‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28

bowயுதிஷ்டிரரின் பாசறையில் வெள்ளிக்கு முன் படைத்தலைவர்கள் மட்டுமே கூடியிருந்த அவையில் வாயில்காவலனாக சுருதகீர்த்தி நின்றிருந்தான். பின்பக்க வாயிலில் சுருதசேனன் நின்றான். பிரதிவிந்தியன் மட்டுமே அவைக்குள் இருந்தான். யுதிஷ்டிரர் வந்து அமர்வதுவரை அவையினர் ஒருவருக்கொருவர் உதிரிச்சொற்களால் மெல்ல பேசியபடி அமர்ந்திருந்தனர். அந்த ஒலிகள் இணைந்த முழக்கம் தூங்கும் பூனையின் ஓசையென கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருமே புண்பட்டிருந்தனர். கட்டுகளுக்குமேல் ஊற்றப்பட்டிருந்த களிம்பிலிருந்து எழுந்த கந்தகமணம் அறையை நிறைத்திருந்தது.

அந்த மணம் படையின் மணமாகவே ஆகிவிட்டிருந்தது. அது எரிமணம். விழிக்குத் தெரியாத நெருப்பு ஒன்று அங்கே எரிந்துகொண்டிருப்பதுபோல. கந்தகம் மண்ணில் உப்பென உறங்கும் நெருப்பு என்றார் மருத்துவரான குணதர். “புண்களில் வந்தமர்கின்றன ஊனும் குருதியும் உண்ணும் பாதாளதெய்வங்களான க்ஷதையும் வ்ரணையும் ஜீர்ணையும். குருதிவண்ணத்துடன், கொடுவாயுடன், கூர்விழிகளுடன், எட்டு கைகளிலும் வாளும் வேலும் ஏந்திய க்ஷதை செம்புண்களின் தெய்வம். கரிய உடல்கொண்ட வ்ரணை புண்களின் தெய்வம். நான்கு கைகளிலும் பாசமும் அங்குசமும் சவுக்கும் வேலும் கொண்டவள். ஜீர்ணை இரு கைகளிலும் கலமும் கோலும் கொண்டு நீள்நாக்கு நெஞ்சுதொட அமர்ந்திருப்பவள். வெண்நிறமானவள். சீழின் தெய்வம். அவர்கள் மிருத்யூதேவியின் மகளிர்” குணதர் சொன்னார்.

“நாம் ஊனில் ஓர் எரிகுளம் அமைக்கிறோம். அதில் கந்தக வடிவில் எரியேற்றுகிறோம். ஊனையும் குருதியையும் அவியென்றாக்கி அளிக்கிறோம். உண்டு நிறைவுற்று மீள்கின்றன மூன்று தெய்வங்களும். அவை சென்று அவ்வன்னையிடம் சொல்லி அவளை அகற்றிக்கொண்டு செல்கின்றன. அவியால் நிறைவடையாது சினந்தால் அவை உடலை முழுதுண்கின்றன. அவர்களின் அன்னை அவ்வுடல்மேல் எழுந்தருள்கிறாள்” என்றார் குணதர். “கந்தகம் உப்பென்றான அனல். படிகாரம் உப்பென்றான நீர். கழுவித் தூய்மையாக்குகிறது படிகாரம். எரித்துத் தூய்மையாக்குகிறது கந்தகம். நீர் ஒளிகொண்டு படிகாரமானது. அனல் தணிந்து கந்தகமென்றானது. தந்தையரின் உளக்கனிவே மகள்களாக உருக்கொள்கின்றன. உப்பென்று எழுந்த இரு தேவியரால் காக்கப்படுகின்றனர் மானுடர். அவர்களை ஸ்படிகை என்றும் சுபீதை என்றும் வழிபட்டனர் முன்னோர்.”

முழவொலி மட்டும் எழுந்து அடங்கியது. தளர்ந்த மயிலகவல் என கொம்போசை. கொடியுடன் முகவீரன் வர தொடர்ந்து யுதிஷ்டிரர் வந்தார். அம்மூன்று நாட்களுக்குள் மிகவும் கூன்விழுந்து உடல் தளர்ந்தவர் போலிருந்தார். நடந்துவந்தபோது அவரது உடல் குளிரிலென நடுங்கிக்கொண்டிருப்பதை சுருதகீர்த்தி பார்த்தான். பீடத்தில் அவர் அமர்ந்ததும் அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றனர். பீமன் சாளரத்தருகே கைகளைக் கட்டியபடி மூங்கில் தூணில் சற்றே சாய்ந்து நின்றான். ஒவ்வொருவராக அமரும் ஓசை. இருக்கைகளின் முனகல். ஒரு சிறுபறவை அந்தப் பாடிவீட்டின் மேலிருந்து எழுந்து இருளில் பறந்தகன்றது. சுருதகீர்த்தி வெளியே குளிர்காற்று மெல்ல அலையடிப்பதை உடலால் உணர்ந்தான். உள்ளே உடல்கள் உருவாக்கும் வெம்மை. ஊனை கந்தகம் உண்பதன் வெம்மையா அது?

