ஸ்டெல்லா புரூஸின் அப்பா

Stella Purus

அன்புள்ள ஜெ.,

சமீபத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் (இயற்பெயர் ராம் மோகன். ஜெயகாந்தனின் “ஞான ரதம்” பத்திரிகையில் வேலைசெய்யும் பொழுது கூட வேலைசெய்த பாலியல் பலாத்காரத்தால் இறந்த ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் நினைவாக ஸ்டெல்லா ப்ரூசானவர்.) எழுதிய ஒரு கட்டுரையில் அவருடைய அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய தாத்தா மிகப்பெரும் செல்வந்தர்.  தன்னுடைய மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து விடுதலைப்பத்திரம் வாங்கிக் கொள்கிறார் அடுத்த கல்யாணத்திற்காக. இவருடைய தந்தைக்கு நிறைய சொத்து வந்து சேர்கிறது. இவருடைய தந்தைக்கு முதலில் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. அவரும் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். காமராஜருக்கு ஆரம்ப முதலே கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவருடைய அன்னை (ஸ்டெல்லா ப்ரூஸின் பாட்டி) காமராஜரிடம் தன் பையனைக் கல்யாணத்திற்கு வற்புறுத்தச் சொல்கிறார். அவரும் தொடர்ந்து வற்புறுத்த இவர் ஒரு வழியாக கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். இது காமராஜருடைய அன்னைக்குத் தெரிந்ததும் ஆச்சரியம் தாளவில்லை. அவர் இவரை அழைத்து எப்படியாவது காமராஜரை வற்புறுத்தி கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளச் சொல்கிறார். ஆனால் இவர் காமராஜரிடம் அதைப் பற்றி வாயைத்திறக்கவில்லை. இது ரொம்பப் பின்னால் காமராஜருக்குத் தெரிய வருகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து மகிழ்ச்சியே.

பிற்காலத்தில் ஸ்டெல்லா ப்ரூஸின் தங்கையின் திருமணத்திற்கு காமராஜரை அழைக்க ஸ்டெல்லா ப்ரூசையே அனுப்புகிறார். காமராஜரைத் தொலைபேசியில் அழைத்து தன் பையன் வருவான் என்றும் அவனை எப்படியாவது கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தவேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். காமராஜரும் சொல்லிப் பார்க்கிறார். இவர் வாயைத்திறக்காமல் உட்கார்ந்திருக்கிறார். “அது சரி…உனக்குப் பிடிக்கலேன்னா யார் என்ன செய்ய முடியும்..” என்று முடித்து விடுகிறார்.

காந்தியின் கொள்கைகளில் பெரிதும் பிடிப்புள்ளவர். புலாலை முற்றும் துறக்கிறார். ஆனால் மனைவி சாப்பிடத் தடை சொல்வதில்லை. பிறந்த இரண்டாவது வருடமே கறி வாசனையைக் காட்டி விடும் சமூகத்தில் தன் பையன் ராம் மோகனை – ரபீந்திரநாத் தாகூரின் பெயரைத்தான் முதலில் வைப்பதாக இருந்து தன் தந்தை ஒப்புக் கொள்ளாததால் ராஜா ராம் மோகன் ராயின் பெயரை வைக்கிறார் – முதலிலிருந்தே அந்த வாசனை படாது வளர்க்கிறார். தன்னுடைய வீட்டு நூலகத்திலிருந்து புத்தகங்களை வாசித்துக்காண்பித்து இவருக்கு இலக்கிய ரசனையை வளர்க்கிறார். இந்தக் கட்டுப்பாடுகள்(?) எல்லாம் இவருக்கு மட்டும்தான். மற்ற பிள்ளைகளுக்கல்ல. ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் கொள்கைகளில் பெரிதும் பிடிப்போடு இருக்கிறார் ராம் மோகன். பின்னாளில் தன் தந்தையை அவருடைய பிரசங்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். தலைக்கு மேல் கைகளைக் குவித்து கும்பிடுகிறார். அவர் கைகளைப் பற்றி சந்தோஷப்படுகிறார்(ஜெ.கே யோட கைகள் எவ்வளவு குளுர்ச்சியா இருக்கு… ) இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு நாள் இவருக்குப் போன் செய்து தான் திரும்ப அசைவம் சாப்பிடத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார். ஆனால் இவரைக் கடைசி வரை சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்துகிறார். இவரும் சாப்பிடுவதில்லை.

