அன்புள்ள ஜெயமோகனுக்கு
வணக்கம் ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்கலாம் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.
ஓரினச்சேர்க்கை மாதிரியான சமூகத்தால் அருவருப்பாக பார்க்கப்பட்டதையே எழுதும் நீங்கள் லீவிங் டுகதர் அதாவது திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்தல் என்பதை பற்றி ஏதும் எழுதிய மாதிரி தெரியவில்லையே ஏன்?( நான் 2008 இருந்து இந்த தளத்தை படித்து வருகிறேன்) நீங்கள் உடனடி அரசியல் நிகழ்வுகளுக்கு பதில் சொல்வதில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் இது சமீப காலமாக இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விசயமாக மாறி வருகிறதாக நான் நினைக்கிறேன். (சமீபத்தில் டீவி நடிகை விவகாரம்)
நீங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்கும் ஒழுக்கவாதி என்பதால் வேண்டுமென்றே இதை பற்றி எழுதுவதை தவிர்கிறீர்களா? மேலை நாடுகளில் இது அதிக அளவில் இருப்பதாக நினைக்கிறேன். நம் நாட்டிலும் நகரங்களில் சிறு அளவில் வளர்ந்து வருவதாக இணைய செய்திகள் வழியாக ஊகிக்கிறேன் இது சரியா?
வெறும் காம இச்சை மட்டும் தான் லிவிங் டுகதருக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறேன். அதுக்கு வேறு எத்தனையோ வழி இருக்கிறது. இந்த லிவீங் டுகதரை எதிர்ப்பவர்கள் வாழும் வாழ்க்கை எப்படிபட்டது? ஜாதி, மதம், பணம் மட்டுமே பார்த்து பெற்றோர் பார்ந்த கல்யாணம் செய்து அல்லது பணம், அழகு மட்டுமே பார்த்து காதல் திருமணம் செய்து காமத்தில் ஈடுபடுவர்களை என்னவென்று சொல்வது? மேலை நாடுகளில் பிரபலங்களில் பலர் லிவிங் டுகதரில் இருந்து ஒன்று அல்லது இரண்டு குழந்தை பிறந்த பிறகு கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இதை அங்குள்ள சமூகம் அங்கீகரித்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இங்கிலாந்து போல சில நாடுகளில் சட்டப்பூர்வ அங்கிகாரம் கூட தந்திருப்பதாக இணையத்தில் படித்த நியாபகம். கலாச்சாரம், பண்பாடு இந்தியாவுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் அது இருப்பதாகவே நினைக்கிறேன்.
நான் புரிந்து கொண்டது என்னவென்றால் சிந்தனை பின்புலம், ரசனை, கேரக்டர் எதுவுமே தெரியாமல் ஒருவரை திருமணம் செய்வது எப்படி என்ற தயக்கத்தில் இருந்து தான் இது தோன்றியதாக நினைக்கிறேன். பெற்றோர் பார்த்து நிச்சியக்கும் திருமணம் மட்டும் இதற்கு காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. காதல் திருமணமும் இதற்கு மிக முக்கிய காரணம் தான்.
ஏன் என்றால் காதலில் துணையை எளிதாக ஏமாற்றி விடலாம். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ நேரில் பார்க்கும் போது மட்டும் நமது உண்மையான முகத்தை மறைத்து வேறு மாதிரியாக நடித்து விடலாம். காதலிக்கும் போது நமது பாசிட்டீவை மட்டும் காட்டி ஏமாற்றி விடலாம். ஆனால் திருமணத்துக்கு பிறகு நமது நெகட்டீவ் மட்டும் தான் நமது துணைக்கு பெரிதாக தெரியும். ஆனால் லிவிங் டுகதரில் இருபத்து நான்கு மணிநேரமும் துணையின் கூடவே சில மாதங்களோ அல்லது வருடங்களோ இருக்கும் போது ஏமாற்ற முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் நமது உண்மையான முகம் வெளிப்பட்டு விடும்.
