’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

me

 

#me too-இயக்கம்

 

அன்புள்ள ஜெ

 

இந்தச் செய்தியை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

https://tamil.samayam.com/latest-news/state-news/vairamuthu-faces-sexual-harassment-allegations/articleshow/66129555.cms

உண்மையா பொய்யா, நிரூபிக்கமுடியுமா என்பதெல்லாம் இன்றைக்கு பிரச்சினை அல்ல. இப்படிச் சொல்லப்படும்போது அப்படியெல்லாம் கண்டிப்பாக இருக்காது என்ற நம்பிக்கை எவருக்குமே வருவதில்லை என்பதைக் கவனியுங்கள். சொல்பவர் எவரென்று தெரியாமலேயே அது உண்மை என்று அத்தனைபேருக்கும் தெரிகிறது.

 

இந்தமாதிரி ஓர் இயக்கம் இப்போது வருவது தவிர்க்கவே முடியாது. பெண்கள் வேலைக்குச் சென்றது ஐம்பதாண்டுகளுக்கு முன்பு. அப்போது அது மிக பாதுகாப்பான வேலைகளுக்கு. ஆசிரியர்பணி மாதிரி. பிழைப்புக்காக வேறுவேலைக்குச் சென்றவர்களுக்கு பலவகையான சிக்கல்கள் இருந்தது

 

இன்றைக்கு தன்னம்பிக்கையுடன் பெண்கள் வெளியே வந்து இப்படி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதை ஓர் நிறுவனமாக அமைப்பாக ஆக்கவேண்டும். வெறும் முறையீடாக முடிந்துவிடக்கூடாது

 

ஜெயராணி

 

 

ஜெ,

 

தமிழகத்தின் அந்தப் புகழ் பெற்ற போராளி கைது செய்யப்பட்ட போது, அது பற்றி எழுத உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

அதன் காரணம், அவரது நடவடிக்கைகள், அரசு அதிகாரிகளை, குறிப்பாக ஆட்சியர் மற்றும் காவலரை நோக்கியவையாக இருந்தன. அவரைக் கைது செய்து, உள்ளே கவனித்துவிடுவார்கள் என்பதே பயம்.  அதிகம் பழகியிராத நண்பரான கண்ணன் தண்டபாணி, சேலம் சென்று நேரில் உதவச் சென்றிருந்தார். அவர் மூலம் விவரங்கள் கேட்டறிந்து, உங்களுக்கு எழுதினேன்.

 

அதற்கு முன்பேயே, கிருபா அவர்களின் சமூக ஊடக எழுத்துக்கள் மற்றும் நமக்கு மிகவும் அறிமுகமான, மேட்டூர் அருகில் வசிக்கும் நாட்டுப்புறக் கலை ஆர்வலர் நண்ப்ர் மூலமும், அந்தப் போராளியைப் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் உவப்பானவை அல்ல.

ஆனால், அவரைக் கைது செய்த்து மூர்க்கத்தனமான அரசு இயந்திரம் நடவடிக்கை. கண்டனம் அதற்கு  எனும் போது, அதில் வெட்கப்பட ஏதுமில்லை என்பது என் கருத்து.

 

நிற்க – நீங்கள் சொல்லியிருந்த லிஸ்ட்டில் தில்லி வாழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல, எல்லாத் தரப்பு இசங்களைத் தூக்கிப் பிடிக்கும் தரப்பில் இருந்தும் ஆண்களின் பெயர்கள் இருந்தன. எனது சீனியரும், நான் படித்த மேலாண் கழக இயக்குநராக இருந்தவரின் பெயரும் இருந்தது. அந்த விஷயத்தை நோண்டிய போது, அது நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டு எனப் பதில் வந்தது. ஆனால், ஒன்று, இந்த விஷயத்தில், நெருப்பில்லாமல் புகையாது என்னும் சொலவடை பெரும்பாலும் உண்மை. இது இன்று பெரிதாக வெடிக்கும் காலத்தில், ஆண்கள், சீஸரின் மனைவி போல தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

 

தேவாங்கர் கல்லூரி பேராசிரியை ஒருவரின் ஆடியோ டேப்பும், அவசரமாக அமைக்கப்பட்ட, “நமக்கு நாமே” விசாரணைக்கமிஷனும், இது எவ்வளவு பெரிதாக ஊடுருவியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  எனவே. இது கிசு கிசுவாக இருந்தாலும், பேசப்பட வேண்டியதே. சமூகப் போராட்டத்தில் இது பெண்கள் துவங்கியிருக்கும்  போர்.

 

நேற்று பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பரின் மீது பெண்களின் புகார்கள் எழுந்துள்ளன. இன்னும் பலர் மீதான புகார்கள் வரும் என எதிர்பார்க்கலாம்

 

பாலா

 

அன்புள்ள ஜெ

 

மிடூ இயக்கம் உருவானபின்னர் கொஞ்சமாவது ஆறுதல்பெருமூச்சு விடுபவர்கள் ஆய்வுமாணவிகளும் பெண்காவலர்களுமாகவே இருப்பார்கள். இவர்கள் இருவரும்தான் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் விடப்படுபவர்கள். கேள்விகேட்கவே முடியாத நிலை. சமூகக்காவலர்கள் பண்பாட்டுக்காவலர்கள் என்ரு நின்றிருக்கும் ஆண்களின் உண்மையான முகம் இப்படித்தான் உள்ளது. வலிமையான குடும்ப – சாதிப் பின்புலம் இல்லாமல் பொதுவெளிக்கு வரும் பெண்ணுக்கு இங்கே பாதுகாப்பே கிடையாது. வறுமையால் வந்தால் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். இந்தச் சூழலில் அந்தப்பெண்மட்டும் யோக்கியமா என்ற கேள்வியைக் கேட்கும் அத்தனைபேரும் சதைவெறியை உள்ளூர ஒளித்துவைத்திருப்பவர்கள், வாய்ப்புகிடைத்தால் பிராண்டும் அற்பர்கள் என்பதே என் எண்ணம். எந்தப்பெண்ணும் நூறுமுறை யோசிக்காமல் இவ்வாறு குற்றம்சொல்லமாட்டாள். இந்த இயக்கம் நம் ஆணாதிக்க உலகின் அடிப்படைகளை அசைக்கவேண்டும் என்றால் நம் ஆண்களில் மனசாட்சி உள்ளவர்கள் இதை ஆதரிக்கவேண்டும்

 

கே.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31
அடுத்த கட்டுரைஅரூ