சித்தர்பாடல்களைப் பொருள்கொள்ளுதல்

AgasthiyarG

நாத்திகமும் தத்துவமும்
கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு
மந்திர மாம்பழம்

அன்புள்ள ஜெ.,

சித்தர் பாடல்கள்  படித்திருப்பீர்கள்.  சில  பாடல்கள் மேலோட்டமாகப் பார்த்தால்  நாத்திகவாதம்  போலவே  தோன்றும். “சாத்திரங்கள் ஓதுகின்ற ச ட்டநாத பட்டரே  வேர்த்திரைப்பு  வந்த போது வேதம் வந்து உதவுமோ” போல.  நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளையின்  “இலக்கிய இன்பம்”  படித்தேன். “சித்தத்தை  நிறுத்தி  சிவத்தைக்”  காணும்  தாயுமானவரின் பின்னணியில்  குதம்பைச்  சித்தரின் இரண்டு  பாடல்களை அலசியிருந்தார்  ஆசிரியர்.  முதல் பாடல்

தாவாரம்  இல்லை  தனக்கு ஒரு வீடில்லை

தேவாரம்  ஏதுக்கடி? –  குதம்பாய்!

தேவாரம் ஏ துக்கடி?

‘தாழ்வாரம்  இல்லாத  வீட்டில் இருக்கவேண்டாம்’. அல்லது ‘ஒதுங்குவதற்கு  ஒரு  தாழ்வாரம் கூட  இல்லை. வீடும் இல்லை. தேவாரம்  என்ன  வேண்டிக்கிடக்கிறது?  தேவாரம்’ என்பதான ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிற பாடல்.கவிஞர்  கொடுப்பதான அர்த்தம் வேறு. “தா” என்றால்  துன்பம்.  தாவில்லை  என்றால் துன்பம் இல்லை. “தேவலை”  என்று நாம் கூறுகிறோமே அது தாவில்லையின் மரூஉ. நிலத்தை வாரத்திற்கு விட்டிருக்கிறேன் என்றால் பங்குக்கு விட்டிருக்கிறேன் –  குத்தகைக்கு விடுவது போல(எந்த ஊர் வழக்கு என்று தெரியவில்லை).

“மற்றவர்களின்  துன்பத்தில் பங்கு  பெறுவதும் கிடையாது.  தான்  என்ற  அகந்தைக்கு  ஒரு விடிவும்  கிடையாது. இவர்கள் தேவாரம் சொல்வதால்  என்ன  பயன்? ” என்பதே  ஆசிரியர்  கூறும் பொருள்.

அடுத்த பாடல்

மாங்காய்ப்பால்  உண்டு  மலைமேல்  இருப்போர்க்கு

தேங்காய்ப் பால்  ஏதுக்கடி? –  குதம்பாய்!

தேங்காய்ப்  பால்  ஏதுக்கடி?

முதல்  பாட்டிலாவது  தப்பர்த்தம்  செய்து கொள்ளவாவது  ஒரு வாய்ப்பு இருந்தது. இதில் அதுவும்  இல்லை.  மாங்காயின்  காம்பைக் கிள்ளினால் பிசின் போல வரும்.  பாலெங்கே?  மலைமேல் மாமரமும்  விளையாது  தென்னை  மரமும்  விளையாது.  பாடலின்  உண்மையான  அர்த்தம்  பின்வருமாறு.

மாங்காய்ப்பாலுண்டு –   இயற்கையான  முறையில்  யோகாப்பியாசம் பழகி, மூச்சைக்கட்டி,  மூலக்கனலை எழுப்பி, மூளையின் நடுவே இருக்கும்  “கலாமதி” என்னும்  அமுத  கலசத்தை அசைத்து அதிலிருக்கும்  குண்டலினிப்பாலை  மாங்காய்  வடிவில்  இருக்கும் இதயத்திற்கு  அனுப்பி ரத்தம்  போல் ஓடி  உயிரைப்பாதுகாக்கும் மாங்காய்ப்பாலை   உண்டு  கொண்டு,  மலைமேல் இருப்போர்க்கு – பரமாத்மாவோடு  கலந்து நிற்கிற மிக உயர்ந்த நிலையிலிருக்கும் யோகியர்க்கு,  தேங்காய்ப்பால் – (யோகத்திற்குச் சிறிதும் உதவாத) கள்ளுத்தண்ணியும்  இன்ன பிற  லாகிரி  வஸ்துக்களும் எதற்கு?

