வரலாற்று ஆளுமைகளைப்பற்றி மட்டுமல்ல வரலாற்றைப்பற்றி எழுதும்போதே முதன்மையாக எழுந்துவரும் சிக்கலென்பது துருவப்படுத்திக்கொள்ளுதல் என்பதுதான். ஏற்கனவே சொல்லப்படும் கோணத்தை அப்படியே மீண்டும் உணர்ச்சிகரமாக விரித்து எழுதுவது ஒரு பாணி. பெரும்பாலும் இது வணிக எழுத்தின் வழிமுறை. இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றி எழுதப்பட்ட கல்கியின் அலையோசை, மகுடபதி அகிலனின் பெண்,நெஞ்சின் அலைகள் போன்ற நாவல்களை உதாரணமாகச் சுட்டலாம்.
மாறாக இலக்கியச் சூழலில் இருந்து எழுதவருபவர்கள் சொல்லப்படாத கோணத்தை முன்வைக்கவேண்டுமென்று எண்ணுவார்கள். ஆகவே மறு எல்லை எடுப்பார்கள். விடுபட்டவை, மறைக்கப்பட்டவை ஆகியவற்றைச் சொல்லவேண்டும் என்ற நோக்கில் எழுதமுற்படுகையில் மறுப்புநிலைபாட்டுக்கே சென்றுவிடுவார்கள். உதாரணம், கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமத்து மக்கள் அளிக்கும் இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றிய சித்திரம்.
இவ்விரு எல்லைகளையும் பொருட்டெனக் கருதாமல் உண்மை எதுவோ அதைச் சென்றடையவேண்டும் என்னும் உறுதியுடன் புனைவுக்குள் நுழைவதென்பது ஒரு பெரிய சவால்தான். ஏனென்றால் வாசகன் என முன்னாலிருப்பவன் மேலே சொல்லப்பட்ட இருநிலைகளில் ஒன்றைச் சார்ந்தவன். அவன் அப்புனைகதையை இருநிலைகளில் ஒன்றில் கொண்டுசென்று தளைத்துவிட முனைப்பாக இருக்கிறான். அவனுக்குள் இருக்கும் அந்த முயற்சியை நிலைக்கச்செய்து அதன்பின் அவனுடன் உரையாடவேண்டியிருக்கிறது.
புனைவுக்குள் ஆசிரியன் பலவகையான உத்திகள், வெளிப்பாட்டுமுறைகள் வழியாகவே இதை வெல்லவேண்டியிருக்கிறது. ஆனால் அனைத்தையும்விட மிகச்சிறந்த வழிமுறை என்பது வாசகனை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாமல் தன் தேடலை முன்னெடுப்பதும் தன் நேர்மை ஒன்றையே நம்பி நேரடியாக முன்வைப்பதும்தான். கலைக்கு தன்னை நிறுவிக்கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதனால் நேர்மையும் உண்மையும் மெல்ல அப்படைப்பை வெற்றிகரமாக ஆக்கும். அவ்வாறு வெற்றிநோக்கிச் சென்ற ஆக்கம் என சி.சரவணக் கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’ என்னும் நாவலைச் சொல்லமுடியும்.
இந்நாவலின் எதிர்மறைக்கூறுகளை முதலில் சொல்லிவிட விழைகிறேன். நாவல் என்பது விவரணைகளின் கலை. விவரணைக்கு இருகூறுகள் அடிப்படையானவை. புறவய உலகம் தகவல்களால் கட்டமைக்கப்படவேண்டும். அக உலகம் உணர்வுகளால் கூறப்படவேண்டும். இவற்றுக்கு அப்பால் நவீனநாவல் கவியுருவகங்கள், படிமங்களைப்பின்னி மேலதிக தளம் ஒன்றையும் உருவாக்கும்.