ரொம்ப பிற்பாடு இவர் தன்னுடைய நாற்பத்தெட்டாவது வயதில்(நிறைய வருடம் வாழவில்லை. நிறைய நிறைய வாழ்ந்தோம்… ) திருமணம் செய்து கொள்கிறார் தன்னுடைய வாசகியையே. அதுவும் பட்டாச்சார்யாரின் பெண், அசைவ வாசனை படாது வளர்ந்தவர் என்பதில் இவருடைய தந்தைக்கு மிக்க மகிழ்ச்சி.

ஊரில் பெரிய செல்வாக்கு. காங்கிரஸ் கட்சியில் நினைத்தால் போட்டியிட்டு பெரிய பதவிகளுக்கு வந்திருக்க முடியும். அவர் மனம் அதில் செல்வதில்லை. தி.மு.க அரசு மதுரை டி.வி.எஸ் நிறுவன பஸ்களை அரசுடைமையாக்கிய சமயத்தில் டி எஸ் கிருஷ்ணா வைப் போய் சந்திக்கிறார். ராம் மோகனையும் அழைத்துச் செல்கிறார். கிருஷ்ணா பஸ்கள் போனதைவிட அந்த தொழிலாளர்களுக்கு வேலை போனதை நினைத்து வருத்தப்படுகிறார். தன்னுடைய மகனுக்கு வியாபாரத்தில் ஈடுபட பம்பாயில் ஒரு வாய்ப்பை அமைத்துத் தருகிறார். அது இவருக்கு சரிப்பட்டு வரவில்லை. இரண்டே மாதத்தில் திரும்பி விடுகிறார். அதை நினைத்துக் கூட கவலையில்லை அவருக்கு. சென்னை “மேன்சன்” வாழ்க்கைக்கு இடம் பெயர்கிறார் ராம் மோகன். அவ்வப்போது விருதுநகர் சென்று தந்தையைப் பார்த்து வருகிறார். ஒவ்வொரு முறையும் நிறையப் பணம் கொடுக்கிறார். ஸ்டெல்லா ப்ரூஸின் சில கதைகளும் நாவல்களும் வெளிவருகின்றன. எழுத்தாளராக புகழ் சேர்கிறது. இவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் ஒரு கட்டத்தில் தங்களுடனேயே இருந்து விட கண்ணீர் விட்டுக் கெஞ்சுகிறார் தந்தை. இவர் கேட்பதில்லை.

ஒருமுறை சிறுவயதில் இவரை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று விசேட அர்ச்சனை செய்கிறார் எழுத்தாளர் தேவன் பெயருக்கு. அவருக்கு பிள்ளைக் குழந்தை பிறக்க வேண்டி. அதற்கு பின்னாளில்  இவர் தேவன் நாவல்களைப் படிக்கும் போதுதான் தெரிகிறது அவருக்குப் பிள்ளையில்லாக் குறையை சில நாவல்கள் பிரதிபலிப்பதை.