கொண்டு கூட்டிப் பொருள் கோள், ஆற்று நீர்ப்  பொருள்கோள் என்று கொள்விப்பட்டிருக்கிறோம். இது எந்த மாதிரியான பொருள் கோள். கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது.ஆனால் சித்தர்கள் கூற நினைத்த பொருள் இதுவாகத்தான் இருந்திருக்க முடியுமா?

உ வே சா ‘நயஞ் சொல்லுவீரா?’ என்று கேட்கிறார்  மாணவராகச் சேர வரும் கி வா ஜ வைப் பார்த்து. அவரும் கம்ப ராமாயணத்திலிருந்து நயம் சொல்லி மாணவராகச் சேர்ந்து கொள்கிறார். புலவர்கள் நயஞ் சொல்லி பரிசில் பெற்றுச் செல்வது உண்டு. இல்லாத நயம் சொல்லி ‘வாங்கிக்கட்டிக்’ கொண்டவர்கள் உண்டா?

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

Namakalkavi
நாமக்கல் கவிஞர்

அன்புள்ள கிருஷ்ணன்

உரைமரபு என்பது இந்திய அறிவியக்கத்தின் ஒரு தனித்தன்மை. ஒரு  தத்துவசிந்தனையாளர் தன் தனிச்சிந்தனையை ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு மூலநூலுக்கான விளக்கமாக விரித்து எழுதும் வழக்கம் இங்குண்டு. தத்வமஸி என்னும் ஒரே வரிக்கு மூன்றுவகை விளக்கங்களை மூன்று ஞானியர் அளிக்க மூன்று தரிசனங்கள் தோன்றிய வரலாறு இங்குண்டு

அந்த உரைவிளக்க மரபு இங்கே கீழ்நிலையிலும் செயல்படுகிறது. எந்த வரிக்கும் ‘எனக்கென்ன தோணுதுண்ணா…’ என விளக்கம் அளிப்பது ஒரு அறிவுசார் போதைப்பழக்கமாகவே நம்மைப் பீடித்திருக்கிறது. உபன்யாசகர்கள், மேடைப்பேச்சாளர்கள், நூலாசிரியர்கள் இதைச் செய்துகொண்டே  செல்கிறார்கள். இன்று நம் காதில்விழும் ஆன்மிக, மத, தத்துவ, இலக்கியக் கருத்துக்களில் பெரும்பாலானவை இத்தகையவை.

இந்த பொய்யான அறிவியக்கம் மெய்யான கற்றலுக்கு மிகப்பெரிய தடை. ஓரளவு வயதானவர்களைச் சந்திக்கையில் இப்படி சில பொதுப்புரிதல்களை அடைந்து அவற்றை ஒருவகை மெய்யறிவாக எண்ணிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். மாபெரும் அறிவு வீணடிப்பு அது,ஆனால் அவர்களின் தன்முனைப்பைக் கடந்து அவர்களிடம் அதைச் சொல்லிவிடமுடியாது.

இவ்வாறு கொண்டுகூட்டியும், சொல்லி மேற்சென்றும் பொருள்கொள்ளலாமா? கொள்ளலாம், ஆனால் கொள்பவரின் தகுதி என்ன என்பதே முதல்வினா. உ.வே.சாமிநாதய்யர் கேட்கும் ‘நயம்சொல்லல்’ என்பது தோன்றியபொருளைச் சொல்வது அல்ல. அதற்கு அன்று பல நெறிகள் இருந்தன நம் மரபைக்கொண்டு நோக்கினால் அவ்வாறு பொருள்கொள்வதற்கான தகுதிகள் நான்கு.

