அர்ஜுனனது தேரின் பின்தட்டில் தாழ்ந்து அமைந்த பீடத்தில் யாதவ வீரனாகிய கதன் ஆவக்காவலனாக அமர்ந்திருந்தான். போர் தொடங்கிய மறுநாள் அந்தியில்தான் அவன் தன் ஊராகிய சுஷமத்திலிருந்து தன்னந்தனியனாகக் கிளம்பி இளைய யாதவரிடம் வந்துசேர்ந்தான். படைமுகப்பிலேயே அவனை காவலர் தடுத்து சிறைப்பிடித்தனர். விருஷ்ணிகுலத்தோன், இளைய யாதவரின் குருதியினன் என்று அவன் சொன்னமையால் அழைத்துவந்தனர்.
பாடிவீட்டில் அர்ஜுனனும் நகுலனும் உடனிருக்க சொல்லாடிக்கொண்டிருந்த இளைய யாதவர் எழுந்து வெளியே வந்து அவனை பார்த்ததும் வீரர்களிடம் கையசைக்க அவர்கள் அவனை விட்டு விலகிச்சென்றனர். அவர் தாழ்ந்த குரலில் “தனியாகவா வந்தாய்?” என்றார். “ஆம் அரசே, என் பணி தங்களுடன் இருப்பதே என தெளிந்தேன். வராமலிருக்க இயலவில்லை” என்றான் கதன். “எங்கிருந்து வந்தாய்?” என்றார். “சுஷமத்திலிருந்து நேராக வருகிறேன்…” இளைய யாதவர் “எவரிடம் ஒப்புதல் பெற்றாய்?” என்றார். “முதுதாதை உத்தவரிடம் சொன்னேன், என் உள்ளம் உங்களுடன் இருப்பதை. அவர் செல்க என ஒப்புதல் அளித்தார்.”
இளைய யாதவர் தலையசைத்து “ஆனால் உன் திறன்களுக்கு இங்கே இடமில்லை. இது நேர்ப்போர்” என்றார். “ஆம், அறிவேன். நான் எவ்வகையிலேனும் களத்தில் இருக்கவே விழைகிறேன். உங்கள் காலடியில் நான் பாதுகாப்பாக இருப்பேன். உங்கள்பொருட்டு உயிர்துறந்தால் விண்ணில் சிறப்பேன்” என்றான் கதன். இளைய யாதவர் தலையசைத்து “நீ வந்தது நன்று, உன்பொருட்டு மகிழ்கிறேன்” என்றார். “என்னைப்போல் இங்கு வர உளம்கொண்டோர் மேலும் இருக்கக்கூடும். குலத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அங்கிருக்கிறார்கள்.”
“எப்போது குலத்தின் ஆணை பொருளற்றதாகிறது?” என்று இளைய யாதவர் புன்னகையுடன் கேட்டார். “இறப்பு அணையக்கூடும் எனும்போது. அப்போது அறமும் புகழும் அன்றி வேறேதும் பொருட்டல்லாமலாகிவிடுகிறது. என் மைந்தரையும் மனையாட்டியையும் அஞ்சியே இதுநாள்வரை அங்கிருந்தேன்” என்றான் கதன். “இனி எனக்கு எதுவும் ஒரு பொருட்டல்ல. நான் களம்பட்டேன் என்றால் அதுவே நிறைவு… அதற்கு உளம் ஒருக்கிய பின்னரே வந்தேன்.”
பேச்சொலி கேட்டு எழுந்து வந்த அர்ஜுனன் “கதரே, நீங்களா? அறிந்த குரல் என எண்ணினேன்” என்றான். அவன் கைவிரிக்க கதன் அவனை சென்று தழுவிக்கொண்டான். “எப்படி இவ்வணுக்கம்?” என்றான் நகுலன். “இவனுடைய தூதால்தான் சுபத்திரையை உன் தமையன் மணக்கமுடிந்தது” என்றபடி இளைய யாதவர் புலித்தோல் மஞ்சத்தில் அமர்ந்தார். நகுலன் “ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான்.