ஆகவே இன்றைய நாவலுக்கு எல்லையில்லாத தகவல்கள் தேவைப்படுகின்றன. உள்ளத்தை விவரிக்கும் நனவோடை உத்தி, நாடகீயத்தன்னுரை உத்தி, நீளுரையாடல் உத்தி என பல்வேறு முறைகள் வேண்டியுள்ளன. இவற்றுக்கும் அப்பால் செல்வனவற்றையே நாவல் படிமங்களாகச் சொல்ல முயல்கிறது
ஆப்பிளுக்குமுன் அவ்வகையில் மிக ஆரம்பநிலையிலேயே நின்றுவிட்ட நாவல். காந்தியின் பாலியல்சோதனைகளுக்கு களமாக அமைந்த அவருடைய ஆசிரமச்சூழல், அங்கிருந்த அன்றாட வாழ்க்கை, அங்கிருந்த மனிதர்கள் ஆகியவை நுண்தகவல்கள் வழியாக விரிவாகக் கட்டமைக்கப்படவில்லை என்பதே இந்நாவலின் முக்கியமான குறைபாடு. கதைமாந்தரின் உள்ளம் நேரடியாக வெளிப்பாடு கொள்ளவில்லை.மறைமுகமாக உணர்த்தப்படும் இடங்களும் மிகக்குறைவு. அவர்களின் செயல்கள் வழியாக வாசகன் சென்றடையும் வாய்ப்புகளே உள்ளன.
அத்துடன் இந்நாவலில் அனேகமாக கவித்துவப் படிமங்களே இல்லை. இதிலிருந்து வெளியே எடுக்கத்தக்கப் படிமம் என்பது ‘உடல் நினைவில் காடுள்ள மிருகம்’ என்னும் கூற்று. ஆனால் அது நேரடியாகவே மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் புகழ்பெற்ற கவிதையின் முதல்வரி. அந்த வரி நேரடியாக சொல்லப்படுகிறது. அதுவே ஒரு காட்சிப்படிமமாக திரும்ப மாற்றப்பட்டிருந்தால் நாவலுக்குள் உயிரூட்டத்துடன் அமைந்திருக்கக்கூடும்.
உதாரணமாகச் சுட்டப்படவேண்டியது தாராசங்கர் பானர்ஜியின் கதை ஒன்றில் குற்றப்பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து ஒருவரால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படும் இளைஞனுக்குள் அவன் இயல்பான வன்முறை வெளிப்படுவது அங்கே குட்டியாக இருக்கையிலேயே எடுத்துவளர்க்கப்படும் நரி நாய்க்குட்டியாக இருந்து மெல்லமெல்ல நரியாக மாறும் காட்சியினூடாக காட்டப்படுகிறது. அதன் அனைத்துப் பழக்கங்களையும் அன்பையும் மீறி இரவு அதை கான்விலங்காக மாற்றுகிறது.
இவ்வியல்பால் ஆப்பிளுக்குமுன் நாவல் எழுதச் சாத்தியமான பெருநாவல் ஒன்று அவசரமான குறிப்புகளாக வெளிப்பட்டிருப்பதன் சித்திரத்தை அளிக்கிறது. எல்லா அத்தியாயங்களும் சிறியவை. அவற்றுக்குள் வாசகன் சென்று அமைந்து அதை ஒரு வாழ்வென எண்ணுவதற்குள் முடிந்துவிடுகின்றது. எல்லா அத்தியாயங்களிலும் ஒரு குறையுணர்வு உருவாவதால் அடுத்த அத்தியாயத்துக்கு வாசகன் செல்கிறான். அதன் விளைவாக ஒரே மூச்சில் வாசிக்கத்தக்க நூலாக உள்ளது
ஒரேமூச்சில் வாசிக்கத்தக்கது, வாசிக்கவேண்டியது சிறுகதையும் குறுநாவல்களுமே. நாவல்கள் அவ்வாறு வாசிக்கப்படுகையில் பக்கவாட்டுவிரிவுகள் இல்லாமலாகின்றன. ஒற்றைநேர்கோடென வாசகனின் கவனம் முடிவைநோக்கிச் செல்கிறது. உண்மையில் ஒரு நாவல் வாசகனுக்கு அளிக்கும் தடைதான் அதை அவன் தன் அறிவை, நுண்ணுணர்வை கொண்டு உந்தி உடைத்து முன்செல்லவைக்கிறது. அது செயற்கையாக மொழியாலோ வடிவாலோ உருவாக்கப்பட்ட தடையாக இருக்கக்கூடாது. உணர்வுகளாலும் சிந்தனையாலும் உருவாகும் தடையாக இருக்கவேண்டும். நாவலின் வடிவம் அதுவே.
