதற்குள் நூறு யானைகள் சேர்ந்து பற்றிய பெரும் தண்டு ஆழிப்பேரலை என அணுகி வந்தது. விலகவோ ஒழியவோ இயலாதபடி தேர்கள் சிக்கிக்கொள்ள அவற்றை அறைந்து சிதறடித்தபடி அணுகியது.

பூரிசிரவஸ் அந்த அறைதலை ஓசையென்றே உணர்ந்தபடி கைவீசினான். அவன் தேர் பின்னடைந்தது. “மேலும் பின்னடைக! மேலும் பின்னடைக! எதிர்கொள்ளல் ஒழிக!” என்று அவன் கூவினான். “நெடுவில்லவர் முன்னெழுக! தொலையம்புகளை ஏவி யானைகளின் பின்பகுதியை தாக்குங்கள்” என்றான். மத்தகக் கவசம் அணிந்த யானைகளின் நெற்றிமுழைகள் மேல் வில்லவர்களின் அம்புகள் சென்றுபட்டு உதிர்ந்துகொண்டிருந்தன. உடைந்த தேர்களிலிருந்து நுகம் சிதறிய புரவிகள் கனைத்தபடி திரும்பி ஓடிவர, பின்னால் நின்ற தேர்களின் புரவிகள் அவற்றை தடுக்க அங்கு பெருங்குழப்பம் நிலவியது.

கண்ணெதிரில் கௌரவப் படை முழுமையாக சிதறடிக்கப்பட்டுவிட்டதை பூரிசிரவஸ் பார்த்தான். பிறிதொரு அலையாக சற்று அப்பால் மேலும் நூறு யானைகள் பெருந்தண்டு கொண்டு முன்னெழுந்து வந்தன. தண்டேந்திய யானைகளை முகப்பில் அமைக்காமல் வேண்டுமென்றே வில்லவர்களின் தேர்களை முன்னால் நிறுத்தி யானைகளை முற்றிலும் மறைத்து சிகண்டி படைகொண்டு வந்திருக்கிறார் என்று அவன் புரிந்துகொண்டான். வில்லவருக்கெதிராக தேர்வில்லவர் கௌரவர் தரப்பில் அணிநிரந்திருந்தனர். அவர்கள் அம்புகளால் எதிர்கொண்டதும் ஓரு முரசாணையால் பாண்டவ வில்லவர்கள் ஒதுங்கி வழிவிட அவர்களுக்குப் பின்னாலிருந்து தண்டேந்திய யானைகள் முன்னால் எழுந்து வந்தன.

நொறுங்கிய தேர்களை மிதித்து உடைத்துத் நெறித்தபடி யானைநிரை மேலும் மேலும் முன்னால் வந்தது. ஏந்திவந்த தண்டால் ஒன்றுடன் ஒன்று இணைத்து தொகுக்கப்பட்டதால் அவற்றின் விசை ஒவ்வொரு பகுதியிலும் பன்மடங்காக இருந்தது. அந்த அடியை தடுக்கவே இயலவில்லை. தொடர்ந்து பின்னகர்ந்து இணைந்து இணைநிரையென்றாகின கௌரவர்களின் தேர்கள். தேரில் நிலைகொண்டு பெருவில்லெடுத்து நீளம்பு தொடுத்து வானில் எய்து அது வளைந்திறங்கி யானை மேல் விழச்செய்தான் பூரிசிரவஸ். அவனைத் தொடர்ந்து அம்புகள் எழுந்து வளைய அம்புகளாலான ஓர் யானைமுதுகு காற்றிலெழுந்தது. “யானை மேலிருக்கும் பாகன்களை மட்டும் குறிவையுங்கள்” என்றான். “யானைப்பாகன்களை குறிவையுங்கள்!” என்று அவன் ஆணை காற்றிலேறியது.

