அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

mori1

நேற்று முன்நாள் இங்கே பேசிக்கொண்டிருந்தபோது காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சிறுகதை ஒன்றைப்பற்றிப் சொன்னேன். கொச்சுக்ரஹஸ்த. சின்ன குலமகள் என மொழியாக்கம் செய்யலாம். நான் அதை வாசித்து நாற்பதாண்டுகள் ஆகியிருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும்போது மலையாளம் எழுதப்படிக்கத் தெரிந்ததுமே வாசித்த கதை. அன்று என்னை ஒரு தெய்வம் வந்து ஆட்கொண்டதுபோல அக்கதை எடுத்துக்கொண்டது

மிக எளிய கதை. ஒருவன் வியாபார நிமித்தமாக அயலூர் ஒன்றுக்குச் செல்கிறான். தங்குமிட வசதிகள் இல்லாத காலம். மழை வேறு வருகிறது. பசியும் இருக்கிறது. அவன் ஒரு சிறு குடிசையின் கதவைத் தட்டி இரவு தங்க இடமிருக்குமா என்று கேட்கிறான். கதவைத்திறந்தவள் ஒர் ஏழுவயதுப்பெண். கையில் சிமினி விளக்கு.“உள்ளே வாருங்கள்” என்று அவள் அழைக்கிறாள்.

அந்த வீட்டில் அவளும் அவள் அம்மாவும் ஒரு தம்பியும் மட்டும்தான். அம்மா தேங்காய்நார் சதைக்கும் தொழில்செய்தவள். முதுகெலும்பில் நோய்வந்து தளர்வாதமாகி படுத்தபடுக்கையாக இருக்கிறாள். அப்பா முன்னரே கைவிட்டுவிட்டு போய்விட்டாள். உறவினர் எவரும் இல்லை. அந்த ஏழுவயதுப்பெண் அவரை உபசரிக்கிறாள். அவள் அப்போதுதான் சந்தையிலிருந்து அரிசியும் மரவள்ளிக்கிழங்கும் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாள். அவர்கள் வீட்டில் மாலையில் மட்டும்தான் சமையல். தம்பி பசியோடு காத்திருக்கிறான்

அவள் கஞ்சி காய்ச்சி அவருக்கு அளிக்கிறாள். அவர் குடிக்கும்போது அந்தக்குடும்பத்தைப்பற்றித் தெரிந்துகொள்கிறார். அந்த ஏழுவயதுப்பெண் விடியற்காலையில் சென்று தேங்காய்நார் சதைக்கிறாள். தேங்காய்நார் வாங்கி தலைச்சுமையாகக்கொண்டுசென்று சந்தையில் விற்கிறாள். அந்தப்பணத்தில் அரிசியும் கிழங்கும் வாங்கிக்கொண்டு வருகிறாள். அந்தக்குடும்பத்தை அவள்தான் நடத்துகிறாள்.

அவள் சமைப்பதை, வீட்டைத் தூய்மைசெய்தபின் படுப்பதை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு செயலிலும் முழுமையும் பொறுமையும். அந்தச் சிறுவனுக்கு மட்டுமல்லாமல் தன் அம்மாவுக்கும் அவள் அன்னையாக இருக்கிறாள். அவள் படுக்கும்போது களைப்புடன் பெருமூச்சுவிடுகிறாள். ஆயிரம் ஆண்டுக்கால முதுமைகொண்டவள்போல. மறுநாள் அவர் கிளம்பும்போது அவளுக்கு கையிலிருந்த ஒரு ரூபாயை வற்புறுத்திக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். நடக்கையில் கண்கலங்க “அம்மே பகவதீ ஈ லோகத்தே காத்துகொள்ளணே” என்று பிரார்த்திக்கிறார் [அம்மையே,பகவதி, இந்த உலகை காத்தருள்க]

அக்கதையை நான் மீண்டும் வாசிக்கவே இல்லை. சொல்லப்போனால் வாசிக்க அஞ்சுகிறேன். ஏனென்றால் வாசிக்கையில் கதை குறைந்துவிட்டால் என்ன செய்வது? என் நினைவில் அக்கதை வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கிறது. அங்கிருப்பது ஒரு சிறு தொடக்கமாக இருக்கலாம். அதைவிட பதினைந்து வயதுச்சிறுவன் இலக்கியத்தில் கடவுளைத் தரிசித்த அந்தக்கணம் இனி மீளுமா என்ன?