சிறிய நாவல்கள் மிகச்சிறிய அத்தியாயங்களுடன் அமைவதுண்டு. நவீனத்துவ நாவல்களின் யுகத்தில் அத்தகைய ஆக்கங்கள் பல வந்தன. உதாரணம் கிழவனும் கடலும் [ஹெமிங்வே] சித்தார்த்தார் [ஹெர்மான் ஹெஸ்] அன்னியன் [அல்பேர் காம்யூ] .ஆனால் நவீனத்துவநாவல்கள் இரண்டு வகைகளில் தங்கள் சுருங்கியவடிவை நியாயப்படுத்திக்கொண்டன. அவை அடர்த்தியான, பாவியல்புகூடிய புனைவுமொழியினூடாகவும் அதிலுருவாகும் நவீனக் கவித்துவம் வழியாகவும் நீளத்தைச் செறிவாக ஆக்கிக் கொண்டன. அல்லது உணர்வுவெளிப்பாடற்ற,நேரடியான, நெகிழ்வற்ற மொழியின் வழியாகச் சுருக்கத்தை அடைந்தன. அந்நிலையில் கூறுபொருளும் ஆசிரியனின் கோணமும் மட்டுமே எழுந்து வாசகன்முன் நின்றது, கூறல்முறை முற்றிலும் மறைந்தது.
ஆப்பிளுக்கு முன் நவீனத்துவநாவல் அல்ல.நவீனத்துவ நாவலில் உள்ள விலக்கமும், உணர்ச்சிகலவாமையும், தர்க்கத்தன்மையும் இதிலில்லை. நவீனத்துவத்திற்குப் பிந்தைய புனைவெழுத்தின் நெகிழ்வுத்தன்மையும் பலகுரல்தன்மையும் கொண்ட ஆக்கம் இது. ஆகவே அவ்வடிவம் கோரும் விரிவை அடையாமலேயே நின்றுவிட்டதாகவே இந்நாவலை எண்ணவேண்டியிருக்கிறது.
நவீனத்துவநாவல்கள் எவ்வகையில் தங்கள் சுருக்கவடிவை அடைந்தன என்று நோக்குவது உகந்தது. அவை முதன்மையாக வரலாற்றை விலக்கின. ஒவ்வொரு வாழ்க்கைத்துளிக்கும் பின்புலமாக விரிந்து செல்லும் காலப்பின்னணியை தவிர்த்தன. நிகழ்காலத்தில், சொல்லப்பட்ட கதைமாந்தருக்குள் வைத்து மட்டும் தங்கள் நோக்கை முன்வைத்தன. உதாரணமாக காம்யூவின் அன்னியன் நாவல் எந்த வரலாற்றுப்பின்னணியில் நிகழ்கிறது? அல்ஜீரியனை மெர்சோ கொலைசெய்வதற்குப்பின்னால் அன்றைய பிரான்ஸின் இனப்பாகுபாடு சார்ந்த நோக்கு இருந்ததா? அதன் காலனியாதிக்கப் பின்புலம் அதில் பங்கு வகித்ததா?
அத்தகைய கேள்விகளுக்கு அந்நாவலில் இடமில்லை. அது மெர்சோவின் இருத்தலியல் சிக்கலை மட்டுமே பேசியது. அது அவன் தன்னுள் ‘ஒரு மனிதனாக’ உணரும் தத்துவக்கேள்வி மட்டுமே. அந்த வரலாற்றுமறுப்பின் உள்ளீடின்மையை அப்போதே இடதுசாரிகள் சுட்டிக்காட்டினர். பின்னர் வேறுகோணத்தில் அதை பின்நவீனத்துவர் விரிவாக முன்வைத்தனர்.