அர்ஜுனன் கதனை மஞ்சத்தில் அமரச்செய்த பின் “இவர் இளைய யாதவரின் குலத்தோன்” என்றான். “மெய்யாகவா?” என்றான் நகுலன். “மதுவனத்தின் அரசரும் என் தாதையுமான சூரசேனருக்கு லவண குலத்து இளவரசி மரீஷைக்குப் பிறந்த மைந்தர்கள் பதின்மர். வசு, தேவபாகர், தேவசிரவஸ், ஆனகர், சிருஞ்சயர், காகனீகர், சியாமகர், வத்ஸகர், காவுகர், வசுதேவர். ஒரே மகள் பிருதை மார்த்திகாவதியின் குந்திபோஜருக்கு மகளாகிச் சென்று குந்திதேவியாகி உங்கள் அன்னையானார். என் பெரிய தந்தை வசு இப்போது மதுவனத்தை ஆள்கிறார்” என்றார் இளைய யாதவர்.
“எந்தை வசுதேவர் மணந்தவர்கள் எழுவர். ரோகிணி மூத்தவர். என் அன்னை தேவகி இளையவர். மதுராவின் அரசரான பின்னர் அனைத்து குலங்களிலிருந்தும் ஒரு மனைவியை ஏற்றார். அன்னை ரோகிணி எங்கள் விருஷ்ணி குலத்தை சேர்ந்தவர். பௌரவ குடியில் பிறந்தவர். சுஷமம் என்னும் யாதவர்பாடியை ஆளும் உத்தவரின் மகள். பௌரவியாகிய அவருக்கு சாரணர், துர்த்தரர், தாமர், பிண்டாரகர், மஹாஹனு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுக்குப் பின் பிறந்தவர் பெரும் தோள் கொண்டவரான பலராமர். முதல் ஐவரும் பௌரவ குடிக்கு உரியவர்கள் என்பதால் அவர்கள் ரோகிணியின் தந்தை உத்தவரின் பொறுப்பில் சுஷமத்திலேயே வளர்க்கப்பட்டார்கள்” என்றார் இளைய யாதவர். “இவன் விருஷ்ணிகுலத்தில் பௌரவகுடியினன். அன்னை ரோகிணியின் மருகன்.”
“எவரைப்பற்றியும் அறிந்ததே இல்லை. இந்திரப்பிரஸ்தக் கால்கோளின்போதுகூட எவரும் வந்ததில்லை” என்றான் நகுலன். “ஆம், அவர்களுக்கும் அரசவாழ்க்கைக்கும் தொடர்பில்லை. கன்றோட்டி காட்டில் வாழ்கிறார்கள். அதிலேயே நிறைவும் காண்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “நிறைவு காணாதவர்கள் கன்றோட்டாது அரசுவாழ்வுக்கு வந்த நானும் என் மூத்தவரும்தான்.” கதன் “நானும் கன்றோட்டும் வாழ்விலேயே இருந்தேன். ஆனால் இங்கு உங்கள் காலடியிலேயே நிறைவை காணமுடியும் என வந்தேன்” என்றான்.
“போரில் உம்மால் என்ன செய்யமுடியும்?” என்றான் அர்ஜுனன். “நான் அம்புகளை எடுத்துத் தருவேன். கைத்திறன் யாதவர்களுக்கு பழகியது” என்றான் கதன். “என்னால் வளைதடி ஏந்தி போரிடவும் முடியும்.” இளைய யாதவர் “சென்று மீளும் வளையம்புகளை அவனால் பிடித்து மீண்டும் ஆவநாழிக்குள் நிறைக்கமுடியும்” என்றார். “ஆம்… நான் காற்றில் பறக்கும் ஈயை சிறு நாணலால் குத்திக்கோக்கும் திறன்கொண்டவன்” என்றான் கதன். சுற்றிலும் நோக்கி கீழே கிடந்த சிறுகூழாங்கல் ஒன்றை எடுத்து விரலால் சுண்டி பறந்துகொண்டிருந்த கொசுவை அடித்து வீழ்த்தினான்.
“விந்தை!” என்றான் நகுலன். “ஒரு வளைதடியால் ஆயிரம் பசுக்களை தொட்டு திரும்ப அழைப்பதுண்டு நான்” என்றான் கதன். “நாங்கள் பயன்படுத்தும் அனைத்து அம்புகளும் திரும்பிவரும் தன்மைகொண்டவையே.” அர்ஜுனன் “நன்று, முடிவிலாது நிறையும் ஆவநாழி ஒன்று தேவைப்படும் எனக்கு” என்றான். “நான் பின்னிருக்கையில் உள்ளவரை உங்கள் கை நீளும்போது அம்பு அதிலிருக்கும், பாண்டவரே” என்றான் கதன்.