அவைமுறைமைகள் முடிந்த பின்னரும் எவரும் எதுவும் பேசத்தொடங்கவில்லை. அவர்கள் இளைய யாதவருக்காக காத்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு தெரிந்தது. சற்று நேரத்தில் இளைய யாதவரின் அணுக்கன் நேமிதரன் விரைந்து வந்து சுருதகீர்த்தியிடம் “யாதவ அரசர் வருகை” என்று மெல்ல சொன்னான். உள்ளே செல்லலாம் என்று அவன் கைகாட்டினான். விரைந்த நடையில் வந்த இளைய யாதவர் படிகளிலேறி புன்னகையுடன் சுருதகீர்த்தியின் தோளில் கைவைத்து “நேற்று உன் களநிற்றல் நன்று” என்றபின் உள்ளே சென்றார். அப்புன்னகையும் தொடுகையும் சுருதகீர்த்தியை மெய்ப்பு கொள்ளச்செய்து விழிநீர் நிறைத்தன. அவர் அவையின் வணக்கங்களை ஏற்று அப்பீடத்தில் சென்று அமர்ந்துகொள்வது வரை அவன் எங்கு இருக்கிறான் என்றே அறியாதிருந்தான்.

யுதிஷ்டிரர் “இளையவன் வரவில்லையா, யாதவரே?” என்ற பின்புதான் தந்தை அவருடன் வரவில்லை என்பதை சுருதகீர்த்தி எண்ணிக்கொண்டான். “இல்லை” என்று மட்டும் இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு தாடியை நீவியபடி பேசாமல் இருந்தார். ஒவ்வொருவரும் பிறர் ஏதேனும் பேசட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவையின் அமைதி மேலும் மேலுமென நீண்டது. திருஷ்டத்யும்னன் எழுந்து “நாம் இன்றைய படைசூழ்கையைப்பற்றி எண்ணவேண்டியுள்ளது” என்றான். துருபதர் “ஆம்” என்றார். மேலும் பேச சொற்களற்றவர்கள்போல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

துருபதர் “நேற்றைய போரின் இழப்புகள் குறித்து அறிக்கைகள் அளிக்கப்பட்டுவிட்டனவா?” என்றார். “பின்னிரவிலேயே அரசருக்கு அனுப்பியிருந்தேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “சொல்லப்போனால் அதை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அனுப்பவேண்டியதே இல்லை. மேலும் மேலும் உளச்சோர்வூட்டக்கூடியது அது” என்று பீமன் சொன்னான். “உண்மையின் மீது நின்றுதான் போர்புரிய முடியும், இளைய பாண்டவரே” என்றான் திருஷ்டத்யும்னன். “உண்மையின்மீது நின்றா? அப்படி ஒரு போர் உண்டா?” என்றான் பீமன். “அகிபீனாவை உண்மையின் பீடம் என சொல்லமாட்டீர் என்று நினைக்கிறேன்.” அவை அமைதியின்மையுடன் அசைவதை சுருதகீர்த்தி கண்டான்.

“உண்மை எவரும் அறிந்ததே. நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம். கௌரவப் படையினரிடம் அல்ல, ஒற்றைத்தனிமனிதரிடம். அவரை எதிர்கொள்ளும் ஆற்றல் எம் ஐவருக்கும் இல்லை. பெரும்புகழ் கொண்ட பார்த்தனின் காண்டீபம் அவர் முன் நாண்தளர வளைகிறது. எரிதீயின் முன் தழை அள்ளிப்போட்டு அணைக்கமுயல்வது போலிருக்கிறோம். நாம் அள்ளி அள்ளி அணைகட்டுவது நம் இளமைந்தரைக் கொண்டு. இனியும் நமக்கிருக்கிறார்கள் சிலர். அவர்களும் கணக்கு முடிவது வரை இப்போர் நீளும். அதன் பின்னர் சென்று தலைகொடுப்போம். பிதாமகரை எத்தனை நாள் எதிர்த்து நின்றோம் என்னும் கணக்கையே வெற்றி என கொள்ளட்டும் நம் கொடிவழியினர்” என்றான்.