இரண்டாவதாக, நவீனத்துவயுக நாவல்கள் ஆளுமைகளுக்கிடையேயான மோதல்களைத் தவிர்த்தன. அவற்றை மிகச்சிறிய உரசல்களாக மட்டுமே முன்வைத்தன. இறுதியாக, அவை மானுட அகத்தை தெளிவாக வரையறுக்கப்பட்ட அமைப்பாக முன்வைத்தன. ஆகவே எண்ணங்களும் எதிர்வினைகளும் திட்டவட்டமானவையாக, சுருக்கமானவையாக இருந்தன. மானுட உள்ளம் கணந்தோறும் உருமாறுவதை, வகைவகையான பாவனைகளினூடாக தன் ஆளுமையை புனைந்துகொண்டே செல்வதை நவீனத்துவத்தைக் கடந்துவந்த நாவல்களே சென்றடைந்தன. மெர்ஸோ உணரும் தன்னிலை எவ்வளவு உறுதியானது என்று நோக்குக. அது புனைவல்ல, அவன் ஆழம் என்றே ஆசிரியரும் நினைக்கிறார். எல்லா ஆழங்களும் புனைவுகளே என இன்றைய ஆசிரியன் எண்ணக்கூடும்.
இக்காரணத்தால்தான் இன்றைய நாவல்களுக்கு நீள்சித்தரிப்புகள் தேவையாகின்றன. சரவணக் கார்த்திகேயனின் இந்நாவலையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்நாவலில் அவர் பேசியிருக்கும் காந்தியின் பாலியல்சோதனை என்பது அன்றைய சுதந்திரப்போராட்ட இலட்சியவாதத்தின் பின்னணியில் என்ன பொருள்கொள்கிறது? ஒருவகையில் அது மொத்தச் சுதந்திரப்போராட்ட உளநிலைக்கும் நேர் எதிரான ஒன்று அல்லவா?
இன்னும் ஒரு கோணத்தில் நோக்கினால் அந்தச்சோதனைகள் வெளியே தெரிந்தபோது உருவாகும் அதிர்ச்சியும் பரபரப்பும்தான் இந்தியாவுக்கு அன்னியமானது. எல்லாவகையான ஆன்மிகச்சோதனைகளையும் ஏதோ ஒருவகையில் அங்கீகரிக்கும் தாந்த்ரீகப் பாரம்பரியம் கொண்டதேசத்தில் படித்த நடுத்தர வர்க்கத்திடம் நூறாண்டுகளுக்குள் உருவான விக்டோரிய ஒழுக்கவியல்தான் அந்த அதிர்ச்சியை உருவாக்கியது
அன்றைய இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது இரண்டு கருத்தியல்களின் முயக்கத்தால் உருவானது. ஒன்று, இந்துமதமறுமலர்ச்சியிலிருந்து உருவான இந்திய அரசியல்தேசிய உருவகம். இங்கிருந்த பண்பாட்டுத்தேசம் ஒன்றை அரசியல் தேசமாக உருமாற்றம் செய்துகொள்ளும் பரிணாமம் அது. தயானந்தசரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் என எழுந்து வந்த ஒரு பண்பாட்டு அலை. இன்னொன்று,ஐரோப்பிய சிந்தனைகளின் ஊடுருவலால் உருவான பண்பாட்டு அலை. அது ஆங்கிலக்கல்வி வழியாக இங்கே வந்தது.
இந்த இரண்டாவது அலை இரண்டு உட்சரடுகளால் ஆனது. முதல் ஐரோப்பா அறிவியல்நோக்கு, பெருந்தொழில், நுகர்வோர் பண்பாடு, தாராளவாதக் கருத்துக்கள் ஆகியவற்றால் ஆனது. இன்னொரு ஐரோப்பா அறிவியலுக்கு மாற்றான சிந்தனைகள், தனிமனித ஆன்மிகம் ஆகியவற்றால் ஆனது. ஒன்று, வால்டேரின் ஐரோப்பா. இன்னொன்று தோரோவின் ஐரோப்பா. வால்டேரின் ஐரோப்பாவின் வாரிசுகள் நேருவும் அம்பேத்கரும். தோரோவின் ஐரோப்பாவின் வாரிசு காந்தி.