கதனின் தலை தேரில் நின்றிருந்த அர்ஜுனனின் இரும்பாலான முழங்கால் காப்புக்கு இணையாக அமைந்திருந்தது. அவனைச்சுற்றி பன்னிரு தூளிகளிலாக அம்புகள் நிறைந்திருந்தன. அர்ஜுனனின் விரல்கள் காட்டும் முத்திரைகளுக்கேற்ப உரிய அம்பை எடுத்து அவன் அளித்துக்கொண்டிருந்தான். போர் தொடங்கிய அன்றே பல தருணங்களில் அர்ஜுனனின் கை எழுவதற்குள்ளாகவே அவன் எண்ணிய அம்பு தன் கைகளில் வந்துவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். மெல்ல அவனே போரிடுபவனும் ஆனான். எவரை தாக்கவேண்டுமென்பதை அர்ஜுனனின் உள்ளம் முடிவெடுக்கும் அக்கணத்திலேயே அவனும் முடிவெடுத்தான்.
போரிலிறங்கிய முதல்நாள் இரவு அதை எண்ணி வியந்தபடி வான் நோக்கி கிடக்கையில் போர் என்பது ஓர் இசை நிகழ்வு என்று அவனுக்கு தோன்றியது. வெவ்வேறு இசைக்கருவிகள் வெவ்வேறு கலைஞர்களால் தனித்தனியாக இசைக்கப்படுகின்றன. இசை அவை அனைத்தையும் ஒன்றென இணைத்து பெருக்கெடுத்துச் செல்கிறது. அதன் ஒழுக்கில் விசையில் ஒழுங்கமைவில் ஒவ்வொருவரும் முற்றழிகிறார்கள். ஒற்றை உளம் கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன் பின் தங்களை ஒத்திசைத்துக்கொள்ள அவர்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை.
கதன் பிறிதொன்றும் ஆகி அங்கு நிகழும் போரை ஒவ்வொரு அசைவும் ஒலியும் வண்ணமுமென நோக்கிக்கொண்டிருந்தான். அர்ஜுனனின் முன்னால் அமரபீடத்தில் அமர்ந்து தேரை ஓட்டிக்கொண்டிருந்த இளைய யாதவர் தன்னை கடந்து சென்ற அம்புகளை முற்றிலும் உடலால் அறிந்து வளைந்தும் சரிந்தும் உடல் திருப்பியும் எளிதாக தவிர்த்து, வலக்கையால் ஏழு கடிவாளச் சரடுகளை சேர்த்துப்பற்றி, முதல் மூன்று விரல்களால் அவ்வேழையும் தனித்தனியான யாழ் நரம்புபோல் மீட்டி புரவிகளுக்கு ஆணையிட்டு தேரை செலுத்தினார்.
இடக்கையில் இருந்த சவுக்கு பறக்கும் பாம்பென எழுந்து சென்று புரவிகளின் முதுகை மெல்ல தொட்டு வளைந்தெழுந்தது. அதன் முனையில் அமைந்திருந்த சிறு படிகமணி ஒளிவிடும் வண்டுபோல் ஏழு புரவிகளுக்கும் மேல் பறந்து எழுந்து சுழன்றது. புரவிகளும் அவரும் முற்றிலும் ஓருளம் என்று ஆனதுபோல் அவர் எண்ணியதை அவற்றின் கால்களும் உடல்களும் இயற்றின. தேர் அவரை தன் உயிராக அகத்தே கொண்டதுபோல் விரைந்தது, தயங்கியது, திரும்பியது, சீறிஎழுந்தது, ஒசிந்தும் வளைந்தும் நிலைத்தும் களைத்தும் களத்தில் நின்றது. ஏழு கால்கள் கொண்ட சிறுத்தை என அதை முந்தைய நாள் சூதன் ஒருவன் பாடியதை அவன் கேட்டிருந்தான்.
இளைய யாதவரின் முகம் தேரில் முகப்புத்தூணின் வளைந்த இரும்புப்பரப்பில் இருபுறமும் தெரிந்தது. இரண்டு இணைத்தெய்வங்களாக அத்தூண்களில் எழுந்து அவர் அர்ஜுனனை நோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் குவிந்தும் விரிந்தும் அவனுடன் உரையாடின. விழிகள் அவ்வுரையாடலுக்கு அப்பால் கனவு நிறைந்த புன்னகையுடன் உற்று நோக்கி பிறிதெதையோ கூறிக்கொண்டிருந்தன. தேர்த்தட்டில் நின்று சுடரென, புகையென, ஒளிக்கதிரென மெல்ல நடமிட்டு அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அர்ஜுனன் அதற்கு அப்பால் பிறிதொருவனென்றாகி அவருடன் தனியுரையாடலில் ஈடுபட்டிருந்தான்.
