நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்
அன்புள்ள ஜெ
1996 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பழியை பலர் நரசிம்மராவ் மேல் போடுகின்றனர்
ஜெயலலிதா மீதான பல சட்ட நடவடிக்கைகளுக்கு காரணம் நரசிம்மராவ் ஆட்சிதான்… ஜெ அவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தார்…
ரஜினி உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியைக்கொண்டு வருவதே அவர் நோக்கமாக இருந்தது
அதற்கான சூழலும் அன்று இருந்தது,…
அப்போதெல்லாம் திமுக நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தது…
ஆனால் அப்போது தமிழகத்தில் வென்றால் நரசிம்மராவுக்கு கிடைக்கும் பலத்தை எண்ணி , அதிமுகவுடன் கூட்டணி வைக்க நிரப்பந்திக்கப்பட்டார்
தமிழகத்தைப்பொருத்தவரை அவரது ஐந்தாண்டுகள் உழைப்பு வீணானது.. சம்பந்தமே இல்லாமல் திமுக கைகளுக்கு ஆட்சி சென்றது…
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை… நரசிம்ம ராவுக்கு இரு கண்களும் போக வேண்டும் என்ற காங்கிரசின் முடிவு தமிழக அரசியலையும் தேசிய அரசியலையும் ஒரு வினோதமாக திசையில் தள்ளியது
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்
இன்று நான் சலிப்புடன் நினைவுகூர்வது இதுவே. எந்த ஊடகமும் அன்று நரசிம்மராவ் செய்த சீர்திருத்தங்கள், நாடு எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்து எழுதவில்லை. அதைப்பற்றிய பேச்சு சில பொருளியல்நிபுணர்களின் விவாதங்களுக்குள் மட்டுமே இருந்தது. மொத்த விவாதமும் சிபுசோரன் கட்சிதாவியது, அர்ஜுன் சிங் நரசிம்மராவ் பூசல் என்று அன்றாட அதிகார அரசியல் மட்டத்திலேயே இருந்தது. ஊடகங்கள் அதை ஒருவகையான விளையாட்டாக ஆக்கி வாசகர்களைக் கட்சிசேர வைத்தன. நாம் அந்தப்போதையில் மூழ்கிக்கிடந்தோம். நம் வாழ்க்கையைத் தீர்மானித்தவை பற்றி அடிப்படை அறிதல்கூட இல்லாமலிருந்தோம். கூடவே எதிர்கட்சிகள் நரசிம்மராவ் செயிண்ட் கிட்ஸ் தீவில் கணக்குவைத்திருக்கிறார் என்பதுபோன்ற மலிவான அவதூறுகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என் கட்டுரையில் நான் பேசவிழைவதே இதுதான். நரசிம்மராவ் எங்கே கூட்டுவைத்தால் என்ன? என்ன அரசியலாடினால் என்ன? அதைப்பற்றி மட்டுமே பேசு என நம்மிடம் சொல்பவர்கள் யார்?
ஜெ