மெல்லமெல்ல காந்தி இந்துமறுமலர்ச்சிக்காலத்தின் மதிப்பீடுகளையும் உள்வாங்கிக்கொண்டார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் இரு பண்பாட்டுச்சரடுகளையும் இணைப்பவராக ஆனார். அதுவே அவரை பிறரிலிருந்து மேலே நிறுத்தியது. அவர் ‘மகாத்மா’ ஆக ஆனது அவ்வாறுதான். அவர் தேசியத்தலைவர்கள் எவருக்கும் இல்லாத மக்கள்செல்வாக்கை அதனூடாகவே அடைந்தார். நவீனக்கல்வி பெற்று ஐரோப்பியத் தாராளவாதத்தையும் விக்டோரிய ஒழுக்கவிய்லையும் கற்றுக்கொண்ட தேசியத்தலைவர்களால் புரிந்துகொள்ள முடியாதவராகவும் ஆனார்.
இச்சூழலில் காந்தியின் பாலியல்சோதனைகள் என்னபொருள் கொள்கின்றன? இது மேலே சொன்ன மூன்று பண்பாட்டுச்சரடுகளில் உருவாக்கும் அதிர்வு என்ன? இன்றையநாவல் இக்கருவை எழுதமுயல்கையில் காந்தியை அந்த வரலாற்றுப்புள்ளியில்தான் கொண்டு சென்று நிறுத்தும். அந்த சூழலைக் கட்டமைக்கும் தகவல்விரிவை உருவாக்கிக்கொள்ளும்.
பிறிதொரு கோணத்திலும் வரலாற்று அணுகுமுறைக்கு இடமுள்ளது. இந்தியப்பண்பாட்டு ஒழுக்கின் இரண்டு சரடுகள் பக்திமரபும், தாந்த்ரிக மரபும். தன்னை இறைவனுக்கு, அல்லது இறைநிகரான பெருஞ்செயல்களுக்கு முற்றாக அர்ப்பணிப்பது, அதன்பொருட்டு தன்னை கரைத்தழிப்பது பக்திமரபு. காந்தியின் பொதுமுகம் அதுவே. தன்னை வைஷ்ணவப் பக்திமரபின் ஒரு நீட்சியாகவே அவர் முன்வைத்தார். பஜனைகள், கீதைபாராயணம் அனைத்தும் அதன் கூறுகள்
ஆனால் அவருடைய பாலியல்சோதனைகள் தாந்த்ரீகமரபுக்குள் இருந்து கிளைத்தவை. அதற்கு அவருக்கு சில முன்னுதாரணங்களும் ஆசிரியர்களும் இருந்தனர். அவற்றைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். தாந்த்ரீகச் செயல்பாடுகளை பக்தியுடன் இணைக்க காந்தி முயன்றார். அவற்றிலிருந்த ரகசியத்தன்மையை அதன்பொருட்டு களைந்தார். அதனூடாக பெரும் கொந்தளிப்பை உருவாக்கினார். இந்த இருநிலையின் கொந்தளிப்பே அவருடைய இறுதிக்காலக் குழப்பங்கள்.
அவருடைய அந்த இருநிலை அவருடனிருந்த பெண்களை எப்படிப் பாதித்தது? அவர்கள் அதை எப்படிப் புரிந்துகொண்டார்கள்? அவர்கள் வளர்ந்து வந்த சூழலை நோக்குகையில் மீண்டுமொரு வரலாற்றுப்பின்புலம் தேவையாகிறது. நம் குடும்ப அமைப்புக்குள் நல்ல மனைவியாக ஆகும்பொருட்டு வளர்க்கப்படும் ஒரு பெண் இதை எதிர்கொள்ளும்போது என்னென்ன உளவியல்கள் வழியாகக் கடந்துசெல்லவேண்டியிருந்தது?
வரலாறற்ற தன்மையின் விளைவான சுருக்கமே இந்நாவலின் முக்கியமான குறைபாடு என்று சொல்வேன். இது காந்திக்கும் அவருக்கு அணுக்கமாக இருந்த பெண்களுக்கும் அவருடைய சோதனைகளை அறியநேர்ந்த சிலருக்குமான உளமோதல்கள், உணர்வுகளாக மட்டுமே நின்றுவிட்டிருக்கிறது.
