சென்னையில் மூன்றாம் தேதி நாஞ்சில்நாடன் விழா முடிந்தபின் ஏழாம் தேதி வரை இருந்தேன். பிரதாப் பிளாசாவில் என்னுடன் நாஞ்சில்நாடனும் இருந்தார். எனக்கு பகலெல்லாம் சினிமாச்சந்திப்புகள். காரிலிருந்து காருக்கு தாவிக்கொண்டிருந்தேன். நான்காம் தேதி மாலை ஆறுமணிக்கு அறைக்குவந்தபின் நாஞ்சிலை அழைத்தேன். புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருப்பதாகச் சொன்னார். நான் ஆட்டோ பிடித்து வருவதாகச் சொன்னேன். அதற்குள் ராஜகோபாலன் அழைத்து அவர் பைக்கில் என்னை கொண்டுசெல்வதாகச் சொன்னார்
கொஞ்ச நேரத்தில் அரவிந்த் வந்தார். அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்கிறார். டிசம்பர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வர சிறந்த காலகட்டம். நாஞ்சில் விழாவிலேயே பல அமெரிக்கவாழ் இந்தியர்களைக் கண்டேன். இரு பைக்குகளில் நானும் ராஜகோபாலனும் அரவிந்தும் விஜயராகவனும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். காரில் சென்றிருந்தால் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். வளைந்து ஒடிந்து தாவி ஜேம்ஸ்பாண்ட் பயணம் செய்து சென்று சேர்நதபோது புத்தகக் கண்காட்சி கச்சேரி பாஷையில் சொல்லப்போனால் ‘களைகட்டி’யிருந்தது. கூட்டம்தான் அதிகமாக இல்லை.
செல்லும் வழியில் கிழக்கு கடையில் நுழைந்தோம். ’உலோகம்’ வந்திருந்தது. அதை ஆங்கில வேகப்புனைவு நாவல்களின் வடிவில் கொண்டுவரலாமென்று நான் ஹரன் பிரசன்னாவிடம் சொல்லியிருந்தேன். அது சரளமான வாசிப்புக்குரியது என்ற செய்தி வாசகனுக்குச் செல்லவேண்டும். அது அத்தகைய நாவல். வேகப்புனைவு என்ற வடிவுக்குள் எழுதப்பட்டது எனலாம். பொதுவாக என்னுடைய நாவல்கள் சாதாரண வாசகர்களுக்குரியதல்ல என்பதனால் தேவையாகிறது.
உலோகம் நாவல் பார்க்க அப்படித்தான் இருந்தது. முதலில் பா.ராகவனைப் பார்த்தேன். அதன்பின் ஹரனை. புத்தகம் நன்றாக இருக்கிறது என்றேன். பின்னர் பத்ரி சேஷாத்ரியை பாத்தேன். வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் சாகசப் புனைவுகளைப் பற்றி.
ஒரு சமூகத்தில் புனைவு வாசிப்பு என்பது ஒரு இயக்கமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று இன்று நினைக்கிறேன். மெல்லமெல்ல உலகமெங்கும் அபுனைவுகள் வாசிப்பை நிறைத்து வருகின்றன. தமிழிலும் அப்படித்தான் என்பதை கிழக்கை பார்த்தாலே அறியலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால்கூட நேர் எதிரான நிலை இருந்தது. அபுனைவை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்தது.
புனைவுவாசிப்பு ஒரு சமூகத்தை அன்றாட யதார்த்தத்தில் இருந்து மேலே கொண்டு செல்கிறது. கனவு காணச்செய்கிறது. அதன் மூலம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. இலட்சியங்கள், உன்னதங்கள் அனைத்துமே அந்த கனவுத்தளத்தைச் சார்ந்தவைதான். அந்த தளத்தின் தொடக்க நிலையில்தான் காதல், சாகசம் போன்றவை உள்ளன. புனைவிலக்கியத்தின் உச்சங்களை நோக்கிச் செல்லும் ஒருவாசகன் சாகசம் கனவு என்ற இரு நிலையில் இருந்தே தொடங்கியிருப்பான். அது தேவையானதும்கூட
தமிழில் இன்றுள்ள சாகச- வேகப்புனைவு நாவல்களின் சிக்கல்கள் இரண்டு. ஒன்று அவை தொடர்கதைகளாக எழுதப்பட்டவை. நூல்வடிவில் அவற்றின் கட்டமைப்பு சோர்வளிக்கிறது. இரண்டு அவை மிக அவசரமாக எழுதப்பட்டவை. ஆராய்ச்சியோ புதிய சூழலோ இருப்பதில்லை. பின்னணி சித்திரங்கள் கிடையாது. மனம் கிடையாது. நுண் தகவல்கள் கிடையாது. வெறும் நிகழ்வுகள் மட்டுமே. ஒரு மாதம் வெளிவந்து மறுமாதம் அவை மறைந்துவிடுகின்றன
அத்தகைய நாவல்கள் நல்ல வாசகனை திருப்தி செய்ய முடியாது. முதிரா இளமைக்குப்பின்னரும் வாசிக்கத் தக்க சாகச நாவல்கள் பல மேலைநாடுகளில் உள்ளன. அவ்வகை நாவல்கள் தமிழில் இன்று புதுவேகம் பெற்றுவரும் வாசிப்பார்வத்தை நிலை நிறுத்த உதவும். அதை பத்ரியிடம் சொன்னேன்.