அ.முழுதும் கற்றல். ஓர் அறிவுத்துறையில் பொருள்சொல்ல எழுபவர் அதுசார்ந்த அனைத்து நூல்களையும் பிழையறக் கற்றிருக்கவேண்டும்.

ஆ. மரபு கொள்ளல். அவர் ஓர் ஆசிரியமரபில் வரவேண்டும். எந்த ஆசிரிய மரபில் அல்லது கொள்கை மரபில் நின்று இதைச் சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு மறுமொழி வேண்டும்.

இ. கோள்நூல் உரைத்தல். ஒரு பார்வையை முன்வைப்பதற்கு முன்பு அதற்கு ஆதாரமாக உள்ள இலக்கண, இலக்கிய நூல்களை முறையாகச் சுட்டவேண்டும்.

ஈ.அவை நிற்றல். ஓர் அவையில் மாறுபட்ட கருத்துடையவர்முன் அந்நோக்கை முன்வைத்து சொல்லாடி நிறுவவேண்டும்.

இவையெதுவுமே தேவையில்லாத ஒரு தளம் உண்டு. சொல்பவர் தன்னளவில் மெய்ஞானி என்றால் அவர் சொல்வது அவரையும் அவருடைய தரிசனத்தையும் புரிந்துகொள்ள உதவுவதாகக் கொள்ளலாம். அந்நூல்களைப்புரிந்துகொள்வதற்கு அதை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது.

இன்று மரபான மெய்ஞான அமைப்புகள் அழிந்துவிட்டன. திட்டவட்டமான ஆசிரிய-மாணவத் தொடர்ச்சி இன்றில்லை. நாம் உதிரி உதிரியாகவே மரபுசார்ந்த, மதம்சார்ந்த கருத்துக்களை அறிகிறோம். அவற்றை எந்த அவையிலும் வைத்து சொல்லாடி நிறுவவேண்டியதில்லை. ஆகவே மாற்றுத்தரப்பும் தெரிவதில்லை. இச்சூழலில் உதிரிக்கருத்துக்கள் பொருத்தமற்றவையாக, திசைதிருப்புவனவாக, நேர்மாறான பொருள் அளிப்பவையாக இருந்தாலும் கூட எங்கோ வாய்மொழியில் நிலைகொண்டுவிடுகின்றன. கருத்துக்கள் அறிவின் வழிகளென்பது ஒழிந்து கருத்துக்களே அறிவின் திரைகளாக ஆகும் நிலை இது.

தொல்நூல்களில் பல முறையான ஆசிரியமரபால் பயிலப்பட்ட வரலாறுகொண்டவை. ஆகவே பொருட்கோடலுக்கான முறைமைகள் கொண்டவை. உதாரணம் கீதை அல்லது பிரம்மசூத்திரம் அல்லது சைவத்திருமுறைகள். சித்தர்பாடல்களுக்கு அவ்வாறு ஆசிரியமரபு இல்லை. அவை எந்த முறைமையாலும் கற்கப்படவில்லை. அவை நம் அறிவுப்புலத்திற்குள் பத்தொன்பதாம்நூற்றாண்டில் திடீரென்று புகுந்தவை. ஆகவே அவற்றைக் பொருள்கொள்வதற்கு ஏற்கப்பட்ட வழிகளே இல்லை

ag

வரலாற்றை நோக்கினால் சித்தர்பாடல்கள் என்பவை எந்தவகையான வரலாற்று ஆதாரமும் இல்லாதவை என்று தெரியவரும். அவற்றின் மூலச்சுவடிகள் கிடைக்காதவரை அவற்றை இலக்கிய ஆக்கங்களாக கொள்ளவியலாது என்ற நிலைபாடுதான் எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்ற முதன்மையான ஆய்வாளர்களிடமிருந்தது. சித்தர்பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழியாக நூறாண்டுக்காலம் புழங்கியவை. பின்னர் அச்சு அறிமுகமானபோது சந்தைப்பதிப்பாக வெளிவந்து அடித்தள மக்களால் பயிலப்பட்டன.

பின்னர் ரத்தினநாயகர் ஆண்ட் சன்ஸ் அவற்றை பதினெண்சித்தர் பாடல்கள் அல்லது பெரிய ஞானக்கோவை என்ற பேரில் நூலாக்கியது. அதில் எந்த முறைமையும் கைக்கொள்ளப்படவில்லை. பதினெட்டு என்ற கணக்கே அவர்கள் உருவாக்கியதுதான். பின்னர் ச.து.சு.யோகியார், அரு.ராமநாதன் போன்றவர்கள் தொகுத்த பதினெட்டுசித்தர் பாடல்கள் வெளிவந்தன. அவர்கள் தங்களுக்குத் தோன்றியவாறு புதியவர்களைச் சேர்த்தும் பழையவர்களை நீக்கியும் உள்ளனர்.

சித்தர்பாடல்களுக்குள் ஓர் ஒருமை இல்லை. முதலில் சித்தர்நோக்கு என ஒன்று இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவநோக்கு கொண்டவை. அவற்றில் உயரிய தத்துவநோக்கு கொண்ட பாடல்களும் எளிமையான நாட்டார் பாடல்களும் உள்ளன. சிலர் ரசவாதம் போன்ற மறைவான வைத்தியச்செயல்களையும் யோகசாதனைகளையும் செய்பவர்கள். சிலர் அன்றிருந்த சைவ தாந்த்ரீக மரபின் குறியீட்டுச் செயல்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். எல்லா பாடல்களுமே 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட மொழிநடையில் அமைந்தவை.

அவை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் தொன்மையான பேரரசுகள் அழிந்து, மாலிக் காபூர் படையெடுப்பும் அதன்பின் நாயக்கர் ஆட்சியும் உருவாயிற்று. சிற்றரசர்களையும் பாளையக்காரர்களையும் மடாதிபதிகளையும் நம்பி இலக்கியம் வாழ்ந்தது. ஆகவே பெருங்காவியங்கள் மறைந்து சிற்றிலக்கியங்கள் உருவாயின. தனிப்பாடல்கள் செல்வாக்கு கொண்டன. கவிதை என்பது வெறும் மொழித்தொழில்நுட்பமாக சிறு கவிராயர்களால் ஆக்கப்பட்டது. அதற்கு எதிரான ஓர் இயக்கமாக நாட்டார்மொழியில் நிகழ்ந்தது சித்தர்பாடல்கள் என்று கொள்ளலாம்.

அத்துடன் தமிழகத்தில் 10 ஆம் நூற்றாண்டுமுதல் நிலைகொண்ட பக்தி இயக்கம் தாந்த்ரீக மரபுகளை முற்றாக ஒடுக்கியது. தாந்த்ரீக மரபு மறைவான ஞானமாக நீடித்து ஆட்சியதிகாரம் முழுச்செல்வாக்கை இழந்த பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பின் சித்தர்மரபாக வெளிவந்தது என்று சொல்லலாம்.

பொதுவாகச் சித்தர் மரபு ஒருவகையில் அறியப்படாத அறிவியக்கமாக, மறைவானதாகவே நீடித்தது. நாட்டார் வாய்மொழி மரபிலிருந்து அச்சுக்கு வந்தது. ஆகவே அதற்கு அங்கீகரிக்கப்பட்ட பொருட்கோள் மரபும் முறைமையும் இல்லை. அதைச்சார்ந்து நிறுவனங்கள் இல்லை. ஏற்கத்தக்க வழிநூல்களும் இல்லை. குறிப்பிடத்தக்கப் பேரறிஞர்கள் எவரும் அதற்கு உரை எழுதவுமில்லை.

அச்சில் அந்நூல்கள் வெளிவந்தபோது பதிப்பகம் சார்ந்தவர்கள் எழுதிய எளிய உரைகளே உள்ளன. அவர்கள் நம்பகமான அறிவுத்தகுதி கொண்டவர்கள் அல்ல. அதன்பின் வந்தவை அனைத்தும் தோன்றியபடி எழுதப்பட்ட உரைகள். அதாவது சித்தர்பாடல்களை பொருள்கொள்வதற்கான அறிவுப்புலம் தமிழகத்தில் இருக்கவில்லை. சித்தர்பாடல்களின் அறிவுத்தளம் பரவலாக அறியப்பட்டதாகவும் இருக்கவில்லை. சித்தர்பாடல்களின் பெரும்பகுதி இன்னமும்கூட எப்பொருளும் கொள்ளமுடியாததாகவே உள்ளது.

இந்த இடைவெளியில் சித்தர்பாடல்களுக்குப் பொருளுரை சொல்லும் வழக்கம் தழைக்கிறது. இருவகையில் இது நிகழ்கிறது. சித்தர்பாடல்கள் வெளிவந்தபோது அன்று இங்கே ஓங்கியிருந்த சைவ பக்திமரபுக்குள் நின்றுகொண்டு பொருள்கொள்ள முயன்றார்கள். அனைத்து வரிகளும் சைவசித்தாந்த மரபுப்படி ஆராயப்பட்டன. இன்றும் இம்மரபு நீடிக்கிறது.

பின்னர் சித்தர்கள் என்பவர்கள் ‘எதிர்ப்பாளர்கள்’ ‘கலகக்காரர்கள்’ என்ற சித்திரம் உருவானது.  ‘நட்டகல்லை தெய்வமென்று நாலுபுப்பம் சாத்தியே’  ‘சாத்திரங்கள் பேசுகின்ற சட்டநாத பட்டரே’ போன்ற சில வரிகளினூடாக இந்த உருவகம் கட்டமைக்கப்பட்டது. இச்சித்திரத்தை உருவாக்கியவர்கள் எவ்வகையிலும் இந்திய மெய்யியல் மரபை அறிந்தவர்களோ ஆராய்ந்தவர்களோ அல்ல. அவர்கள் அரசியல்நோக்குடன் உதிரிவரிகளுக்காகத் தேடியலைந்தவர்கள். இத்தரப்பினர் சித்தர்பாடல்களை மரபுஎதிர்ப்பு, மதமிலா ஆன்மிகம், நாத்திகம் ஆகிய கோணங்களில் விளக்க ஆரம்பித்தார்கள்.

இருசாராருமே சித்தர்பாடல்களை ஒற்றைக் கருத்தியல் தரப்பாக, ஒரு வகை மதமாகவே அணுகியிருக்கிறார்கள். அது எவ்வகையில் எவரால் தொகுக்கப்பட்டது என்ற வரலாறுகூட எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆகவேதான் கா.சிவத்தம்பி போன்ற மார்க்சிய அறிஞர்கள்கூட பொதுவுடைமைச்சித்தர் போன்ற பொய்யான சித்தர்களை எடுத்துச்சொல்லி சித்தர்தரப்பாக முன்வைக்கும் அபத்தம் நிகழ்கிறது

பொதுவுடைமைச் சித்தர் என்பவர் ச.து.சு யோகியாரால் உருவாக்கப்பட்ட பொய். முற்போக்குக் கருத்துக்களைப் பரப்பும்பொருட்டு ச.து.சு யோகியார் சில கவிதைகளை எழுதி தன் பதினெட்டுசித்தர் பாடல்கள் தொகையில் பொதுவுடைமைச்சித்தர் என்ற பேரில் இணைத்துவிட்டார். பிறகு வந்த பதிப்புகளில் அவை நீக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு சேர்க்கமுடிகிறது என்பதும், அறிஞர்களுக்கே வேறுபாடு தெரியவில்லை என்பதும்தான் நாம் கருத்தில்கொள்ளப்படவேண்டியது. சித்தர்பாடல் என்பதன் நம்பகத்தன்மையை இல்லாமலாக்கும் கூறு இது

sith

சித்தர்பாடல்களை அணுகுவதற்கான சில வழிமுறைகளை என் வரையில் நான் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்

அ. அவை ஒற்றைக் கருத்தியல்தரப்போ மதமோ அல்ல. வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்த வெவ்வேறு ஆசிரியர்களின் ஆக்கங்கள்

ஆ. அவற்றுக்கான பொதுவான தத்துவநிலைபாடு என்பது பெரும்பாலும் சைவமதத்தின் தாந்த்ரீகம் சார்ந்த உட்பிரிவுகளைச் சார்ந்தது. அவற்றிலுள்ள எதிர்ப்பும் கலகமும் தாந்த்ரீக மரபு மையமரபுக்கு அளித்த எதிர்வினைதான். சைவத்தின் பக்திமரபைச் சேர்ந்த படைப்புகளும் அவற்றில் உள்ளன. அந்தப் பாகுபாட்டுடன் மட்டுமே பொருள்கொள்ளல் நிகழவேண்டும். உதாரணமாக தாயுமானவர் சைவசித்தாந்த மரபுக்குள் நிலைகொள்பவர். பட்டினத்தார் அதற்கு வெளியே உள்ளவர்.

இ. அவை அடிப்படையில் நாட்டார்த்தன்மை கொண்ட படைப்புகள். ஆகவே பொருள்கோடலில் நாட்டாரியல் சார்ந்த வாசிப்புக்கே முன்தூக்கம் அளிக்கப்படவேண்டும். சொற்கள், சொல்லாட்சிகள், உவமைகள் ஆகியவற்றுக்கு நாட்டார்மரபு சார்ந்த அர்த்தம் என ஏதும் இல்லை என்றால் மட்டுமே செவ்வியலுக்குள் செல்லவேண்டும். ஆனால் தாயுமானவர் போன்றவர்கள் தமிழின் செவ்வியல்மரபைக்கொண்டு புரிந்துகொள்ளப்படவேண்டியவர்கள். அவர்களை நாட்டாரியல் நோக்கில் அணுகலாகாது.

ஈ. சித்தர்பாடல்களில் உள்ள அறியவியலாத கூறுகள் [ அவை ரசவாதம், மருத்துவம், யோகப்பயிற்சி, மறைஞானக்குறியீடுகள் போன்றவை] பொருள்கொள்ளப்படும்போது அவற்றுக்கு வேறுநூல்களிலோ, வேற்றுமொழியிலுள்ள அத்தகைய மரபுகளிலோ வேர்களுண்டா அல்லது இணையானவை உண்டா என்றே முதலில்பார்க்கவேண்டும். நமக்கு இன்றைக்குத் தோன்றியபடிப் பொருள்கொள்வது அபத்தமானதாகவே முடியும்

இந்த அளவுகோல்களைக்கொண்டு நோக்கினால் சித்தர்பாடல்கள் அவற்றின் எளிய மொழி காரணமாகவே சம்பந்தமில்லாதவர்களால் வாசிக்கப்பட்டு மனம்போனபடி பொருள் அளிக்கப்பட்டு அணுகவேமுடியாத புகைவளையம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

நாமக்கல் கவிஞரின் பொருட்கோடல் என்பது சித்தர்பாடல்கள் அச்சில்வரத்தொடங்கிய காலகட்டத்தில் மைய பக்தி மரபு சார்ந்து அவற்றை விளக்க முயன்ற போக்கின் ஒரு பகுதி. நாமக்கல் கவிஞர் அவர் நம்பிய பக்திமரபை அடிப்படையாகக் கொள்கிறார். காந்திய யுகத்தில் பக்திமரபிலுள்ள மக்கள்சேவை, மனிதநேயம் என்னும் அம்சங்கள் மேலாதிக்கம் பெற்றன. அந்த கூடுதல் பொருளை சித்தர்பாடல்கள் மேல் ஏற்ற முயல்கிறார். இத்தகைய நூற்றுக்கணக்கான முயற்சிகள் அன்று நிகழ்ந்தன. அந்த அளவுக்கான அறிவுஅடிப்படைகூட இல்லாமல் இன்றைய மேடைகளில் தொடர்கின்றன

இந்தப்பாடலையே எடுத்துக்கொள்வோம். குதம்பைச்சித்தர் பாடல்களிலுள்ள மையமத எதிர்ப்பு, ஆசார எதிர்ப்பு நோக்கின் வெளிப்பாடு இது. தேவாரம் என்றால் என்ன? நாமறிந்தது அதை தே+ ஆரம் என பிரிந்த்து இறைப்பாடல்மாலை எனப் பொருள்கொள்வது. அப்படிப் பொருள்கொள்வதற்கு ஏதேனும் மரபு உண்டா?

பதினாறாம் நூற்றாண்டு முதல் வரும் மொழிவரலாற்றை நோக்கினால் தேவாரம் என்பது தே+வாரம் என்று பிரிக்கப்பட்டு தெய்வச் சடங்கு என்றே  பொருள்பெறுகிறது. வாரம் என்றால் வழக்கம் என்று பொருள். அரசுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு வழக்கமாக அளிக்கும் வரியை குறிக்கும் சொல்லாக வாரம் சமீபகாலத்தில்கூட குமரிமாவட்டத்தில் புழங்கியது.  குளியலும்தேவாரமும் என்ற சொல்லாட்சி பதினேழாம் நூற்றாண்டு முதல் புழக்கத்திலுள்ளது. மலையாளத்தில் இன்றும் ஒரு சாதாரணச் சொலவடை அது. நாம் சொல்லும் தேவாரம் என்ற நூல் மலையாளத்தில் எவருக்கும் தெரியாது.  ஆரம்பகால கிறித்தவ மரபிலும் காலை மாலை செய்யும் பிரார்த்தனையைக் குறிக்க தேவாரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதாவது காலையிலும் மாலையிலும் செய்யப்படும் மதச்சடங்குகள் என்று மட்டுமே அதைப் பொருள்கொள்ளமுடியும். குதம்பைச் சித்தரின் அந்த வரியிலுள்ள தாவாரம் இயல்பாகவே ஒரே பொருளைத்தான் அளிக்கிறது. தாழ்வாரமே இல்லை. வீடுமில்லை. நான் ஏன் தேவாரம் செய்யவேண்டும்? நாமக்கல்லார் சொல்லும் பொருளில் வீடு ஏன் வருகிறது?

மாங்காய்ப்பாலும் தேங்காய்ப்பாலும் சித்தர்பாடல்களில் எப்படி வருகின்றன? மாங்காய்வடிவிலுள்ளது சித்தத்திலுள்ள ஓர் நுண்ணுறுப்பு என்று வேறுபாடல்களிலும் உள்ளது. அது சித்தர்களின் மறைஞான –யோக மரபில் பொதுவாகப் புழங்கும் ஒரு குறியீடு. புளிப்பு இனிப்பாக மாறுவதையும் குறிக்கிறது. தேங்காய்ப்பால் என்பதை சிலர் காமத்துடன், முலைகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் பிற சித்தர்பாடல்களில் அக்குறிப்பு இல்லை. ஆனால் தாந்த்ரீக மரபில் வழிபாட்டுக்குரிய ஐந்து மகாரங்களில் [பஞ்சமகாரம்] மதுவும் உண்டு. [மத்யம், மாம்சம், மந்த்ரம், முத்ர, மைதுனம். அதாவது மது மாமிசம் மந்திரம் முத்திரை காமம்] மதுவுக்குப் பதிலாக இளநீர் படைக்கப்படுவது பதினாறாம் நூற்றாண்டிலேயே வழக்கமாக ஆகிவிட்டது. மேலே சொன்ன ஐந்துக்கும் மாற்றுகள் உருவான காலகட்டம். ஆகவே தேங்காய்ப்பால் கள்ளைக் குறிக்கலாம். விரிந்தபொருளில் உலகியல்சார்ந்த களிப்பைக் கொடுக்கலாம்.

இவ்வாறு பொருள்கொள்கையிலேயே நாம் சித்தர்பாடல்கள் உருவான அறிவுச்சூழலை, அப்பாடல்கள் கொண்டிருக்கும் அறிவுச்சாரத்தைச் சென்றடைகிறோம். மாறாக அவற்றை நாம் நின்றிருக்கும் இடத்தை நோக்கி இழுப்பது அறிவியக்கமே அல்ல.

ஜெ

எஸ்.வையாபுரிப்பிள்ளை

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஆத்மாநாம் விருதுகள் விழா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-40