இவர்கள் இருந்தார்கள்
அன்புள்ள ஜெ,
நலம் தானே , தங்களின் இவர்கள் இருந்தார்கள் என்ற கட்டுரை தொகுதியை நேற்று வாசித்தேன்.அருமையான கட்டுரைகள்.சில கட்டுரைகளை ஏற்கனவே தங்கள் தளத்தில் வாசித்து இருந்த போதிலும் ஒரு கட்டுரை தொகுதியாக வாசிப்பது
ஒரு தனி அனுபவம் தான். இப்புத்தகம் அந்த மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் அளுமையையும் ஒரு புனைக்கதை போல காட்சிப்படுத்தியது. கலை , இலக்கியத்தில் அவர்களின் பங்களிப்பையும் ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்.நன்றி.
சுகதேவ்.
மேட்டூர்.
அன்புள்ள ஜெ
உங்கள் பெருநாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் பலவற்றை மறைத்துவிடுகின்றன. நீங்கள் எழுதிக்குவித்துள்ள பல நூல்களை உங்கள் தீவிர வாசகர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். நான் உங்கள் படைப்புகளை நான்காண்டுகளாக வெறிகொண்டு வாசித்துவருபவன். இத்தனை வாசிப்புக்குப்பின்னாலும் நான் இவர்கள் இருந்தார்கள் நூலை இப்போதுதான் கண்டுபிடித்தேன்.
அதை வாசித்தபோது ஏற்பட்ட எண்ணம் இதுதான். தமிழில் ஓர் எழுத்தாளன் இந்த ஒரு நூலைமட்டுமே எழுதிவிட்டு மறைந்திருந்தால் இதைக்கொண்டே அவனை ஒரு பெரும்படைப்பாளியாகக் கொண்டாடியிருப்பார்கள். அத்தனை நுட்பமான அழகான நூல். உண்மையாக வாழ்ந்த மனிதர்களின் கதை. சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களை கண்முன் நிறுத்துகிறது. அவர்களின் ஒவ்வொரு இயல்பையும் நுணுக்கமாகச் சித்தரிப்பதில் தேர்ந்த புனைவெழுத்தாளனின் பேனாக்கூர்மை உள்ளது. அதேசமயம் அவர்களை கூர்மையாக மதிப்பிடுவதில் ஒரு சிறந்த ஆய்வாளனின் பார்வை உள்ளது.
மன எழுச்சி அளிக்கும் பதிவுகள். க.நா.சு பற்றிய கட்டுரையை வாசித்தபோது எந்த ஒரு இலக்கியப்படைப்பும் அளிக்கும் மன எழுச்சியை அடைந்தேன். உங்கள் இலக்கியநூல்களில் இது மிக முக்கியமான ஒன்று
எஸ்.ஆர். ராஜேந்திரன்
அன்புள்ள ஜெமோ
இவர்கள் இருந்தார்கள் என்ற தொகுதியை நேற்றுத்தான் வாசித்து முடித்தேன். பெருமூச்சுடனும் நெகிழ்ச்சியுடனும் எண்ணிக்கொள்ளத்தக்க படைப்புக்கள். திருவிகவின் வாழ்க்கையும் பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கையும் மிகப்பெரிய புனைவிலக்கியம் போலிருந்தன. அற்புதமான ஆக்கங்கள் அவை. என்ன ஒரு வாழ்க்கை.
இலக்கியவாதிகள் சிந்தனையாளர்களின் வாழ்க்கைக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? அவர்களின் சிந்தனைகள் அவர்களின் ஆளுமையிலேயே உள்ளன. அவர்கள் வரலாற்றில் வாழ்பவர்கள். ஆகவேதான் உலகம் முழுக்கவே எழுத்தாளர்களின் ஆளுமைச்சித்திரங்கள் அவர்களின் எழுத்துக்கள் அளவுக்கே புகழ்பெற்றிருக்கின்றன
ஆழமான நூல் இது
சுரேஷ்குமார்
இவர்கள் இருந்தார்கள் -கடிதங்கள்
இலட்சிய முகங்கள்