‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-34

bowகௌரவர்களின் யானைப்படை பன்னிரண்டாவது பிரிவின் முகப்பில் சசக குலத்து யானைவீரனாகிய கம்ரன் தன் படையின் தலைப்பட்டம் ஏந்திச்சென்ற சுபகம் எனும் முதுகளிற்றின்மீது அமர்ந்திருந்தான். சுபகம் போர்க்களங்களில் நீடுநாள் பட்டறிவு கொண்டிருந்தது. எனவே படைநிரை அமைந்ததுமே முற்றிலும் அமைதிகொண்டு செவிகளை வீசியபடி தன்னுள் பிறிதொரு உடல் ததும்புவதுபோல் மெல்ல அசைந்து நின்றது. அதன் உடலிலிருந்த கவசங்கள் அவ்வசைவுகளால் ஒன்றுடன் ஒன்று மெல்ல உரசிக்கொண்டு அலைமேல் நின்றிருக்கும் படகில் வடங்களும் சுக்கானும் ஒலிப்பதுபோல மெல்லிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன.

கம்ரன் தனக்கு ஆணை வருவதற்காக விழிசெவி கூர்ந்து காத்து நின்றான். அவன் அன்று காலை சற்று பொறுமை இழந்திருந்தான். அந்தப் பொறுமையிழப்பு அவனை பதற்றம்கொள்ள வைத்தது. பாகன் பொறுமையிழந்தால் யானையும் அதை பெற்றுக்கொள்ளும். பொறுமையிழந்த யானை செய்வதறியாது திகைக்கத் தொடங்கும். அதன்பின் அதை யானைவீரன் ஆள முடியாது. “யானைமேல் அமர்ந்திருக்கையில் ஒன்று உணர்க, நீங்கள் பேருருவம் கொண்டுவிட்டீர்கள்! அவ்வுருவுக்குரிய உள்ளத்தை அடைக! மானுட உள்ளம் கொண்ட யானை மூங்கில்கழையால் செலுத்தப்படும் பெருங்கலம் போன்றது. கழை உடையும், கலம் நிலையழிந்து திசைமீறும்” என்பது அவன் குடிமூத்தாரும் ஆசிரியருமான குபேரரின் கூற்று.

சுபகம் எப்போதுமே ஆணைகளை எதிர்பார்ப்பதில்லை. அவன் எண்ணமென்று அது ஒரு கணத்திற்கு முன்னரே அறிந்திருந்தது. அவன் உடலசைவினூடாக அவன் உள்ளத்துடன் தொடர்பிலிருந்தது. பிறயானைகள் அதை அஞ்சின. காஞ்சனம் என்னும் முதிர்ந்த பெண்யானையால் ஆளப்பட்டுவந்த யானைக்கொட்டிலில் அது முற்றிலும் தனித்திருந்தது. மிக அரிதாகவே அதன் குரல் கொட்டிலில் எழுந்தது.  மிகத்தாழ்ந்த கார்வையுடன் அது ஒற்றைச் சொல்லுரைக்க பிற யானைகள் அதை அஞ்சியதுபோல் தலை நிலைக்க, செவிகோட்டி, துதிக்கை சரித்து ஏற்றுக்கொண்டன.

“தன் மேல் அமர்ந்திருப்பவனை முழுதேற்றுக்கொண்ட யானை பிற யானைகளைவிட ஆற்றல்மிக்கது. அவன் உள்ளத்தையும் தன் உள்ளத்துடன் சேர்த்துக்கொள்கிறது அது.மானுடரின் வஞ்சங்கள் விழைவுகள் அனைத்தையும் யானை பெற்றுக்கொள்கிறது. அறிக, அதனால் அது மானுட உள்ளத்தை அடைகிறதென்று பொருளில்லை!. எந்நிலையிலும் மானுடனின் அச்சத்தையும் சிறுமையையும் யானை பெற்றுக்கொள்வதில்லை” என்று குபேரர் சொன்னார்.

அவன் அதை அறிந்திருந்தான். அவன் அறியாத பிறிதொன்று அதனுள் வாழ்வதை அதை ஓட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்லும்போதெல்லாம் உணர்ந்தான். காட்டுக்குள் நுழைவதுவரை அது அவனறிந்த யானையாக இருக்கும். புதர்களுக்குள் மூழ்கி ஊடுருவிச் செல்கையில் மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் அவன் அதன் மத்தகத்தின் மீதிருந்து இறங்கிவிடுவான். பின்னர் தன் துரட்டியும் குத்துக்கோலுமாக பின்னகர்ந்துவிடுவான். காட்டுக்குள் செல்லும் சுபகம் ஓரிருநாட்களுக்குப்பின் நினைவுமீண்டதுபோல் திரும்பிவரும். உடலெங்கும் மண்மூடி, சிறுசெடிகள் முளைத்திருக்க, குன்றுபோலிருக்கும்.