கதன் தன் தாழ்ந்த பீடத்திலிருந்து நோக்கியபோது அந்தத் தூண்களில் அவர்கள் இருவரின் முகங்களும் ஒன்றெனக் கலந்து தெரிந்தன. தேர் திரும்புகையில் எழுந்த இளைய யாதவரின் முகம் மறுகணமே அர்ஜுனனின் முகமாகியது. இரு முகங்களும் உருகி கலந்து பிரிந்து மீண்டும் அணுகி முத்தமிட்டு ஒன்றாயின. எதிரி அம்பொன்று தொடுப்பதற்குள்ளாகவே இளைய யாதவரின் உதடுகள் அதை அர்ஜுனனுக்கு கூறிவிட்டனவா என்று அவன் ஐயம் கொண்டான். அதை நோக்குந்தோறும் சூழ அலையடித்த போரின் ஓசைக்கொந்தளிப்புக்கு நடுவே செவி முற்றழியும் பேரமைதி ஒன்று நீர்த்துளிபோல் நுனி நின்று ஒளிர்வதாகவும் அதற்குள் அத்தேர் மட்டும் முழுத்தனிமை கொண்டிருப்பதாகவும் அவனுக்கு தோன்றியது.
அர்ஜுனன் செல்லுமிடமெல்லாம் சிலந்திவலை வண்டை அறுத்து விடுவிப்பதுபோல கௌரவப் படை அவனை உள்ளே விட்டு சிதைந்து பின்னகர்ந்தது. அவனுடன் வில்லெதிர்கொண்ட கிருபர் மெல்ல தளர்ந்து பின்னடைந்தார். துரோணரின் எண்ணமுணர்ந்து கேடயப்படை வந்து அவரை உள்ளே இழுத்து மறைத்துக்கொண்டது. அவன் மாகிஷ்மதியின் நீலனின் ஐந்து உடன்பிறந்தார்களான மணிர்மன், குரோதவான், மகாக்குரோதன், சண்டன், சுருரோணிமான் ஆகியோரை கொன்றான். ஆரவாக அரசன் சுதர்மனையும் அவன் ஏழு மைந்தர்களையும் வீழ்த்தினான். கீடவ அரசன் பார்வதீயனையும் குந்தல அரசன் கீடகனையும் அவன் மைந்தர்களான அக்தர்தீர்த்தன், குஹரன், ஆஷாடன் ஆகியோரையும் கொன்றான்.
அரசர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட செய்தி சென்றதும் பின்னாலிருந்து சகுனியின் முரசுகள் “அர்ஜுனன் தடுக்கப்படவேண்டும். எழுக சைந்தவர்! எழுக உத்தர பாஞ்சாலர்!” என ஆணையிட்டன. இருபுறங்களிலிருந்தும் படைகள் கூர்கொண்டு முன்னெழ அவற்றின் முகப்பில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் வந்தனர். அவர்களின் சங்கொலியை கேட்டதுமே வாளால் தழலை வெட்டுவதுபோல் ஓர் அசைவு அர்ஜுனனில் உருவானது. அவன் இரண்டென்று ஆகி இருபுறமும் நின்று எதிர்த்த அவர்களை நேர்கொண்டான்.
ஜயத்ரதனைச் சூழ்ந்து தேர்ந்த வில்லவர்களாலான சைந்தவத் துணைப்படையினர் தேரில் வந்தனர். அஸ்வத்தாமனை அவன் மாணவர்களான மலைவில்லவர் புரவிகளில் குறுவில்லேந்தி சூழ்ந்திருந்தனர். அவர்களின் அம்புகள் இரு திசைகளிலிருந்தும் வந்து அர்ஜுனனை சூழ்ந்து கொப்பளித்தன. அர்ஜுனன் இருபுறமும் புன்னகையுடன் எழுந்த தன் தேரோட்டியிடம் விழியாடியபடி அவ்விருவரையும் தனித்தனியாக எதிர்கொண்டான். அர்ஜுனனை சூழ்ந்து வந்த பாண்டவ வில்லவர் எதிர்வந்த அம்புப்பெருக்கை தங்கள் அம்புகளால் காற்றுவெளியிலேயே எதிர்கொண்டனர். அம்புகள் மண்ணில் இருந்து தங்கள் விசைகளை பெற்றுக்கொண்டு காற்றில் தங்களுக்குரிய போர் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தன.