இவருக்கு மரணம் எளிதாக நேர்கிறது. எதோ மாதிரி இருப்பதாக படுத்துக்கொள்பவர் எழுந்திருப்பதில்லை. பின்னாளில் “மிஸ்டிக்க”லாக நிறைய பரிசோதனைகளில் ஈடுபடும் ராம் மோகன் “என் நெற்றிப் பொட்டு திறந்து கூறியது அப்பா திருவிடைமருதூரில் மறுபிறப்பு எடுத்திருப்பதாக ..” என்று எழுதுகிறார்.  சில நாட்கள் கழித்து திருவிடைமருதூர் வழியாகச் செல்கிறார்  ராம் மோகன்கலங்கிய கண்களோடு ஊர் பின்னால் விரைவதை கார் ஜன்னல் வழியாகப்  பார்த்துக்கொண்டே.

நான் சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரை.(என் நண்பர் ஆத்மாராம், விருட்சம் வெளியீடு)

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

stellabruce

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

நான் ஸ்டெல்லா புரூசை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன்.  என் ரப்பர் ராவலுக்கு அவர் எழுதிய கடிதம் வழியாக அறிமுகம். நீண்ட கடிதங்கள் பல எழுதியிருக்கிறார். ஒரு தொடர் உரையாடலில் சில ஆண்டுகள் இருந்தோம். நேரில் சந்தித்த இரண்டுமுறையும் ஜே..கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ பற்றி பேசினோம்.

நான் அவரை முதல்முறை சந்தித்தபோது அவருடைய கதைகளை முதலில் குமுதத்தில் வாசித்தது பற்றிச் சொன்னேன். ‘நம் கதையின் இனம்புரியாத இனிமை இப்போது முடிகிறது’ என கடைசிவரியில் திருப்பம் வைத்த அந்தக்கதை அன்றைய ரசனைக்குப் புதியது. ஆனால் எங்கள் உரையாடல் சற்றுதான் நீடித்தது. உடனிருந்த நண்பர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி பொழிந்துதள்ள ஆரம்பித்துவிட்டார். மேலும் இருமுறை ஓர் ஓட்டலில் நானும் அவரும் மட்டும் அமர்ந்து நீண்ட நேரம் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டோம்

இரண்டாம் முறை சந்தித்தபோது ஸ்டெல்லா புரூஸ் தளர்ந்திருந்தார். உளஅமைதிக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். அவருடைய மனைவிக்கு சிறுநீரகத் தொற்று ஏதோ ஏற்பட்டிருந்த நாட்கள் அவை. அது சரியா என எனக்குத்தெரியவில்லை என்றேன். “எனக்கு வேறுவழி தெரியவில்லை. என்னை பிசாசுக்களும் தெய்வங்களும் இரண்டுபக்கமும் இழுக்கின்றன” என்றார்.

அடுத்த ஆண்டே அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்தது. அவர் காதலித்து மணந்த பெண்மணி நோயுற்று உயிர்துறக்க அந்தப் பிரிவாற்றாமை தாளாமல் உயிர்துறந்தார். அவருக்கான சிகிழ்ச்சைக்காக பெருந்தொகை செலவழித்து கடனாளி ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.தமிழ் எழுத்தாளர்களில் தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்த்தால் எவரேனும் நாவலாக எழுதத் தக்கது ஸ்டெல்லாபுரூசின் வாழ்க்கை. அவர் தன் சூழல் பற்றி நாவல்களில் எழுதியதில்லை. செயற்கையான ஒரு சென்னைச்சூழலில் நிகழ்பவை அவருடைய கதைகள். அவர் விகடனில் எழுதிய பனங்காட்டு அண்ணாச்சி என்ற நாவலில் ஓரளவு அச்சூழல் உள்ளது.

ஸ்டெல்லா புரூஸின் உணர்வுநிலைகளைப் பற்றியோ அவருடைய வாழ்க்கையைப்பற்றியோ நாவலாகவே எழுதிப்பார்க்கமுடியும், ஓரிருவரி எண்ணங்கள் பொருளற்றவை. ஆனால் இங்கே அப்படியெல்லாம் எழுதிவிடமுடியாது. இறந்தவர்களைப்பற்றி சம்பிரதாயமான வரிகளுக்கு மேல் ஏதேனும் எழுதினால் இங்கே லபோதிபோ என்று கத்திக்கொண்டு வருவார்கள். வருபவர்கள் இலக்கியம்பேசுபவர்களாகவும் இருப்பார்கள். அவர் இறந்தபோது நான் எழுதிய ஓரிருவரிகளுக்காக அன்று வந்த பூசலை கண்டு அப்படியே விட்டுவிட்டேன். இன்று மீண்டும் நினைவுகள் எழுகின்றன.