காட்டுக்கு வெளியே இருக்கும் சிறுகுடிலில் அவன் அதற்காக காத்திருப்பான். சுபகம் காட்டின் விளிம்பில் வந்து நின்றிருக்கும் காட்சிக்காக அவன் விழிகள் தேடிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் புலர்காலையின் முதல்வெளிச்சத்தில் அது தொங்கவிடப்பட்ட பட்டம் போல மெல்ல அசைந்தபடி நின்றிருப்பதை காண்பான். அது இரவில் எப்போதோ வந்திருக்கும். ஆனால் ஓசையெழுப்புவதோ வரவை தெரிவிப்பதோ இல்லை. அவன் உள்ளத்தில் முதலில் எழுவது அச்சம்தான். சென்ற யானைதான் திரும்ப வந்திருக்கிறதா? அதற்கு அது சுபகம் என்பது நினைவிருக்கிறதா?

குடில்வாயிலில் நின்று அவன் அதை நோக்கிக்கொண்டிருப்பான். அது அங்கிருந்து அவனை நோக்கியபடி அசைந்துகொண்டிருக்கும். மெல்ல அவன் அதை நோக்கி நடப்பான். வழியில் பலமுறை நின்று அதன் அசைவுகளை விழிகூர்வான். அது செவிகோட்டி ஒலிகூர்ந்தும் துதிக்கை நீட்டி மணம்பிடித்தும் அவனை அறியமுயலும். உறுமலோசை எழுந்தால், தலைகுலுக்கல் நிகழ்ந்தால் அவன் நின்றுவிடுவான். மீண்டும் நெடுநேரம் கடந்தே அதை நோக்கி செல்வான். அதை அணுகி கையெட்டும் தொலைவில் நின்று “மைந்தா!” என்று அழைப்பான். “என் தந்தை அல்லவா? என் தெய்வம் அல்லவா? நான் கம்ரன். உன் அணுக்கன்” மெல்லியகுரலில் திரும்பத்திரும்ப அதை சொல்லிக்கொண்டிருப்பான்.

பின்னர் கைநீட்டியபடி அடிமேல் அடி எண்ணி வைத்து அதை அணுகுவான். ஒருமுறை அவன் தொடுவதற்கு கைநீட்டியபோது சுபகம் அமறியது. அவன் அஞ்சி பின்னடைந்து மீண்டும் நெடும்பொழுது கடந்தே அதை அணுகினான். அதை மெல்ல தொட்டுவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதென்று பொருள். அறியவொண்ணா இருள்குவையென நின்றிருக்கும் அது யானையென்று ஆகி சுபகம் என்று பெயர்சூடிவிட்டது. “காலெடு யானை” என்று அவன் சொல்வான்.  “யானை காலெடு!” என பலமுறை சொன்னபின் அது காலை தூக்கும். செவிபற்றி ஏறி மத்தகத்தின் மேல் அமர்ந்துகொள்ளும்போது மண் கால்கீழே ஆழத்திலெங்கோ இருக்கும்.

யானைக்குள் எல்லைகளும் கட்டுகளும் அற்ற காடு ஒன்று குடிகொள்கிறது. அனைத்துக் கல்விகளும் சொற்களும் வெளியே இருந்து அதற்கு அளிக்கப்படுபவை. உள்ளே யானை மிகமிக தனித்தது. மானுடர் எவரையுமே அடையாளம் காணும் ஆழம் அற்றது. யானை போர்க்களத்தில் தன் படை நோக்கி திரும்புதலும், தன் இணையானையை குத்திக் கவிழ்ப்பதும் எப்போதும் நிகழ்வதுதான். குபேரர் சொன்னார் “எந்நிலையிலும் யானையின் துதிக்கை காக்கப்படவேண்டும். அதனுடலில் மிக நுண்ணிய உறுப்பு துதிக்கை. தேக்கு மரங்களை பிழுதெடுக்கவும் தரையிலிருந்து பயறுமணி ஒன்றை பொறுக்கி எடுக்கவும் ஆற்றல் கொண்டது. மானுடருக்குள் எண்ணம்போல யானை முகத்தில் அது திகழ்கிறது. ஒரு கணமும் ஓயாதது, எப்போதும் எதையோ தேடுவது. யானையின் துதிக்கை புண்பட்டால் அது அனைத்தையும் உதறி அக்கணமே காட்டுக்கு மீண்டுவிடுகிறது”.