தலையை தேர்த்தட்டின் விளிம்புக்குக் கீழாக தழைத்து மேலே எழுந்த ஓசையாக கதன் அந்தப் போரை கேட்டுக்கொண்டிருந்தான். குழல் போலவும் யாழ் போலவும் முழவு போலவும் ஓசையிட்டு கடந்து செல்பவை. விம்முபவை, சீறிச்செல்பவை, அதிர்பவை, சுழலோசை எழுப்புபவை, கனைப்பவை, உறுமுபவை. ஒவ்வொரு அம்பும் தனக்குரிய குரல் கொண்டிருந்தது. வேறுபட்ட வடிவங்களில் சிறகும் அலகும் கொண்டிருந்தது. எழுந்து வளைந்து அமைபவை, காற்றைக் கிழித்து நேர்கோடென வருபவை, ஒளிக்கீற்றென நோக்கும் கணமே வந்து செல்பவை, நாரைபோல் எழுந்து மிதந்து அணுகுபவை, சிட்டுபோல் வானிலேயே துள்ளிச் சுழல்பவை, பனந்தத்தைபோல் காற்றில் எழுந்தபின் எண்ணி விசைகொண்டு பாய்பவை.
இத்தனை அம்புகளும் இதுகாறும் எங்கிருந்தன? பல்லாயிரம் கொல்லர் உலைகளில் இரும்புத்துண்டுகளாக எழுந்து நூறுநூறு முறை அறைகொண்டு சிவந்து கூர் பெற்று உடல் நீட்டி சிறகு கொண்டு பிறந்து வந்தவை. அதற்கு முன் அவை எங்கிருந்தன? மண்ணின் ஆழத்தில் கல்லுடனும் மண்ணுடனும் கலந்து இரும்பென்றிருந்தன. மண் முழுக்கவே கனியில் சாறென இரும்பு நிறைந்திருப்பதாக சூதர் பாடல் கூறுவதுண்டு. இரும்பின் மீது மானுடர் நடமாடுகிறார்கள். விளைநிலங்களொருக்கி அன்னம் சமைக்கிறார்கள். மாளிகைகளை எழுப்பிக்கொள்கிறார்கள். மறைந்து அவர்கள் மண்ணை அணுகுகையில் அனைத்து திசைகளிலிருந்தும் வஞ்சத்துடன், இன்னளியுடன் ஊறிப் பெருகி வந்து இரும்பு அவர்களை சூழ்ந்து கொள்கிறது. மென்மையாக அணைத்து தன் உப்பால் மூடுகிறது.
அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் அர்ஜுனனுக்கு பாதி நிகரானவர்கள் என்று அவனுக்கு தோன்றியது. அவர்கள் இருவரும் இணைந்தபோது முற்றிலும் நிகர் நின்று அர்ஜுனனை அணுவிடை முன்னகர ஒண்ணாமல் தடுக்க முடிந்தது. பலமுறை அர்ஜுனன் தன் கவசங்களை மாற்றினான். அவன் கவசக்கைவளைகள் உடைந்தன. செவிக்குழையொன்று தெறித்தது. தேர்த்தூண்கள் அம்பால் அறைபட்டு சிதைந்து தெறித்தன. ஒவ்வொரு கணமும் போர் நிகழ்ந்தும் ஓர் அணுவிடைகூட இருசாராரும் முன்னகரவில்லை என்று கதன் உணர்ந்தான். பின்னர் ஒரு கணத்தில் தன்னை சூழ்ந்திருந்தவர்களை பார்த்தபோது அர்ஜுனனின் தேர் நெடுந்தூரம் முன்னகர்ந்து வந்திருப்பதை கண்டான். நீர் வற்றுவதுபோல நோக்கி நிற்கவே விழியறியாது கௌரவப் படை பின்னகர்ந்துகொண்டிருந்தது.