அந்தக்கதையைப் பற்றி அன்றுமாலை அழைத்த மலையாள விமர்சகரிடம் பேசினேன். அவர் ஒன்று சொன்னார். அந்தக் கடைசிவரி பின்னாளில் காரூரின் மறைவுக்குப்பின் வந்த முழுமைத்தொகுப்பில்  நீக்கம் செய்யப்பட்டது. அது எண்பதுகளில் நடந்தது. சிறுகதை என்பது பூடகமாக இருக்கவேண்டும், பூடகம் என்பதே அதன் நுட்பம், ஆகவே உணர்ச்சிவெளிப்பாடு என்பது கதையின் குறைபாடு என்றெல்லாம் இலக்கணங்கள் உருவாகி முப்பது ஆண்டுகள் மட்டும் நீடித்த காலகட்டம். தொகுப்பாளருக்கு அந்தக் கடைசிவரி என்பது ஓர் நேரடிக்கூற்று என்று பட்டிருக்கிறது

நான் திகைத்துப்போனேன். அதன்பின் பெருமூச்சுதான் விட்டேன். கதைகளை ‘வெட்டித்தொகுப்பு’ செய்வது பற்றி இன்று நிறையப் பேசுகிறார்கள். கறாராக வெட்டித்தொகுப்பு செய்யப்படும் படைப்புகள் பெரும்பாலும் வணிகக்கேளிக்கை எழுத்துக்களே. காரணம், வெட்டித்தொகுப்பதற்கு தெளிவான அளவுகோல்கள் வேண்டும். அவ்வாறான புறவய அளவுகோல்கள் இலக்கியத்துக்கு கிடையாது, வணிக இலக்கியத்துக்கே உண்டு. வணிக இலக்கியத்தை முடிவுசெய்யும் நிலையான கூறு ‘சமகாலவாசகரசனை’ என்பது. அதை சந்தையைக்கொண்டு புறவயமாக முடிவுசெய்யவும் முடியும்.

ஆனால் இலக்கிய ஆக்கங்களை எவர் முடிவுசெய்வது? தொகுப்பாளர் அதற்கு ஒரு வாசகர் மட்டுமே. அவர் சமகாலத்தவர். இலக்கியம் பலதலைமுறைகளுக்கு கடந்துசெல்லும் தன்மைகொண்டது. இந்தத்தலைமுறை ஒரு படைப்பில் விரும்பாதவை அடுத்த தலைமுறைக்கு முக்கியமானவையாகத் தோன்றலாம். அந்தப்பகுதிகளில் இலக்கியப்படைப்பைப் புரிந்துகொள்வதற்கான நுண்வாயில்கள் அமைந்திருக்கலாம். அவ்வாறு வெட்டிநீக்கப்பட்ட பகுதிகளுடன்  இலக்கியப்படைப்புகள் மீண்டும் வெளியாவதே எப்போதும் நிகழ்கிறது.

இலக்கியப்படைப்பை வெட்டித்தொகுப்பு செய்ய முடியாது என்ற எண்ணமே மிகுந்துவருகிறது எனக்கு. ஆசிரியனே கூட அதை திரும்பத்திரும்ப வெட்டித்தொகுப்பு செய்யக்கூடாது.கறாராக வெட்டித்தொகுப்பு செய்யப்பட்ட பிரதி என்பது பிரக்ஞையால் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டது. இலக்கியம் பிரக்ஞையால் எழுதப்படுவதோ பிரக்ஞையால் வாசிக்கப்படுவதோ அல்ல. அது ஆழுளம் ஆழுளத்துடன் தொடர்புகொள்ளும் ஒரு வழி.

மொழி, இலக்கியவடிவம், புறவயச் செய்திகள் என்னும் மூன்று கூறுகள் அதில் ஆழுளத்தின் ஊர்திகளாக அமைகின்றன. அவற்றை மட்டும் சீரமைக்கலாம். அப்போதுகூட ‘அறியாமல்’ நிகழ்வனவற்றை அப்படியே விட்டுவிடுவதே நல்லது என்று படுகிறது. அந்த வழூஊக்கள் வழியாகவே எழுத்தாளனே அறியாத எழுத்தாளனின் ஆழம் வெளிப்படுகிறது. நவீனத் திறனாய்வு இடைவெளி [gap] என்று சொல்லும் ஊடுபாதை அது.

கொச்சுகிரகஸ்த குறித்து நண்பரிடம் சொன்னேன். அந்தக் கடைசிவரி நேரடியான உணர்ச்சி வெளிப்பாடு. அப்பட்டமானது. அந்தக்கதையை முழுமையாகவே ஒற்றைப்புள்ளியில் கொண்டுசென்று நிறுத்துவது. ஆனால் அது கள்ளமற்றது. ஒரு தருணத்தில் மானுட உள்ளம் கொள்ளும் பேரெழுச்சியின் மொழிப்பதிவு . அது இலக்கியநுட்பங்களை விட,தத்துவத்தை விட மேலானது. இலக்கியத்தின் இலக்கே அந்த உளத்தருணத்தை அடைவதுதான்.

அந்த உளத்தருணத்தை நேரடியாகச் சென்றடைகையில் வாசகனின் அகம் அவநம்பிக்கை கொள்கிறது. ஆகவேதான் கலை அதை பூடகமாக்கி வாசகனே கண்டடையச் செய்கிறது. அவனே அதை உருவாக்கிக்கொள்ள விடுகிறது. ஆனால் சிலதருணங்களில் அனைத்து அறிவுத்தடைகளையும் மீறி அலைபோல அறைந்து மேலெழும் உயர்நிலை உணர்ச்சி கதையை மேலே கொண்டுசெல்லும். அங்கே அதை குறிப்புணர்த்தவேண்டியதில்லை. வடிவமோ மொழியோ எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை.

