கெடிலமும் சுந்தர சண்முகனாரும்

Susa

கெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள்
கெடிலநதிக்கரை நாகரீகம்

அன்புள்ள ஜெ,

பழவந்தாங்கல் நூலகத்தில் கடந்த பத்து வருடங்களாக கண்ணில் பட்டுக்கொண்டிருந்த ‘கெடிலக்கரை நாகரிகம்’ கடலூர் சீனு(கூடலூர் சீனு? கடலூரின் இயற்பெயர் கூடலூர் என்கிறார் ஆசிரியர் சுந்தர சண்முகனார்.)வின் பதிவு வந்ததிலிருந்து காணவில்லை. பரவாயில்லையே என்று நினைத்துக்கொண்டேன். நூலகரிடம் கேட்ட பொழுது ‘அதெல்லாம் இங்கதான் இருக்கு’. என்று சில நாட்களுக்கு முன் எடுத்துக் கொடுத்தார். அந்தோ! வழக்கம்போல் இந்த நூலையும் முதலாவதாக எடுத்துப்படிப்பவன் நானே.

கெடிலத்திற்கு மட்டும் வாயிருந்தால் “ஈங்கிவனை யான் பெறவே என்ன  தவம் செய்து விட்டேன்” என்று ஆசிரியர் சுந்தர ஷண்முகனாரைப் பார்த்துப் பாடியிருக்கும். சிறிய ஆறுதான். அதைச் சுற்றி அவர்  (சும்மா பின்னு பின்னுவென்று) பின்னுகிற வரலாறு உலகின் பேராறுகள் சிலவற்றிற்கும் கிடைக்காத பேறு.

திலகவதியார், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், சுந்தரர்,வில்லிபுத்தூரார்,வடலூர் வள்ளலார்,மெய்கண்ட தேவர் என்று எத்தனையோ சமயம் செழிக்கச் செய்த மேன்மக்கள் கெடிலம் கொடுத்த கொடையே. வில்லி பாரதம் எழுதிய வில்லிபுத்தூரார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த சனியூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். பெரியாழ்வாரின் மீது கொண்ட அபிமானத்தினால் இவரது தந்தை இவருக்கு வில்லிபுத்தூரார் என்னும் பெயரைச் சூட்டினாராம். ‘வரலாற்றில் நம்ம பேரு(?) நிக்கனும்னா எதாவது பெருசா செய்யணும், வில்லி’ என்று அவரை ஆதரித்தவனான வரபதியாட்கொண்டான் என்னும் கொங்கர் நிலக் குறுமன்னனின் வேண்டுகோளையேற்று வில்லிபாரதம் படைத்தார் வில்லி. தம்மிடம் தோற்ற புலவர்களின் காதைக் குடைந்து அறுப்பது வில்லியின் வழக்கமாம். “குரும்பியளவாய்க் காதைக் குடைந்து அறுப்பதற்கோர் வில்லியில்லை” என்ற பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடலில் இருந்து இது நிரூபணமாகிறது.  எதிரிகளின் காதுகளை அறுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு ஆடி தனது படைகளை உசுப்பேற்றிய மன்னனைப் பற்றி எழுதியிருப்பீர்கள் “செந்நாவேங்கை” யில். இவர் எத்தனை புலவர்களை உசுப்பேற்றினாரோ? பயமாக இருக்கிறது. ஆனால், இது போன்ற கொடூரங்களை அந்தந்த புலவர்களே செய்திருப்பார்களா? அல்லது அவர்களை முன்னிறுத்தி அவர்தம் புரவலர் பெருமக்கள் செய்ததா? யாம் அறியோம் பராபரமே.   பின்னர் இவர் திருவண்ணாமலை சென்றபொழுது அருணகிரிநாதரிடம் தோற்றுப்போனதாக ஒரு வரலாறு கூறுகிறது. (இவர் எதையும் அறுத்துக்கொண்டு விட்டதாகத் தகவல் இல்லை) இந்த தோற்றுப்போவது என்றால் என்னவோ?

திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். ஊர் திருவாமூர். இவருடைய தமக்கையார் திலகவதியார். திலகவதியார் மணப்பருவம் எய்தியதும் கலிப்பகையார் என்னும் படைவீரருக்கு இவரை மணம் பேசி முடிவு செய்திருந்தனர். திருமணத்திற்கு முன்னே போர் அறிவிக்கப்பட்டதால் கலிப்பகையார் போருக்குச் சென்றுவிட்டார். தாய், தந்தையர் ஒவ்வொருவராக இறந்து விட்டார்கள். தீயூழாகக் கலிப்பகையாரும் போரில் மாண்டு போனார். அவரையே மனதில் கணவராக வரித்திருந்த திலகவதியார் தானும் உயிர் துறக்க முடிவு செய்தார் (திலகவாதியார்க்கு நேர்ந்தகதி தம் வீட்டுப்பெண்களுக்கு நேராதிருக்க இப்பகுதியைச் சேர்ந்த சைவவேளாளர்கள் இன்றும் நிச்சயதார்த்தத்தைக் கல்யாணத்தன்றே செய்கின்றனர்). அப்போது மருள்நீக்கியார் தமக்கையார் இறந்தால் தானும் இறந்துவிடுவேன் என்று கூறினார். இது அவர் மனதை மாற்றியது. மருள்நீக்கியார் முதலில் சமண மதத்தைத் தழுவி பாடலிபுத்திரம் என்னும் ஊரில் – பீகார் அல்ல. தெற்கே திருப்பாதிரிப்புலியூருக்கு அருகே ஒரு பாடலிபுத்திரம் இருந்ததாகக் கூறுகிறார் ஆசிரியர். – தருமசேனர் என்னும் பெயரோடு சமணமதத் தலைவராக விளங்கினார். அப்போது அவருக்கு சூலை நோய் கண்டது. சமணர்கள் ஏதேதோ மருத்துவம் பார்த்தும் நோய் நீங்குவதில்லை. இது தெரிந்த தமக்கையார் இரவோடிரவாக இவரை வரச் செய்து திருவதிகைச் சிவனை வணங்கச் செய்ய சூலை நோய் நீங்கப்பெற்றார். ஒரு தலைவரை அவ்வளவு எளிதாக இழந்துவிட ஒப்பவில்லை சமணர்கள். பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் துணையோடு அவரை நீற்றறையில் இடவும், நஞ்சூட்டவும், யானையைக் கொண்டு இடற விடவும், கல்லிலே கட்டி கடலிலே போடவுமாக – இவர் கரையேறிய ஊர் கரையேறவிட்ட குப்பம்(வண்டிப்பாளையம்) –  பலவாறாக அவரை சைவத்திலிருந்து மீட்க முயற்சி செய்தனர். சாதாரண சமணத் துறவியாக இவர் இருந்திருந்தால் இப்படிச் செய்திருக்கமாட்டார்கள் சமணத்தலைவராக இருந்தமையாலேயே இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது என்கிறார் ஆசிரியர்.

எனினும் இவர் சைவத்திலேயே தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் மன்னன் மகேந்திரவர்மனையும் சைவத்திற்கு மடை மாற்றினார். மன்னனும் சமணப்பள்ளியை இடித்து குணபரவீச்சரம் எனப்படும் சைவக் கோயிலை திருவதிகையிலே கட்டினான்.

“வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த

காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்

பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியோடு பாழிகளும்

கூடஇடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான்.”

என்ற பெரியபுராணப் பாடலிலிருந்து இவ்வரலாறு விளங்குகிறது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள குகைக்கோயிலை நிர்மாணித்தவனும் மகேந்திரவர்மனே. “குணபரன் என்னும் பெயருடைய அரசன் சமணத்திலிருந்து மாறிப் பெற்ற மெய்யறிவு உலகில் நெடிது நிலைப்பதாக” என்னும் பொருளுடைய வடமொழிக் கல்வெட்டு அங்குள்ளது. நிற்க.

கொல்லாமையே பேரறமாக போதிக்கும் சமணர்கள் திருநாவுக்கரசருக்கு இத்தகைய கொடுமைகளைச் செய்திருக்க முடியுமா? மேல்மட்டத்திலேயே இத்தகைய அல்லாட்டங்கள் இருக்கும்போது மக்களுடைய மனநிலை எவ்வாறாக இருந்திருக்கும்?

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

IMAG1498
மணிமாறனுக்குப் பொன்னாடை

அன்புள்ள கிருஷ்ணன்

சமணர்களுக்குச் சைவர்கள் இழைத்த கொடுமைகள்,நாவுக்கரசருக்கு சமணர் இழைத்த கொடுமைகள் எல்லாமே சைவப்புனைவுகள் என்பதே என் எண்ணம். இந்தியாவெங்கும் நிகழாதவை இவை. பெரும்பாலும் கிறித்தவர்களின் புனிதர்களின் கதைகளிலிருந்து ஊக்கம்பெற்று புனையப்பட்டவை

கெடிலக்கரை நாகரீகம் நூலை இயற்றி சுந்தர சண்முகனார் என் பாண்டிச்சேரி நண்பர் மணிமாறனின் தாத்தா. அவரிடம் பலநாட்கள் உரையாடியும்கூட கடலூர் சீனுவுக்கே அச்செய்தி தெரிந்திருக்கவில்லை. என் கட்டுரைக்குப்பின்னர் மணிமாறன் அதைச் சொல்ல பெரிய ஆச்சரியமாக ஆகிவிட்டது.

ஜெ

சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை
சமணர் கழுவேற்றம்
சைவத்தொன்மங்களும் கிறித்தவமும்
சமணர் கழுவேற்றம்
கழுவேற்றமும் சைவமும்
கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘நானும்’ இயக்கம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலேசிய இலக்கிய அரங்கு -மதுரையில்