“மந்தா, படைசூழ்கைக்கான அவையில் நம்பிக்கையை அழிக்கும் சொற்களை பேசலாகாது” என்றார் யுதிஷ்டிரர். “வெற்றிவேல்! வீரவேல்! வெல்வோம்! கொல்வோம்! நம்பிக்கையூட்டுவதற்கு இந்தச் சொற்கள் அன்றி வேறில்லை, மூத்தவரே” என்றான் பீமன். எரிச்சலுடன் “மூத்தவரே, தாங்கள் சற்று பேசாமலிருங்கள். இதுவே தங்களுக்கு சொல்வதற்கு இருக்கிறதென்றால் நாளை முதல் தாங்கள் அவைச்சூழ்கைக்கு வரவேண்டியதில்லை” என்று சகதேவன் சொன்னான். “நன்று. இளையவன் ஏன் வரவில்லை என்று இப்போது தெரிகிறது. இங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. சென்று களத்தில் நிற்பதொன்றே நானும் அவனும் செய்யக்கூடியது. இங்குள்ள சொற்கள் எவற்றுக்கும் எப்பொருளுமில்லை” என்றான் பீமன்.

திருஷ்டத்யும்னன் “பொழுதில்லை, நாம் நமது படைசூழ்கையை அமைக்கவேண்டியுள்ளது” என்றான். “நேற்று அமைத்தீர்களே பிறைசூழ்கை. என்ன ஆயிற்று? சூதாடுபவன் தன் கையிலுள்ள அனைத்துப் பகடைகளையும் வெளிக்காட்டுவது போன்றது அது. நமது வில்லவர்கள் அனைவருமே முகப்பில் நின்ற சூழ்கை. ஆனால் நுரையை ஊதி பறக்கவிடுபவர்போல அதை அழித்தார் பீஷ்மர். அதன் பிறகென்ன படைசூழ்கை இங்கு அமைக்கவிருக்கிறோம்?” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “அப்படைசூழ்கையின் ஆற்றல் அனைவருமே முன்னிலையில் நின்றோம் என்பது. அதன் குறைபாடு எவருக்கும் பின்புலத்தில் எதுவுமே இல்லை என்பது. ஒற்றைப்புள்ளியில் குவிந்த பீஷ்மர் நம் சூழ்கையை உடைத்தார். இம்முறை குறைகளைக் களைந்து அடுத்த சூழ்கை அமைப்போம். இம்முறை வெல்வோம். இன்று நம்மால் பீஷ்மரை கொல்ல முடியும்” என்றான்.

திருஷ்டத்யும்னனை நோக்கி மெல்லிய சிரிப்புடன் “உன் வஞ்சம் துரோணரிடம் அல்லவா? எத்தனை முறை எதிர்கொண்டாய் அவரை?” என்றான் பீமன். “அவரை தனியனாக நான் எதிர்கொண்டு வெல்ல இயலாதென்பதை அறிவேன். பீஷ்மரை வீழ்த்திய பின்னரே அவரை வீழ்த்த இயலும். சூழ்ந்துகொள்ளவேண்டும். ஆற்றலை அழிக்க வேண்டும். அதற்குரிய கணக்குகள் என்னிடம் உள்ளன” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்று நம் இலக்கு கௌரவப் படையின் கூர்முனையான பிதாமகரை வெல்வது மட்டுமே. அதைப்பற்றி பேசுவோம்.”

துருபதர் “நான் மும்முறை துரோணரை எதிர்கொண்டேன். தன்னை எவரும் வெல்ல இயலாதென்ற எண்ணத்திலிருக்கிறார். அவ்வண்ணம் தருக்குபவர்கள் உண்மையில் வெல்ல இயலாதவர்களாகிறார்கள். ஏனென்றால் அந்நம்பிக்கை அவர்களை பதற்றமில்லாதவர்களாக ஆக்குகிறது. போரை ஓர் இனிய கலையென்று நடிக்கச் செய்கிறது. அந்த இறுமாப்பின் உச்சம்வரை அவர் செல்லவேண்டும். தெய்வங்கள் அவர்மீது எரிச்சல் கொள்ளவேண்டும். அந்த எல்லைக்குச் சென்று முட்டி நிலையழியும் கணம் வரை அவரை நாம் தொட இயலாது. ஆணவம் கொண்டோர் சரியும் கணம் வரை வெற்றிகளை மட்டுமே அடைவார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றார்.