இந்நாவலின் அடுத்த குறைபாடு இதன் நடை. வணிக எழுத்திலிருந்து பெறப்பட்டது. சுஜாதாவும் வைரமுத்துவும் ரகசியமாக மின்னிமின்னிச் செல்லும் நடை இத்தகைய நாவலை மிகவும் அயலானதாக ஆக்குகிறது. உதாரணமாக ‘அன்று கட்டிலில் எட்டு கால்களும் சேராமலேயே இருந்தன’ என்பதுபோன்ற ஒரு வரி சட்டென்று நாவல் உருவாக்கும் அனைத்திலிருந்தும் உதைத்து வெளியே தள்ளுகிறது. இந்த வரியை ‘நயம்’ என நினைக்கும் உள்ளம் இலக்கியத்தின் உலகு சார்ந்தது அல்ல. இது கவியரங்க ரசனை, தமிழக மேடைப்பேச்சு ரசனை.
ஒன்றை சமத்காரமாகச் சொல்வது அதன் மதிப்பை கீழிறக்கும். அதைச் சொல்பவன் திரைவிலக்கி முன்னால் வந்து நிற்பதுபோன்றது அது. இலக்கியப்படைப்பில் தவிர்க்கப்படவேண்டியது. சரவணக் கார்த்திகேயனின் முந்தைய கதைகளிலும் இந்தக்குறையை வலுவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதைக் களைவது எளிதும் அல்ல. ஏனென்றால் இது ஓர் அகநிலை மொழியாக வெளிப்படுவது. முயன்று, தன்னைத்தானே உற்றுநோக்கி, நடையிலிருந்து இக்கூறுகளை ஈவிரக்கமில்லாமல் களைந்து மட்டுமே இலக்கியநடை நோக்கி வரமுடியும். சரவணக் கார்த்திகேயன் ஓர் இலக்கியப் படைப்பாளிக்குரிய நடையை நோக்கி வர கடும் முயற்சி எடுத்தாகவேண்டும்.
இந்நாவலுக்குப் பொருத்தமான நடைகள் இரண்டுதான். ஒன்று, உணர்ச்சிகலவாத தகவல்களால் ஆன இதழியல்நடை. அது இக்கதையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டும்.ஆனால் சரவணக் கார்த்திகேயனின் நாவல் புறவயத்தகவல்களை குறைத்து கதைமாந்தரை மையமாக்குகிறது. அந்நிலையில் அவர்களின் உணர்ச்சிகளை நேரடியாக, நம்பகமாக, அளவுக்குட்பட்டு வெளிப்படுத்தும் நடை பொருத்தமானது. அதில் சொல்ஜாலங்களோ சமத்காரங்களோ பெரிய திரிபாகத் தெரியும்.
இந்நாவல் இந்த முக்கியமான எல்லைகளையும் குறைபாடுகளையும் கடந்து முக்கியமானதாக ஆவது முதலில்குறிப்பிட்டதுபோல வரலாற்றையும் வரலாற்றுமாந்தரையும் சூழலில் புழங்கும் இரு துருவநிலைகளுக்கும் சென்று நின்று நோக்காமல் அறியும்தன்னிலையாக நின்றிருக்கும் ஆசிரியன் நோக்கில் உண்மையுடன், நேர்மையுடன் அணுகியிருப்பதனால்தான். ஆகவே இதன் எளிய, சிறிய சித்தரிப்பு வளையத்திற்குள்ளாகவே வாசகன் சென்றடையும் நுட்பங்களும் அரிய உணர்ச்சித்தருணங்களும் வாழ்க்கைக் கண்டடைதல்களும் சில உள்ளன.
இந்நாவலின் கட்டமைப்பு காந்தியின் பாலியல்சோதனைகளை அப்பெண்கள் எவ்வாறு பார்த்தனர் என்பதை ஒட்டியே உள்ளது.சுசீலா நய்யார் போன்றவர்கள் அதை காந்தியுடனான அணுக்கத்திற்கான வழியாக பார்க்கிறார்கள். காந்தி ஓர் அதிகாரமையம். நேரடியான உலகியல் அதிகாரம் மட்டுமாக அதை எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. ஆன்மிகமான அதிகாரமும்கூட. அது எளிதானது அல்ல. இந்தியாவில் முற்றாகவே பாலியலுக்கு அப்பாலிருந்த கிறுக்கர்களும் தனியர்களுமான ஆன்மீக சாதகர்களுக்குக்கூட இதேபோல எச்சமின்றி அர்ப்பணித்துக்கொள்ளும் மாணவிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
காந்தியின் அதிகாரம் பெண்களை ஈர்க்கிறது. தங்களை முக்கியமாக எண்ணிக்கொள்ள, தங்கள் வரலாற்றுப்பங்களிப்பை கற்பனைசெய்துகொள்ள அது உதவுகிறது. ஆகவே அவர்களுக்குள் நுட்பமான உளவியல்போட்டிகள் உள்ளன. அவர்களில் மனு அன்றி எவருக்கும் அதில் முழுதுளத்தாலும் ஈடுபட இயலவில்லை. தவிர்த்து விலகவும் முடியவில்லை. அவற்றை குறைவான தருணங்கள் வழியாக கூர்மையாகவே சரவணக்கார்த்திகேயன் விவரிக்கிறார்.