அஸ்வத்தாமனின் அணுக்கவில்லவர்கள் ஒவ்வொருவராக களம்பட பின்னிருந்து அவனுடைய களரிவீரர்கள் வந்து அவ்விடத்தை நிரப்பி அப்படை உருவழியாது விசை குறையாது காத்தனர். ஆனால் அரைக்கணம் விழியோட்டி தன் முன் குவிந்து கிடந்த உத்தர பாஞ்சாலத்தின் படைகளை கண்டதுமே அஸ்வத்தாமன் அகம் தளர்ந்தான். தொலைவில் அப்போருக்கு அப்பால் இருந்து நோக்குகையில் அத்தளர்வை மிகச் சிறிய அசைவாக ஆனால் முற்றிலும் தனித்து காணமுடிந்தது. அஸ்வத்தாமனின் தளர்வு மறுகணமே இயல்பாக ஜயத்ரதனிடம் வெளிப்பட்டது. கழுகின் சிறகு காற்றில் பிசிறுவதுபோல் சிதையலாயிற்று.
மேலும் மேலுமென அர்ஜுனன் முன்னகரும் விரைவு மிகுந்தது. தொலைவில் முழவோசை “அர்ஜுனன் எழுக! அர்ஜுனன் வலம் எழுக!” என்று முழங்கியது. இளைய யாதவரின் புருவங்கள் சுருங்கி மீண்டன. முழவோசை “அபிமன்யூ புண்பட்டுள்ளான்! திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் பின்னகர்கின்றனர்! பிறை இரண்டாக உடையவிருக்கிறது! பீஷ்மரை எதிர்கொள்க! பீஷ்மரை நிறுத்துக!” என்று ஆணையிட்டது.
ஒருகணத்தில் அவர்களுக்குள் உரையாடல் முடிய இளைய யாதவர் தேர் திருப்பி பீஷ்மரின் படைகளை நோக்கி சென்றார். அர்ஜுனனின் அணுக்கப்படை திரளென அவனைத் தொடர அவ்விடைவெளியை பின்னிருந்து வந்த யானைப்படை முற்றாக மூடி இரும்புக்கோட்டையொன்றை அமைத்தது. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் அர்ஜுனனை தடுக்கும்பொருட்டு பின்னால் வர அர்ஜுனனுக்குப் பின்னாலிருந்து சேதிநாட்டு அரசன் திருஷ்டகேதுவும் குமார மன்னர் சிரேனிமாதரும் உல்லூகநாட்டரசர் பிருஹந்தனும் அவர்களை செறுத்தனர்.
ஜயத்ரதன் நகைத்தபடி “எத்தனை பொழுது உங்களால் எங்களை தடுக்க இயலும், அறிவிலிகளே?” என்றான். “எங்கள் இளைய பாண்டவரால் உங்கள் முதியவர் கொல்லப்படும் கணம்வரை!” என்றார் பிருஹந்தன். அஸ்வமாதன நாட்டரசர் ரோஜமானரும் நிஷாதராகிய மணிமானும் வந்து இணைந்துகொண்டபோது அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் முழுமையாக சூழப்பட்டனர். அவர்கள் சென்று சூழ்வதை செவிகளாலேயே அறிந்தபடி கதன் படைநடுவே பிளந்து சென்ற அர்ஜுனனின் தேரிலிருந்து அம்பு தேர்ந்தளித்தான்.
தேர் படைகளை ஊடுருவிச்சென்றபோது இளைய யாதவர் அர்ஜுனனிடம் “இத்தருணம் உன்னுடையது. இன்றே அவரை வெல்க!” என்றார். “ஆம், இன்று அவரை கொல்வேன்!” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆனால் அது எளிதல்ல. நெறி முழுமை கொண்டவர்களை வெல்வது இரு வழிகளில் மட்டுமே இயல்வது. ஒன்று அவர்கள் நெறி பிறழவேண்டும். அன்றி நாம் நெறி பிறழவேண்டும்” என்றார் இளைய யாதவர். “நெறிபிறழ்தல் வீரர்களுக்குரியதா?” என்று அர்ஜுனன் கேட்டான் . “வெற்றி ஒன்றே வீரர்களுக்குரியது” என்று இளைய யாதவர் சொன்னார்.