“நூற்கல்விக்கு நம்மில் எந்தக் குறையும் இல்லை” என்றான் பீமன். “களத்தில் நூல்களை மேற்கோள் காட்டமுடிந்தால் நம் மூத்தவரே போதும் வெற்றிக்கு.” அனைவரும் திகைத்து யுதிஷ்டிரரை நோக்க அவர் இயல்பாக பீமனை தவிர்த்து “இன்று பீஷ்மரை வீழ்த்த என்ன சூழ்கை வகுத்துள்ளோம்?” என்று கேட்டார். திருஷ்டத்யும்னன் தோற்சுருளை எடுத்து விரித்து யுதிஷ்டிரரிடம் காட்டி “இது இன்றைய சூழ்கை. இது அவர்களை உடைக்கும். பிதாமகரை தனிமைப்படுத்தும். நாம் மூன்று நாட்கள் போரிட்டு அனைத்திலிருந்தும் பெற்ற பாடங்கள்தான் நமது முதன்மை படைக்கலங்கள். நமது காவல்தெய்வம் அறம். அதன் வடிவமாக நம் முன் அமர்ந்திருக்கும் இளைய யாதவரின் சொற்கள். நாம் வெல்வோம்” என்றான்.

துருபதர் மெல்ல அசைந்து “நேற்று இளைய பாண்டவர் அர்ஜுனர் அஞ்சி பின்னோடினார் என்ற செய்தி கௌரவர்களிடையே பரந்துள்ளது. நேற்றிரவு முழுக்க அங்கு கௌரவர் படைகளுக்குள் உண்டாட்டின் முழவுகள் முழங்கிக்கொண்டிருந்தன. வென்றுவிட்டோம் என்றே அவர்கள் உறுதி கொண்டுவிட்டார்கள்” என்றார். அனைவரும் இளைய யாதவரை பார்க்க அவர் கைகட்டி புன்னகையுடன் அமர்ந்திருந்தார். திருஷ்டத்யும்னன் “பின்னடைதல் தோல்வியல்ல” என்றான். மெல்ல நகைத்து “தோல்வி வீழ்ச்சியல்ல என்று இன்னொரு சொல் உண்டு” என்று சிகண்டி சொன்னார்.

அதுவரை அவர் அங்கு இருப்பதை எவரும் நோக்கவில்லை. அனைவரும் திரும்பிப்பார்த்தனர். சிகண்டி அந்நோக்குகளை உணர்ந்ததும் “நேற்று நிகழ்ந்ததென்ன என்பதும் அனைவருக்கும் தெரியும். எந்தப் படைக்கலம் அவரை வீழ்த்துமோ அதை எடுக்க அஞ்சி களம்நின்று தவித்து திரும்பிச்சென்றார் இளைய பாண்டவர்” என்றார். அனைவரும் ஒருகணம் அவர் சொல்லப்போவதென்ன என்பதைக் காத்து நின்றிருந்தனர். “மாறாக அனைத்துப் படைக்கலங்களையும் பிதாமகர் எடுக்கிறார். நேற்று பீஷ்மர் போர்நெறி மீறி பின்னின்று தாக்கியபோது இங்குள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நான் வியப்படையவில்லை. ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக அவராக மாறி நடித்துக்கொண்டிருப்பவன். பகை என்பது நம் எதிரியென்று நம்மை நாமே வைத்துக்கொண்டு நடிப்பது. அத்தருணத்தில் நானும் அதையே செய்திருப்பேன்” என்றார் சிகண்டி.

“பிதாமகரை இயக்கும் முதல் விசை என்பது அவருடைய ஆணவமே. பெருநோன்புகளை தான் ஏற்றுக்கொள்வது, தன் குலத்திற்கே பொறுப்பேற்றுக்கொள்வது, களம்முன் நின்று போரிடுவது அனைத்தும் அவ்வாணவத்தாலேயே. ஆணவம் சிதறும் எதையும் அவர் செய்யப்போவதில்லை. தன் ஆணவத்தை அவர் முற்றழிக்காதவரை அவரை நம்மால் வெல்லவும் இயலாது” என்று சிகண்டி தொடர்ந்தார். “அதற்கு நம்மால் இயலவில்லை. நம் அச்சமும் தயக்கமும் அவரை மேலும் ஆணவம் கொள்ளச்செய்கின்றன. ஆணவத்தாலேயே வானுருக்கொண்டு தேவன் என நின்றிருக்கிறார்.”