“அறிக! துதிக்கையால்தான் அது இவ்வுலகுடன் தொடர்பு கொண்டுள்ளது. தொட்டறிகிறது. முகர்ந்துணர்கிறது. மூச்சுவிடுகிறது. உண்கிறது. உரையாடுகிறது. துதிக்கை இழந்த யானை இவ்வுலகுடன் அதை பிணைக்கும் அனைத்தும் துணிக்கப்பட்ட ஒன்று. அதன் ஆழத்து தெய்வங்களால் அது பின்னர் ஆளப்படுகின்றது. அதன் செவியசைவில், வால்நெளிவில், கால்வைப்பில் தங்கள் திமிறலை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பவை அத்தெய்வங்கள். இளையோரே, அத்தெய்வங்கள் காட்டிலிருந்து பிடுங்கி கொண்டுவரப்பட்டவை. நகர்களில் பலியும் கொடையும் பெறாதவை. யானையுடலெனும் இருளறைக்குள் வாயில்கள் இன்றி அடைபட்டவை. அவை மானுடர் மேல் கொண்டிருக்கும் வஞ்சம் அளவிறந்தது” என்றார் குபேரர்.

யானையின் துதிக்கைக்கென அமைந்த கவசம் ஒன்றின்கீழ் இன்னொன்றென அமைந்த அரைவளையங்களின் அடுக்குகளால் ஆனது. பெருமுதலையொன்றின் எலும்புச்செதில் வால்போல. யானையின் துதிக்கை நிலையற்று சுழன்றுகொண்டிருக்க, நெரிபடும் பற்கள்போல் ஓசையெழுப்பி அக்கவசம் முனகிக்கொண்டிருந்தது. அவன் முன்நடத்திய நூற்றெட்டு யானைகளின் கவசஒலிகளாலும் ஒளியலைகளாலும் அந்தப் படை கொதித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அல்லது கண்ணுக்குத் தெரியாத பேரெடை ஒன்று வந்து அமைய அழுந்தி நொறுங்கி மண்ணிலமர்ந்துகொண்டிருப்பதுபோல.

புலரியின் கொம்போசை எழுந்ததும் தொடர்ந்து போர்முரசுகள் முழங்கத் தொடங்கின. கம்ரன் தன்னுடலெங்கும் எழுந்த மெல்லிய விதிர்ப்பில் பற்கள் கூச, கண்கள் ஒளி மங்கி நீர் கொள்ள, உடலை இறுக்கி பின்பு தளர்த்தினான். ஒவ்வொரு முறையும் போர்முரசு அத்தகைய உடலுணர்வை அவனிடம் ஏற்படுத்தியது. உடலிலிருந்து அரிதான ஒன்று வெளியேறுவதுபோல. பெண்ணுறவின் உச்சம்போல. அது இறப்பின் தருணமா? உயிர் அகல்வதும் அவ்வாறுதான் இருக்குமோ? ஒவ்வொரு நாளும் இறந்தபின்புதான் போர் தொடங்குகிறதா? அவனுக்கான ஆணையை தொலைவில் கொடி சுழித்து அசைந்து அளித்தது. கைகளைத் தூக்கி அசைத்து தன் படைப்பிரிவுக்கு “முன்னேறுக! முன்னேறுக!” என ஆணையிட்டபடி அவன் படைமுகப்பில் ஊர்ந்தான்.

சுபகம் தன் துதிக்கையைத் தூக்கி பிளிறியபடி அதன் வலப்பக்கம் கீழே கிடந்த  தோதகத்தி அடிமரத்தில் இரும்புப் பூணிட்டு இறுக்கி உருவாக்கப்பட்ட நீண்ட தண்டை எடுத்துக்கொண்டு முன்னால் சென்றது. அலையிலெழும் கட்டுமரம்போல் தண்டு முன்னால் செல்ல “தாக்குக! எதிரிப்படைகளை பிளந்து செல்க!” என்று ஆணையிட்டபடி கம்ரன் முன்னால் சென்றான். அவனைச் சூழ்ந்து அவனுடைய படையின் நூற்றெட்டு யானைகளும் தண்டுகளேந்தி எடைக்கு உடல்குறுக்கி விரைவடி வைத்து முன்னால் சென்றன. சுபகம் தன் தண்டால் எதிரே வந்த தேர்நிரையை தாக்கியது. அதன் பெருவிசையால் தேர்கள் உடைந்தன. பொருளற்றுப்போன நுகங்களுடன் புரவிகள் திகைத்து முட்டிச்சுழித்தன. கனைப்புகளும் அலறல்களுமாக அவன் சூழல் கொந்தளிக்கலாயிற்று.