ஆனால் யானைகளும் பாகன்களும் கவசமணிந்திருந்தமையால் அம்புகள் பெரும்பாலும் பயனற்றன. பின்னகர்ந்துகொண்டிருந்த கௌரவப் படையினரால் குறிபார்க்கவும் இயலவில்லை. நெடுவிற்களை காலில் மிதித்தூன்றி நுனிபற்றி இழுத்து வளைத்து அவர்கள் எழுப்பிய அம்புகள் எவருக்கென்றன்றி எழுந்து இலக்கடையாது அறைந்து விழுந்தன. பூரிசிரவஸ் தன் வலது இடது என இரு பகுதிகளிலும் அலறல் ஒலிகளை கேட்டான். மேலும் பின்னகர்ந்தபோது முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தான். இரு பகுதிகளிலிருந்தும் முரசுகள் “முன்னகர்க! யானைப்படை முன்னகர்க!” என்று ஆணையிட்டன. யானைகள் ஏந்திவந்த தண்டு அணுகி வருந்தோறும் பெருகுவதைப்போல அவனுக்கு தோன்றியது. அது தோதகத்திப் பெருமரங்களை இரும்புப்பூணிட்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கப்பட்டது. அதில் கூரிய இரும்புமுனைகள் பொருத்தப்பட்டிருந்தன.

மேலும் தேரை பின்னெடுக்க இயலாமல் பின்னிருந்து வந்த படையுடன் முட்டிக்கொள்ள அவன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி விரைந்துகொண்டிருந்த புரவியொன்றின் மேலேறினான். கைதூக்கி “பின்னகர்க! இறப்புகளை குறைத்துக்கொள்வதொன்றே வழி! இறவாதொழிக!” என்று ஆணையிட்டான். அவன் படைவீரர்கள் தேர்களிலிருந்து பாய்ந்திறங்கினர். ஆனால் பின்னால் நின்றவர்கள் அதற்கு வழியிலாது திகைக்க தண்டு தேர்களின் மேல் பாய்ந்தது. நூற்றுக்கணக்கான தேர்கள் நொறுங்கும் ஒலி எழ பூரிசிரவஸின் முதுகு சிலிர்ப்படைந்தது. தேர்களும் புரவிகளும் தேர்வலரும் வில்லவரும் இணைந்த திரள் உடைந்து சிதைந்து தண்டின் மீதும் களிறுகளின் கால்களிலுமாக நிலத்திலமைந்தது. பூரிசிரவஸ் கண்களை மூடிக்கொண்டான்.

கௌரவப் படைகளுக்குப் பின்புறம் எங்கோ சங்கொலி எழுந்தது. அது எவருடையதென்று உணர்வதற்கு முன்னரே அவன் உடல் மெய்ப்புகொண்டது. அதன் பிறகே பால்ஹிகரின் கவசயானையான அங்காரகன் துதிக்கை தூக்கி பிளிறியபடி தேர்களை பிளந்துகொண்டு வருவதை அவன் கண்டான். அதன் அடுத்த பிளிறல் மேலும் அருகே ஒலித்தது. மூன்றாவது பிளிறலில் அது அவனைக் கடந்து சென்றது. அங்காரகன் குருதிவழிய சிவந்திருந்தது. அதை சிவந்த யானை என பால்ஹிகர் சொல்லிக்கொண்டிருந்ததை அவன் நினைவுகூர்ந்தான். பால்ஹிகரின் பெருத்த கதையின் சங்கிலியை அவரது யானை துதிக்கையால் பற்றியிருந்தது. அதன் நுனியை அவர் தன் வலக்கையில் பிடித்திருந்தார். உரக்க நகைத்தபடி இரு கால்களாலும் யானையின் விலாவை அணைத்தபடி சிறுவன்போல் எழுந்தெழுந்து நகைத்தார். “செல்க! செல்க!” என்று அவர் ஓசையிடுவது கேட்டது.

அங்காரகன் அவருடைய கதையை தன் துதிக்கையால் சுழற்றி விசையுடன் முன் வீச பெரும் குமிழி பறந்து சென்று நூறு யானைகளால் கொண்டு வரப்பட்ட தண்டின் மேல் அறைந்து விரிசலோசை எழுப்பியது. அதை ஏந்தியிருந்த யானைகள் அனைத்தும் அவ்வதிர்வால் திகைத்து நின்று செவிகூட்டின. இரண்டு யானைகள் தண்டை துதிக்கையிலிருந்து விட்டுவிட்டு பிளிறலோசை எழுப்பின. பால்ஹிகர் பெருங்கதையின் விசையை தன் கைகளால் ஏந்திச்சுழற்றி மீண்டும் ஓங்கி அறைந்தார். இம்முறை மத்தகத்தில் அறைபட்டு கவசத்துடன் தலை சிதற ஒரு யானை பிளிறி முழந்தாளிட்டு விழுந்தது. அனைத்து யானைகளும் திகைத்து நிற்க மேலும் ஒரு யானையை அறைந்து வீழ்த்தினார்.