“நேற்று என்ன செய்திருக்கவேண்டும் இளைய பாண்டவர்?” என்று சேதிநாட்டு திருஷ்டகேது கேட்டான். “தன் ஆணவத்தை பெருக்கியிருக்க வேண்டும். மாறாக யானை மீதேறி வருபவரை மண்ணில் நின்று எதிர்கொண்டார்” என்றார் சிகண்டி. எரிச்சலுடன் “நெறிநின்றவனுக்குரியது ஆணவம்” என்றார் யுதிஷ்டிரர். சிகண்டி மேலும் விரிந்த கோணல் சிரிப்புடன் “அவர் நின்றது நெறியின் மீதல்ல அரசே, பிதாமகரின் முன் தானொரு மைந்தன் என்னும் எண்ணத்தை ஒருகணமும் அவரால் உதறமுடியவில்லை. களத்தில் மைந்தனில்லை, தந்தையுமில்லை. வேலுக்கும் வில்லுக்கும் மானுட உணர்வுகள் ஏதுமில்லை. கடந்து செல்லவேண்டிய எல்லையொன்றை கண்முன் கண்டு அஞ்சி திரும்பி ஓடினார் நேற்று. அதை எண்ணி எண்ணிச் சோர்ந்து இன்று எங்கோ வில்பயின்று உளமொழித்துக்கொண்டிருக்கிறார்” என்றார்.

அவர் சொல்வது உண்மை என்று ஒவ்வொருவரும் எண்ணினர். சிகண்டி “நான் சொல்வது பொய்யென்று இளைய யாதவர் சொல்லட்டும். ஏன் பொறுமையிழந்து அவர் படையாழி ஏந்தினார்? ஏன் அவர் பிதாமகருக்கு எதிராக சென்றார்?” என்றார். அனைவரும் இளைய யாதவரை நோக்க அவர் அதே புன்னகையுடன் அமர்ந்திருந்தார். “நான் சொல்கிறேன்” என்று சிகண்டி தொடர்ந்தார். “தன் முழுதுளத்தாலும் உந்தி இளைய பாண்டவரை எல்லை கடக்கச்செய்ய அவர் முயன்றார். அதில் மீண்டும் மீண்டும் தோற்று சினந்தார். இறுதியில் அது இயல்வதேயல்ல என்று உணர்ந்ததும் கரைகடந்தார்.”

“அவர் படைக்கலம் எடுத்ததைப்போல் நம்மை நாமே களத்தில் காட்டிக்கொடுக்கும் செயல் வேறெதுவுமில்லை” என்று சிகண்டி தொடர்ந்தார். “இளைய பாண்டவர் அர்ஜுனர் சோர்ந்திருக்கிறார், காண்டீபம் முழு விசையுடன் இல்லை என்பதை கௌரவர்களுக்கு அறிவிக்கும் செயல்தான் அது. இன்று அவர்கள் உண்டாடி கொண்டாடுவது அந்த வெற்றியைத்தான்.” இளைய யாதவரின் முகம் மாறுபடவில்லை. சுருதகீர்த்தி தன் உடல் பதற்றம் கொண்டிருப்பதை உணர்ந்தான். அவையில் இருந்திருந்தால் எழுந்து சொல்லெடுத்திருப்பேன் என்று எண்ணிக்கொண்டான். தன் குரலாக பிரதிவிந்தியன் எழுந்து பேசவேண்டுமென்று அவன் உள்ளம் திமிறியது.

உரத்த குரலில் சிகண்டி சொன்னார் “ஆனால் நேற்று களத்தில் இளைய யாதவர் காட்டியது ஒரு நற்குறி. தன் நோன்பையும் நெறியையும் எக்கணத்திலும் ஆடையென கழற்றி வீசிவிட சித்தமாக இருப்பதாக அறிவித்தார். அவையில் ஆடை களைவது சிறுமை, ஆனால் தீப்பற்றும் இல்லத்திலிருந்து எரியும் ஆடையுடன் தப்பி ஓடுபவன் அதை கிழித்தெறியாவிட்டால் அவன் அறிவிலி. நாம் ஒவ்வொருவரும் எரிந்துகொண்டு எண்ணி தயங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மில் எல்லை கடந்தவர் எவர்? சொல்க… எவரால் இயன்றது அது?”

இளைய யாதவர் மறுத்து ஏதேனும் சொல்வாரென்று சுருதகீர்த்தி எதிர்பார்த்தான். பீமன் “யாதவரும் கடக்கவில்லை. கடந்திருந்தாரெனில் நேற்று படையாழியால் அவர் பீஷ்மரை கொன்றிருக்க வேண்டும்” என்றான். “அறிவிலி! கை விரித்து படைக்கலமின்றி நின்றிருப்பவரை கொன்றிருக்கவேண்டுமா யாதவர்?” என்றார் யுதிஷ்டிரர். “அதுவும் ஓர் எல்லைமீறல்தானே? எல்லையை மீறுவதென்றால் ஒன்றில் கடந்து பிறிதொன்றில் ஏன் நிற்கவேண்டும்?” என்றான் பீமன்.

