மாந்தளிரே -கடிதங்கள்

shyam-philips-3

 

மாந்தளிரே!

அன்புள்ள ஜெ

 

நான் உங்களுடைய மாந்தளிரே என்ற கட்டுரையை வாசித்ததும் நினைத்துக்கொண்டது இது. இந்தப்படங்களை இப்போது பார்த்தால் தாளமுடியவில்லை. அவற்றின் காட்சியமைப்புகள் பழசாகிவிட்டன என்பது ஒரு காரணம். உண்மையில் நான் சின்னவயசில் வியந்து பார்த்த ஸ்பார்டகஸ், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களே இப்போது சின்னப்பிள்ளைவிளையாட்டுமாதிரி தெரிகின்றன. ஆனால் பாடல்கள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன

 

 

ஏன்? சினிமாவும் கலைதானே? சினிமா ஃபிலிமில் உள்ளது. ஃபிலிம் பழசாகிவிடுகிறது. ஆனால் அதுமட்டும் காரணம் இல்லை. சினிமாவில் கற்பனைக்கு கம்மியான இடம்தான். ஆனால் இசை முழுக்கமுழுக்க நம் கற்பனையில் இருக்கிறது. இசைகேட்டு நாம் அடையும் உணர்வுகள் நமக்கு மட்டுமே உள்ளவை ஆகவே மிகமிகப் பிரைவேட் ஆனவை. அவை நம்மைப்பொறுத்தவரை பெரிய பொக்கிஷம். நாமே இசை வழியாக நம்முடைய உலகத்தை உருவாக்கிக் கொள்கிறோம்

 

சமீபத்தில்  வேர் ஈகிள்ஸ் டேர் என்ற சினிமாவைப்பார்த்தேன். ஒருமாசம் முன்னாடி நாவலை வாசித்தேன். நாவல் அற்புதமாக இருந்தது. சினிமா சகிக்கமுடியவில்லை. நாவலில் இருந்து நான் உருவாக்கிக்கொண்ட உலகம் எனக்கே எனக்காக பிரைவேட்டான உலகம் என்பதே காரணம்

 

சந்திரகுமார்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

தங்களின் மாந்தளிரே கட்டுரையை வாசித்தேன். எவ்வளவு வாஸ்தவமான வார்த்தைகள். சில நேரங்களில் நானும் யோசிப்பதுண்டு. அயல் மொழி திரைப்படங்களில் இல்லாத முக்கியமான, அதே நேரத்தில் அவர்கள் தவற விட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான ஒன்று – திரையிசை. இசையால் மட்டுமே – உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல- நமது பால்ய பருவத்தின், இளமைப் பருவத்தின் மனிதர்களை, நிலங்களை, நிகழ்வுகளை கடத்தி கொண்டு வர முடிகிறது.  எண்பதுகளின் ஆரம்பத்தில் பிறந்த எனக்கெல்லாம் இளையராஜாவின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் எனது  பள்ளிப் பருவமும், அதனை சுற்றிய மனிதர்களும் தெளிவாக கண் முன்னே வந்து நிற்பார்கள். இன்னும் சொல்லப்போனால், பாடல்கள் மூலமே எனது கடந்த காலத்தை நான் வாழ்கிறேன். ஒவ்வொரு பாடலும் ஏதோவொரு நிகழ்வோடு தொடர்புபடுத்தி என் நினைவில் வருகிறது. உங்களது கட்டுரையும் அந்த இணைப்புகளும் அதனை சாஸ்வதப்படுத்துகின்றன.

 

 

நன்றி

சங்கர்

 

 

அன்புள்ள ஜெ

 

ஷியாம் பேட்டியை உங்கள் இணைப்பு வழியாகப் பார்த்தேன். அதிலிருக்கும் முதிர்ந்த மனிதருக்கும் அந்தப்பாடல்களில் உள்ள  ரொமாண்டிசிசத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவர் சாதாரணமாக டெக்னிக்கைப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் காத்திரிப்பூ பாடலில்தான் எவ்வளவு நுட்பமான ஏக்கம் உள்ளது. அந்த மெட்டு இவர் மனதில் இருந்துதானா வந்தது என்ற சந்தேகமே வந்துவிட்டது

 

ஒவ்வொருகாலகட்டத்தையும் இசை ஒருவகை அமைப்பாகவே விளங்குகிறது. ஷியாமின் இசையும் அன்றைய ராஜாவின் இசையும் ஆர்டி பர்மன் இசையும் ஒட்டுமொத்தமாக ஒரேவகையான ஓசையை கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. அதாவது ஒருகாலகட்டத்தில் இசைக்கருவிகள் ரெக்கார்டிங் ஆகியவற்றால் மட்டுமல்ல வேறுபலவற்றாலும் ஒரு வகையான ஓசை வந்துவிடுகிறது. அதுதான் நமக்கு நஸ்டால்ஜியாவாக ஆகிறது

 

ரவிச்சந்தர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30
அடுத்த கட்டுரைபொருளியல் கட்டுரைகள் -கடிதம்