“மீறல்கள் அனைத்தும் தொடக்கங்களே. அவை முடிவிலாது பெருகும்” என்று அர்ஜுனன் சொன்னான். “மீறுவோர் மீறுக என அறைகூவுகின்றனர். மீறலை நிலைநிறுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை தெய்வங்கள் பொறுத்துக்கொள்வதில்லை.” இளைய யாதவர் சிரித்து “பாரதா, ஷத்ரியன் என்பதே ஒரு பிறழ்நிலைதான். போரென்பது மாபெரும் பிறழ்வு. அறம்நின்ற தோல்வியைவிட அறம்பிழைத்த வெற்றியே வீரனுக்குரியது. பேரறங்களை நிலைநிறுத்துபவை சிறுஅறமின்மைகளே. பெருநெறிகள் சிறுமீறல்களால் வாழ்கின்றன. கொற்றவை கொலைச்சிம்மம் மீதே எழுந்தருள்கிறாள்” என்றார்.
மிகத் தொலைவிலெங்கோ பீஷ்மர் இருப்பதாக கதன் எண்ணியிருந்தான். தேர் படைமுனை ஒன்றில் திரும்பியபோது எண்ணியிராது மிக அருகே பெருமலை ஒன்றை கண்டதுபோல் பீஷ்மரை எதிர்கொண்டு அவன் திடுக்கிட்டான். அந்த அதிர்ச்சி அர்ஜுனனுக்கும் இருப்பதை அவன் உணர்ந்தான். மீண்டும் ஒரு கணத்தில் எச்சொல்லுமில்லாமல் அவர்கள் ஒருவருக்கொருவர் அம்பு கோத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் முற்றிலும் இணையாக அப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தமையால் முன்பு முடிந்த அக்கணத்தின் முறிவிலிருந்து அதே விசையில் மீண்டும் தொடங்கியது.
ஒருவரையொருவர் முற்றறிந்தவர்களாக, ஒருவரோடொருவர் முழுமையாக இணைந்தவர்களாக, விழியும் செவியும் முனை தொடுத்து நிற்க, ஒற்றை அசைவின் இரு வடிவாக கைகளும் உடலும் நடமிட இருவரும் போரிட்டனர். முன்புபோல் அப்போர் முடிவிலா கணமொன்றில் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று கதன் எண்ணினான். ஆனால் அரைநாழிகைக்குள் பீஷ்மரின் அம்பு அர்ஜுனனின் தொடைக்கவசத்தை அறைந்து சிதறடித்தது. பிறிதொரு அம்பு அவன் தோள்கவசங்களை உடைத்தது. அம்பொன்று அவன் நெஞ்சை பொறியுடன் உரசிச்சென்றது.
பீஷ்மர் பேருருவம் கொண்டு அணுகி வருவதாக தோன்றியது. அவர் முகம் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. போர்க்களத்தில் ஊழ்கத்திலமர்ந்த முனிவரென இனிய மயக்கொன்றில் அரைவிழி சரிந்து துயில்கொண்டதுபோல் முகத்தசைகள் தளர்ந்து தெரியும் அந்த முகம் மறைந்து இரை நோக்கி பசியுடன் முகம் கூர்ந்து செல்லும் வேங்கையின் தோற்றம் வந்திருந்தது. இளைய யாதவர் “அவர் தனக்குத் தான் அமைத்துக்கொண்ட எல்லை ஒன்றை மீறிவிட்டார், பார்த்தா. இதுகாறும் அவர் கொண்ட அனைத்தையும் இழந்துவிட்டார். அது உனக்கு அளிக்கப்படும் ஒப்புதல் என கொள்க! இதுவே தருணம். உன் எல்லையை மீறி அவரை கொல்க!” என்றார்.
அர்ஜுனன் “ஆம், இதோ!” என்றான். ஆனால் அவனால் ஆளப்படாததுபோல் அவன் உடல் முற்றிலும் ஒத்திசைந்த முந்தைய அசைவுகளின் தொடராகவே இருந்தது. “மீறுக! கடந்து செல்க! நிலத்தமர்ந்து அவர் கால்களை நோக்கி அம்பை விடுக!” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம்!” என்று சொன்னான் அர்ஜுனன். ஆனால் மீண்டும் மீண்டும் பீஷ்மரின் தோள்களையும் நெஞ்சையும் தொடையையுமே அவனுடைய அம்புகள் குறிநோக்கின. “செல்க! செல்க!” என்று இளைய யாதவர் கூவினார்.