அத்தகைய நாவல்கள் தமிழில் உருவாக தடையாக இருப்பது என்ன? முதன்மையாக பணம்தான். ஒருநாவல் வழியாக ஆசிரியன் எதிர்பார்க்கக் கூடியது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்தான் என்றால் அந்த ஆசிரியன் இருபது நாட்களுக்குமேல் அதில் வேலைசெய்வது விரயம். ஆராய்ச்சிக்கு செலவிட்டான் என்றால் கைநஷ்டம்கூட வரும். இன்று தமிழில் ஒரு நாவலுக்காக ஆசிரியனுக்கு முன்பணம் அளிப்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
சாகசக்கதைகள் குறைந்தது அரை லட்சம் பிரதி விற்குமென்றால், ஒருநாவலுக்கு ஆசிரியன் ஒருலட்சம் ரூபாய் ஊதியம் பெற முடியுமென்றால் கண்டிப்பாக அத்தகைய நாவல்கள் தமிழில் வெளிவரக்கூடும். அதை சாத்தியமாக்குவது கிழக்கு போன்ற பெருநிறுவனங்கள் கைகளிலேயே உள்ளது. விளம்பரம் வினியோகம் இரண்டிலும் அவர்கள் முதலீடு செய்யவேண்டும் அதற்கு.
கிழக்கு அதற்கென ஒரு தனி பிரசுரக்கிளை ஆரம்பிக்க எண்ணமிருப்பதாக ப்த்ரி சொன்னார். ஏற்கனவே சில மொழியாக்க நாவல்களை அவர்கள் வெளியிட்டதாகவும் அதற்கு போதிய பயன் இருக்கவில்லை என்றும் சொன்னார். உலோகம் ஒரு சோதனை முயற்சி என்றார்
கிழக்கில் இந்தமுறை அரவிந்தன் நீலகண்டனின் இரு நூல்கள் மிக வேகமாக விற்கின்றன. இந்துத்துவம் அறிமுகம் என்ற சிறு நூல். நம்பக்கூடாத கடவுள் என்ற இன்னொரு நூல். தெளிவாக தன்னை முன்வைக்கும் இந்துத்துவர் அவர். அவரது கட்டுரைகள் அளவுக்கு இன்று பிரமிப்பூட்டும் வாசிப்புவீச்சுடன், அறிவியலையும் வரலாற்றையும் தத்துவத்தையும் கருத்தில்கொண்டு, எந்த தரப்பிலும் எவராலும் எழுதப்படுவதில்லை.
இந்துத்துவம் நம் சூழலின் ஒரு தரப்பு. அதை எதிர்ப்பவர்கள் இன்றுவரை அதைப்பற்றிய வசைபாடலை மட்டுமே முன்வைக்கிறார்கள். அவதூறுகள், திரிபுகள் வழியாகவே அதை எதிர்கொள்கிறார்கள். அதன் அசட்டு முகங்களை மட்டும் வசதியாக எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு அரவிந்தன் முன்வைக்கும் தர்க்கபூர்வமான தரப்பு ஒரு வாய்ப்பு. அதே தர்க்க நேர்த்தியுடன் அவர்களும் அந்த வாதங்களை எதிர்கொண்டால் நம் அறிவூச்சூழல் கொஞ்சம் தெளியக்கூடும்.
அதைச் சொன்னபோது அந்தக்கட்டுரைகளையும் கடைசியில் நீங்கள்தான் எழுத வேண்டியிருக்கும் என்றார் நண்பர் கொஞ்சம் நக்கலாக. பார்ப்போம் என்றேன்.
