வாசிப்பில் ஓர் அகழி- குறித்து…

book-stalls1

வாசிப்பில் ஓர் அகழி

ஜெ,

வணிக எழுத்து பற்றிய சீனுவின் கடிதம் கண்டேன். நானும் அதை யோசித்திருக்கிறேன்.

இன்று வணிகக் கலை வழியாக ஒருவர் தீவிரக் கலைக்கு வந்து சேர வழியில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று, வணிகக் கலை அலுத்துப் போகும் போதுதான் ஒருவர் தீவிரக் கலையை தேடத் துவங்குகிறார். இந்த அலுப்பு தோன்ற தொடர் வாசிப்பு நிகழ வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அல்லது ஒரு வகைப்பாட்டு [genre] நூல்களை தொடர்ந்து தீவிரமாக வாசிக்கும் போதே அதன் வடிவம் நமக்கு பிடி கிடைக்கும். அந்த பிடி கிடைத்த பிறகே நம் ஆர்வம் வடியும், நானே இதை எழுதி விடுவேன் என்ற எண்ணம் உருவாகும். அங்கிருந்தே நமக்கு சவால் விடக் கூடிய எழுத்தை தேடி நகர்கிறோம்.

இரண்டாவதாக, இதன் மறுமுனையாக சென்ற காலத்தில் வணிக எழுத்தாளர்களால் அதிகமும் எழுதப்படுதல் இருந்தது. என் பத்து வயதில் ஆரம்பித்து பதிமூன்று வயதுக்குள் நானூறு க்ரைம் நாவல்களை வாசித்து  இருந்தேன். அதன் வடிவம் ஒரளவு பிடி கிடைத்து விட்டது. அடுத்த அலையாக, பதினான்கு வயதில் ஆரம்பித்து பதினைந்து வயதுக்குள் நூறுக்கும் மேற்பட்ட பாலகுமாரன் நூல்களை வாசித்திருந்தேன். அத்தனை நூல்களை ஒன்றாக வாசிக்கும் போது எளிதில் ஒரு பொதுத்தன்மை, க்ராஃப்ட் சார்ந்து கிடைத்து விடுகிறது. அந்த பிடி கிடைத்த உடன் அடுத்த சவாலுக்கான தேடல் துவங்கி விட்டது. தஸ்தெயெவ்ஸ்கியை முதல் முறை பதினாறு வயதில் படித்த போது பிறப்பிலிருந்து முதுகு பக்கம் இருந்த தலையை ஒரே கணத்தில் என்றென்றைக்குமாக மார்பின் பக்கம் திருப்பி வைத்தது போலிருந்தது.

இதையே ஷிட்னி ஷெல்ட்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர் போல அதிகம் எழுதியவர்களை வாசித்து கடப்பவர்களுக்கும் சொல்லலாம். இத்தகைய சூழலில் கடைசி வரை பிடி கிடைக்காதவர்கள் குறைந்தது ஆரம்பித்த இடத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள். எனக்கும் பட்டுக்கோட்டை பிரபாகரையும், பாலகுமாரனையும் அறிமுகப்படுத்திய என் உறவினர் இருவரும் இன்னமும் இவர்கள் இருவரையே வாசிக்கின்றனர். அவர்களுக்கு இருந்ததைப் போல வாசிப்பு மட்டுமே இன்று ஒருவருக்கான கேளிக்கை ஊடகமாக இருப்பதில்லை. இது நிகழ ஒருவர் தன் பொழுது போக்கு கலை என ‘ஒரு’ வடிவத்தை பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்ற காலங்களில் காண்பியல் கலை அல்லது எழுத்து வடிவம் என இரண்டே பிரதானமாக இருந்தது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தன் பொழுது போக்கு வடிவமாகக் கொண்டிருக்கும் ஒருவருக்கு வேறு வாய்ப்புகளில்லை. அலுப்பூட்டும் வடிவத்தை உதறி சவாலை நோக்கி செல்ல வேண்டிய தேவை இருந்தது. இன்று ஒருவர் தன் தலையை முட்டிக் கொள்ள இணையம் ஆயிரம் கதவுகளைக் கொண்டிருக்கிறது.

இன்றைய வணிக எழுத்தாளர்கள் சேத்தன் பகத், அமிஷ் போன்றவர்கள் குறைவாக எழுதுகிறார்கள். அதை வாசிப்பவர்கள் அதை விட குறைவாக வாசிப்பவர்கள். ஆகவே வடிவம் குறித்த பிடி கிடைப்பதோ, ஈர்ப்பு எளிதில் இழக்கப்படுதோ இல்லை. வணிக எழுத்தை ஒரே அலையாக வாசித்துக் கடந்தால்தான் உண்டு.

கூடுதலாக, இளம் வயதில் வணிக எழுத்தை வாசிக்கத் துவங்கும் ஒருவர், ஒரிடத்தில் இதை நானே எழுதி விடுவேன் என்று சொல்லும் திமிர் இளமையினால், கனவுகளால் வருவது. இன்று சேத்தன் பகத்தை, அமித் திரிபாதியை வாசிப்பவர்கள், நான் பார்த்த வரை, படிப்பு முடிந்து வேலையில் அமர்ந்து, “செட்டில்” ஆகிய பிறகு வாசிக்கத் துவங்குபவர்கள் என்பதும் ஒரு காரணம்.

வேறொரு கோணமும் இருக்கிறது. வணிக எழுத்தின் வடிவம் பிடி கிடைப்பதற்கும், பொழுது போக்கு நோக்கில் சலிப்புறவும் ஒருவருக்கு அக மொழி உருவாகி வர வேண்டியிருக்கிறது. அது தாய் மொழியில்தான் சாத்தியம் அல்லது முதன்மை மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். இங்கு சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களுக்கு கூட அது அக மொழியாக ஆவதில்லை. நாம் வளரும் சூழலின் பன்மொழித் தன்மை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இனி வரும் தலைமுறைகளுக்கு ஒரு வேளை ஆங்கிலம் அக மொழியாக ஆகக் கூடும். அப்பொழுது அவர்களுக்கு சேத்தன் பகத்தும் அமிஷ் திரிபாதியும் கடந்து செல்லப்பட வேண்டியவர்களாகத் தெரியலாம்.

ஏ.வி.மணிகண்டன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25
அடுத்த கட்டுரைநரசிம்மராவ்- கடிதங்கள்