இளைய யாதவர் மெல்லிய குரலில் “கொன்றிருப்பேன்” என்றார். அவை மெய்ப்புகொள்வதைப்போல சுருதகீர்த்தி உணர்ந்தான். “அர்ஜுனனால் கொல்ல இயலாதென்று எனக்கு உறுதி இருந்தால் தயங்கியிருக்கமாட்டேன்.” அமர்ந்தவாறே மிக இனிய நற்சொல் ஒன்றை அவர்களிடம் சொல்வதுபோல அவர் பேசினார். முகத்தில் அப்புன்னகையும் கண்களில் இளமைந்தனுக்குரிய ஒளியும் இருந்தன. “என் பொருட்டு இங்கு நின்று போரிடும் ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன். உங்கள் எவராலும் நான் பேணப்படுவதில்லை, காக்கப்படுவதுமில்லை. என் சொற்களின் பொருட்டு நீங்கள் போரிடவில்லை, விதைத்த வயலைச் சூழ்ந்து வேலியிடுகிறீர்கள் என்று உணர்க!”

“அவியிட்டு தேவர்களை வளர்க்கும் வைதிகர் தங்களைத்தான் வளர்த்துக்கொள்கிறார்கள். மண்ணில் இருந்து ஒரு துளி நெய்யோ அன்னமோ செல்லாவிடினும் தேவர்கள் குறைபடுவதில்லை என்றுணர்க! நீங்கள் அறியும் தேவர் வளரும் பொருட்டே உங்கள் வேள்விகள் இயற்றப்படுகின்றன. இந்த அவையிலிருந்து இப்போதெழுந்து இன்று அந்தியில் கதிர் மேற்குமுகம் கொள்வதற்குள் இப்போர் முடித்து மீள என்னால் இயலும். ஐயுறுபவர் எழுக!” என்றார்.

சுருதகீர்த்தி உளக்கிளர்ச்சியால் நடுங்கியபடி வாயில்தூணாக அமைந்த மூங்கிலை பற்றிக்கொண்டான். இழுத்துக் கட்டப்பட்ட நாண் போலிருந்தது அவை. “இப்போர் என் சொல் வெல்வதில் மட்டுமே முடியும். பிறிதெவ்வகையிலும் இது முடியாது. உங்கள் பொருட்டு நீங்கள் இதை நிகழ்த்தவேண்டுமென்பது என் ஆணை. அது நிகழுமென்று அறிந்திருக்கிறேன். என் பொருட்டென்றால் நான் இமைப்பதுபோல் இதை ஆற்றுவேன். ஆற்றுதலும் ஒழிதலும் எனக்கு வேறுவேறல்ல என்றும் இருப்பேன்” என்றார் இளைய யாதவர்.

அவை மெல்ல மூச்செறிந்து தளர்ந்தது. ஒவ்வொருவரும் நிலைமீள்வதை காணமுடிந்தது. திருஷ்டத்யும்னன் கைகளில் இறுகப்பற்றி கசங்கிய தோற்சுருளை நீவினான். துருபதர் மேலாடையை இழுத்து அணிந்தார். யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் இளகியமைந்தார். சிகண்டி பீமனை நோக்கி “இளைய பாண்டவர் பார்த்தரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இளைய பாண்டவர் பீமசேனர் என்ன செய்கிறார்? அவரது கால்களும் அந்த எல்லையில் சென்று தயங்கி மீளத்தானே செய்கின்றன?” என்றார்.

பீமன் சினத்துடன் “எத்தயக்கமும் எனக்கு இல்லை. களத்தில் கொழுங்குருதி அள்ளிக்குடித்தவன் நான். உங்கள் ஷத்ரிய நெறிகளுக்கு கட்டுப்பட்டவன் அல்ல, நெறியிலாதவன், வெறும் காட்டாளன்!” என்றான். “எனில் இம்மூன்று நாட்களில் நீங்கள் கொன்ற உடன்பிறந்தார் எத்தனை பேர்?” என்றார் சிகண்டி. பீமனின் எழுந்த கை அசையாமல் நின்றது. சிகண்டியின் உடல் சற்றே வளைய முகம் கோணலாக “ஆம், மைந்தரை கொன்றீர்கள். உடன்பிறந்தார் எத்தனை பேரை கொன்றீர்கள்? நூற்றுவரும் அங்கு உயிருடன்தானே இருக்கிறார்கள்?” என்றார்.