அதுவும் இல்லாமல் யாரும் எடுத்த எடுப்பிலேயே லீவிங் டுகதர் போய்விட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எல்லா காதலரையும் போல சில மாதங்களோ அல்லது வருடங்களோ காதல் செய்து திருமணத்துக்கு முன்பாக என்னோட துணை இத்தனை நாள் என்னிடம் காட்டிய முகம் உண்மைதானா? எனக்கும் அவருக்கும் ஒத்து போகுமா என்று இரண்டு பேர் வாழ்ந்து பார்த்தால் என்ன தவறு? (கள எதார்த்தம் எனக்கு தெரியாது. நான் இருப்பது மதுரை பக்கம் ஒரு சிற்றூர்)
கலாச்சாரம் கெட்டுவிடும் என்று கலாச்சர காவலர்கள் சொல்ல கூடும். பெற்றோர் பார்த்த துணையை பற்றி எதுவுமே தெரியாமலோ அல்லது காதல் மூலம் அரைகுறையாக தெரிந்து கொண்டோ திருமணம் செய்து திருமணத்துக்கு பிறகு துணைக்கு உண்மையாக இல்லாமல் கள்ள காதலில் ஈடுபட்டால் கலாச்சாரம் கெடாதா?
நான் பார்த்த வரை என்னை சுற்றி உள்ள சமுதாயத்தில் உள்ள தம்பதிகளில் நூற்றுக்கு தொண்ணூற்று ஜந்து சதவிகிதம் பேர் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை என்றே நினைக்கிறேன். குழந்தைகளுக்காக வேறு வழி இல்லாமல் சகித்து கொண்டு தங்கள் வாழ்வை தியாகம் தான் செய்கிறார்கள். நாளை இவர்களின் பிள்ளைகளும் அவர்களின் குழந்தைக்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்யவே வாய்ப்பு அதிகம். ஆக மொத்தம் நாடு முழுக்க தியாகிகள் தான் நிரம்பி வழிகிறார்கள். மிக பெரும்பான்மை மக்கள் இப்போது உள்ள திருமண அமைப்பில் மகிழ்ச்சியாக இருப்பது போல தெரியவில்லை.
என்னை பொறுத்தவரை தனிமனிதனுக்காக தான் கலாச்சாரம், மதம், ஒழுக்க நெறி அத்தனையும். ஆனால் இப்போ தலைகீழாக இருப்பதாக நினைக்கிறேன். கலாச்சாரம், மதம், ஒழுக்க நெறியின் பெயரால் தனிமனிதனின் மகிழ்ச்சி பாதிக்கப்படுகிறது. இதற்கு இந்த லிவிங் டுகதர் ஒரு தீர்வாக இருக்க வாய்ப்பு உள்ளதா? லிவிங் டுகதர்தான் முழு தீர்வு என்று நான் வாதிடவில்லை. இப்போது இருக்கும் திருமண அமைப்பை மேம்படுத்த இது உதவுமா? ஆக மொத்தம் ஒட்டு மொத்த குடும்ப அமைப்பையே இந்த லிவிங் டுகதர் கேள்விக்குறி ஆக்குகிறதா? இல்லை மேலை நாடுகளில் டைவர்ஸ் செய்தால் பெண்களுக்கு மிக அதிக அளவில் இழப்பீடு தர வேண்டி இருக்கும். அதனால் தான் அங்கு உள்ள ஆண்கள் திருமணத்துக்கு பயந்து மாற்று வழியாக லிவிங் டுகதரை தேர்ந்தெடுக்கிறார்களா? இது இந்தியாவில் வளர்ந்தால் சமூக சீர்கேடு தான் உண்டாகுமா?
“மனவுறவு மீறல் குற்றமா?” என்ற தங்களின் சமீபத்திய கட்டுரை எனக்கு பல தெளிவுகளை கொடுத்தது. ஓரினச்சேர்க்கையாளர் விசயத்தில் கூட பல வருடங்களுக்கு முன்பே தைரியமாக அவர்கள் தரப்பு நியாயத்தையும், அறிவியல் பூர்வமாக அவர்களை மற்ற நாடுகள் அங்கீகரித்தையும் எழுதியிருந்தீர்கள். உங்கள் எழுத்தை படித்த பிறகு தான் எனக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது இருந்த வெறுப்பு போனது. அதற்கு முன்னால் பாமர மக்களை போலவே ஓரினச்சேர்க்கையாளர்களை கேவலமாகவே பார்த்தேன். (இப்போதும் ஓரினச்சேர்க்கையை முழுமையாக ஏற்பதில் எனக்கு மாற்று கருத்து உண்டு. ஆனாலும் முன்பு போல் அசிங்கமாக பார்ப்பதில்லை)
கடைசியாக நான் கேட்க வருவது இதுதான். எந்த ஒரு விசயமும் எந்த ஒரு சமுகத்திலும் ஒரு நேர்மறை காரணம் இன்றி வளராது என்றே நான் நினைக்கிறேன். லிவிங் டுகதர் மேலை நாடுகளில் வளர்ந்து வருவது கண்கூடு. நாளை இங்கும் வளர வாய்ப்பு அதிகம் என்றே நினைக்கிறேன்.
