மணவுறவுமீறல் -கடிதம்

marriagexl_070517021244

மணவுறவு மீறல் குற்றமா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

மணஉறவு மீறல் குறித்த கிருஷ்ணன் அவர்களின் கேள்வியும் உங்களின் விரிவான பதிலும் வாசித்தேன். உண்மையில் உங்களிடம்  நான் இந்தக்கேள்வியைக் கேட்கனும் என்று நினைத்திருந்தேன்.  திரு.கிருஷ்ணன் கேட்டதுபோல  எனக்குச்சரியாக கேட்கத்தெரியவில்லை. நாளிதழ்களில் இந்த செய்தி வெளியான போதிலிருந்தே பரவலாக இது பலரின் கவனத்தை ஈர்த்தது.  பல்வேறு தளங்களிலிருந்தும் பலர் தேவைக்கும் அதிகமாக எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தார்கள்.

பட்டிமன்ற நடுவரிலிருந்து பேராசிரியர்கள் வரை, பிறழ் உறவை நீதிமன்றமே அங்கீகரிக்கின்றது என்னும்பொருளில் ஆதரித்தும் , இனி அடுத்த தலைமுறை அவ்வளவுதான் யாரும் யாருடனும் இருக்கலாம், முறை பிறழ்ந்த பாலுறவு இச்சையை  நீதிமன்றமே அங்கீகரித்துவிட்டது, இனி உறவுகளுக்கு எந்தப்பொருளும் இல்லை என்று எதிர்த்தும் பேசிக்கொண்டிருந்ததால் எனக்கு நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கு என்றே சந்தேகம் வந்துவிட்டது. எனவே உங்களிடம் இதைக்கேட்கவே இல்லை.

நீங்கள் அளித்திருந்த பதிலில் நான் தெளிவானது மட்டுமல்லாது, நூலகத்திலும் கல்லூரி கேண்டீனிலும் இனி பேராசிரியர்கள் ’’இனி பயப்பட ஒண்ணுமில்லை’’ என்று நமட்டுச்சிரிப்புடன் பேசுகையில் என்னால் இடைப்படமுடியும். அவர்களுக்கும் இத்தீர்ப்பினை புரியும்படி சொல்லமுடியும்

வழிப்பறி , திருட்டு போல மண உறவு மீறலை 5 ஆண்டு தண்டணைக்குரிய குற்றமென்று , புகாரின்றியே காவல்துறை இதை விசாரிக்கமுடியுமென்னும் நிலையிலேயே இத்தீர்ப்பு வந்திருக்கின்றது என்பதை இப்போதுதான் அறிகிறேன்

நீங்கள்   ’’அலைதல் அமர்தலில்‘’ காலம் மாறிக்கொண்டிருக்கிறது காலத்திற்கேற்றபடி வாழ்வுமுறையும் மாறிக்கொண்டிருக்கிறது, வாழ்வுகுறித்தான நம் கண்ணோட்டமும் அதற்கேற்ப மாறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். தன்பால் திருமணங்களே பல நாடுகளில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட உறவாகிவிட்ட நிலையில் நம்மிடையே இன்னும் சாதீயப்பிரச்சனைகளும் கெளரவக்கொலைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

இருபாலினத்தவரும் சேர்ந்து பணிபுரியும் சூழலில் பல இடங்களுக்கு இணைந்து சென்று வர வேண்டியிருக்கும்  சமயங்களில், பலர் இனி  கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்வார்களாயிருக்கும் இத்தீர்ப்பு அளித்திருக்கும்  தெளிவால் காவல்துறை தலையீட்டை, தொந்தரவை இனி எதிர்கொள்ள முடியும்.

திருமண உறவு என்பது இரு தனிநபர்களுக்கு நடுவே நிகழ்வது மட்டுமே  அதைத்தாண்டிய உறவு அரசுக்கோ சமூகத்திற்கோ எதிரானதில்லை என்று சொல்லும் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதுதான். எனினும் ஒரு  சந்தேகமும் எனக்கு இருக்கின்றது.  இதை பலர் அவர்களுக்கு வசதியாகவும் பயன்படுத்திக்கொள்ளும் அபாயமும் இருகின்றதென்றே நான் நினைக்கிறேன்

அலுவலகங்களில் மேலதிகாரிகள் இத்தீர்ப்பை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கூடுதல் சலுகையாக எண்ணிக்கொண்டு  கீழ்நிலையிலிருக்கும் பெண் பணியாளர்களை எந்தத்தடையுமின்றி மிரட்டிப்பணியவைக்க நினைக்கலாம். கல்வி நிறுவனங்களில்,  ஆராய்ச்சி மாணவிகளிடம், முனைவர் பட்டம் வேண்டுமென்றால்  பிறழுறவு கட்டாயம் என்று சொல்லும் திருமணமான பல கிழட்டுப் பேராசிரியர்களும் இனி சுதந்திரமாக செயல்படுவார்களல்லவா?

நீங்களே சொல்லியிருப்பது போல இந்தத்தீர்ப்பும்  நடைமுறையில்  எப்படிச்  செயல்படுகிறது, என்ன விளைவை  உருவாக்குகிறது  என்பதைப்பார்த்துவிட்டு  இதில்  திருத்தங்களும்  இனி வரும்  நாட்களில்   கொண்டுவரப்படலாம்

ஜீவனாம்சம்  என்றே   இதுநாள் வரையிலும் கேள்விப்பட்ட ஒரு சொல்லை, ’’வாழ்வுச்செலவு’’ என்று நீங்கள் சொல்லியிருப்பது நன்றாக இருக்கின்றது.

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைபழியின் தனிமை
அடுத்த கட்டுரைமோவாயிசம்