அங்கே ஒரு அறியாத் தெய்வம் தோன்றியதென சுருதகீர்த்தி உணர்ந்தான். காற்றிலொரு கெடுமணம் வந்து சூழ்வதுபோல. சிகண்டி “இம்மூன்றுநாள் போரில் அவர்களில் பதின்மர் வீழ்ந்திருந்தால் அந்த அரியணையில் தன்னிறைவுடன் நிமிர்ந்து அமர்ந்திருப்பானா சுயோதனன்? வஞ்சம் உரைக்கும் சொல்லுக்கும் வீறுகாட்டும் விழிக்கும் அடியில் அவன் நெஞ்சுக்குருதி பெருகியிருக்காதா? ஆணவத்துடன் தேர் மேலேறி களம்புகுந்தான் இன்று. அவனது நூறு கைகளும் எழுந்து விரிந்திருந்தன. அதன்முன் நாம் தோற்றோம்” என்றார். சிரிப்பொலி எழ “நேற்றும் களத்தில் கண்டேன் எத்தனை முறை நீங்கள் அஞ்சி பின்னடைந்தீர்கள் என்று” என்றார்.

சினத்தால் கைநீட்டி “எவர் அஞ்சினார்கள்? எண்ணி சொல்லெடுங்கள். அவையில் எழுந்து என்ன சொல்கிறீர்கள் என கருதுக! எவர் அஞ்சினார்கள்?” என்று கேட்டபடி பீமன் முன்னால் வந்தான். இமையேனும் அசைக்காமல் நின்று “நீங்கள் அஞ்சினீர்கள். எதிரிகளை அல்ல, உங்களை” என்றார் சிகண்டி. பீமன் செயலற்று நின்றான். “இனியொரு சொல்லெடுக்கும் முன் இந்த வஞ்சினத்தை அவைமுன் வையுங்கள், இன்று அந்திக்குள் ஓர் உடன்பிறந்தோன் குருதியையேனும் உடல் பூசிக்கொண்டே மீள்வீர்கள் என்று. அதன்பின் பார்ப்போம்” என்றார் சிகண்டி.

தன் தொடையில் ஓங்கி அறைந்து பீமன் உரக்க குரல் கொடுத்தான் “அவை அறிக! இன்று தார்த்தராஷ்டிரர்கள் எண்மரைக் கொன்று அக்குருதியை என் உடலெங்கும் பூசிக்கொண்டு மட்டுமே பாசறை மீள்வேன். இன்றிரவு அவ்விழிமகன் தன் அரியணையிலிருந்து அவர் பொருட்டு விழிநீர் சிந்த வைப்பேன்! ஆணை!” புன்னகைத்தபடி சிகண்டி அவையைப் பார்த்து “போதும். இன்று இது நிகழுமென்றால் பீஷ்மர் நம்மில் எத்தனை பேரை கொன்று குவித்தாலும் நாம் வென்றவர்களாவோம். முதல் அடியை சுயோதனனுக்கு அளித்துவிட்டால் நாம் முன்னகரும் பாதை தொடங்குகிறது” என்றார்.

“வீழ்வார் பீஷ்மர், நான் அறிவேன் அவரை. கால்தளர்வார் பிதாமகர். அறிக! மைந்தரைவிட இனியோர் பெயர்மைந்தர்களே! மறுபெயர்மைந்தர்களோ வெறும் பெயர்கள்தான். பிதாமகர் பீஷ்மர் கௌரவ மைந்தர்கள் எவரையும் அறியார். கௌரவர்களோ அவர் தோளில் வளர்ந்த குழந்தைகள். நூற்றுவரைக் கொன்றபின் அவர் உயிர்வாழமாட்டார். ஒவ்வொருவர் இறப்பிலும் நூற்றிலொரு முறை அவர் இறக்கிறார்” என்றார் சிகண்டி. “பீஷ்மரை முற்றிலும் கொல்ல இன்று நம்மால் இயலாது போகலாம். ஒவ்வொரு துளியாக கொல்வோம். நூறுமுறை கொல்வோம்! ஆம், நூறுமுறை கொல்வோம்!”