அங்காரகன் கதையின் நுனியைப்பற்றி மீண்டும் சுழற்றி வீச அடுத்த அறையில் பெருந்தண்டில் இருந்து மெல்லிய முனகலோசை ஒன்று எழுகிறதா என்று பூரிசிரவஸ் வியந்தான். விழிகளும் ஒலிகேட்கப் பழகுவதென்பது போர்க்கலையின் தேர்ச்சிகளில் ஒன்று. மீண்டும் ஒருமுறை கதை சென்று அறைந்து எழுந்தபோது யானைகளில் ஒன்று தண்டை விட்டுவிட்டு துதிக்கையை மேலே தூக்கி சினத்துடன் பிளிறலோசை எழுப்பியது. அது பிடியானை என்பதை பூரிசிரவஸ் நோக்கினான். அனைத்து யானைகளும் அந்த யானையின் ஆணைக்கு கட்டுப்பட்டவையாக உரக்கப் பிளிறியபடி தண்டைத் தள்ளி முன்னெடுத்தன. பால்ஹிகரின் கதை மீண்டும் ஒருமுறை சென்று அறைய யானைகளின் உந்துவிசையாலேயே தண்டின் நடுப்பகுதி விரிசலிடத் தொடங்கியது.

பூரிசிரவஸ் “தண்டின் நடுப்பகுதியை தாக்குக! தாக்கி முன்னெடுங்கள்!” என்று கூவினான். அதற்குள் அவன் படைகளின் பின்னிலிருந்து வந்து விட்டிருந்த மூன்று யானைகள் நீள் தண்டை ஏந்தி விரைந்து முன்னால் சென்றன. அவற்றிலிருந்த பாகர்கள் ஆணையிட அத்தண்டால் எதிர் வந்துகொண்டிருந்த தண்டின் விரிசலிடும் பகுதியை ஓங்கி அறைந்தன. தண்டு இரண்டாக முறிந்து மடிந்தது. அவ்விசைச் சிதறலால் யானைகள் கால் தடுமாறி பிளிறி தண்டை விட்டன. பால்ஹிகர் மீண்டுமொருமுறை தன் கதையால் அறைந்து அத்தண்டை உடைத்தார். யானைகள் நிலைதடுமாறி அங்குமிங்கும் சிதற அவர் கதை எழுந்து சென்று அறைந்தது. ஒரு யானை மத்தகம் உடைந்து கீழே விழுந்தது. இன்னொன்று விலாவில் அறைபட்டு சாய்ந்தது.

அங்காரகன் சினத்துடன் பிளிறியபடி விழுந்த யானைகளின் இடையே புகுந்து அப்பால் சென்றது. நிலைகுலைந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு சுழல பூரிசிரவஸ் “செல்க, இடைவெளிகளினூடாக உள்நுழைக!” என்று ஆணையிட்டு தன் தேர்ப்படையை மீண்டும் ஒருங்கு குவித்து முழு விசையுடன் பாண்டவப் படைகளுக்குள் நுழைந்தான். அம்புகளை இடைவெளியின்றி எழுப்பியபடி அவர்கள் முன்னே சென்றனர். நீளம்பு ஒன்றால் எதிர்வந்த யானையின் காதுக்குப் பின்புறம் அறைந்து அதை பூரிசிரவஸ் வீழ்த்தினான். “யானைகள் மீண்டும் திரளலாகாது… செல்க!” என ஆணையிட்டான். அவன் மைந்தர் யூபகேதனனும் யூபகேதுவும் மூத்தவன் சலனும் அவன் மைந்தர் சார்த்தூலனும் சகனும் அம்புகளை தொடுத்தபடி முன்னால் சென்றார்கள். சகுனி பின்னிருந்து “உடைத்து முன்செல்க! உடைவினூடாக மேலும் உடைத்து முன்செல்க!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தார்.

