நரசிம்மராவ்- கடிதங்கள்

download

 

நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்

ஜெ

 

இந்த புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தும் விமர்சனமும் மிக சிறப்பாக இருந்தது.

பல திறவுகள். தலைவர்கள் , இலட்சியவாதிகள் என.நீங்கள் சொன்ன  இரைட்டை பட்டியலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் நீக்கினால் கலைஞர் கருணாநிதி யை சேர்த்து கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
நரசிம்மராவை காங்கிரசிஸ் தலைமை நடத்திய விதம் வருந்தத்தக்கது. அதேபோல் அவர் தான் தமிழ் நாட்டில் தவறான கூட்டணி அமைத்து  காங்கிரசின் அடுத்த முறைக்கான வாய்ப்பை  கணிசமாக கெடுத்தார் என்பது ஓரளவு உண்மை என நம்புகிறேன்
மிக முக்கியமான புத்தகம். மிக சிறப்பான கட்டுரை. நன்றி

 

 

நடராஜன்

 

அன்புள்ள நடராஜன்

 

நான் அவ்வாறு எண்ணவில்லை. மு.க அவர்களுக்கு அவ்வாறு தமிழகத்தின் நலம்நாடும் திட்டங்களோ, முனைப்போ இருக்கவில்லை என்றே எண்ணுகிறேன். அவ்வாறு அவருக்கு ஒரு பொய்யான மணிமுடியைச் சூட்ட உச்சகட்ட தேர்தல்பிரச்சாரம் தொடங்கிவிட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் அவருடைய ஆதரவாளர்களுக்குக் காரணங்கள் இருக்கலாம். தர்க்கபூர்வமாகவும் அடிப்படைத்தகவல்களுடனும் சிந்திக்கும் எவருக்கும் எக்காரணமும் இல்லை

 

தமிழகத்தின் நலம்நாடிய முதன்மையான ஆட்சியாளர் காமராஜ் தான். அடுத்தபடியாக, ஓரளவு எம்.ஜி.ஆர். ஆனால் மற்றவர்களைப்பற்றித்தான் இங்கே டமாரங்கள் அடிக்கப்படுகின்றன. டமாரச்சத்தமே சொல்வதற்கு தர்க்கபூர்வமாக ஏதுமில்லை என்பதைக் காட்டுவது

 

மு.க. அவர்களின் திட்டங்கள் எனச் சொல்லப்படுவன அனைத்துமே மோடியின் திட்டங்களாகச் சொல்லப்படுவன போல வெறும் காகிதத்திட்டங்கள் அல்லது கவர்ச்சித்திட்டங்கள். பொருளியலை உருவாக்கும் திட்டங்கள் அனேகமாக ஏதுமில்லை. கூவம்சீரமைப்பு, இலவச சைக்கிள் ரிக்ஷா மழைக்கோட்டு, குடிசைமாற்று வாரியம் போல.இனி  பத்தாண்டுகளுக்குப்பின் மோடி குறித்தும் இதுவே சொல்லப்படும். திட்டங்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே சென்று அதையே புள்ளிவிவரங்களாக சாதிப்பார்கள்.

 

நரசிம்மராவின் வெற்றி என்பது தன்னை ஆட்சியாளர் என்னும் எல்லைக்குள் நிறுத்திக்கொண்டு திறனாளர்களைப் பணியாற்ற அனுமதித்தது. அவ்வியல்பு காமராஜிடம் உண்டு. ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்ரமணியம் போன்ற அமைச்சர்கள், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகள் இணைந்து உருவாக்கியது காமராஜ் தமிழகத்துக்கு உருவாக்கி அளித்த மகத்தான அடித்தளம். பாசனம்,.தொழில், கல்வி, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் அடுத்த ஐம்பதாண்டுகளில் தமிழகம் பெற்ற வெற்றியின் சிற்பி காமராஜ். அதாவது அவர் ஒருங்கிணைத்த திறனாளர்கள்

 

எம்.ஜி.ஆர் அவருடைய கவற்சியரசியலுக்கு அப்பால் திறனாளர்களை பணியமர்த்தி அவர்களைச் செயல்பட அனுமதிக்கும் பார்வை கொண்டிருந்தார். மால்கம் ஆதிசேஷையாவால் உருவாக்கப்பட்டது தமிழகத்தின் தொழிற்கல்வி மேம்பாடு. வ.அய்.சுப்ரமணியம் போன்ற கல்வியாளர்கள் அவர்கீழே செயல்பட்டனர்.

 

சத்துணவுத் திட்ட அமலாக்கம், கிராமங்களில் குடிநீர்வசதி மற்றும் மருத்துவ வசதிமேம்பாடு என எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின் சாதனைகள் பல. அவை உண்மையில் சில முக்கியமான அதிகாரிகளின் சாதனைகள். அவற்றை அனுமதிக்கும் அளவுக்கு அரசியல்நோக்கு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவற்றின் வெற்றி அவருடைய அரசியல்வெற்றியாக இறுதிக்கணம் வரை உடனிருந்தது. தமிழக வளர்ச்சிக்கும் உதவியது.

 

இப்பண்புகள் எவையும் மு.கருணாநிதியிடமோ ஜெயலலிதாவிடமோ இல்லை. அவர்கள் சமையலறைநிர்வாகம் மட்டுமே அறிந்தவர்கள். மிதமிஞ்சிய தன்மைய நோக்குகொண்டவர்கள். ஆகவே பெரும்பாலும் வெற்றுக்கோஷங்களுடன் நின்றுவிட்டவர்கள்

 

ஜெ

 

 

ஜெ,

 

வணக்கம். மிக்க நன்றி ஜெமோ. இன்றைய காலை, அழகான காலையாக ஆரம்பமாகிவிட்டது. உங்களது விமர்சனத்தை படித்தவுடன் கிடைத்த உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இனி 10 பக்கங்களாவது மொழிபெயர்த்தால் மட்டுமே இன்றிரவு உறங்க செல்ல முடியும். விரிவான விமர்சனத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
ராம்கி
அன்புள்ள்ள ராம்கி
மிகச்சிறப்பான மொழியாக்கம். சரளமாக வாசிக்கமுடிகிறது. ஏற்கனவே நீங்கள் மொழியாக்கம் செய்த ஜேபி பற்றிய நூலைப்பற்றியும் எழுதியிருந்தேன். நீங்கள் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்யவேண்டும்
ஜெ
முந்தைய கட்டுரைவாசிப்பில் ஓர் அகழி- குறித்து…
அடுத்த கட்டுரைஅதற்காகத்தான் இத்தனை நடனமா ?