ஸ்டெல்லாபுரூஸின் வாழ்க்கைக்கும் க.நா.சுவின் வாழ்க்கைக்கும் பெரும் ஒற்றுமை உண்டு. இருவரின் தந்தையரும் வசதியானவர்கள். இருவருமே தங்கள் மைந்தர்களை அறிவுஜீவிகள் என்று நம்பினர். இருவருக்குமே தங்கள் மைந்தர் ஆங்கிலத்தில் எழுதி புகழ்பெறவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. தங்கள் மைந்தர்களை எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமாக ஆக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். க.நா.சு தமிழில் எழுத்தாளனாக வெற்றிபெற்றார். இன்றும் வரலாற்றில் நிலைகொள்கிறார். ஆனால் அதே சமயம் க.நா.சு எவ்வளவு எழுதியிருக்கமுடியுமோ அவ்வளவு எழுதியவர் அல்ல. எங்கு சென்றிருக்கலாகுமோ அங்கு சென்றவரும் அல்ல.  ஸ்டெல்லா புரூஸுக்கு தொடக்கத்திலேயே காலடிகள் பிழைபட்டன

ஏன்? முதல்சரிவு, ஸ்டெல்லா புரூஸ் அன்றைய  இலக்கியவணிகச் சூழலுடன் சமரசம் செய்துகொண்டது. அவ்விதழ்களில் எழுத ஆரம்பித்தது. ஆரம்பநாட்களில் அங்கே செல்வது இலக்கியத் தற்கொலை. நடையும் நோக்கும் நிலைபெற்றுவிட்டபின் செல்லலாம், லா.ச.ரா முதல் ஜானகிராமன் வரை அங்கே சென்றவர்கள்தான். ஆரம்பநிலையில் அங்கே சென்றால் நம்மை வாசகர்களின் ரசனை இழுத்துச்செல்லத் தொடங்குகிறது. அவர்களுக்காக எழுத ஆரம்பிக்கிறோம். நம் நடையும் உளநிலையும் அதற்கேற்ப வடிவம் கொள்கின்றன. அதன்பின் மீளமுடியாது. அது நடந்தது அவருக்கு

ஸ்டெல்லா புரூஸ் ‘இளமைதுள்ளும் எழுத்தாளர்’ என்ற படிமத்தில் சிக்கிக்கொண்டார். விந்தையான நடை, திருப்பங்கள் என எழுதலானார். நுண்ணிய ரசனையும் நல்ல வாசிப்பும் கொண்டவர். ஆனால் அவை அங்கே அவருக்கு உதவவில்லை. அங்கே அவர் சுஜாதாவை நகல்செய்தார். மெல்ல அதிலிருந்து தனக்கென ஒருநடையை உருவாக்கிக்கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால் பின்னர் சுஜாதாவே ஸ்டெல்லாபுரூஸ் பாணியில் ஒருசில நாவல்களை எழுதினார். அது ஒரு நிலாக்காலம் போன்ற ஸ்டெல்லா புரூஸ் நாவல்களின் பாணியை சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் போன்ற நாவல்களில் காணலாம்.

