குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்

azaku

குடும்பத்தில் இருந்து விடுமுறை

அன்புள்ள ஜெ

நலமா? நான் நலம். குடும்பத்தில் இருந்து விடுமுறை கட்டுரை வாசித்தேன்.

#ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போசரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக.# இந்தச்  சந்தேகம் எந்தப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை போலும். தப்பித்தவறி யாராவது ஒருத்திக்கு இச்சந்தேகம் இல்லாமலிருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்லி அதை விதைத்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் நானும் இப்படித்தான். ஒருவிதமான குற்ற உணர்வு வந்து பாடாய்படுத்திவிடும். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் வீட்டில் இல்லாதபோது கணவரும் குழந்தைகளும் என்னைப் பெரிதாக எதிர்பார்க்காமல் இயல்பாக இருந்துவிட்டால் அது நிம்மதி தருவதற்குப் பதிலாக ஒருவிதமான அழுத்தத்தைத் தந்ததுதான். ஆனால் இப்போது ஓரளவு தெளிவடைந்துவிட்டேன்.

நானும் தோழி பாரதி மூர்த்தியப்பனும் இதுவரை மேற்கொண்ட பயணங்கள் அளித்துள்ள புத்துணர்வும் அனுபவப் பாடமும் வாழ்க்கையை அதிகமாக காதலிக்கவும் கொண்டாடவும் சொல்லிக் கொடுத்துள்ளன. 2016 ஆம் ஆண்டு சென்னைப் புத்தக கண்காட்சி, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் மலேசியாவின் கெடா மாநிலம்,2017 ஆம் ஆண்டு டிசம்பரில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோயில்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை என ஒவ்வொரு பயணமும் அறிவை விசாலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இன்னும், இன்னுமென்ற தேடலையும் அதிகரித்துள்ளது.

முதல் முறை பயணம் சென்று வந்த பிறகு அந்த அனுபவங்களையும் புகைப்படங்களையும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அப்போது ஒரு நண்பர் நீங்கள் இத்தனை மகிழ்ச்சி அடைய அப்படி என்னதான் இருக்கிறது?” என்ற தொணியில் கேட்டிருந்தார். சமையலிலிருந்து, வீட்டிலிருந்து, குடும்பத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி பெண்கள் தங்கள் தோழமைகளோடு பயணம் செய்கையில் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் குதுகலத்தையும் சில ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதோ எனத் தோன்றியது.

 

புத்தகக் கண்காட்சி, கெடா மாநிலம் இந்த இரண்டு பயணங்களைப் பற்றிய எனது பதிவுகள்.  

http://azhagunilaa.blogspot.com/search/label/பயணங்கள்

 

அன்புடன்

அழகுநிலா

 

முந்தைய கட்டுரைஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகட்டண உரை –ஓர் எண்ணம்