அவ்வுரை அவையை கிளர்ந்தெழச் செய்வதை சுருதகீர்த்தி பார்த்தான். துருபதர் சிறுநடுக்குடன் எழுந்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவ அவையிலிருந்த அனைவரும் கைகளைத் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று முழங்கினர். ஆனால் அரியணை அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் வெளிப்படையாகவே நடுங்கிக்கொண்டிருந்தார். விரல்கள் அதிர்வதை தடுக்க கைகளை கோத்து அதன் மேல் தாடையை வைத்துக்கொண்டார். பேச முடியாதபடி அவர் உதடுகள் துடித்தன.

சகதேவன் “இன்று நமது சூழ்கை என்ன?” என்றான். நகுலன் “நாம் யானைத்திரள் சூழ்கை அமைத்துள்ளோம். காட்டு யானைகள் செல்வதுபோல் களம்புகுவோம். முதன்மை யானையென செல்லவிருப்பவர் மூத்தவர் பீமசேனர். முதல் யானையின் வால்சுழிப்பும் செவியசைவும் துதிக்கை நெளிவும் கண்டு பிற யானைகள் அணுகியும் விரிந்தும் களம்நிற்கவேண்டும்” என்றான். துருபதர் “கஜவியூகம் தொன்மையானது. பெருநகர்களை தாக்குவதற்கு அதை அமைப்பதுண்டு. மத்தகங்களால் கோட்டைகளை உடைத்து திறப்பதற்குரியது” என்றார். “பன்னிரண்டு மத்தகங்களால் ஆனது நம் சூழ்கை. ஒவ்வொன்றும் ஒரு சிகரம் எனப்படும். அவற்றை விரிவாக குறித்துள்ளேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

“அவர்கள் அமைக்கவிருக்கும் சூழ்கை என்ன என்ற செய்தி ஏதேனும் உண்டா?” என்று சகதேவன் கேட்டான். திருஷ்டத்யும்னன் “நேற்று அது குறித்து என்ன எண்ணப்பட்டதென்று தெரியாது. அங்குள்ள நமது ஒற்றர்கள் அளித்த செய்தியின்படி பெரும்பாலும் அது யானைகளால் ஆன முகில்திரள் படையாக இருக்கும்” என்றான். சிகண்டி “வ்யாள வியூகம் பெரிய நிலப்பரப்பில் பரவிச்செல்வதற்குரியதல்லவா?” என்றார். “ஆம், வடிவிலா வடிவு அது. நோக்கிற்கு யானைகள்போல். ஆனால் ஒவ்வொரு கணமும் உருவழிந்து இணைந்தும் பிரிந்தும் அணுகும் அதில் மின்கொடிபோல் பீஷ்மர் இருப்பார். முகில்திரளில் எங்கிருந்தும் எங்கும் தாவ அவரால் இயலும். எந்த வடிவத்தையும் வழியையும் அவர் தக்க வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.”

எண்ணியிராத கணம் யுதிஷ்டிரர் எழுந்து “அவ்வாறே ஆகுக! நன்று நிகழ்க!” என்று சொல்லி கைகூப்பி வெளியே சென்றார். அவர் தன்னை கடந்து செல்ல சுருதகீர்த்தி தலைவணங்கினான். அவர் சென்ற அக்காற்றிலேயே அவர் உளம்கொண்ட வெம்மை இருப்பதாக அவனுக்கு தோன்றியது. நிமித்திகர் எழுந்து கொம்போசை எழுப்ப அவையினர் மெல்லிய சொற்களுடன் கலைந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக செல்வதை சுருதகீர்த்தி பார்த்துக்கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னன் அவனை அழைத்து “உங்கள் ஒவ்வொருவருக்குமான ஆணைகொண்ட ஓலைகள் பிரதிவிந்தியனிடம் அளிக்கப்பட்டுள்ளன. இன்று கடோத்கஜனுடன் இணைக! இரண்டாவது சிகரம் அவனே” என்றான்.

சுருதகீர்த்தி தலைவணங்கினான். திருஷ்டத்யும்னன் அப்பால் செல்ல பிரதிவிந்தியன் எழுந்து அருகே வந்து “உனக்கான ஆணையோலை, இளையோனே” என்றான். சுருதகீர்த்தி அதை வாங்கி படிக்காமலே தலைவணங்கி தன் இடையில் செருகிக்கொண்டு வெளியில் சென்றான். வெளிக்காற்றின் தண்மை அவனுக்கு ஆறுதல் அளித்தது. கந்தகம் இல்லாத காற்று. ஆனால் அதன் திசை சற்றே மாற கந்தகத்தின் எரிமணம் வரத்தொடங்கியது.

வெண்முரசின் கட்டமைப்பு

 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஸ்டெல்லா புரூஸின் அப்பா
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனும் தலித்தியமும்