ராம் மோகன் சிற்றிதழ்களில் காளி-தாஸ் என்றபேரில் நவீனக் கவிதைகள் எழுதினார். அன்றைய சிற்றிதழ் இயக்கத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முதன்மை ஆர்வம் வணிக இதழ்களில் எழுதுவதிலேயே இருந்தது. அது அவருக்கு பல்லாயிரம் வாசகர்களைப் பெற்றுத்தந்தது. ஒருகாலகட்டத்தில் பாலகுமாரனுக்கு நிகராகவே பேசப்பட்டார். அந்த வாசகர்கள் அப்படியே மறைந்துவிட்டனர். அந்த மாயையை அவர் உணரவில்லை

இன்னொரு பெரிய வீழ்ச்சி, இலக்கியத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக்கொண்டது. அவர் தன் தந்தை அளித்த செல்வத்தைச் செலவிட்டு வாழ்ந்தார். விரைவிலேயே அது கரைந்தது. வணிக எழுத்தில் உழன்றாலும் அது பொருளியல்ரீதியாக உதவவில்லை.  ஆகவே வேறுவழியில்லாமல் சினிமாவிவாதங்களில் கலந்துகொண்டார். நான் அவரை இறுதியாகச் சந்தித்ததும் ஒரு சினிமாவிவாதத்தில்தான். அது அவருக்கு ஒவ்வாததாகவே இருந்தது. சினிமாவில் அவர் ஏமாற்றப்பட்டார்

அவருடைய இறுதிக்காலச் சோர்வுக்கும் இறப்புக்கும் பணநெருக்கடி முக்கியமான காரணம். தமிழில் எழுத்தை வாழ்வெனக்கொண்ட எவரும் சிறப்பாக எழுத வாய்த்ததில்லை- விதிவிலக்கு அசோகமித்திரன் மட்டுமே. க.நா.சு அவருடைய தந்தையின் கனவை இலக்காகக் கொண்டு எழுதத் தொடங்கினார். ஆனால் எழுத்தையே வருவாய் வழியாகக்கொண்டமையால் ஒருகட்டத்தில் வாழ்க்கைக்காகவே அல்லாடினார். சம்பந்தமில்லாமல் ஆங்கிலத்தில் எழுதி திறனை வீணடித்தார்.

அனைத்தையும்விட வீழ்ச்சி என்பது ஸ்டெல்லா புரூஸ் சரியான ஆசிரியர்களைப் பெறவில்லை என்பது. இதை இன்று மிகப்பெரிதாகவே உணர்கிறேன். மிக இளமையிலேயே ஆன்மிகமான அறிதல்களுக்குள் சென்றவர். உண்மையிலேயே பல விழிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கொண்டவர். ஏனென்றால் மிகமென்மையானவர், மிகநுட்பமானவர், மிகக்கூரியவர்.ஆனால் அவர் பெற்ற ஆன்மிகம் என்பது வெறும் நூலறிவு. அந்த அறிவு அவருக்கு மிகையான தன்னிலையை அளித்தது ஆகவே எவரிடமும் சென்றமர இயலவில்லை. எங்கும் பணியவோ செவிகொடுக்கவோ அவரால் முடியவில்லை

அன்றிருந்த எந்த இலக்கியமுன்னோடியையும் அவர் அணுகவில்லை. ஒரு நல்ல இலக்கியவழிகாட்டி அவருடைய அகந்தைகளை உடைத்திருக்கக் கூடும். அவருடைய நுட்பமான பிழைகளைச் சுட்டிக்காட்டியிருக்கக்கூடும். ஒரு நல்ல ஆன்மிகவழிகாட்டி அவருடையது அறிவார்ந்த பாவனைமட்டுமே எனச் சுட்டிக்காட்டியிருக்கமுடியும்.  அவருக்கிருந்த அந்தரங்கமான வினாக்களை தொட்டு முன்னெடுத்திருக்கமுடியும். சரியான அகவையில் சரியான வழிகாட்டிகளின் பங்கென்ன என இன்று உணர்கிறேன். அவர்களைச் சென்றடையாமல் நம்மைத் தடுப்பது நம்மில் அகாலமாக உருவாகிவிடும் ஆணவமே.