நிலைகுலைந்த யானைகள் பாண்டவப் படைகளுக்குள்ளாகவே சிதறி பின்வாங்க அங்கிருந்த தேர்களும் வில்லவர் புரவிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி நிலையழிந்து சுழன்றன. பால்ஹிகரின் கதை பித்தெழுந்ததுபோல் துள்ளிச் சுழன்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான். அதில் அறைபட்டு தேர்கள் தெறித்தன. புரவிகள் குருதிச்சொட்டுகளென சிதறின. அந்த கதை சென்ற பாதை பாண்டவப் படைகளுக்குள் மலைப்பாறை உருண்டுசென்ற தடம்போல் உருவாகியது. இருபுறத்திலிருந்தும் பால்ஹிகரை நோக்கி எழுந்து வந்த அம்புகள் அவருடைய எடைமிக்க கவசங்களில் முட்டி விழுந்துகொண்டிருந்தன. அம்புகள் அவருக்கு கொசுக்களைப்போல என்று முந்தைய நாள் எவரோ சொன்னதை பூரிசிரவஸ் நினைவுகூர்ந்தான்.

அவருடைய படைநிற்றல் கௌரவப் படையினருக்கு விண்ணிலிருந்து விளக்க இயலாத பேராற்றலுடன் தெய்வம் ஒன்று வந்து சேர்ந்திருப்பதுபோல் எழுச்சியூட்டியது. அவரை எவராலும் கொல்ல இயலாது என்று வீரர்கள் கூறினர். இறப்பற்று இக்களம் மீண்டு இதேபோல் மேலும் பன்னிரு களம்கண்டு விண்ணிலிருந்து இறங்கிவரும் வெண்ணிற யானை மேலேறி உடலுடன் விண்செல்லவிருப்பவர். மானுடருடன் விளையாட வந்த தேவன். தொலைவிலிருந்து பெருங்கதை சுழன்று செல்வதை, அதை மேலிருந்து இயல்பாக கை சுழற்றி இயக்கியபடி அறைந்து நகைத்து களியாடிக்கொண்டிருந்த பேருருவரை பார்க்கையில் பூரிசிரவஸ் மெய்ப்பு கொண்டான்.

பாண்டவப் படை கலங்கிச் சிதைந்து அகல, இருபுறத்திலிருந்தும் வந்து இணைந்துகொண்ட யானைப்படைகள் எல்லைக்கோட்டை என அமைய, நடுவே அம்புகளை செலுத்தியபடி கௌரவத் தேர்கள் பாண்டவப் படைக்குள் நுழைந்தன. பூரிசிரவஸ் தொலைவில் சிகண்டியின் கொடி வருவதை பார்த்தான். சிகண்டி சீற்றமும் எரிச்சலும் கொண்டிருந்தார். இரு கைகளையும் வீசி தன் படைகளுக்கு ஆணையிட்டபடி அணுகி வந்தார். அவர் வில்லிலிருந்து எழுந்த நீளம்பு பால்ஹிகரின் தோள் கவசத்தை அறைந்தது. முதன் முறையாக அம்பின் விசையொன்றை உணர்ந்த பால்ஹிகர் திரும்பி அவரை நோக்கி இடக்கையைச் சுட்டி சிரித்தார். அதே வீச்சில் கதையை வீசினார்.

தன் கதை செல்லும் தொலைவைக்கூட அவர் கணித்திருக்கவில்லை என்று தெரிந்தது. சிகண்டிக்கும் தனக்கும் நடுவில் நின்றிருந்த வில்லவர்களை, புரவிகளை அறைத்து தெறித்தபடி அவரை நோக்கி சென்றார் பால்ஹிகர். அவர் அணுகுந்தோறும் தன்னை பின்னடையச்செய்து பேரம்புகளால் மீண்டும் மீண்டும் பால்ஹிகரின் தோள்கவசத்தை அறைந்தார் சிகண்டி. ஏன் தோள்கவசத்தில் இலக்கு குவிக்கிறார் என்று பூரிசிரவஸ் எண்ணினான். கவசங்களில் அசைவு மிக்கது தோள்கவசம். பால்ஹிகரோ பெருங்கதையை இடைவிடாமல் சுழற்றுபவர். உறுதியாக அவற்றின் எட்டடுக்கில் ஒன்றேனும் பொருத்து தேய்ந்துவிட்டிருக்கலாம். வலக்கையின் கவசத்தை உடைத்து தோளிலொரு அம்பை நிறுத்திவிட முடிந்தால் அதன்பின் பால்ஹிகர் போருக்கு பயனற்றவரே.