விடியல் வெளியிட்டிருக்கும் நூல்களில் லியான் டிராட்ஸ்கியின் வரலாறு மிகப்பெரிய நூல். அளவைப்பார்த்தோ, அல்லது மொழியாக்கம் என்றோ அஞ்சவேண்டியதில்லை. அது பல வரலாற்றுச் சிக்கல்களையும் தத்துவச்சிக்கல்களையும் பற்றி நம்மை யோசிக்கச் செய்யும் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம்.தரமான மொழியாக்கம்.
இடதுசாரித்தரப்பின் முக்கியமான நூல்களில் ஒன்று இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடின் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு. [பாரதி பதிப்பகம்] . இ.எம்.எஸ் தெளிவான நடைக்கும் திட்டவட்டமான கருத்துக்களும் புகழ்பெற்றவர். கேரள சுதந்திரப்போராட்ட வரலாறு, கேரள இலக்கிய வரலாறு, கேரளம் மலையாளிகளின் தாய்நாடு ஆகியவை அவரது செவ்வியல் படைப்புகள். அவற்றில் ஒன்று இது.
தமிழின் மிக முக்கியமான தன்வரலாறுகளில் ஒன்று கோவை அய்யாமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு. சர்வோதய தலைவரான இவர் ஈவேராவுக்கு நெருக்கமானவர். கறாரான தன்வரலாறு இது. இப்போது மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது.
ராஜாஜியின் வாழ்க்கைவரலாறு ராஜ்மோகன் காந்தியால் எழுதபப்ட்டு புகழ்பெற்றது. தமிழாக்கம் வெளிவந்துள்ளது. புரட்டிப்பார்த்தேன்.
தமிழினி பதிப்பகம் சென்றேன். நாஞ்சில்நாடன் இல்லை. டீ குடிக்கச் சென்றிருந்தார். செல்வ புவியரசன் இருந்தார். அரங்கசாமி, கிருஷ்ணன் எல்லாம் அங்கே இருந்தார்கள். புதிய நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தோம்.
ஒன்பது மணிக்கு கண்காட்சி மூடியது. தமிழினி திரை போட நெடுநேரமாகியது. காவலர் வந்து நாலைந்து முறை எச்சரித்தபின்னர்தான் மெல்ல கிளம்பினோம். கடைசியாக வெளியே சென்றது நாங்கள்தான்.
மறுநாள் என்னால் செல்ல முடியவில்லை. பா.ராகவன் என்னை இருமுறை அழைத்திருந்தார். நான் திருப்பி கூப்பிட்டேன். மிகுந்த உற்சாகத்துடன் உலோகம் மிகச்சிறப்பாக விற்பதாகச் சொன்னார். ‘நம்பவேமுடியலை…அந்த ஃபார்மாட்தான் காரணம்னு நினைக்கிறேன்’ என்றார். அன்றுமாலை நான் மணிரத்னத்தைச் சந்தித்துவிட்டு இரவில்தான் திரும்பினேன்.
மணிரத்னத்திடம் மறுநாள் புத்தகக் கண்காட்சிக்கு போகலாமா என்றேன். இதுவரை போனதில்லை என்றார். நான் அது எத்தனைபெரிய கலாச்சார நிகழ்வு என்று சொன்னேன். அப்போது என்குரலில் வந்த பெருமிதம் எனக்கே ஆச்சரியமளித்தது. மணி சமீபமாக தமிழிலக்கியம் நிறைய வாசிக்கிறார். நீங்கள் வந்தாகவேண்டும் என்றேன்.
மறுநாள் , ஆறாம் தேதி மாலை மணி அவரது காரில் பிரதாப் பிளாஸாவுக்கு வந்து என்னை கூட்டிக்கொண்டார். தனசேகரும் கூட வந்தார். மூவரும் புத்தகக் கண்காட்சிக்குள் நுழையும்போது மிதமான கூட்டம். ஆனால் அதுவே அவருக்கு பிரமிப்பாக இருந்தது. தமிழில் இத்தனை பிரம்மாண்டமான வாசிப்புலகம் இருப்பது அவருக்கு ஆச்சரியம் அளித்தது. அழகம்பெருமாள் வந்து சேர்ந்துகொண்டார்.