இந்த அதிகாரப் போட்டியில் ஒருவகையில் கஸ்தூர்பாவும் இருக்கிறார். அவருக்கு காந்தியுடன் எந்தப்பெண் எவ்வகையில் அணுகக்கூடும் எனத் தெரிந்திருக்கிறது. அதற்கு தடையமைக்கவும், காய்கள்நீக்கவும் அவர் முயல்கிறார். அனைத்துப் பெண்களும் வெவ்வேறுவகையில் அந்த ஆடலின் ஏதேனும் ஒருகட்டத்தில்தான் உள்ளனர் என்று நாவல் காட்டுகிறது
அந்த ஆடலுக்குள் எவ்வகையிலும் ஈடுபடாதவளாக இருக்கிறாள் மனு. இந்நாவலின் அழகிய குணச்சித்திரமே மனுதான். இளமைக்குரிய கள்ளமின்மை என அதைச் சொல்லலாம். அல்லது கி.ராஜநாராயணனின் சொற்களில் சொன்னால் ‘கன்னிமை’. அதன் ஆன்மிகமான வல்லமையால் அவள் பிறர் எவரும் புரிந்துகொள்ளாத காந்தியைக் கண்டடைகிறாள். காந்தி எனும் அன்னையை. இந்த அம்சமே இந்நாவலை ஒரு கலைப்படைப்பாகிறது. எளிய அரசியல்படைப்பாகச் சிறுத்துவிடக்கூடிய வாய்ப்புள்ள ஒரு கரு இங்கே கலையால் மட்டுமே கூர்மையாகச் சொல்லப்பட இயல்வதான ஒரு நுண்முடிச்சாக ஆகிவிடுகிறது.
மனு காந்தியுடனான சோதனைகளை ரகசியமாக நினைக்கவில்லை. அவற்றை காந்தியே கேட்டுக்கொண்டதற்கேற்ப தன் பெற்றோருக்குத் தெரிவிக்கிறார். முறையாகப் பதிவுசெய்கிறாள். தன் உளக்குழப்பங்களையும் பாலியல்விழைவுகளையும்கூட காந்தியிடம் பகிர்ந்துகொள்கிறாள். இளமையிலேயெ அன்னையை இழந்த மனு மெல்ல மெல்ல காந்தியில் ஒரு ஆசிரியனையும், ஆன்மிகவழிகாட்டியையும், தோழனையும் இறுதியாக அன்னையையும் கண்டுகொள்கிறாள்.