கைகாட்டி வீரர்களை தன்னை தொடரச்செய்தபடி பூரிசிரவஸ் பால்ஹிகரின் பின்னால் தொடர்ந்து சென்று அவ்விசையிலேயே அம்பெடுத்து சிகண்டியின் தேரை நோக்கி செலுத்தினான். நாணொலி கேட்டு திரும்பிப்பார்த்த சிகண்டி தொடையில் கையால் அறைந்து நகைத்தபடி பூரிசிரவஸை நோக்கி திரும்பினார். பூரிசிரவஸ் சிகண்டியின் வில்திறனை முதன்முறையாக அருகென கண்டான். பிதாமகர் பீஷ்மருக்கு நிகரானவர், புல்லை அம்பாக்கும் வித்தையையும் அறிந்தவர் என்று அவரைப்பற்றி அறிந்திருந்தான். பீஷ்மரைப் போலவே சிகண்டி போர்புரிந்தார். தேரில் தவத்தில் ஆழ்ந்த முகத்துடன், தன்னியல்பென நெளியும் உடலுடன், கைகள் நடனமென வீசிச் சுழல நின்றிருந்தார்.

மீண்டும் மீண்டும் சிகண்டியின் அம்புகள் வந்து அவன் தேரையும் கவசங்களையும் உடைத்தன. அவன் பின்னகர விழைகிறானா என்று பாகன் கையசைவால் வினவிக்கொண்டே இருந்தான். “செல்க! செல்க!” என்று ஆணையிட்டபடி மீண்டும் மீண்டும் அம்புகளை அறைந்த பூரிசிரவஸ் அந்த அம்புகள் எவையுமே சிகண்டியை சென்று சேரவில்லை என கண்டான். “துணை சேர்க! உதவி தேவை! துணை தேவை!” என அவன் கோரினான். “சிகண்டியை எதிர்கொள்கிறேன்! சிகண்டிமுன் நின்றுள்ளேன்!” என்று அவன் கூற அக்குரலே பெருகி முழவோசையென எழுந்தது.

அப்பால் காவல்மாடத்தில் பெருமுரசோசை என எழுந்தது சகுனியின் ஆணை. “ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் செல்க! சிகண்டியை எதிர்கொள்க!” ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் வந்துகொண்டிருப்பதை இருபுறத்திலிருந்தும் முரசுகள் கூவி அறிவித்தன. இன்னும் சற்று நேரம். அதற்குள் என் தலை அறுந்து விழாதிருக்கவேண்டும். அம்பொழியாது நிலைகொள்வதையே முதன்மைப் போரென கொள்ளவேண்டும். சென்றெழுந்து தாக்குவதாக தோற்றமும் அளிக்கவேண்டும். பின்னடைகிறோம் என்று தோன்றினால் அதுவே இறப்பு. சிகண்டியின் அம்பின் அருகுவலையத்திற்குள் சென்றால் பிறையம்பு தலைகொய்து செல்வதை தவிர்க்க இயலாது.