கிழக்கு கடையில் அவர் உலோகம் வாங்கிக்கொண்டார். பத்ரியைச் சந்தித்தேன். உலோகம் மிக வேகமாக விற்பதாகச் சொன்னார். உடனே கன்னிநிலம் கொண்டுவந்துவிடலாம் என்றார். இத்தகைய வேகநாவல் வகைக்காக ஒரு பதிப்பகக்கிளை ஆரம்பிக்கும் எண்ணம் வலுப்பெற்றிருப்பதாகச் சொன்னார்.
கடைகள் தோறும் பார்த்து நடந்தோம். நான் சாகித்ய அக்காதமி கடையில் நாலைந்து கன்னட, உருது நாவல்கள் வாங்கினேன். தேசிய புத்தக நிறுவனக் கடையில் உருப்படியாக ஏதுமில்லை. காலச்சுவடு கடைக்குள் நுழைந்து புத்தகங்களை பார்த்தேன். அவர்களின் எல்லா நூல்களும் எம்.எஸ் வழியாக எனக்கு வந்துவிடும். இருந்தாலும் உள்ளே சென்றமைக்காக தரம்பால் காந்தி பற்றி எழுதிய நூல் ஒன்றை வாங்கினேன். ஒரு நண்பருக்காக.
காலச்சுவடு ஆசிரியர் தேவிபாரதியை அங்கே பார்த்தேன். குவளைக்கண்ணன் அருகே நின்றிருந்தார். குவளைக்கண்ணன் எனக்கு தொண்ணூறுகளில் சேலத்தில் இலக்கிய சந்திப்புகள் நடந்த காலம்முதல் பழக்கம். நீட்சேவின் ’இவ்வாறு பேசினார் ஜரதுஷ்டிரா’ என்ற நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார். இப்போது ஆனந்துடன் சேர்ந்து ‘கா’ [ராபர்ட்டோ கலாசோ] நாவலை மொழியாக்கம் செய்திருப்பதாகச் சொன்னார்
‘நீ அது நல்ல நாவல் இல்லை, பிட்ஸாவுக்கு சாம்பார் மாதிரி இருக்குன்னு சொன்னே… இருந்தாலும் மொழிபெயர்ப்பை படிச்சுப்பாரு..’ என்றார். எனக்கு அந்நாவல் படைப்பூக்கமற்றது, அன்னியமான நோக்கு கொண்டது என்ற எண்ணமே உள்ளது. குவளை அருகே நின்ற ஒரு ஸ்டைலான மனிதரை நோக்கி அவர் ஏதோ சொல்ல முற்பட்டது போல இருந்தது. யார் என தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து தேவிபாரதி விமலாதித்த மாமல்லன் என்றார்
அவரை நான் ஒரே ஒருமுறை உட்லாண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் சந்தித்திருந்தேன். முகம் நினைவில்லை. கரிய உடை, வட இந்தியச்சாயல் கொண்ட முகம். அழகான மனிதர். என்னைவிட மூத்தவர், ஆனால் பார்வைக்கு வயது தெரியவில்லை. மீண்டும் எழுத வந்திருப்பதாகச் சொன்னார். நான் புதிதாக ஏதும் வாசிக்கவில்லை. பழைய கதைகள் உயிர்மை தொகுப்பாக வருவதாக சொன்னார்.
அவரது பழைய கதைகள் அசோகமித்திரன், திலீப்குமார் பாணியில் மென்மையான கிண்டலுடன் நகர்ப்புற வாழ்க்கையின் சில தருணங்களைச் சித்தரிப்பவை. முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார். திடீரென விட்டுச்சென்றார். மீண்டும் 91ல் வந்தார். மீண்டும் சென்றார். தொடர்ந்து எழுதமுடிந்ததென்றால் தமிழிலக்கியத்துக்கு லாபம். கலைஞன் கலையை தவிர எதிலும் நிறைவடையமுடியாதென அவர் உணர்ந்தால் நல்லதுதான்.
செல்லும்போது அவர் சமீபமாக என்னைப்பற்றி இணையதளத்தில் நிறைய அவதூறுகளையும், வசைகளையும் எழுதிவருவதாகச் சொன்னார்கள். இருக்கலாம். ஆரம்பம் முதலே அவர் கொந்தளிப்பான , நிலையற்ற மனிதர் என அறிந்திருக்கிறேன். எழுத்தாளர்கள் பல வகை. அவர்களின் ஆற்றாமைகளும் கோபங்களும் கசப்புகளும் காழ்ப்புகளும் எப்போதுமே கொஞ்சம் அத்து மீறியவை. அவற்றை பொருட்படுத்தவேண்டியதில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களின் எழுத்துமட்டுமே வாசகனுக்குரியது. நல்ல கதைகளை எழுதும் வரை ஓருவர் என்ன செய்தால் என்ன?
தமிழினி கடையில் மணிரத்தினமும் நானும் ஒருமணிநேரம் அமர்ந்திருந்தோம். பில் போடப்படும் இடத்தில் அவர் அமர்ந்திருந்ததனால் பலர் மணிரத்தினத்தை கவனிக்காமல் அவரிடமே புத்தகங்களை கொண்டுவந்து கொடுத்து பில்லுக்காக பார்த்ததை கண்டேன். சிரிப்பு வந்தது. சு.வெங்கடேசன் வந்திருந்தார். மணிரத்தினம் வெங்கடேசனிடம் காவல்கோட்டத்தில் ஒரு கையெழுத்துபோட்டு பெற்றுக்கொண்டார்.
’புத்தகங்களை இங்கே வச்சுட்டு போய் பாத்துட்டு போறப்ப எடுத்திட்டு போங்க ’என்றார் வசந்தகுமார். ’இல்ல நான் புக் வாங்காம போறதா தோணிடும்’ என்று மணி சிரித்தார். மணி நுழைந்த, தயங்கி நின்ற எல்லா கடைகளிலும் அவரை படம் எடுத்தார்கள். தமிழினியில் சிங்கிள் டீயோடு சரி. ஆனால் அங்கே பேசிக்கொண்டிருந்ததை அவர் மிக விரும்பியிருப்பார்.
எட்டரை மணிக்கு அழகம்பெருமாளின் காரில் பிரதாப் பிளாஸாவுக்கு வந்து சேர்ந்தேன். மீண்டும் செல்ல முடியவில்லை. ஏழாம் தேதி கிளம்பிவிட்டேன்.
இந்த புத்தகக் கண்காட்சியில் என்னுடைய நூல்கள் சிறப்பாக விற்றதாகச் சொன்னார்கள். தமிழினியில் ‘காடு’ ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ கொற்றவை’ மறுபதிப்புகள் உள்ளன. வழக்கம் போல ’இன்றைய காந்தி’ தொடர்ந்து விற்று இந்த கண்காட்சியுடன் தீர்ந்துவிடும் என்றார். ’இரவு’ தமிழினி வெளியீடாக வந்து நிறைய விற்கிறது.
என்னுடைய எல்லா நூல்களையும் உடுமலை கடையில் சிதம்பரம் விற்கிறார். விஷ்ணுபுரம் வேகமாக விற்பதனால் இந்த கண்காட்சியுடன் தீர்ந்துவிடும் என்றார். கிழக்கு பதிப்பகத்தில் ’உலோகம்’ அவர்களின் ஆகச்சிறந்த விற்பனையைஅ டைந்து வருகிறது. ஏழாம் உலகம், இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் ஆகியவையும் வேகமாக விற்கின்றன.
ஆ.மாதவனின் கதைகள் தொகுப்பு தேங்கி கிடந்தது இந்த கண்காட்சியுடன் தீர்ந்துவிடும் என்றார்கள். மேலும் பதிப்பு வந்தால் நல்லது. பொதுவாக இந்த கண்காட்சியின் நாயகன் நாஞ்சில் நாடன். சூடியபூ சூடற்க ஆயிரம் பிரதிகள் நாலே நாட்களில் விற்று மூவாயிரம் பிரதிகள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளன
புத்தக அரங்குக்கு வரும் வழியெங்கும் வைக்கப்பட்டிருந்த விளம்பர அட்டைகளில் ஒன்றை கவனித்தேன், அவற்றில் இருந்த பெரும்பாலும் எவரும் எவ்வகையிலும் பொருட்படுத்த தக்கவர்கள் அல்ல. ஆ.மாதவனுக்கு உடுமலை சிதம்பரம் அட்டை வைத்தார். நாஞ்சில்நாடனுக்கு தமிழினி. மிகபெரும்பாலான விளம்பரங்கள் அந்த ஆசிரியர்களே வைத்துக்கொள்வது என்று பட்டது. இது துரதிருஷ்டமானதே. ஆனால் எதை வாசிக்க ஆரம்பித்தாலும் ரசனையும் அறிவுத்திறனும் கொண்டவன் நல்ல வாசிப்புக்கு வந்தே தீர்வான் என நான் நம்புகிறேன்.