அர்ஜுனனின் தேரைத் தொடர்ந்து வந்த வில்லவர்கள் ஒவ்வொருவராக தேர்த்தட்டிலிருந்து சிதறி விழுந்தனர். தலையிழந்து பின்சரிந்து அமர்ந்து உடல் துடித்தனர். தேர்கள் சகடம் கவிழ்ந்து உருண்டன. குருதி நாளங்கள் வெட்டுபட்ட கவிழ்த்த குடம்போல் குருதி கொட்ட கால் குழைந்து விழுந்து விசை குறையாது நிலத்தில் இழுபட்டன. அர்ஜுனனின் தேர் மேலும் மேலும் தனிமைகொண்டு சென்றது. “செல்க! அவ்வெல்லையைக் கடந்து செல்க!” என்று இளைய யாதவர் மேலும் வெறிகொண்டு கூவினார்.
இரு தூண்களிலும் அவர் முகம் சினமும் சீற்றமும் கொண்டு கொந்தளித்தது. “என்னால் இயலவில்லை, யாதவரே! எந்தை முன் என் இயல்பு மீற இயலவில்லை!” என்று அர்ஜுனன் உடைந்த குரலில் சொன்னான். பீஷ்மரின் பேரம்பு ஒன்று அர்ஜுனனின் தேர்த்தட்டை உடைத்து சில்லுகளாக தெறிக்கவைத்தது. அதிலிருந்து தலைகாக்க முழங்கால் மடித்து குனிந்து அவன் எய்த அம்பு பீஷ்மரின் உடலை கடந்து செல்ல பிறிதொரு பேரம்பால் அவன் தேர் முகடை முற்றாக உடைத்து பறக்கவைத்தார். தலைக்குமேல் பறந்து சென்ற சிம்புகள் காற்றில் ஓசையிட்டன.
ஏழு அம்புகளால் அவன் தேரை முற்றாக உடைத்து தெறிக்கவைத்தார் பீஷ்மர். திறந்த தேர்த்தட்டில் நின்று விசை கூட்டி அவன் அனுப்பிய அம்புகள் எதுவும் அவரை தொடவில்லை. சிரிப்பதுபோல் பல் காட்டி முகம் நெரித்து “வருக! வருக!” என்று கூவியபடி பீஷ்மர் அம்புகளால் அர்ஜுனனை அறைந்தார். பிறிதொரு அம்பு வந்து அவன் தலைக்கவசத்தை மீண்டும் சிதறடித்தது. அடுத்த கவசத்தை எடுத்தளித்த கதனின் கை நடுங்க அதையும் சிதறடித்தது இன்னொரு அம்பு. அர்ஜுனன் மூன்றாவது கவசத்திற்கு கை நீட்டுவதற்குள் அவன் தோள்களில் தறைத்தது அடுத்த அம்பு.
அவர் வில்லில் நாணேறுவதை கதன் மிக அண்மையிலென கண்டான். அந்த அவன் நெஞ்சுத்துடிப்பு நிலைகொள்ள விழிமட்டுமே என்றானான். மறுகணம் இளைய யாதவர் தன் புரவிக் கடிவாளங்களையும் சவுக்கையும் வீசிவிட்டு தேர்முகப்பிலிருந்து பாய்ந்திறங்கி முன்னால் ஓடி வலக்கையை மேலே தூக்கினார். அதில் சுழல்ஒளியென படையாழி தோன்றியது.
பீஷ்மர் புன்னகையுடன் தன் வில்லை தேர்த்தட்டிலிட்டு இரு கைகளையும் விரித்து அசைவற்று நின்றார். இளைய யாதவரின் கையில் சுழன்ற படையாழி தயங்கியது. பின் அவர் கை தளர ஆழி தன் உடல் சுருக்கி அவர் உள்ளங்கைகளுக்குள் மறைந்தது. யாதவர் விழிதாழ்த்தி இரு கைகளையும் என் செய்வேன் என விரித்த பின் தன் தேர்த்தட்டு நோக்கித் திரும்பி வந்தார். உதடுகளில் புன்னகையுடன் விரித்த கைகள் அவ்வாறே காற்றில் நிலைக்க இளைய யாதவரை நோக்கிக்கொண்டு நின்றார் பீஷ்மர். உதடுகளில் இருந்த அப்புன்னகை அவர் விழிகளில் இருக்கவில்லை. இளைய யாதவர் தாவி அமரத்தில் அமர்ந்து ஒரு சொல் உரைக்காமல் தேரைத் திருப்பி கொண்டுசென்றார்.