மனுவில் தொடங்கி மனுவில் முடியும் இந்நாவல் காந்தி அவருடைய பாலியல்சோதனைகளில் முயன்றதென்ன என்பதை கண்டடைகிறது. பாலியலினூடாக காந்தி தன்னுடலில் உறைந்த ஆணை எழுப்பவில்லை, அவனை அணையச்செய்கிறார். அடக்கி ஒடுக்கவும் முயலவில்லை, அவனை பெண்ணாக்கிக்கொள்ள முயல்கிறார். அன்னையென்றாவதன் கனிவினூடாக தான் ஆன்மிகமான முதிர்ச்சியை அடையமுடியும் என்றும் அதனூடாக ஆற்றல்பெற்று தன் இலக்குகளை நோக்கிச் செல்லமுடியும் என்றும் நம்புகிறார்
அந்நம்பிக்கை எத்தகையது, அதை அவர் முறையாக அதன் மரபிலிருந்து கற்றுக்கொண்டாரா அல்லது அவருடைய தன்போக்கிலான உளமயக்கங்களா அவை என்பதெல்லாம் வேறுவினாக்கள். ஆனால் நம் விக்டோரிய அறவியலால் நாம் போகிறபோக்கில் மதிப்பிட்டு கருத்துசொல்லிக் கடந்துசெல்லும் தன்மைகொண்டவை அல்ல அவை. ஒரு விந்தையான, வேறுபட்ட பேருள்ளத்தின் அலைக்கழிப்புகள். தன்னை அழித்து பிறிதொன்றாக அதுகொள்ளும் முயற்சியின் படிநிலைகள். மேதைகளுக்கும் கிறுக்கர்களுக்குமிடையே எப்போதுமே வேறுபாடு மிகநுட்பமானதே. பிறிதொரு மேதையால் சென்று தொடத்தக்க அந்த நுண்ணிய தளத்தை மனு தன் கள்ளமற்ற குழந்தைத் தன்மையால் எளிதாகச் சென்று தொட்டுவிடுவதை இந்நாவல் காட்டுகிறது
காந்தியையும் மனுவையும் கறாரான உலகியல்தன்மையுடன் மதிப்பிடும் ஆளுமையாக இந்நாவலில் தக்கர்பாபா வருகிறார். உடலென்று வந்திருப்பது உலகையும் உயிர்க்குலத்தையும் படைத்து நிலைநிறுத்தும் விசைகளின் தொகுதி என்றும் மானுடன் அதன் விழைவுகளுக்கும் இடர்களுக்கும் கட்டுப்பட்டவனே என்றும் அறிந்தவர். காந்தியும் மனுவும் தனித்து நடந்துசென்றுகொண்டிருக்கும் அந்தப்பாதை அவர்களின் பொதுவான உளமயக்காக இருக்கக்கூடும் என்றும் அதனூடாக அவர்கள் ஒருபோதும் விரும்பமுடியாத இடங்களுக்குச் சென்றுவிடக்கூடும் என்றும் உணர்ந்தவர்.
இந்நாவலில் உள்ள முரணியக்கம் என்பது தக்கர்பாபா ஒருபக்கமும் மனுவும் காந்தியும் மறுபக்கமுமாக நின்று நிகழ்த்துவதே. அந்த உரையாடல்களினூடாக இந்நாவல் இதன் புனைவுத்தளத்திலிருந்து தத்துவார்த்தமாக மேலெழுகிறது. முன்னரே விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுபோல இதுவே ஆப்பிளுக்குமுன் நாவலின் சாரம்
காமத்தை எதிர்தெய்வத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு முந்தைய ஆதமாகவும் ஏவாளாகவும் ஆகிவிடமுடியுமா என முயன்ற இருவரின் கதை இது. காமமற்ற நிலையை புனிதமாக்குவதென்பது இந்திய மரபில் உள்ளது அல்ல, அது செமிட்டிக் மரபிலிருந்து மதங்களுக்குள் சென்றது. காந்தி மனுவை ‘தூய்மையானவள்’ என்று பார்ப்பது இந்தியப் புராணங்களின் உளநிலையே அல்ல.அவர் செய்துகொண்ட அந்த சோதனைகளுக்கும் இந்திய மதமரபில் இடமில்லை. மனு அவருக்கு தாந்தேயின் பியாட்ரீஸ் போன்ற தேவதை. இந்திய தாந்த்ரிக மரபின் சில சோதனைகளை கிறித்தவ உருவகங்களுடனும் இணைத்து தனக்கான பயிற்சிகளை தானே உருவாக்கிக்கொண்டார். ஆகவே ஒரு வகையில் ஆப்பிளுக்கு முன் என்னும் செமிட்டிக் மதக் குறியீடு இந்நாவலுக்குப் பொருத்தமானதாகவே உள்ளது.
சிக்கலான இந்த பேசுபொருளை வாசகனைச் சீண்டும் நோக்கமின்றி, எந்நிலையிலும் எளிமைப்படுத்தாமல், அதேசமயம் வழக்கமான புகழ்பாடல்களை நோக்கியும் செல்லாமல் எழுதமுடிந்திருப்பதனால் இது தமிழில் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக ஆகிறது