ஸ்டெல்லா புரூஸுக்கு ஆசிரியர்கள் இல்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தி தன் மானசீக ஆசிரியர் என்றார். நூல்களில் இருப்பவர் ஆசிரியரல்ல, நேரடி ஆசிரியரைத் தேடுங்கள் என நான் சொன்னேன். நான் சொன்னதென்ன என அவருக்குப் புரியவில்லை. ஆசிரியரிடம் அகந்தை அடிபட்டு அழுதிருக்கிறீர்களா என்று கேட்டேன். அவர் “இல்லை” என்றார். “உங்கள் அகந்தையை நிறைவுசெய்யும் நூல்களாக வாசிக்கிறீர்கள். மனிதர்களாகச் சந்திக்கிறீர்கள்…” என்றேன். அவர் “செல்லவேண்டும்.குறைந்தது சுந்தர ராமசாமியையாவது சென்று சந்திக்கவேண்டும்” என்றார். அது நிகழவில்லை.

ராம் மோகன்  மிகச்சிறப்பாக கோவையாகப் பேசுபவர். ஓஷோ முதல் ஜேகே வரை.அதுவே அவரை தானே ஓர் ஆசிரியர் என எண்ணச்செய்தது. அப்படி எண்ணியவர்கள் பலர் அன்று அவருடன் இருந்தார்கள்.விளைவாக அவருடைய திறன்கள் வீணாயின. நல்ல ரசனையும் படிப்பும் கொண்டிருந்தும் இன்றைய இலக்கியவரலாற்றில் இடம்பெறும் ஒரு கதைகூட அவரால் எழுதப்படவில்லை.

ஆன்மிகமான பயணத்தில் வழக்கமாக நிகழும் இரு பிழைகளுக்கு அவர் ஆளானார். ஒன்று, தொடக்கத்தில் ஆன்மிகத்தை வெறும் கருத்துக்களாக அறிந்து பேசிக்கொண்டிருப்பது. இரண்டு, அது சலிக்கும் எல்லையில் சட்டென்று மிகையான மறைஞானத்தை நோக்கிச் செல்வது. மெய்மைசார்ந்த பிரமைகளை அடைவது. அடைந்துவிட்டோம் எனும் கற்பனைகளில் உலவுவது. நூல்களிலிருந்து அந்த பிரமைகள் எழுந்து உண்மைகள் போலவே பேருருக்கொண்டு நிற்கும். அது மிகப்பெரிய இடர்

ராம் மோகன் நான் சந்திக்கும்போது ஆவிகள் பேய்கள் குறித்த நம்பிக்கைகள் கொண்டிருந்தார். நம்பிக்கை என்பதை விட அவருக்கு அவை நிகருண்மைகளாக இருந்தன. உண்மையிலேயே அவ்வாறு ஓர் உலகம் இருக்குமோ என்று நான் சற்றேனும் ஐயம்கொள்வது ராம் மோகன் அந்நம்பிக்கையை வலுவாக முன்வைத்தமையால்தான். நவீன எழுத்தாளர் ஒருவர் இத்தனை ஆணித்தரமாக ஆவியுலகு பற்றிப் பேசி நான் கேட்டதில்லை

அவருடைய துயரமுடிவு அவ்வாழ்க்கைக்கு ஒரு பெரிய ஒழுங்கை அளிக்கிறது என இன்று படுகிறது. ஸ்டெல்லா புரூஸ் எழுதியவற்றால் அல்ல, எழுத்தாளனாக வாழமுயன்றவர் என்னும் வகையில் மாபெரும் கதாபாத்திரம்.

ஜெ

***

ஸ்டெல்லா புரூஸ் அழகியசிங்கர்
ஸ்டெல்லா புரூஸ் என்கிற காளிதாஸ்
நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்
நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்
முந்தைய கட்டுரைநூல்களை அனுப்புதல் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28