பூரிசிரவஸ் “முன்செல்க! முன்செல்க!” என்று கூவியபடி சிகண்டியை அம்புகளால் தாக்கினான். அவன் தேர்ப்பாகன் அவன் எண்ணத்தை புரிந்துகொண்டான். தேரை முன்செலுத்த இயலாமல் எதிர்த்தேரில் முட்டிக்கொண்டவன் என நடித்து அதை விரைவழியச் செய்தான். சீற்றத்துடன் சவுக்கால் புரவிகளை மாறி மாறி அறைந்து கைநீட்டி அவற்றுக்கு ஆணையிட்டான். ஆனால் கவிழ்ந்து கிடந்த இரு தேர்களுக்குப் பின்னால் முட்டிநின்ற அவன் தேரை இழுக்கவியலாது புரவிகள் காலசைத்தபடி அங்கேயே அசைவிலாது நிலைகொண்டன. பூரிசிரவஸை சூழ்ந்திருந்த வில்லவர்கள் சிகண்டியை அம்புகளால் அடித்து தடுத்து நிறுத்தினர். தன் பின்னாலிருந்து வீரர்கள் அலறி விழுந்துகொண்டிருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். ஒவ்வொருவராக அவர்கள் சரிய அவ்விடத்தை நிரப்புவதற்கு மேலும் வில்லவர்கள் இன்மையால் அவனுடைய துணைப்படை வளையம் உடைந்து சிறுகுழு என்றாயிற்று. சிகண்டியை முன்வராது தடுத்த அம்புவேலி மெலிந்தபடி வந்தது.

பூரிசிரவஸ் மிகத் தொலைவில் பால்ஹிகர் கடந்து சென்றிருப்பதை கண்டான். அம்புகளால் அவன் சிகண்டியை தடுத்து நிறுத்தியிருக்க சிகண்டிக்கும் தனக்கும் நடுவே இருந்த யானைகளையும் தேர்களையும் உடைத்தபடி பால்ஹிகர் அவரை நோக்கி சென்றிருந்தால் சிகண்டியை மேலும் பின்னடையச் செய்திருக்க இயலும். ஆனால் அவர் தன்னை எதிர்ப்பவர்களை மட்டுமே எதிர்த்தார். பிறரை தாக்குபவர்களை சென்று தாக்க எண்ணவில்லை. எவரையும் வெல்ல எண்ணவில்லை. எவரையும் காக்கும் பொருட்டு எழவும் இல்லை. அந்தப் பெருங்கதையை சுழற்றுவதன் இன்பத்திற்கு அப்பால் அவர் எதையும் உளம்கொள்ளவில்லை என்று தோன்றியது.

இன்னும் ஒரு படி. இன்னும் ஒரு கணம். இன்னும் சில அம்புகள். சற்று, இதோ அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இதோ வந்து சூழ்கிறார்கள். இன்னும் ஒரு வாழ்க்கை. இன்னும் காலத்துளிகள் சில. பூரிசிரவஸ் சிகண்டியின் முகத்தை அருகிலென கண்டான். முதன் முறையாக இறப்பின் அச்சம் அவனில் எழுந்தது. அக்கணமே அதன் பொருளின்மை எழுந்து தெரிந்தது. அதுவரை அந்நிகழ்வின் மேல் ஏற்றப்பட்டிருந்த அனைத்தும் விலகி அகன்றன. கைநழுவி பளிங்குக் கலம் கீழே விழுந்து உடைவதுபோல பிறிது ஒருபோதும் தன் வடிவுக்கு மீள இயலாத ஓர் அழிதல். அதுவன்றி வேறெதுவுமல்ல. அழிவு. அழிவு மட்டுமே. அழிவு என்பது மிக வெளிப்படையானது. முற்றிலும் உள்ளற்றது. ஆழமென அணுவிடைகூட இல்லாது அலையடிக்கும் பெருங்கடல்வெளி.

அவ்வெறுமை அவனை சீற்றமடையச் செய்தது. அவ்வெறுமையின் திரள் என முன்னால் எழுந்து நின்றிருந்த சிகண்டி மீது பெரும் சீற்றம் உருவாகியது. பற்களைக் கடித்து கண்களில் நீர்கோத்துக்கொள்ள முழு விசையுடன் அம்பை இழுத்து எய்தான். பேரம்பு சிகண்டியின் தலைக்கவசத்தை உடைத்தது. அடுத்த அம்பு அவர் தலைநோக்கி செல்ல உடல் வளைத்து அதை ஒழிந்த சிகண்டி மூன்று தனி அம்புகளால் அவன் தோள்கவசங்களை உடைத்தார். தோளில் அம்பொன்று உரசிச்செல்ல தெறித்த குருதி கவசங்களின் மீது வழிந்தது. உறுமியபடி வந்த பிறையம்பிலிருந்து தப்ப பூரிசிரவஸ் தேர்த்தட்டிலேயே கால் மடித்தமர்ந்தான். தேர்த்தூணை உடைத்துச் சென்றது அது. தேர்முகடை தெறிக்க வைத்தது பிறிதொரு அம்பு. பிறிதொன்று எழுந்து அவன் விலாக்கவசத்தை உடைத்தது. அவன் உருண்டு வேறொரு கவசத்துடன் எழுவதற்குள் விசைமிகுந்த நாகச்சீற்றம் போன்று அவன் விலாவில் தைத்தது ஓர் அம்பு. கால் தளர்ந்து அவன் தேர்த்தட்டில் அமர பிறிதொரு அம்பு அவன் பாகனை கொன்றது. அவன் புரவிகளிலொன்று கழுத்தற்று விழுந்தது. பின் ஓர் அம்புககு அவன் விழுந்து புரண்டெழ தேர்த்தட்டில் நின்று நடுங்கியது.