லிவிங் டுகதரின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் என்ன? லிவிங் டுகதரை சட்டம் எந்த விதத்தில் அதை முறைப்படுத்த முடியும். இதில் சட்டத்தின் பங்கு என்ன? நம் நாட்டு கலாச்சாரத்தில் லிவிங் டுகதரில் இருப்பவர்கள் சந்திக்கும் சவால்களை பற்றி இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று அறிவுடைய உங்களை போன்றவர்களால் தான் விளக்க முடியும் என்று நினைக்கிறேன்.
அன்புள்ள
கார்த்திகேயன்.J
(உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பிள்ளைகள் இருப்பதால் இதை பற்றி எழுத நீங்கள் தயங்கலாம். அப்படி இருந்தால் பதில் எழுத வேண்டாம். ஏன்னா உங்க இடத்துல நான் இருந்தாலும் இந்த கேள்விக்கு பதில் எழுதுவேன்னா என்பது சந்தேகம் தான்)
அன்புள்ள கார்த்திகேயன்
நான் என் வீட்டு உணவுமேஜையில் பேசாத எதையும் எழுதுவதில்லை. என் பிள்ளைகள் இருவருமே இந்தத் தளத்தின் வாசகர்கள்தான்
சேர்ந்துவாழ்வது என்பது இங்கே எப்போதும் இருந்துகொண்டுதான் இருந்தது. சேத்துக்கிட்டது என்ற வார்த்தையே புழக்கத்தில் இருந்தது. அது ஏன் தவிர்க்கப்பட்டது என்றால் அதன் வழியாக உருவாகும் சட்டச்சிக்கல்காரணமாக. அந்தக்குழந்தைக்கு இயல்பான சட்டப்பாதுகாப்பு இல்லை. தந்தை அதன் பொறுப்பை ஏற்கவேண்டியது இல்லை. நடைமுறையில் குழந்தையின் பொறுப்பை முழுமையாகப் பெண் தலையில் கட்டிவிடுவதே சேர்ந்துவாழ்வது என்று இங்கே உள்ளது
ஆகவேதான் மணவுறவு கட்டாயம் என்னும் பேச்சு எழுந்தது. சேர்த்துக்கொள்வது சட்டபூர்வமானது அல்ல என்றாலும் குழந்தைக்கு குருதித்தந்தையின் சொத்தில் உரிமை உண்டு, பேணும்செலவு கோர உரிமை உண்டு என்னும் தீர்ப்புகள் வந்தன
அந்த வாழ்க்கைமுறை இன்று இன்னொருவகையில் வருகிறது, இளையோர் நடுவே. இங்கும் பொறுப்பேற்கத் தயங்குவதிலிருந்தே இது ஆரம்பிக்கிறது. ஒருவருக்கொருவர் பொறுப்பேற்காமலிருத்தல். ஒருவருக்கொருவர் சாராமலிருத்தல். ஐரோப்பாவில் இன்று மிகச்சாதாரணமாக உள்ளது இந்த உறவு. இது தனிமனிதச் சுதந்திரத்தை பேணுவதாக அமைகிறது. எவரும் எவரையும் கட்டுப்படுத்துவதில்லை. சட்டக்கட்டுப்பாடும் இல்லை
ஆனால் இதற்குத்தேவை சில உளநிலைகள். அவை ஐரோப்பாவில் உள்ளன. ஒன்று,பாலுறவை சாதாரணமாக எடுத்துக்கொள்வது. எவருடன் எவர் உறவுகொண்டாலும் ஒன்றுமில்லை என்னும் போக்கு. சேர்ந்துவாழும் ஆணோ பெண்ணோ இன்னொரு உறவை கொண்டிருந்தால் அதனால் உளப்பாதிப்படையாமலிருத்தல். அதை நம்பிக்கைத்துரோகம் என்றெல்லாம் எண்ணாமலிருத்தல். இரண்டு, உறவையே பெரிதாக எடுத்துக்கொள்ளாமலிருத்தல். எளிதாகப் பிரிதல். அதில் உளப்பாதிப்பு கொள்ளாமலிருத்தல்.