அதை poetic utterance என்கிறார்கள். கூற்று அல்ல. எண்ணம் அல்ல. கருத்து அல்ல. அரற்றலோ உளறலோதான் அது. அது நிகழ்கையில் எதுவுமே பொருட்டு அல்ல. அந்தக்கடைசி வரியை நேரடியாகத்தான் சொல்லமுடியும். அது அப்பட்டமாகவே நிலைகொள்ள முடியும். அது மலைகளைப்போன்று ஒளிந்துகொள்ள இயலாதது. அந்தக்கதையிலிருந்து எழுந்தாலும் அது அக்கதையின் ஒரு பகுதி அல்ல, விதையை மீறி எழுந்து முளைத்து விதையிலைகளாக விதையைச் சூடிநிற்கும் செடி அது

அதைப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் பலர் உண்டு. அதன்முன் சிறிதென்றாகி தெய்வமெழுகையில் பக்தன் என நின்றிராதவர்கள் உண்டு. அவர்கள் உண்மையில் இலக்கியம்பக்கமே வரக்கூடாது. அவர்கள் இலக்கியத்துக்கு அளிக்கும் உழைப்பு என்பது மாபெரும்வீண். தங்கள் ஆணவத்தால் காலப்போக்கில் மெய்யாகவே இலக்கியம் நோக்கி வருபவர்களுக்கு மாபெரும் தடையாகவும் ஆவார்கள்.

இன்று காலை வாசித்த லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதை இவ்வெண்ணங்களை மேலும் தொகுத்துக்கொள்ளச் செய்தது.

Drumstick-flowering-plant

என் பேரில் ஒருவன் என்னென்னவோ
செய்து கொண்டிருக்கிறான் பாருங்கள்

அதுவெல்லாம் அவனாகச் செய்கிறானா
வேறு யாரேனும்
உள்ளிருந்து
செய்கிறார்களா ?
சில நேரம் சந்தேகமாயிருக்கிறது .

அப்படியானால்
இவனுக்கு
என்ன பொருள் ?
அவற்றால் இவனுக்கென்ன ?

மழைச்சாரல்
முருங்கையில் தூவி
முதலில் தன் கைவைத்தெடுத்து
முதிய இலைகளையெல்லாம்
கீழே
ஒவ்வொன்றாய்
போடுகிறது
மஞ்சள் ஒளியாக கீழிறங்குகின்றன
மஞ்சள் இலைகள் .
எடுத்துப் போட்டவற்றை
மீண்டும் சாரல் கை கொண்டெடுத்து
பூமியில்
மூடுகிறது

மழையின் வேலையா இது
இப்படி எத்தனை எத்தனை வேலைகள் மழைக்கு

அப்படியானால்
மழையின்
உண்மைப் பொருள்தான் என்ன ?
மழை தானா அது ?

காலையில் பூவிட்டுத் தளிர்க்கும்
முருங்கையின் பிரகாசம்
யார் விட்டுச் சென்ற பொருள் ?

வழக்கமாகத் தமிழ்ப்புதுக்கவிதையில் உள்ள எந்த கரவுகளும் பூடகங்களும் இக்கவிதையில் இல்லை. மிகமிக நேரடியானது. இயற்கையின் தரிசனம் என்பதைப்போல் தொன்மையான கருப்பொருளும் வேறில்லை. பல்லாயிரம்பேர் சென்று தேய்ந்த பாதை. மழைகழுவிய செடியின் ஒளியையேக்கூட எத்தனையோ பேர் பாடியிருக்கிறார்கள். அதன்பின்னரும் ஒவ்வொருமழையும் ஒவ்வொரு தளிரும் புதிதுதான்.

“குழந்தைகள் விளையாடுவதுபோல முழுமையான தீவிரத்துடன் யோகப்பயிற்சிகள் செய்யப்படவேண்டும்” என்று நித்ய சைதன்ய யதி ஓர் உரையில் சொன்ன வரி என்னை திகைப்படையச் செய்திருக்கிறது. விளையாட்டின் பொருளில்லாத முழுமை. விளையாட்டில் எழும் ஒளி.

அறிவார்ந்ததன்மைக்கு இடமே இல்லாத ஒரு கண்டடைதலின் பேருவகையால் ஆன கணம் இக்கவிதை. மழையின் உண்மைப் பொருள்தான் என்ன ? மழை தானா அது ? என்றவரியிலிருந்து தொடங்கி அதற்காகத்தான் இத்தனை நடனமா என்று அரற்றியபின் என்பெயரில் என் பேரில் ஒருவன் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறான் பாருங்கள் என்று சென்றடையும் ஒரு வாசிப்பு என்னுடையது.

அறிவும் உணர்ச்சிகளும் பூடகங்களை நாடுவன. மெய்மையும் குழந்தைமையும் தங்கள் அப்பட்டத்தால் அழகுகொள்பவை. இக்கவிதையின் தருணம் ஒரு குழந்தையிலும் மலரக்கூடியது.

முந்தைய கட்டுரைநரசிம்மராவ்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26