டால்ஸ்டாய் உரை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களது தொடர்ந்த வாசகனாகவும் உங்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவன் என்ற முறையிலும்  டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை படித்த எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

இந்த நாவலை படித்து முடித்தவுடன் நீங்கள் ருஷ்ய கலாச்சார மைய்யத்தில் பேசிய டால்ஸ்டாய் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.   நாவல்கள் மூலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களுக்கு மனித வாழ்க்கையின் மாண்பையும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்களை  அளிப்பவராகவும்டால்ஸ்டாய் இன்றும் தேவைப்படுகிறார்.  தங்கள் உரை டால்ஸ்டாயின் ஒட்டு மொத்த ஆளுமையை பதிவு செய்வதாக அமைந்திருந்தது.

அன்னாகரீனினா நாவலின் பல அத்தியாயங்கள் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் க்ரீன், அன்னா மற்றும் லெவின பாத்திரங்களின் மனவோட்டங்கள் படிப்பவர்களுக்கு மிகுந்த மனவெழுச்சியையும் அளித்தது.

அன்னா விரான்ஸ்கியின் பெண் குழந்தையை பிரசிவித்த சமயம்  காய்ச்சலும் ஜன்னியும் கண்டு உயிருக்கு போராடுகிறாள்.  விரான்ஸ்கியும் அச்சமயம் கரீனின் வீட்டில் அவளுடன் இருக்கிறான்.  அன்னா கரீனை தந்தி கொடுத்து வீட்டிற்கு வரவழைக்கிறாள்.  காய்ச்சலின் கடுமையில் தனது தவறுக்கு வருந்துபவளாக கரீனின்  நற்பண்புகளை உணர்ந்து மனதார அவனது மன்னிப்பை வேண்டுகிறாள்.  விரான்ஸியையும் க்ரீன் மன்னிக்க வேண்டும் என்று மன்றாடுகிறாள்.

ஆனால் அன்னா மரணமடைந்து விடுவாள் என்ற மகிழ்ச்சியுடன் வந்த க்ரீன் அவளைப் பார்த்த பிறகு மனம் மாறுகிறான்.  அவனிடம் உறைந்துள்ள மனித மாண்பும் அன்னாவின் மீதுள்ள அன்பும் மேலெழுகிறது.  அன்னா – விரான்ஸ்கி இருவரையும் மனதார மன்னித்து விடுகிறான்.  இந்த அத்தியாயம் திரும்ப திரும்ப படிக்க வைப்பதாகவும் வாழ்க்கையின் அளப்பரிய மாண்புகளை வியந்து நெகிழ்ச்சியளிப்பதாகவும்  இருக்கிறது.

விரான்ஸியோடு அன்னா சென்ற பிறகு ஓராண்டு கழித்து தனது மகன் செர்ஜாவைப் பார்க்க கரீனின் வீட்டிற்கு வருகிறாள்.  அன்னா – செர்விஜா சந்திப்பை விவரிக்கும் இந்த  அத்தியாயமும் மறக்க முடியாதது.  மகனைக் கண்ட தாயின் மனநெகிழ்ச்சியும் அச்சிறுவனின் அளவற்ற சந்தோஷமும் அப்போது க்ரீன் வரும்போது ஏற்படுகின்ற பிரிவுத் துயரமும் வாசகர்களுக்கு கொடுக்கும் அனுபவங்களை டால்ஸ்டாய் அற்புதமாக எழுதியுள்ளார் .

மூன்றாவதாக கடவுள் நம்பிக்கையற்ற லெவினுக்கு பரம்பொருளின் இருப்பையும் உலக இயக்கத்தின் ஆதாரமாக இயங்குகின்ற மனிதனின் மாறாத நம்பிக்கையையும் உணர்த்தும் அத்தியாயம்.  தனது தமையனின் மரணத்தை தனது மனைவி கிட்டியோடு எதிர்நோக்கும் தருணத்தையும் கிட்டியின் பிரசவித்தின்போது லெனினுக்கு ஏற்படும் அனுபவங்களையும் எண்ண எழுச்சிகளையும் டால்ஸ்டாய் விளக்கும் பகுதியாக இது வருகிறது.

விரான்ஸியிடம் தனக்கான காதல் மாறாமல் இருக்கிறதா என்ற தனது ஐய்யத்திற்கு விடை கிடைக்காமல் அன்னா அவனை சந்திக்க புறப்படுகிறாள்.  பயணத்தின்போது அவளுக்கு ஏற்படுகின்ற மனப்போராட்டங்களை டால்ஸ்டாய் மிகச்சிறப்பாக பதிவு செய்கிறார்.  அப்போது அன்னாவுக்கு தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வெறுமையாகவும் அவலமாகவும் இருப்பதாக உணர்கிறாள்.  இரயில் நிலையத்தில் முதன் முதலாக விரான்ஸ்கியை சந்தித்த போது ஒருவன்  இரயிலில் பாய்ந்து மரணித்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.  கணநேரத்தில் முடிவெடுக்கிறாள்.  பாய்ந்து வரும் இரெயிலில் விழுந்து இறப்பதோடு நாவலை டால்ஸ்டாய் முடிக்கிறார்.

1875-77 ஆண்டுகளில் ருஷ்யாவின் உயர்குடி பிரபுக்களின் வாழ்க்கையையும் நிலவுடமைச் சமூகத்தின் கிராமப்புற வாழ்க்கையையும் இந்த நாவல் படம்பிடிக்கிறது என்று நாம் இதைத் தள்ளி விடமுடியாது.  வாழ்க்கையின் மாறாத உண்மைகளை உரத்துபேசி எப்போதும் நமக்குத் தேவைப்படுகின்ற நம்பிக்கையை கொடுப்பதாக இந்த நாவலை நான் கருதுகிறேன் .

நன்றி.

அன்புள்ள,

பாபுஜி  .  ச

கரூர்

***

அன்புள்ள ஜெ

டால்ஸ்டாய் பற்றிய உங்கள் உரை ஒழுக்கநெறிகளைப் பற்றியதாக இருந்தாலும் இலக்கியம் பற்றிய தெளிவை அளித்தது. நாம் படிக்கும்போது ‘சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லுவதே நல்ல எழுத்து’ என்ற கருத்து நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே எதைப்படித்தாலும் இது சொல்லவருவது என்ன என்ற கோணத்திலேயே படிப்போம். வாசிப்பை கோணலாக்குவது இது. சொல்லவந்தது பிடிகிடைக்காவிட்டால் ஆசிரியர் சொதப்புகிறார் என்று சொல்வோம். ஆகவே பல நவீன ஆசிரியர்களைத் தவிர்த்துவிடுவோம். சிக்கலான வாழ்க்கையனுபவங்களைச் சொல்லும் படைப்பாளிகளை நாம் எரிச்சலுடன் பார்க்க ஆரம்பிப்போம். இலக்கியம் என்பது சொல்லிக்கேட்பது அல்ல வாழ்ந்து பார்ப்பது என்றீர்கள். கற்பனையில் ஒரு வாழ்க்கையை வாழ்வதுதான் அது. அந்தவாழ்க்கைதான் இலக்கியத்தின் அர்த்தம். அந்தவாழ்க்கையிலே நாம் பெறுவதுதான் இலக்கியத்தில் சொல்லப்படுவது. அந்தக்கோணம் தெளிவாகவே வெளிப்பட்டது

ஆர்.மகேஷ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27
அடுத்த கட்டுரைநூல்களை அனுப்புதல் -கடிதம்