அதோடு ஒரு சமூகநிலையும் தேவை. ஆணோ பெண்ணோ எந்நிலையிலும் பொருளியல்சார்ந்தோ பிறவகையிலோ சாராமலிருத்தல்.சமூகரீதியாக எதையும் எதிர்பாராமலிருத்தல்
இந்தநிலை இந்தியாவில் இன்றில்லை. இன்றும் நாம் ஆண்பெண் ‘கற்புக்கு’ பெரிய இடம் அளிக்கிறோம். உணர்வுரீதியாகச் சார்ந்திருக்கிறோம். உடைமைநிலை கொண்டிருக்கிறோம். இந்த உணர்வுகள் எல்லாமே சேர்ந்திருத்தல் என்னும் நிலைக்கு முற்றிலும் எதிரானவை.
உதாரணமாக ஒருவன் ஒருத்தியுடன் சேர்ந்து வாழ்கிறான். ஆறுமாதம் கழித்து அவள் அவனிடம் நீ சரிப்படமாட்டாய் என்று சொல்லி சென்றுவிட்டால் அவன் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்துசெல்லவேண்டும். இல்லாவிட்டால் சேர்ந்துவாழ்தல் என்பதைபோல வதை வேறு இல்லை.
இந்தச்சோதனைகளைத் தனிவாழ்க்கையில் மேற்கொண்ட சிலரை எனக்குத்தெரியும். அத்தகைய சில உறவுகளில் இருந்த சுயநலமும் துரோகமும் ஈவிரக்கமற்ற கைவிடப்படலும் நினைக்கையில் நடுங்கச்செய்பவை. கணிசமானவர்களுக்கு அவ்வுறவு இன்னும் வதைமிக்கதாக இருந்தது. எக்கணமும் பிரிந்துவிடலாம் என ஓர் உறவை அமைத்துக்கொண்டாலே அந்த உறவில் எப்போதும் பிரிவுதான் பேசப்படும். பிரிந்துவிடுவார்கள் என்ற ஐயம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே அது ஜாக்ரதை உணர்வை உருவாக்கும். பிறர்மேல் ஐயத்தைப்பெருக்கும். மொத்த உறவும் அதனூடாகக் கசந்துபோகும். எப்போது வேண்டுமென்றாலும் அவ்வுறவு மெய்யாகவே பிரிவையும் சந்திக்கும்.
ஐரோப்பாவிலேயே கூட சேர்ந்துவாழும் வாழ்க்கையில் பாதிக்குமேல் திருமணம் செய்துகொள்கிறார்கள். மீறல், பிரிவு இரண்டும் அவர்களுக்கும் கடும் உளச்சிக்கலை அளிப்பவையாகவே உள்ளன. திருமண உறவில் என்னென்ன சிக்கல்கள் உள்ளனவோ எல்லாமே அந்த உறவிலும் உள்ளன. ஏனென்றால் திருமண உறவிலுள்ள சிக்கல்களில் பெரும்பகுதி அந்த உறவால் உருவானவை அல்ல, அவை ஆணுக்கும் பெண்ணுக்கும்நடுவே என்றுமுள்ள முடிவடையாத உறவுச்சிக்கல்கள்.சேர்ந்து வாழ்ந்து பழகி மணந்து பின்னர் உளம்கசந்து பிரிபவர்களும் ஏராளமானவர்கள். சொல்லப்போனால் சேர்ந்துவாழ்வது எவ்வகையிலும் மணவாழ்வை நீட்டிக்க வைப்பதில்லை.
மணவுறவின் வெற்றி என்பது ஓர் எல்லைவரை உகந்த மனிதரை தெரிவுசெய்வதில் உள்ளது. ஆனால் வாழ்க்கையை முடிந்தவரை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது அதன் அடுத்தபடி. மாற்றிக்கொள்ள இயலாதவர்களால் ஒருபோதும் வெற்றிபெற்ற வாழ்க்கையை அமைக்கமுடியாது. அந்த இலட்சிய துணையைத்தான் தெரிவுசெய்வேன் என எவரேனும் தேடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் வாழ்க்கைதான்.
மணவாழ்க்கை மட்டுமல்ல நட்புகளே கூட இந்நட்பு என்றென்று நீடிக்கும், எந்நிலையிலும் வளரும் என எண்ணிக்கொண்டாலொழிய அழமாக நீடிக்கமுடியாது. பிடித்தால் சேர்ந்திருப்போம், தேவையான அளவுக்குக் காட்டிக்கொள்வோம், பயன்படும்வரை நட்புடன் இருப்போம் என ஒரு நட்பைத் தொடங்கினாலே அது கசப்புடன் முறிவதைத் தடுக்கவியலாது.
சுருக்கமாகச் சொன்னால், உறவுகளை ஒருபொருட்டாக நினைக்காத உள்ளம் கொண்டவராக இருந்தால், எல்லா உறவுகளும் அதற்கான குறைந்தபட்சத் தேவைக்கு மட்டுமே உரியவை என உணர்ந்து உணர்வுரீதியாக ஈடுபடாதவராக இருந்தால் சேர்ந்துவாழ்தல் உகந்த வழிமுறையாக இருக்கும். ஆனால் அப்படி எவரேனும் இருக்க முடியுமா என்றே ஐயமாக இருக்கிறது. முடியலாம். மாபெரும் இலட்சியங்களை மட்டுமே வாழ்வெனக் கொண்டவர்கள். அதன்பொருட்டு பிற அனைத்தையும் பொருட்டாகக் கருதாதவர்கள். அவர்களுக்கு இம்முறை உகந்ததாக இருக்கலாம்
மற்றபடி இன்றையசூழலில்உலகியல்பொறுப்பை ஏற்கத் தயங்கி இதில்நுழைபவர்கள் உணர்ச்சிகள் புண்பட்டு துயரடைவதற்கே வாய்ப்பு என எனக்குப் படுகிறது. இது இன்றைய சூழல். வருங்காலத்தில் மெய்யாகவே உறவுகள் அனைத்தும் உணர்வுச்சாரமின்றி, தற்காலிக சேர்வுகளாக மட்டுமே நிகழும் என்றால் இம்முறை உகந்ததாக ஆகமுடியும்
உறவுகளுக்குப் பொறுப்பேற்கவேண்டியதில்லை என்ற உளநிலையே உயிரியல்சார்ந்து பொருளற்றது. உலகிலுள்ள எல்லா உயிர்களும் உறவுகளுக்குப் பொறுப்பேற்பவை. குழந்தைகளுக்காக உயிர்கொடுப்பவை. தர்க்கரீதியாக அது அபத்தமாக இருக்கலாம்க . ஆனால் அதன் அடிப்படையிலேயே உயிர்ப்பரிணாமம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண்ணுடன் உணர்ச்சிகரமல்லாத உறவை வைத்துக்கொள்லலாம். குழந்தைகளிடம்? ஒருசிலர் அவ்வாறு இருக்கலாம். மானுடகுலமே அப்படி இருந்தால் என்ன ஆகும்?
ஆண்கள் சேர்ந்துவாழும் முறையை ஒரு வசதியாக எண்ணக்கூடும். பெண்ணை பாலியல்ரீதியாகப் பயன்படுத்திவிட்டு துறக்க இது உகந்தது என கருதலாம். அவர்கள் ஒன்று உணரவேண்டும், பெரும்பாலும் ஆண்கள்தான் உறவில் உணர்ச்சிகரமாக ஈடுபடுபவர்கள். பெண்களால் துறக்கப்பட்டால் உடைந்து நொறுங்குபவர்கள். பெண்களைச் சார்ந்திருப்பவர்கள் ஆண்களே. ஆணைச்சாராமல் பெண் இயல்பாக வாழமுடியும், ஆகவே இயல்பாகத் துறக்கவும் முடியும். மணமாகனல் சேர்ந்துவாழ்ந்த பலரை எனக்குத்தெரியும். குருதிவழிய அதிலிருந்து மீளமுடியாமலிருப்பவர்கள் ஆண்களே. பெண்கள் சென்றுவிட்டார்கள், திரும்பிப்பார்க்கவுமில்லை.
பெண்ணும் ஆணும் தங்கள் உரிமைகளை, இடங்களை வரையறைசெய்துகொண்டால் திருமண உறவில் இல்லாத எந்த வசதி சேர்ந்துவாழ்வதில் உள்ளது? சட்டபூர்வப் பதிவு என்னும் அம்சம் மட்டுமே கூடுதலாக உள்ளது. அதை எளிதில் ரத்து செய்துவிடமுடியும் என்றால் இது எதற்காக? வெறுமே இதுதான் மோஸ்தர் என்பதற்கு அப்பால் இதனால் எவருக்கு என்ன நன்மை? ஒன்றுமில்லை
எந்நிலையிலும் ஆண்பெண் உறவு என்பது சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டதாக, கண்ணீரும் சிரிப்பும் நிறைந்ததாகவே இருக்கும். அதுவே அதன் அழகு. அதில் வெற்றியும் தோல்வியும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதெல்லாம் இல்லாத நேர்த்தியான வணிக ஒப்பந்தம்போல உறவை அமைத்துக்கொண்டால் என்ன சுவாரசியம்? சரி, அந்த உடலுறவேதான் எவ்வளவுநாள் சுவாரசியமாக இருக்கும்?
ஜெ