அரூ

aru-small-logo

வணக்கம்!

நாங்கள் சிங்கையிலிருந்து சுஜா, பாலா, ராம். சிங்கை காவிய முகாமில் உங்களைச் சந்தித்திருக்கிறோம்.

கனவுருப்புனைவை மையப்படுத்தி “அரூ” என்கிற தமிழ் மின்னிதழைத் துவங்கியுள்ளோம்.

அரூ ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான் அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது. தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக, அரூபத்தின் தரிசனத்திற்கான தேடல்தான் இந்த அரூ. நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலகிற்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சி.

இது, சிறுகதைகள், குறுங்கதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், காமிக்ஸ், நடனம், இசை என அத்தனை கலை வடிவங்களுக்குமான களமாக இருக்கும்.

முதல் இதழ் உங்கள் பார்வைக்கு – http://aroo.space/

இதழைக் குறித்து உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்தால் உதவியாக இருக்கும். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
சுஜா, பாலா, ராம்

***

அன்புள்ள அரு நண்பர்களுக்கு,

இந்நூற்றாண்டின் நவீனப் புராண உலகம் அறிவியலும் கற்பனையும் கனவுலகும் இணையும் மிகைபுனைவுவெளி. அது இலக்கியம், திரைப்படம், வரைகலை, காட்சிவிளையாட்டு என விரிந்துள்ளது. அவற்றை அறிமுகம் செய்வதற்கும் விவாதிப்பதற்கும் தமிழில் ஓர் இதழ் என்பது வரவேற்புக்குரியது.

வாசிப்பில் எனக்குத் தோன்றிய ஒன்றுண்டு. இத்தகைய முயற்சிகள் முன்னர் நிகழ்ந்தபோது ஏற்பட்ட பிழைகள். தமிழில் எதையும் புரிந்துகொள்ளாமல் அரைகுறையாக எழுதும் ஒரு கூட்டம் உண்டு. கோட்பாட்டாளர்கள் என்ற பாவனை கொண்டவர்கள். அடிப்படையில் மிக எளிய அரசியல்கருத்துக்களை எதன்மேலும் ஏற்றி சுற்றிச்சுற்றி செயற்கையான,சிக்கலான மொழியில் கட்டுரைகளை எழுதுவார்கள். முற்றிலும் பயனற்றவை, உள்ளீடற்றவை அவை. அவை தவிர்க்கப்படவேண்டும். எதுவானாலும் ஒரு குறைந்த அளவு வாசிப்புச்சுவை இருந்தாகவேண்டும்.

இன்னொன்று சொற்புதர்களை உருவாக்கி அதனூடாக வாசகனுக்குத் திகைப்பை உருவாக்கலாமென்னும் எண்ணத்தில் எழுதப்படுபம் புனைவுகள். சொற்களை எதிர்கொள்கையில் விலக்கம்கொள்ளும் ஆரம்பவாசகன் மட்டுமே அவற்றை பெரிதென நினைப்பான். நல்ல வாசகனால் அவற்றை சாரம்நோக்கிச் சுருக்கிக்கொள்ளமுடியும். அப்போது தெரியும் உள்ளீடின்மை அவனைச் சோர்வுறச் செய்யும். இத்தகைய புனைவுகளில் நிகழவேண்டியது கனவின் கட்டின்மை, குழந்தைமையின் களிப்பு. எளிய மொழியில் தேவதைக்கதைகளின் பாணியில்கூட அவை மேலைநாட்டுப் புனைவுகளில் நிகழ்ந்துள்ளன.சொற்புதர்கள் மூளையோட்டலால் கட்டமைக்கப்படுபவை. நீங்கள் உத்தேசிப்பது மிகுபுனைவு, அருவப்புனைவின் உலகு என்றால் அது மூளையைக் கடக்கும் ஒரு நிலையால் மட்டுமே நிகழமுடியும். அது கற்பனையால் மட்டுமே இயல்வது.

வெளிநாட்டு படைப்புகளை அறிமுகம் செய்யும்போது செயற்கையான விளையாட்டுத்தனம் இல்லாமல் நேர்த்தியாகவும் விரிவாகவும் எழுதப்படும் கட்டுரைகள் தேவை. அவை எழுதுபவரின் நன்னோக்கத்தை காட்டுவனவாக இருக்கவேண்டும். The Saragossa Manuscript: புனைவின் அடுக்குகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்க முயற்சி.

ஆனால் பெரும்பகுதி புனைவாகவும் காட்சிக்கலையாகவும் இருக்கையில்தான் இத்தகைய இதழ்கள் உண்மையான வாசகர்களை ஈர்க்கின்றன. அவை மொழியாக்கங்களாக இருக்கலாம். தமிழில் எழுதப்படுவனவாகவும் இருக்கலாம்.

அதன் அடுத்தகட்டமே மேலைநாட்டு மிகைபுனைவுகளை முன்னுதாரணமாகக் கொள்ளாமல் இங்கேயே உருவாகும் நமக்கான மிகைபுனைவுகள். அது ஓர் இலக்காக இருக்கவேண்டும்

இந்த இதழின் உள்ளடக்கத்தில் கற்பனையைச் சீண்டும்படி , மேலெழச்செய்யும்படி ஏதுமில்லை என்றே தோன்றுகிறது. முடிவிலியின் இழை மட்டுமே சற்று வேறுபட்டுள்ளது. வருமிதழ்களில் தொடர்ந்த ஒருங்கிணைப்பின் வழியாக மேலும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் வருமென நம்புகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரை’நானும்’ இயக்கம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒருதுளி இனிமையின் மீட்பு