தண்டை பின்னிழுத்து மீண்டும் பிளிறியபடி விசைகூட்டி தாக்கி முன்சென்றது சுபகம். இருபுறமும் யானைகள் தண்டுகளால் தாக்கி தேர்ச்சூழ்கையை உடைத்தன. எதிரில் சிகண்டியின் கொடி தெரிந்தது. இடப்பக்கம் பாஞ்சாலத்தின் வில்லும் வலப்பக்கம் மண்டையோடும் பொறிக்கப்பட்ட சிவந்த கொடி அனலென படபடத்தது. அங்கிருந்து அவருடைய ஆணையை கொம்புகளும் முரசுகளும் அறிவித்தன. “முன்செல்க! முன்செல்க!” என்று கூவியபடி கம்ரன் தன் படையை எடுத்துச்சென்றான். உடல் அனைத்து பதற்றங்களையும் இழந்து குளிர்ந்து நீரடியில் பாறையென ஆயிற்று. கண்கள் பலவாகப் பெருகி இருபுறமும் நிறைந்தன. கவசஇரும்புகள் மின்ன தெளிநீர் அலையெழுந்து செல்வதுபோல் எதிரிப்படையை சென்று முட்டிய யானை நிரையின் எடையை ஒட்டுமொத்தமாகவும் ஒவ்வொன்றாகவும் கணக்கிட்டு கைகளும் வாய்களும் ஆணை பிறப்பித்தன. கீழே தாழ்வான வண்டியில் அமர்ந்து அவன் கைக்கும் வாய்க்குமென விழிகூர்ந்து வந்துகொண்டிருந்த கொம்பூதிகள் அவன் ஆணைகளை ஓசையாக்கி காற்றில் நிறைத்தனர்.

தான் சொல்வது தனக்கே திரும்ப வருவதை அவன் கேட்டான், மானுடக்குரலை தெய்வங்கள் எதிரொலிப்பதுபோல. அல்லது அவன் எண்ணுவதை அவை முன்னரே அறிந்திருக்கின்றன. அவை நுண்வடிவில் ஆணையிட அவற்றையே அவன் சொல்லென்றாக்கினான். விண் வளைவில் மோதி அது தேவர் மொழியில் எதிரொலிக்கிறது. இடியின் மொழி. புயல்காற்றின் மொழி. தன் சிறு கையசைவு ஒன்று வானிழியும் ஆணை என்று மாறும்போது முதல் நாள் எழுந்த உவகையை அவன் நினைவுகூர்ந்தான். விண்வாழும் பேருருவ இருப்பொன்று தன்னை அறிகிறதென்று முதலிலும், தானே ஒரு பேருருவ இருப்பென்று ஆகிவிட்டதாக மறுகணமும் தோன்றியது.

அப்பேருரு அவனுள் எப்போதும் ஒரு யானை வடிவிலேயே இருந்தது. ஆறு வயதில் அவனை தந்தை யானைக்கொட்டிலுக்கு பணிக்கு அழைத்துச் சென்றார். கைக்குழந்தையாக இருக்கையிலேயே அன்னையுடனும் தந்தையுடனும் அவன் வந்த கொட்டில். மானுடரை விடவும் அவன் கூர்ந்து நோக்கியது யானைகளைத்தான். அன்னை தந்தையெனும் சொற்களுக்கு முன்னதாகவே யானை எனும் சொல்லை அவனுள் சொல்லத் தொடங்கிவிட்டான். மாதங்கரின் குலத்தில் யானைகளைத்தான் மொழி முதலில் அறிகிறது. மிக எளிதாக சொல்லும்பொருட்டே அச்சொல் உருவாகியிருக்கிறது. இளமைந்தர் எவரேனும் அச்சொல்லை கண்டடைந்திருக்கலாம்.

அவனை தந்தை அழைத்துச்சென்று சுபகத்தின் அருகே நிறுத்தினார். அதன் கால் நகங்களிலெழுந்த அரக்கப்பெருஞ்சிரிப்பை பார்த்து அவன் திகைத்து ஒருகணம் பின்னடைந்தான். “அஞ்சுகிறான்!” என்று அன்னை நகைத்தாள். “யானைக்கு அணுக்கமாகி ஓருடலென அதனுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போதுகூட இறுதிக்கணம் வரை பாகனிடம் எஞ்சுவது இந்த அச்சம். தன் ஆணைக்கிணங்கி தோழனென்றும் ஊர்தியென்றும் உடன்வரும் இவ்விலங்கு கனவுகளில் தெய்வமென்றும் கொலைவடிவென்றும் எழுந்து வந்துகொண்டிருக்கும் விந்தையை அவன் ஒருபோதும் கடக்க இயலாது” என்றார் தந்தை.

அவனை இரு தோள்களையும் பற்றித் தூக்கி சுபகத்தின் காதருகே கொண்டுசென்றார். “உன் பெயரை சொல்” என்றார். அவன் தந்தையை திரும்பிப்பார்த்தான். “சொல்! உன் பெயர் என்னவென்று சொல்!” என்றார். “கம்ரன்” என்று மிகத் தாழ்ந்த குரலில் அவன் சொன்னான். அன்னை “இன்னும் சற்று குரலெழுப்பு” என்றாள். தந்தை திரும்பி புன்னகைத்து “யானைக்கு முணுமுணுத்தாலே கேட்கும். பல தருணங்களில் நம்முள் எண்ணமென எழுவதே அதற்கு கேட்டுவிடும்” என்றார்.

அன்று யானையின் சாணியை அள்ளிக்கொண்டு சென்று குழியிடும் பணியை அவனுக்களித்தார். “யானைப்பிண்டத்தில் உழல்வதிலிருந்து தொடங்கு. அந்த மணம் அதற்கு தெரியும். அதனூடாகவே உன்னை அது ஏற்றுக்கொள்கிறது” என்றார். அன்று முதல்முறையாக அவன் அத்தனை அணுக்கத்தில் யானைச்சங்கிலியை பார்த்தான். மலைப்பாம்பொன்று சுருண்டு கிடப்பதைப் போன்றிருந்தது. அதில் கால் தட்டியபோதுதான் அங்கு அது இருப்பதை கண்டான். இரவில் வீசிய மண் புழுதியால் மண்குவியலென்றாகியிருந்தது. அவன் கால்பட்டு அது சற்றும் அசையவில்லை. எடைமிக்க இரும்புப் படைக்கலங்களை குவித்துப்போட்டதுபோல. அள்ளித் தூக்க முயன்றபோது ஒரு கண்ணியைக்கூட நகர்த்த முடியவில்லை.

தந்தை திரும்பிப்பார்த்து புன்னகைத்து “அதை எந்த மானுடராலும் அசைக்க இயலாது. யானை தன்னைத்தானே எடுத்து அதை பூட்டிக்கொள்ளும்” என்றார். அவன் விழிகளில் எழுந்த மாற்றத்தை பார்த்து “தன்னை நமக்கு அடிமையென அதுவே ஆக்கிக்கொள்கிறது” என்றார். “ஆனால் அச்சங்கிலி யானையால் உருவாக்கப்பட்டதல்ல. எந்த மனிதனாலும் உருவாக்கப்பட்டதல்ல. பல்லாயிரம் மானுடரின் உள்ளங்களை இணைக்கும் தெய்வம் ஒன்றால் உருவாக்கப்பட்டது. அத்தெய்வத்தையே மாதங்கி என நாம் வணங்குகிறோம். கொற்றவையின் நூற்றெட்டு உருத்தோற்றங்களில் ஒருத்தி. கைகளில் அங்குசமும் தாமரையும் கதாயுதமும் கோலும் கொண்டு யானைமேல் அமர்ந்து எழுந்தருள்பவள். அவளை வணங்குக!”

யானைப்படை பாண்டவர்களின் தேர்நிரையை உடைத்து உட்செல்ல அங்கிருந்து எழுந்த ஆணைகளால் தேர்கள் நீர் விலகுவதுபோல் உருமாறி இருபுறமும் அகன்றன. அவற்றுக்கு அப்பாலிருந்து விலகும் நீரிலிருந்து பாறைகள் எழுவதுபோல் பாண்டவர்களின் யானைப்படை எழுந்து வந்தது. தண்டுகளும் வீசுகதைகளும் ஏந்திய யானைகள் பிளிறியபடி விரைவடிகள் எடுத்து வைத்து தன் படை நோக்கி வருவதை கம்ரன் கண்டான். விசையில் அவை உருளைகள்போல் உடல் குறுக்கியிருந்தன. துதிக்கை சுருட்டி தலையை நிலம் நோக்கி தாழ்த்தி மத்தகத்தில் எழுந்த கூர்வேல்களும் கொம்புகளில் பொருத்தப்பட்ட நீள்வேல்களும் முனைமின்ன பிளிறியபடி வந்தன.

போர்க்களத்தில் யானை முரசுப்பரப்பில் மெல்ல கோலால் தடவுவது போன்ற ஓசையல்லா ஓசையுடன் மெல்ல உறுமி ஒன்றுடன் ஒன்று சொல் கோத்துக்கொள்ளும். அவ்வோசையின் திரள் முழக்கம் என ஆகும். அத்தனை ஓசைகளுக்கு நடுவிலும் அதை அவனால் தெளிந்து அடையாளம் காணமுடிந்தது. இருபத்தாறு ஆண்டுகளாக அவன் கேட்டுக்கொண்டிருக்கும் ஓசை. யானையின் எண்ணமே ஒலியென்றானதுபோல. ஒவ்வொரு தருணத்திலும் அது எழுப்பும் ஒலிமாறுபாடுகள் அவனுக்கு தெரியும். ஆயினும் முற்றிலும் அறியாத பிறிதொரு மொழியென்றே அது இருந்தது. நகரில் பிறந்து மானுடருள் வாழ்ந்து முதிர்ந்தாலும் யானைகள் அந்த மொழியை மானுடருக்கு அப்பால் கரந்து வைத்திருக்கின்றன.

சுபகத்தின் தண்டுடன் எதிரில் வந்த யானையின் தண்டு மோதியது. அதன் அதிர்வை அவன் உணர்ந்தான். இரு யானைகளும் பின்னகர்ந்து வெறியுடன் மத்தகங்களால் முட்டிக்கொண்டன. தண்டை கீழேவிட்டு துதிக்கையோடு துதிக்கை பிணைத்துக்கொண்டு ஒன்றையொன்று முட்டி முன்னும் பின்னும் நகர்ந்தன. உதறி பின்னகர்ந்து விசைகூட்டிப் பிளிறியபடி மீண்டும் மத்தகத்தால் ஒன்றையொன்று முட்டின. எதிரியானையின் மத்தகங்களில் பொருத்தப்பட்டிருந்த எடை மிக்க கூர்முனைகள் உடைந்து நசுங்கின. மீண்டுமொரு முறை சுபகம் பின்னகர்ந்து பாய்ந்து மத்தகத்தால் தாக்கியபோது அந்த யானை நின்று சற்றே அசைந்து பக்கவாட்டில் விழுந்தது. அதன் துதிக்கையை சுற்றிப் பற்றி வலக்காலைத் தூக்கி அதன் கழுத்தில் வைத்து ஒரு முறை இழுத்து கழுத்தை முறித்துவிட்டு சீற்றத்துடன் அடுத்த யானை நோக்கி சென்றது சுபகம்.

கீழே விழுந்து நான்கு கால்களும் மேலே தெரிய துடித்துக்கொண்டிருந்த அந்த யானையை அரைக்கணம் பார்த்து கம்ரன் தன் பார்வையை திருப்பிக்கொண்டான். கீழிருந்து வேல்களும் அம்புகளும் எழுந்து வந்துகொண்டிருந்தன. யானையின் மத்தகத்தின் மீது கவிழ்ந்து அதன் பாறைத் தோல்பரப்பை அணைப்பதுபோல் படுத்துக்கொண்டு அவன் அதற்கு ஆணைகளை இட்டான். சுபகம் ஆணைகளை விரும்புவதில்லை என்று அவன் அறிந்திருந்தான். அதற்கு இலக்கு அறிவிக்கப்பட்டபின் தன் உத்திகளையும் சூழ்ச்சிகளையும் அதுவே வகுத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் எதிர்வந்த யானையை வீழ்த்தி அதை முற்றாக கழுத்தை முறித்த பின்னரே அது அடுத்த யானையை நோக்கி சென்றது.

வயிற்றில் மிதித்தோ கொம்புகளால் குத்தியோகூட யானைகளை யானையால் கொல்லமுடியும். ஆனால் அதற்கு சற்று பொழுதாகும். வீழ்ந்த யானையின் கழுத்து முறிக்கப்படுவதை பிற யானைகள் பார்க்கவேண்டுமென்று சுபகம் விரும்புகிறது. சீற்றத்துடன் கொம்பு குலுக்கி அது முன்வரும்போதே எதிரியானை அறியாது அச்சமடைந்து ஓரடி பின்னால் வைத்து பாகனின் ஆணைக்கேற்ப மீண்டும் விசை திரட்டி வருவதை அவன் கண்டான். அந்த அச்சத்தாலேயே ஓரிரு முட்டல்களுடன் அது சுபகத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறது. கருங்குவியலென விழுந்து எழுந்த வயிற்றிலிருந்து மூச்சு துதிக்கைக் குழாயினூடாக சீறி புழுதிபறக்க அமைய, செவிநிலைத்து வாயிலிருந்து குருதி வழிந்துறைய உடல்துறக்கிறது.

கரிய அலைக்கொந்தளிப்பாக சூழ்ந்து நடந்துகொண்டிருந்த யானைப்போரை அவன் கண்டான். யானைகள் கொப்புளங்கள் வெடித்தழிவதுபோல மறைந்துகொண்டிருந்தன. தனது யானைப்படையில் இருபது யானைகளுக்கு மேல் விழுந்துவிட்டதைக் கண்டு “விரியவேண்டாம், குவிந்து தாக்குக! கூர்கொண்டு தாக்குக! ஒவ்வொரு யானைக்குப் பின்னாலும் இன்னொரு யானை இருக்கவேண்டும்! வீழ்ந்த யானையை வரும் யானை நிரப்ப வேண்டும்! முன்செல்லும் யானைகளுக்கு முன் நம் அம்புகள் சென்று விழுந்து ஒரு வெளி உருவாகவேண்டும்!” என்று அவன் ஆணையிட்டான்.

சிகண்டியின் படைக்குப் பின்னால் நின்று நெடுவில்லவர்கள் எய்த அம்புகள் கம்ரனின் தலைக்கு மேல் எழுந்துசென்று அப்பால் யானைமேல் அமர்ந்திருந்த பாகன்களை வீழ்த்தின. யானைகளின் மத்தகங்களிலும் உடல்களிலும் அமைந்திருந்த கவசங்களை அம்பு சென்று அறைய அவை சிலிர்த்துக்கொண்டன. கவசங்களின் இடைவெளிகளில் அம்பு தைத்திறங்க அவை உடல் அதிர்ந்து நின்றவாறே பக்கவாட்டில் சரிந்து விழுந்தன. “யானைகளை முகம் திருப்பச் செய்யுங்கள்! முகம் திருப்புக! யானைகள் சிகண்டிக்கு நேர் முகம் நிற்கவேண்டும்!” என்று அவன் ஆணையிட்டான். ஆனால் மிகவும் முன்னகர்ந்துவிட்டிருந்த அவன் படையால் பின்னால் வரவோ பக்கவாட்டில் திரும்பவோ இயலவில்லை.

அவன் யானைப்படைக்கு வலது பக்கமாக வந்துகொண்டிருந்த சிகண்டி ஒவ்வொரு அம்பிலும் ஒரு யானைப்பாகனையோ படைத்துணைவனையோ வீழ்த்திக்கொண்டிருந்தார். அவர் அம்புகள் பட்டு நான்கு யானைகள் வீழ்வதை கம்ரன் கண்டான். யானை தன் காதுகளை அசைக்கும் கணத்தில் ஒரு மின்னென தெரிந்து மறையும் அதன் நரம்புக்குழியை கணித்து அம்பு செலுத்துவது மானுடரால் இயல்வதா என அவன் அகம் வியந்தது. வானில் பறக்கும் பறவைகளின் சிறகுகளை மட்டுமே அரிந்து வீழ்த்தும் வில்லவர்களை அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் முன் மேலும் மேலுமென யானைகள் விழுந்துகொண்டே இருந்தன. “செல்க! செல்க! அவரை நோக்கி செல்க!” என்றான். “அவர் அம்புகளுக்கு இடைகொடுக்காதீர்கள். அவருடைய களிற்றுநிரையை உடைத்து அழியுங்கள்.”

சுபகம் அவனது ஆணையை கேட்டதுபோல தண்டை எடுத்துக்கொண்டு பிளிறியபடி சிகண்டியை நோக்கி சென்றது. சிகண்டியைச் சூழ்ந்திருந்த வில்லவர்களின் அம்புகள் அவன் மேலும் சுபகத்தின் கவசங்களின் மேலும் அறைந்து விழுந்தன. எதிரில் வந்த இரண்டு யானைகளை அறைந்து தூக்கி அப்பால் வீசியது சுபகம். மூன்று தேர்களை தண்டுகளால் அறைந்து உடைத்தது. சிகண்டியை மிக அருகிலென கம்ரன் கண்டான். சுபகத்திற்கு ஆணையிடலாகாது என்பதை மறந்து “கொல்க! கொல்க! அவ்விழிமகனை இக்கணமே கொல்க!” என்று கூவினான். “ஆணிலியே… இன்று உன் இறுதிநாள்… என் களிற்றுக் காலடி உனக்கு!” என்றான்.

சிகண்டியின் கண்களில் சினமோ சீற்றமோ தெரியவில்லை. அவை மங்கலாக இரு ஒளிப்புள்ளிகள் போலிருந்தன. அவர் கைகள் அம்பெடுப்பதை, நாண் இறுகி இழுபடுவதை, வில் வளைந்து தெறிப்பதை, கணம் கணமென கம்ரன் கண்டான். அம்பு வந்து சுபகத்தின் கவசத்தை உடைத்து அதன் தோளில் ஆழ்ந்திறங்கியது. அவன் திகைத்து யானையின் மத்தகத்தை பற்றிக்கொண்டான். யானையின் உடல் முழுக்க ஓடிய நடுக்கை உணர்ந்தான். யானை சரிந்து நிலத்தில் விழுந்தது. அவன் அதில் காலூன்றி தாவி அப்பால் இறங்கினான். அக்கணமே சிகண்டியின் அம்பொன்று வந்து அவன் முன் மண்ணிலூன்றியது. அவன் பாய்ந்து இன்னொரு களிற்றை நோக்கி ஓடினான். அவனுக்குச் சுற்றும் உறுமும் அம்புகள் சென்றுகொண்டிருந்தன.

சுபகம் துதிக்கையை சுழற்றியபடி பாய்ந்தெழுந்து பிளிறியபடி உடலை உதறிக்கொண்டது. எதிரே வந்த களிறொன்றை மத்தகத்தால் முட்டி அது நிலையழிந்த கணத்தில் தூக்கிச் சுழற்றி அறைந்து அதன் பள்ளையை மிதித்து வாயில் குருதி பீறிட சிதைத்து அடுத்த யானையை முட்டியது. அதன் விசையாலேயே மத்தகம் பிளக்க சுழன்ற துதிக்கையிலிருந்து குருதி வளைந்து தெறிக்க அந்த யானை வீழ்ந்தது. அடுத்த யானை அஞ்சி குரலெழுப்பியபடி பின்னடைந்தது. சுபகம் எவரும் கணிக்கவியலா விரைவுடன் சிகண்டியின் தேரை அணுகி அதன் மேல் ஓங்கி அறைந்து உடைத்தது. தேர்த்தூணை பற்றித் தூக்கி அப்பாலிட அதில் கட்டப்பட்டிருந்த புரவிகள் கால்கள் பின்ன கனைத்தபடி ஒன்றன்மேல் ஒன்றென விழுந்தன. அதன் அடியில் பாகன் சிக்கிக்கொள்ள சுபகம் தேரைத் தூக்கிச் சுழற்றியது.

தேரிலிருந்து பாய்ந்திறங்கிய சிகண்டி வாளை உருவியபடி சுபகத்தை எதிர்கொண்டார். கம்ரன் சுபகத்தை நோக்கி ஓடினான். சுபகம் பிளிறி, துதிக்கை சுழற்றி, தலைகுலுக்கியபடி சிகண்டியை நோக்கி பாய்ந்தது. சிகண்டி விட்டிலென பின்னால் தாவி அதன் அறையை தவிர்த்தார். துதிக்கைவீச்சு சென்று பட்ட தேர் ஆரம் முறிந்து கவிழ்ந்தது. காலால் புரவி ஒன்றை எற்றி எறிந்தபடி சுபகம் சிகண்டியை நோக்கி மீண்டும் பாய்ந்தது. தேர்த்தட்டு ஒன்றில் கால்வைத்து தாவி காற்றிலெழுந்த சிகண்டி தன் உடைவாளால் சுபகத்தின் துதிக்கையை ஓங்கி வெட்டினார். அவர் வாள் துதிக்கையின் கவசங்கள் நடுவே கடந்து தசையிலேயே பதிந்து நின்றது. வாளை விட்டுவிட்டு கீழே பாய்ந்து இரு தாவல்களில் தேர்களைக் கடந்து அவர் படைகளுக்குள் புகுந்துகொண்டார்.

துதிக்கையில் பதிந்த வாளுடன் அலறியபடி சுபகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. தலையை உலுக்கியபடி அங்குமிங்கும் அலைமோதியது. துதிக்கை துண்டாகி விழ வாளும் உதிர்ந்தது. உடைந்த கலமென குருதிச்சேறு கொட்டும் வெட்டுவாயுடன் சுபகம் திரும்பி கௌரவப்படை மேல் பாய்ந்தது. அங்கிருந்த யானை ஒன்றின் வயிற்றில் தந்தங்களை குத்தி இறக்கி தூக்கி அப்பாலிட்டது. வயிறு கிழிந்து குடல்திரள் குருதியுடன் வெளிப்பெருக அந்த யானை நிலத்தில் கிடந்து துள்ளியது. இரு தேர்களை உதைத்து உடைத்து மேலும் தன் படைக்குள் புகுந்த சுபகம் இன்னொரு யானையை குத்தி கீழே தள்ளி அதன் மேல் மீண்டும் மீண்டும் தந்தங்களைச் செலுத்தி சுழற்றித் தூக்கி கவிழ்த்து எழுந்தது. அதன் வெண்கோடு சிவந்து குருதிவழிய குடல்சரடுகள் தொங்கி வழுக்கி உதிர்ந்தன. பிளிறியபடி அது எதிர்வர அதன் தோழமை யானைகள் அலறியபடி பின்னகர்ந்தன.

கம்ரன் “என் தெய்வமே! என் தாதையே! பொறுத்தருள்க!” என்று கூவியபடி சுபகத்தை நோக்கி ஓடினான். அதன் நேர்முன்னால் சென்று இரு கைகளையும் விரித்துக்கொண்டு நின்றான். சுபகம் அவனை அறியவில்லை. தலைகுலுக்கி பிளிறியபடி அவனை நோக்கி பாய்ந்து வந்தது. அவன் நெஞ்சுகுலுங்கும் அச்சம் எழுந்தபோதும் நிலையூன்றி நின்றான். அவனை தன் காலால் எற்றி தெறிக்கவிட்டது சுபகம். அவன் விலாவுடைந்து நிலத்தில் விழுந்து இருமி குருதியுமிழ்ந்து உடல்ததும்பினான். நின்று இருமுறை அசைந்தபின் அதுவும் அவனருகிலேயே விழுந்தது. அவன் தன் உடலுக்குள் சிக்கியிருந்த மூச்சைத் திரட்டி குருதியுடன் உமிழ்வதற்கு முன் தனக்கு அருகில் கிடந்த அதன் பெரிய மத்தகத்தை இறுதியாக பார்த்தான்.

முந்தைய கட்டுரைசம்பத்தின் இடைவெளி பற்றி
அடுத்த கட்டுரைகட்டணக் கேட்டல் நன்று !