குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்

image

குடும்பத்தில் இருந்து விடுமுறை

ஜெ அவர்களுக்கு

 

வணக்கம்.. நலம் தானே..

 

 

குடும்பத்தில்  இருந்து விடுமுறை படித்தேன்..

 

 

எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் இது தேவை தான் என்று சொல்லி இருந்தீர்கள்.. சத்தியமான வார்த்தை..

 

 

என் அனுபவத்தில், இல்லத்தரசிகளாக இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில், கோவிலுக்கு போவது என்ற தன்மையில் ஒன்றாய்க்கூடி சிறு சிறு நேரப் பங்கீட்டினை தங்களுக்காக மாற்றிக் கொள்கிறார்கள்.. பிரதோஷம் தவறாமல் சிவன் கோவில் போவது, மார்கழி மாத காலை பூஜை, தற்சமயம் பெருகி வரும் சீர்டி சாய்பாபாவின் பஜனைகள் என்று பெண்களாய் கூடி வெளியே போகிறார்கள்.. பிள்ளைகளை, கணவரை வெளியே அனுப்பி விட்டு ஒன்று கூடி, சினிமாவுக்கு, ஷாப்பிங் போவது கூட எல்லா ஊர்களிலும் நடப்பதே… ஒரு முழுநாளுக்கு மேல் செலவழிப்பது என்பது கனவு தான்.. ஏதோ ஒரு வகையில் சமையல் தான் இவர்களைக் கட்டிப் போடும் கயிறாய் இருக்கிறது.. காலை, மதிய உணவை முடித்துவிட்டு வெளியே போவது, இரவு உணவு சமைக்க ஓடிவருவது என்பது தான் நடைமுறையில் சாத்தியம்.. ஒரு முறை வெளியூர் சென்று விட்டு பேருந்தில் பயணித்தேன்.. என் பின் சீட்டில் 3 பெண்கள்.. பிரதோஷ வழிபாட்டுக்கென வெளியூர் கோவிலுக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கு போன் வந்தது.. எடுக்கவே இல்லை.. கூட வந்தவர்கள் ஏன் எடுக்கவில்லை என்றதற்கு கணவரின் அழைப்பு என்றார். மற்றவர்களும் அமைதியாகி விட்டனர். தொடர்ச்சியான அழைப்புகள். அவர் எடுத்து விட்டார். அந்த முனையில் இருந்து கணவரின் கடும் கேள்விகள்.. இவரின் பதில் சொல்லும் தொனியில் தெரிந்தது.. இல்லங்க, இப்ப, அரைமணியில் வீட்டில் இருப்பேன்.. பால் பக்கத்து வீட்ல வாங்கி இருக்காங்க.. தரச் சொல்றேன்.. வந்ததும் காபி போட்டுர்றேன் என்று அழாத குறையாய் சொல்லிக் கொண்டே இருந்தார்..  அவர் 3 மணிநேரம் வீட்டில் இருந்து எடுத்த விடுப்பின் மகிழ்வெல்லாம், அந்த ஒரு அழைப்பில் போய் விட்டது.. முகம் வாடி, கண்ணீர் மல்க இருந்த அப்பெண்ணின் முகம் என் மனதை விட்டு அகலவே இல்லை..

 

 

அதே போல, ஆசிரியர், அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இவ்வாறான விடுப்பு எடுப்பது என்பது மிக மிக அரிது.. அலுவலகம் சார்ந்து, கண்டிப்பாய் போக வேண்டும் என்பதான கட்டாயம் இருந்தால் ஒழிய அன்றாடத்தில் இருந்து விடுதலை என்பது இல்லவே இல்லை..

 

 

சில சில குடும்பங்களில், சிந்தனை மாற்றங்கள் ஏற்படுவதையும், அவர்கள் வெளியே சிறு பயணங்களை  திட்டமிட்டு செல்வதையும் கேள்விப்படுகையில் மகிழ்வாய் இருக்கிறது. அம் மாற்றம் பரவ வேண்டும்..

 

பவித்ரா..

 

அன்புள்ள ஜெ

 

குடும்பத்திலிருந்து விடுமுறை என்ற கட்டுரை வாசித்தேன். இன்றைய சூழலில் மிக முக்கியமான கட்டுரை. நீங்கள் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் என்னைப்போல பெண்களுக்கான பிரச்சினைகளை கையாளும் இடத்தில் இருப்பவர்களுக்கு இந்தக்கட்டுரையின் அர்த்தம் மேலும் ஆழமானது. இன்றைக்குப் பெண்களுக்கு எந்தவகையான outletகளும் இல்லை. வேலையிலும் வீட்டிலும் கடுமையான கண்காணிப்பு. எங்குபோனாலும் பொறுப்பு. இதனால் வரும் மனச்சோர்வு. இதன் விளைவாக அவர்களே தங்கள் வேலைச்சூழலையும் வீட்டுச்சூழலையும் emotional turbulance மிகுந்ததாக ஆக்கிக்கொள்கிறார்கள். பிரச்சினைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. உறவுப்பிரச்சினைகள். கடைசியில் மனச்சோர்வு.

 

ஆனால் இதற்கு மிக எளிய தேர்வு பெண்கள் தாங்களே வெளியே செல்ல ஆரம்பிப்பதுதான். அதற்கான சிறிய குழுக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.ஒரு நடுத்தர வயதுக்குப்பின்னர் அப்படிச் செல்லத் தொடங்குவதே மிகப்பெரிய விடுதலையாக அமையும். அங்கே குடும்பத்தின் கண்காணிப்பு கிடையாது. எவருக்கும் பணிவிடை செய்யவேண்டியதில்லை. பொறுப்பும் இல்லை. பெண்கள் உற்சாகமாகப் பேசிச்சிரிக்க ஆரம்பிப்பதைக் கண்டிருக்கிறேன். பலபெண்கள் தலைமைப்பொறுப்பு ஏற்று காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். பெண்கள் அந்தமாதிரி பயணங்கள், விடுமுறைகளில் அடையும் மனவிடுதலை மிக மிக அதிகம். இன்றையகாலகட்டத்தில் பெண்கள் கண்டிப்பாக இப்படி ஒரு விடுதலையை அவ்வப்போது அடைந்தே ஆகவேண்டும்

 

சாரதா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37
அடுத்த கட்டுரைமூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா