சேர்ந்து வாழ்தல்- கடிதங்கள்

Do you come here often, Painting of mannequins.

சேர்ந்து வாழ்தல்

ஜெமோ,

 

‘டiving together’ பற்றி நப்பாசையுடன் வந்த கடிதத்திற்கான உங்களுடைய பதில் தன் விழைவுகளின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்திருக்கும். இப்பதில் சில வருடங்களுக்கு முன்பு நான் கலந்து கொண்ட தொழில்நுட்ப கருத்தரங்கில் பேசிய வல்லுனரின் உரையை ஞாபகப்படுத்தியது.

 

அங்கிருந்த இளையவர்களை நோக்கி “How many of you are thinking that the Controls in your organisation hinder your innovative thinking?” என்ற அந்த வல்லுனரின் கேள்விக்கு கிட்டத்தட்ட அரங்கத்திலிருந்த அனைவருமே கையுயர்த்தினார்கள். அதை எதிர்பார்த்திருந்தவர் போல திரையில் இரண்டு உயர்தர sports carகளை உயிர்ப்பித்தார். இரண்டும் ஓரிரு நொடிகளில் அதிவேகத்தை எட்டக்கூடியவை.  “The 2 cars you see in this video are almost same in all aspects. But, one of them doesn’t have the break. Which car is your choice?” என்ற அந்த வல்லுனரின் கேள்விக்குப் பிறகு ஒட்டுமொத்த அரங்கமும் அமைதியானது.

 

‘Controls are there in place for you to innovate without the fear of failure” என்று கூறிவிட்டு தன் உரையைத் தொடர்ந்தார். அமைப்புகளுக்குச் சரி, ஆனால் ஒரு தனிமனிதனுக்கு இந்த கட்டுப்பாடுகள் ஏன் தேவை. சட்டங்களின் வழியாக அவை ஏன் நிறுவப்படவேண்டும்? தனிமனித சுதந்திரத்திற்கு அது எதிரானதல்லவா என்று புரட்சிகரமாக எண்ணிய காலங்களுண்டு. ஆனால் காலம்போல் நமக்கு புரிதலை ஏற்படுத்துகிற ஆசான் வேறொன்றுமில்லை.

 

தனிமனித சுதந்திரம் என்பது தனக்கு நிகழும் அனைத்திற்கும் தானும் ஒரு பெரிய பொறுப்பு என்றுணரும்  முதிர்ச்சி நிலை. It is not really ‘free’ as it is painted all over.

இந்த நிலையை அடையும்வரை ஒழுக்கம் மதங்களிலிருந்து அரசியல் வழியாக குடும்பங்களிலும் சமூகத்திலும் நிலைநாட்டப்படுகிறது. இன்றைய ஜனநாயகத்தில் அது சட்டம். தனிமனித முதிர்ச்சிற்கேற்ப சட்டங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். சட்டங்கள் ஏதுவும் தேவையற்ற ஒரு முதிர்ச்சி நிலையைத்தான் மதங்களும் மார்க்ஸியம் போன்ற தரிசனங்களும் இலட்சியக் கனவாக முன்வைக்கின்றன.

ஹோட்டலில் சென்று தினமும் சாப்பிடுவது உடலுக்கு கேடு. ஆகவே இது தண்டனைக்குரிய குற்றம் என்பது முதிர்ச்சியற்ற சமூகங்களுக்குத் தேவையான  சட்டம்தான். ஆனால் ஹோட்டலில் தினமும் சாப்பிட்டு உளுத்துப் போன உடம்பிற்கு நான் தான் பொறுப்பாவேன்; மற்றவர்களல்ல என்றுணரும் பொறுப்புணர்ச்சி தனி மனித சுதந்திரத்திற்கான முதன்மைத் தகுதி.

இந்தியாவிற்கு அந்த பொறுப்புணர்ச்சி வந்துவிட்டதா என்பது சந்தேகமே என்பதை மிகவிரிவான பதிலின் மூலம் உணர்த்தியுள்ளீர்கள்.

 

அன்புடன்

முத்து

 

அன்புடன்
முத்து

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் கட்டுரையில் ஒரு வரி. மானுட உறவுகளை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் வரும் என்றால் இந்த உறவுமுறை இயல்பானதாக ஆகிவிடும் என்று. உண்மையில் அப்படி ஒரு காலகட்டம் இந்தியாவின் வாழ்க்கையில் ஒரு பகுதியில் உருவாகிவிட்டது. என் நண்பர்கள் வேலைநிமித்தமாக பாரீஸ் சென்றார்கள். நால்வர் ஆண்கள், இருவர் பெண்கள். நால்வரும் அந்த இரு பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு அந்த எட்டுமாதத்தையும் கொண்டாடினார்கள். அவர்கள் அதன்பின் பிரிந்துவிட்டார்கள். எந்த விதமான மனச்சிக்கலும் அவர்களிடம் இல்லை.

 

நான் கேட்டபோது அதில் ஒருவர்  ‘இது ஒன்றும் வாழ்க்கைப்பிரச்சினை இல்லை. சும்மா வேடிக்கை’ என்றார். இன்னொருவர் ‘அவர் என்ன உறவுதானே வைத்துக்கொண்டார்? பணமா ஏமாற்றினார்?” என்றார். பாலுறவை மனம்சார்ந்த உறவாக எடுத்துக்கொள்ளாமல் வெறுமே உடல்மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒருசாரார் இருக்கிறார்கள். இன்றைய பாலியல்தளங்களுக்கும் உலகளாவிய பண்பாட்டு பரிமாற்றத்துக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உள்ளது

 

ஆர்

 

அன்புள்ள ஜெ

 

சேர்ந்துவாழ்தல் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தபோது தோன்றியது. நீங்கள் 1998ல் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல் கன்யாகுமரி. அதில் விமலா என்ற ஆராய்ச்சியாளர் முழுக்கமுழுக்க ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு வாழ்க்கையே அதுதான். அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொள்கையில் பாலியல்தோழனாக ஒருவனை தேர்வுசெய்துகொள்கிறார். எளிமையான, ஆரோக்கியமான ஓர் ஆணை.

 

ஆனால் விமலாவை அந்நாவல் ஓர் ஆதர்சப்பெண்மணியாகவே காட்டுகிறது. அது ஒன்றும் பெரியவிஷயம் அல்ல என்பதுபோலவும், அவருடைய ஆளுமை என்பது அறிவும் கருணையும் கொண்டது என்பதுபோலவும் காட்டுகிறது. அவருக்கு இளவயதில் ஒரு பாலியல் வன்முறை நிகழ்ந்தது.ஆனால் பாலுறவே சாதாரணமான ஒரு இளைப்பாறலும் மகிழ்ச்சியும்தான் என அவர் நினைக்கும்போது அந்த பாலுறவுவன்முறை ஒரு பொருட்டாக இல்லாமலாகிவிட்டது. தன்னை பாலுறவுவன்முறை செய்தவனையே ஒரு மருத்துவராக நின்றுதான் அவர் கருணையுடன் அணுகுகிறார்.

 

 

அதேபோல அதில்வரும் பிரவீணா என்னும் கதாபாத்திரமும் கலைசார்ந்த பெரிய கனவுகள் கொண்டது. அவளுக்கும் பாலுறவு என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை. தன் இலட்சியத்துக்காக அதைப்பயன்படுத்திக்கொள்வதில் குற்றவுணர்ச்சியும் இல்லை. அவளையும் நாவல் இலட்சியவடிவமாகவே முன்வைக்கிறது

 

அன்றைக்கு கன்யாகுமரி நாவல் பற்றி எழுந்த சர்ச்சைகளையும் வசைகளையும் நான் இணையத்திலேயே தேடித்தேடி வாசித்தேன். அது எனக்குக் காலம் எப்படி மாறிவிட்டது என்று காட்டியது. இன்றைக்கும் கன்யாகுமரி அதே வசைகளை அளிக்கும். அன்றைக்கு வசைபாடியவர்களில் பெண்களும் இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு கன்யாகுமரியைப் புரிந்துகொள்ளும் பெண்கள் சிலராவது உருவாகிவிட்டனர்.

 

எம்

 

 

கன்யாகுமரி- கடிதங்கள்

கன்யாகுமரி பற்றி…

கன்யாகுமரி கடிதங்கள்

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்

முந்தைய கட்டுரைகட்டண உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமணவுறவு,தனிமனிதன்