தேரிலிருந்து பாய்ந்து புரவிகளுக்கும் உடைந்த தேர்ச்சகடங்களுக்கும் நடுவே தன் உடலை ஒடுக்கி ஒளிந்துகொண்டான். மேலும் மேலுமென அம்புகள் வந்து அவனைச் சூழ விழுந்து கிடந்த புரவிகளிலும் யானையுடல்களிலும் தைத்தன. தேர்ச்சகடங்களையும் உடைந்த தேர்முகடுகளையும் அதிர வைத்தன. சிகண்டியின் அம்புகள் தன்னை சினம்கொண்டு தேடிவருவதை அவன் கண்டான். மேலும் உடல் இழுத்து விழுந்து கிடந்த தேர்முகடொன்றை அணுகி அதற்குப் பின்னால் எலிபோல் உடல் சுருட்டி பதுங்கினான். அவனைச் சூழ்ந்திருந்த தேர் வில்லவர்கள் நால்வர் விழுந்தனர். எஞ்சியவர்கள் புரவிகளையும் தேர்களையும் பின்னிழுத்து மேலும் பின்னடைய சிகண்டி நாணொலி கேட்கும்படி, அம்புகளின் சீறலோசை முழக்கமென எழுந்து சூழ அணுகி வந்தார்.

பூரிசிரவஸ் வலப்பக்கம் மிக அருகே நாணொலியை கேட்டான். அது ஜயத்ரதன் என்று தெரிந்ததும் அவன் உள்ளத்திலிருந்து எடையொன்று அகன்றது. மறுபக்கம் அஸ்வத்தாமனின் சங்கொலி எழுந்தது. இருவரும் தங்கள் அணுக்கப்படையினருடன் வந்து சிகண்டியை எதிர்கொண்டனர். சிகண்டி அவர்கள் இருவரையும் ஒரே தருணத்தில் எதிர்கொள்வதை அவன் பார்த்தான். இருகைவில்லவன் என்று புகழ்பெற்ற அர்ஜுனனுக்கு நிகராக இருந்தது அவர் கைவிசை. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் தங்கள் மிகச் சிறந்த அம்புகளால் அவரை தாக்கினர். ஓர் அணுவிடையும் பின்னகராமல் சிகண்டி அவர்கள் இருவரையும் நேர்கொண்டு விசை நிலைக்க அம்புகளால் கோத்து நின்றார்.

பூரிசிரவஸ் முதன்முறையாக தன் மேல் எரிச்சலை உணர்ந்தான். தான் ஒளிந்திருக்கும் இடமும் தன் உடல் அமைந்திருக்கும் வடிவும் அக்கணம்தான் அவனுக்கு புலப்பட்டன. திரும்பி சூழவும் பார்த்தான். அங்கு அவனை நோக்கும் விழிகள் எதுவும் இல்லை. ஆனால் அவனை அவனே நோக்கிக்கொண்டிருந்தான். அக்கணமே அம்பறாத்தூணியிலிருந்து கூரம்பு ஒன்றை எடுத்து கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்ள வேண்டுமென்ற உளவிசையை அவன் அடைந்தான்.

முந்தைய கட்டுரைமுதல்தந்தையின் மீட்சி
அடுத்த கட்டுரைஎம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம்